இளைஞருக்கு மதத்தில் எந்தளவுக்கு அக்கறை?
பிரான்ஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
அந்த மாலை நேரத்தில் கூட்டத்துக்கு வந்திருந்த 7,50,000 இளைஞர்கள் கொண்டாட்டத்தில் மிதந்தார்கள். கொடி அசைத்தார்கள், பாட்டு பாடினார்கள், கை தட்டினார்கள். ஆகாயத்தில் வாணவேடிக்கை நடத்தினார்கள். இசைக் கலைஞர்களால் கூட்டம் கலகலவென்றிருந்தது. அந்த இடம் “பிரமாண்டமான டிஸ்கோ பார்ட்டி” நடக்கிற இடம்போல காட்சியளித்தது. கடைசியாக, எழும்பிய பெரும் கோஷத்தின் மத்தியில் அவர்கள் தரிசிக்க காத்திருந்த அந்த மனிதர் மேடைக்கு வந்தார்.
இது ராக் இசைக் குழுவினர் உலக முழுவதும் செல்லவிருந்த டூரின் ஆரம்ப நிகழ்ச்சியா? இல்லை. இது மாபெரும் மத மாநாடு. பாரிஸில் நடந்த உலக கத்தோலிக்க இளைஞர் தின மாநாடு. அந்த மனிதர் வேறு யாருமில்லை. இரண்டாம் போப் ஜான் பால்தான்!
சிலருக்கு, மத கொண்டாட்டங்களில் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் பெரும் வியப்பு. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த மத மறுமலர்ச்சிதான் இப்போது செய்தித்துறைகளில் அதிகமாக அடிபடும் பேச்சு.
வெளித்தோற்றங்கள்
வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், மதம் ரொம்ப செழிப்பாக இருப்பதுபோல காட்சியளிக்கலாம். இளம் ஐரோப்பியர்களில் சுமார் 68 சதவீதத்தினர் ஏதோவொரு மதத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அயர்லாந்தில் இந்த எண்ணிக்கை 90 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. முன்னாள் சோவியத் குடியரசைச் சேர்ந்த ஆர்மேனியாவில் சில வருடங்களுக்கு முன்பு, பெரும்பாலானோர் மதத்தை அந்தக்காலத்து சமாச்சாரம் என்பதாக நினைத்தனர். முன்பு வெறிச்சோடியிருந்ததும் இப்போது நிரம்பி வழிகிறதுமான ஒரு சர்ச்சைப் பற்றி பாதிரி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இளம் சந்ததிக்கு மதத்தின் மீது ஏற்பட்டிருக்கும் மோகம் என்னை வியப்படையச் செய்கிறது.”
அநேக நாடுகளில் மதப்பிரிவுகளிலும் கரிஸ்மாட்டிக் குழுக்களிலும் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர் என்பதை செய்தி மூலங்கள் பரவலாக வெளியிடுகின்றன. முன்னுரையில் குறிப்பிட்டதைப் போன்ற மத கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஆனால், மேலோட்டமாக பார்க்காமல் உற்று நோக்கினால் என்ன தெரிகிறதென்று நாம் காண்போமா?
உற்று நோக்குதல்
இந்த விஷயத்தை உற்றுப் பார்க்கும்போது, 1967-ல் பிரெஞ்சு இளைஞர்களில் 81 சதவீதத்தினர் கடவுள் நம்பிக்கை உடையோராக இருந்தனரென்றும், 1997-ல் அவர்களில் பாதிக்கும் குறைவானோரே கடவுள் நம்பிக்கையுடன் இருந்தனரென்றும் தெரிகிறது. முழு ஐரோப்பாவையும் எடுத்துக் கொண்டால், 28 சதவீத இளைஞர்கள் மட்டுமே கடவுளை ஒரு நபராக எண்ணுகின்றனர். எனவே வெறும் 12 சதவீத ஐரோப்பிய இளைஞர்கள் மட்டுமே அடிக்கடி ஜெபிக்கின்றனர் என்றால் அது ஆச்சரியமாகாது. இளைஞர்கள் மதத்தைக் கருதும் விதத்தை இது எவ்வாறு வெளிப்படுத்துகிறது?
