உலகை சொக்கவைக்கும் இலத்தீன் இசை
மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! நிருபர்
உலகில் 40 கோடிக்கும் அதிக மக்கள் ஸ்பானிய மொழி பேசுகிறார்கள். சீன, ஹிந்தி மொழிகளுக்குப்பின் ஸ்பானிய மொழியே அநேக மக்கள் நாவில் தாய்மொழியாய் தவழ்கின்றது. அதனால்தான் அநேகர் மத்தியில் இலத்தீன் அமெரிக்க இசை வலம் வருகிறது. மாம்போ, ச்சா-ச்சா, மெரிங்கா, சால்சா போன்ற தாளங்களை உலகெங்கும் மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள். டான்ஸ் ஆடுகிறார்கள்.
இந்த இசை எதற்காக இவ்வளவு பிரபலமாக உள்ளது? இது விறுவிறுப்பாகவும், குதூகலமாக இருப்பதும்கூட ஒரு காரணம். நிறைய இலத்தீன் அமெரிக்கர்களுக்கு வேகமான, விறுவிறுப்பான தாளங்கள் பிடிக்கும். இத்தகைய ஒருசில தாளங்களை, மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகள், இலத்தீன் அமெரிக்கர்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தனர். ஆனால், பாட்டிற்கு ஏற்ற தாளமா, தாளத்திற்கு ஏற்ற பாட்டா என்பதுபோல் படுவேகமாக இருக்கும் மெட்டுகளையும், டிரம்-பீட்டுகளையும் புரிந்துகொண்டு ரசிப்பது வெளிநாட்டவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டம்.
இலத்தீன் இசையில் மயில் இறகைபோல் வருடிக்கொடுக்கும் இசையும் உண்டு. காதல் பாட்டும் உண்டு. சோகப்பாட்டும் உண்டு. உதாரணத்திற்கு, இலத்தீன் அமெரிக்க பாலெரோவுக்கு (bolero) பல நாடுகளில் எப்போதும் ஏகப்பட்ட மவுசு உண்டு. பொதுவாகவே பாலெரோவில் மூன்று பேர் இசைக்கு ஏற்ப ஆடுவார்கள். பாலெரோவில் காதல் இழையோடும். கவிதை களிநடனம் புரியும். 1940-களிலும் 1950-களிலும் ரொம்ப பிரபலமாக இருந்த பாலெரோ, சமீபத்தில் இளம் இசைக் கலைஞர்களுடைய பாடல்களின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளது. மெக்ஸிகோ பாண்டுவாத்தியத்திற்கு (mariachis) உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில், இசைக் கலைஞர்கள் அழகான, பளிச்சென்ற உடைகளை அணிந்துகொண்டு, பெரிய ஓலைத் தொப்பிகளைப் போட்டுக்கொண்டு, அவர்களுக்கு உரிய இசையால் கலக்குகிறார்கள்.
மெரிங்கா, சால்சா, டெக்ஸ்-மெக்ஸ்
மெரிங்காவும், சால்சாவும் பல நாடுகளில் பிரபலம் அடைந்துவிட்டன. இந்தத் தாளங்கள் புதியவை அல்ல. டொமினிகன் குடியரசிலிருந்தும், ஹைதி தீவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டதுதான் இந்த மெரிங்கா. ‘படுவேகமான பீட்டோடு, ஒரே மெட்டு அடிக்கடி வந்து, சுண்டி இழுத்து, உற்சாகத்தில் திக்குமுக்காட செய்யும்’ என்று இதை விவரிக்கிறார்கள். சர்க்கரையையும், முட்டையின் வெள்ளைக்கருவையும் வேகமாக அடித்து, செய்யப்படும் இனிப்புக்கு ஸ்பானிய மொழியில் மெரிங்கா என்று பெயர். மெரிங்கா நடனக் கலைஞர்கள் படுவேகமாக அடியெடுத்து வைத்து, ஆடும் ஆட்டத்தைப் பார்த்தபின் இந்தப் பெயர்ப் பொருத்தம் சுலபமாக புரிந்துவிடும்.
சால்சா தாளத்தின் பாணியிலேயே நிறைய தாளங்கள் வந்துள்ளன. அவை பெரும்பாலும் கியூபாவிலும், பியூர்டோ ரிகோவிலும் உதயமானவை. சால்சா என்ற ஸ்பானிய வார்த்தைக்கு “சாஸ்” (albatrus) என்று அர்த்தம். அதாவது எல்லாம் கலந்த குழம்பு அல்லது கதம்பம் என்று சொல்லலாம். கரிபியன் பிரதேசத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து எல்லாம் பல்வேறு இசைக் கலைஞர்கள் வந்து, நியூயார்க் நகரில் கூடினார்கள். அங்கே இசைகள் சங்கமம் ஆயின. அல்லது கதம்பம் ஆனது. இத்தகைய இசைக் கதம்பத்தை குறிக்கும் வண்ணம் சால்சா என்ற பெயர் வந்தது என்கிறார்கள் ஒருசிலர். இங்கிருந்து இது உலகம் முழுவதும் பரவியது.
