தரமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள்
பொழுதுபோக்கு பிள்ளைகளை எவ்வளவு தூரத்திற்கு பாதிக்கிறது என்று தெரியுமா? செக்ஸ், சண்டைக்காட்சிகள் நிறைந்த படங்களை இளைஞர்கள் பார்க்கும்போது, அத்தகைய செயல்கள் சர்வசாதாரணமானவை என்ற எண்ணம் அவர்களுக்குள் உதயமாகிறது என்கிறார் ஆல்வின் பூசன்ட். கல்வியாளராகவும் மருத்துவராகவும் இருக்கும் இவர் சுமார் 30 வருடங்களாக பிள்ளைகளோடு பழகியவர். அவர் மற்றொரு அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்: “அத்தகைய படங்களைப் பார்த்துவிட்டு வரும் பிள்ளைகள் பயந்து நடுநடுங்குகிறார்கள் அல்லது பயங்கர முரட்டுத்தனத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் மறுபடியும் தொட்டில் பழக்கத்திற்கு திரும்புவதை நான் பார்த்திருக்கிறேன், அதாவது அம்மாவையே தொற்றிக்கொண்டிருத்தல், கை சூம்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற பழக்கங்களுக்கு திரும்புகிறார்கள்.” பிள்ளைகளை உடல் ரீதியில் அல்லது பாலியல் ரீதியில் கொடுமை செய்தல், போர் நடைபெறும் இடத்தில் வாழுதல் போன்ற வேறுசில காரணங்களும் பிள்ளைகளை மேற்சொன்னவாறு நடந்துகொள்ளச் செய்யும் என்று நிபுணர்கள் சொன்னதாக இந்த மருத்துவர் கூறுகிறார். “கொடூரமான நிகழ்ச்சிகளை நேரடியாகப் பார்க்க பிள்ளைகளை நாம் மனசார விடுவதில்லை. ஆனால் அவற்றை சினிமாவில் அவர்கள் பார்க்கும்போது தடுக்க தவறுகிறோம்” என்கிறார் அவர்.
நல்ல தரமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பதற்கும், அதே நேரத்தில் அது பைபிள் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கக்கூடாது என்பதற்கும் கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த காரணம் இருக்கிறது. உதாரணத்திற்கு சங்கீதம் 11:5 இவ்வாறு குறிப்பிடுகிறது: “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர் இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்: . . . கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.”—கொலோசெயர் 3:5, 8.
எனவே, பெற்றோர்கள் தங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் பொழுதுபோக்கை தேர்ந்தெடுக்கும்போது, அது ‘மாம்சத்தின் கிரியைகளை’ தூண்டாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். (கலாத்தியர் 5:19-21) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் தரத்தையும், அளவையும் கவனத்தில் கொண்டே தேர்ந்தெடுக்க வேண்டும்.—எபேசியர் 5:15-17.