டென்மார்க்கில், 90 சதவீத இளைஞர்கள் அந்த நாட்டின் நேஷனல் சர்ச்சில் இருப்பதாக கூறினர். ஆனால் மூன்று சதவீதத்தினர் மட்டுமே அதில் மும்முரமாக ஈடுபடுவதாக தெரிவித்தனர். பிரான்ஸின் கத்தோலிக்க செய்தித்தாளான லா கிரவா 1997-ல் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. மதம் தங்கள் வாழ்க்கையில் ஒரு பொருட்டே அல்ல என்பதாக 70 சதவீத பிரெஞ்சு இளைஞர்கள் ஒத்துக்கொண்டனர் என அது காட்டியது. அவர்களில் முக்கால்வாசி பேர் மதத்தின் போதனைகளைவிட சொந்த அனுபவத்தையே மிக முக்கியமானதாக கருதினர். மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைமைதான்.
இளைஞர்கள் ஏன் சர்ச்சை விட்டு செல்கிறார்கள்? அவர்களில் பெரும்பாலானோருக்கு, முக்கியமான மதங்கள் நம்பிக்கையை வளர்ப்பதில்லை. உதாரணமாக, பிரான்ஸில் உள்ள பெருவாரியான இளைஞர்கள் மதம்தான் உலகில் பிரிவினையை ஏற்படுத்தும் அம்சம் என்பதாக நினைக்கின்றனர். ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த 15 வயது கத்தோலிக்க பெண் ஜூடித், “ஒழுக்கத்தை பத்தி சர்ச் சொல்றத நான் ஒத்துக்க மாட்டேன்” என சொல்கிறாள். இவளுடைய இந்த எண்ணம் இளைஞர்களிடையே இன்று சர்வசாதாரணம். அதைப் போலவே, தைவானைச் சேர்ந்த 20 வயது ஜோசப்புக்கு மதம் “ரொம்ப கட்டுப்பெட்டித்தனமாக” தோன்றுகிறது. இன்றுள்ள பெருவாரியான இளைஞர்கள் தங்களுடைய மதத்தின் போதனைகளை ஒத்துக்கொள்கிறதில்லையென்றால், எதைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்?
மதம் துணிமணி வியாபாரமாகிவிட்டது
இன்றுள்ள இளைஞர்கள் துணிமணியைப் பொறுக்கியெடுப்பதுபோல இன்றைய மதங்களிலிருந்து தங்களுக்கு பிடித்தமான நம்பிக்கைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இதை, மதசம்பந்தமான “துணிமணி வியாபாரம்” என ஒரு பத்திரிகை அழைக்கிறது. ஒரு கத்தோலிக்க பத்திரிகையோ “மதசம்பந்தமான ஷாப்பிங்” என குறிப்பிடுகிறது. ஒருகாலத்தில் பழங்காலம் என ஒதுக்கித் தள்ளப்பட்ட கருத்துக்கள் இன்று சாதாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு, ஐரோப்பாவில், சுமார் 33 சதவீத இளைஞர்கள் தாயத்துக்கள், மந்திரக்கயிறு போன்றவற்றில் நம்பிக்கை வைக்கின்றனர். ஜோசியர்களால் எதிர்காலத்தை கணிக்க முடியுமென்று 40 சதவீதத்தினர் நம்புகின்றனர். 27 சதவீதத்தினர் நட்சத்திரங்கள் மக்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறதாக எண்ணுகின்றனர். அநேக இளம் ஐரோப்பியர்களின் மத நம்பிக்கைகளில் மறுபிறவி போன்றவையும் ஒன்று.
மத கோட்பாடுகள் எக்கச்சக்கமாக இருப்பதால், இளைஞர்கள் தங்களுடைய இஷ்டத்துக்கு ஏற்றவிதமாக அவற்றை தேர்ந்தெடுக்க முடிகிறது. ஒரே மதம் மட்டும்தான் சத்தியத்தை உடையதாக இருக்கமுடியும் என்பதை சொற்பமானோரே நம்புகின்றனர். இளைஞர்கள் தங்களுடைய இஷ்டத்துக்கு ஏற்றாற்போல தெரிந்தெடுப்பதால், மத நம்பிக்கைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. ஆகவே முற்கால கோட்பாடுகள் “படிப்படியாக அழிகின்றன,” அல்லது “அரிக்கப்படுகின்றன” என சமூகவியலாளர்கள் இப்போது குறிப்பிடுகிறார்கள். இத்தகைய மத சூழலில், பாரம்பரிய மதங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன?
இளைஞருக்காக வலைவீசும் மதங்கள்
இன்று இளைஞரைக் கவருவதுதான் மதங்களின் மிகப்பெரிய சவால். பாரிஸில் நடந்த உலக கத்தோலிக்க இளைஞர் தின மாநாட்டுக்கு வந்திருந்த பிரெஞ்சு பாதிரியார், “இத்தனை இளைஞர்கள் எங்கிருந்து வந்தனர்? என்னோட சர்ச்சுகளுக்கு இளைஞரே வருவதில்லையே. நான் அவர்களைப் பார்ப்பதே இல்லை” என அக்கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போனார். இளைஞரின் கவனத்தைக் கவரும் முயற்சியில், கத்தோலிக்க சர்ச் அதன் பிரசங்கத்தை அளிக்கும் விதத்தையும் அதன் இமேஜையும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
“சர்ச் தன் பாணியை மாற்றிக் கொள்கிறது!” என்று பிரெஞ்சு செய்தித்தாள் லா ஃபிகாரோ தெரிவித்தது. பாரிஸில் நடந்த 12-ம் உலக இளைஞர் தின மாநாட்டின் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்புக்கு ராக் மியூசிக் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் ஏஜென்ஸிகளை சர்ச் அமர்த்தியிருந்தது. 100-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து வந்திருந்த இளைஞர்களை மகிழ்விப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட ஷோ-க்கள் நடத்தப்பட்டன. பாதிரிமார்களின் உடைகள் பிரத்தியேகமாக டிசைனர்களால் தயாரிக்கப்பட்டன.
இன்றுள்ள இளைஞர்களை புரிந்துகொள்ள முடியாததாலும், அவர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டியிருப்பதாலும் அநேக மதங்கள் எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் தங்கள் நம்பிக்கைகளை எல்லா மதங்களிலிருந்தும் எடுத்துக் கொள்கின்றன. இந்தக் கொள்கையை மனதில் கொண்டவராய், உலக இளைஞர் தின மாநாட்டை ஒழுங்கமைத்த பாதிரி மிஷெல் டியூபோ இவ்வாறு சொன்னார்: “ஞானஸ்நானம் பெற்ற எல்லாரும் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவராக இருக்கவேண்டுமெனதான் நான் விரும்புகிறேன். ஆனால் அவர்கள் அப்படியில்லாவிட்டாலும்கூட, சர்ச்சில் அவர்களுக்கு இடமுண்டு.”
விடையைத் தேடும் இளைஞர்கள்
இளைஞர்கள் பதில்களுக்காக தேடிக்கொண்டிருப்பது உண்மைதான் என்பதை சுட்டிக்காட்டி, பாரிஸில் நடந்த மத மாநாட்டிற்கு வருகைதந்த இளைஞர்களை பார்த்து, அது “விசுவாசத்தினால் வந்த கூக்குரல் அல்ல, விசுவாசத்திற்கான கூக்குரல்” என ஒரு செய்தித்தாள் விவரித்தது. இந்த கூக்குரலுக்கு கத்தோலிக்க சர்ச் பதிலளித்ததா?
பெரிய மத மாநாடுகளின் வெளிப்புற முக்காட்டை எடுத்துவிட்டு, “கண்கட்டு வித்தை” என ஒரு செய்தித்தாள் அழைத்ததற்கு உள்ளே உற்று நோக்கினால் தெரிவது என்ன? பிரெஞ்சு செய்தித்தாள் லே மான்டே “மேல்பூச்சுக்கு கீழே பார்த்தால் அவர்களிடம் ஒரு சரக்கும் இல்லை” என குறிப்பிட்டது.
தட்டில் உள்ள உணவு அலங்காரமாக காட்சியளித்தாலும்கூட, அது போஷாக்களிப்பதாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய இளைஞரின் கேள்விக்கு ஆவிக்குரியவிதமாக போஷாக்களிக்கும் பதில் தேவை. கவர்ச்சிகரமாக உள்ளதாக, ஆனால் வெத்து வேட்டுக்களாக இருக்கும் பதில்கள் அவர்களுக்கு திருப்தியளிப்பதில்லை.
இத்தகைய மத கொண்டாட்டங்கள் நடைமுறை பயனை அளிக்க முடியாதவையாக இருந்தால், இன்றைய இளைஞர்மீது அழியாத செல்வாக்கு செலுத்த முடியுமா? பிரெஞ்சு சமூகவியலாளரான டானியேல் எர்வியூ-லேஷா இவ்வாறு குறிப்பிட்டார்: “கண்ணைக் கவரும் இந்தப் பகட்டான செயல்பாடுகள் சமுதாயத்தில் நிலையான பாதிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவே.” அப்படியென்றால், இளைஞர்கள் வேறு எங்குதான் திருப்தியான பதில்களைப் பெற்றுக் கொள்ள முடியும்?
திருப்தியளிக்கும் விடைகள்
1997-ம் வருடத்தில் லே பாய்ண்ட் என்ற பிரெஞ்சு பத்திரிகை இளைஞர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளைக் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி அநேக இளைஞர்களுக்கு பொதுவாயுள்ள கேள்வியைத் தவிர, குற்றச்செயல் வன்முறை ஆகியவற்றையும்கூட அவர்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் அதை மேற்கொள்ள முடியுமா? அந்தப் பத்திரிகையில் வந்த கட்டுரை இவ்வாறு விளக்கியது: “தன்னுடைய 30-வது வயதில், மதுபானம், போதைப்பொருள், வன்முறை ஆகியவற்றால் தான் சீரழிவதைக் குறித்து டேவிட் கவலைப்படத் தொடங்கினார். யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்தபோது, நல்லவராக மாற வேண்டும் என்ற அவருடைய நம்பிக்கைக்கு பதில் கிடைத்தது. அவர்களுடன் பைபிளைப் படித்தார். சாட்சியாக மாறினார். சூதாட்டக் கடன்களை திரும்பச் செலுத்தினார். போக்கர் (poker) விளையாடுகையில் மற்றவர்களுக்கு தெரியாமலே அவர்களிடம் ஏமாற்றியிருந்த பணத்தை ஈடு செய்தார். புகை பிடிப்பது, குடிப்பது, சண்டையிடுவது எல்லாவற்றையும் அடியோடு ஒழித்துக் கட்டினார்.”
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கும் மற்ற இளைஞர்களைக் குறித்து அந்தக் கட்டுரை இவ்வாறு தொடர்ந்து சொன்னது: “அவர்களுடைய எல்லா கேள்விகளுக்குமே பதில் கிடைத்தது.” ஓர் இளம் சாட்சி இவ்வாறு தெரிவித்தார்: “பைபிள் இரண்டாயிரம் வருடங்களாக உண்மையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது, எனவே, வழிநடத்துதலுக்காக நான் ஏன் வேறிடம் செல்ல வேண்டும்?”
இளைஞர்களுக்கான செய்தி கடவுளுடைய வார்த்தையில் இருக்கிறது. அதன் நடைமுறை ஆலோசனை இன்றைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவுகிறது. சமாதானமும், சகோதரத்துவமும் நிலவும் ஓர் எதிர்காலத்தின்மீது பலமான ஆதாரத்தை அளிக்கிறது. நொடிக்குநொடி மாறிக் கொண்டிருக்கும் இந்த உலகில், “நிலையும் உறுதியும் . . . ஆத்தும நங்கூரமாயிருக்கிற” நம்பிக்கையை பைபிள் நமக்கு கொடுக்கிறது. (எபிரெயர் 6:19) அது நமக்கு பலத்தையும் ஆறுதலையும் அளிக்கிறது. யெகோவாவின் சாட்சிகளோடு ஒரு தனிப்பட்ட பைபிள் படிப்பை படிப்பதன்மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மேலெழுந்த வாரியாக இல்லாமல் ஆழமான மாற்றங்களை பைபிள் எப்படி செய்கிறது என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். பைபிள் அளிக்கும் பதில்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், மெய்யான விசுவாசத்திற்கான அவர்களுடைய தேடல் நற்பயனளித்திருப்பதை காண்கிறார்கள்.
[பக்கம் 12-ன் படம்]
பாரிஸிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை மத கொண்டாட்டம் கவருகிறது
[பக்கம் 13-ன் படம்]
பாரிஸில் உலக இளைஞர் தின மாநாடு—உண்மையான மத மறுமலர்ச்சியா?