1995-ல், ஸ்பானிய பாடகி செலினா அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டார். அவரது பாடல்கள், அவர் உயிரோடு இருந்த காலத்தில் பிரபலமடைந்ததைவிட, இறந்தபின் அதிக பிரபலமடைந்தன. டெக்ஸ்-மெக்ஸ் இசை ராணி என்று அவரை புகழ்ந்தார்கள். அமெரிக்காவின் நாட்டுப்புற இசையும், நார்டேனொ (வட மெக்ஸிகன்) தாளங்களும் கலந்த ஒரு கலவை டெக்ஸ்-மெக்ஸ் என்கிறார்கள். இதன் பாடல்களை ஆங்கிலத்திலோ, ஸ்பானிய மொழியிலோ, அல்லது இருமொழிகளையும் கலந்து ஆங்கிலோ-ஸ்பானிஷிலோ பாடுகிறார்கள். அமெரிக்காவில் குடியிருக்கும் இலத்தீன் அமெரிக்கர்களுக்கும், இலத்தீன் அமெரிக்காவிலேயே குடியிருக்கும் இலத்தீன் அமெரிக்கர்களுக்கும் இந்த இசை என்றால் உயிர்.
மியூசிக்கையும் டான்ஸையும் எடைபோடுதல்
எதுவுமே அளவோடு இருந்தால்தான் ரசிக்க முடியும். அதேபோல்தான் இசையும். (நீதிமொழிகள் 25:16) கிறிஸ்தவர்கள் தரமான இசையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பைபிள் இவ்வாறு அறிவுறுத்துகிறது: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:15, 16) அசிங்கமான, ஆபாசமான தலைப்புகளில், பேய்த்தன செயலைக் குறிக்கும் (satanic) தலைப்புகளில் ஒருசில பாடல்கள் பிரபலமடைந்துள்ளன. இத்தகைய தீய பாதிப்பு இலத்தீன் இசையையும் விட்டுவைக்கவில்லை.
ஒருசில இலத்தீன் பாடல்கள் ஆபாசமாக உள்ளன. இரட்டை அர்த்தத்தோடு சில பாடல்கள் வந்துள்ளன. காமத்தை தூண்டுகிற, செக்ஸை பச்சை பச்சையாக விவரிக்கிற பாடல்களும் வந்துள்ளன. அரசியல் பிரச்சினைகளையும், வன்முறையையும், கலகத்தையும் மையமாக வைத்து, நிறைய பாடல்கள் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, காரிடோ என்ற மெக்ஸிகன் இசையை ரொம்ப காலமாகவே நிறைய இலத்தீன் அமெரிக்கர்கள் விரும்பிக் கேட்கிறார்கள். ஆனால், சமீபத்தில் நார்கோ காரிடோ என்னும் புதுவகை இசை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதன் பாடல்கள், கொடூரமான போதை மருந்து கடத்தல்காரர்களை ஹீரோக்களாகச் சித்தரிக்கின்றன. ஒருசில மெக்ஸிகன் பாண்டுவாத்திய பாடல்களின் தலைப்புகளும் அசிங்கமாக உள்ளன. இவை, குடிவெறியை, ஆண் ஆதிக்கத்தை, தேசவெறியை வானுயர புகழ்கின்றன. இதேபோல், மெரிங்கா, சால்சா போன்ற வேறுசில இலத்தீன் இசையில் அமைந்திருக்கும் பாடல்களும் கெட்டுப்போய் உள்ளன.
இலத்தீன் இசையை ஆனந்தமாக ரசிக்கும் ஒருசிலருக்கு அதன் பாடல் வரிகளின் அர்த்தம் புரியாது. அதனால், பாலின ஒழுக்கக்கேட்டிலும், வன்முறையிலும், மாய மந்திரத்திலும் ஈடுபடும்படி தூண்டுகிற பாடல்களை இன்னதென்று தெரியாமலே ரசித்துக்கொண்டிருப்பார்கள். ஸ்பானிய மொழி தெரிந்தவர்களுக்கு, இலத்தீன் பாடல்களின் சுண்டி இழுக்கும், விறுவிறுப்பான தாளங்களுக்கு லயித்து ஆடும்போது அப்பாடல்கள் எத்தகையப் பாடல்கள் என்பதுகூட தெரிவதில்லை. பைபிள் தராதரங்கள் பேரில் நாம் வைத்திருக்கும் ஆழ்ந்த மதிப்பின் காரணமாக, வீட்டிலும், பார்ட்டிகளிலும் போடப்படும் ஒவ்வொரு பாட்டையும் நல்ல பாட்டா என்று கவனமாக ஆராய்ந்து பார்ப்போம். இவ்வாறு செய்தால், கடவுளுக்கு அவமரியாதையை கொண்டுவரும் பாடல்களை கேட்கவும் மாட்டோம், சுண்டி இழுக்கும் அவற்றின் தாளங்களுக்கு ஏற்றபடி ஆடவும் மாட்டோம்.
நாம் டான்ஸ் ஆடும் விதம், மற்றவர்களை தவறுசெய்ய தூண்டாதபடி கவனமாக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 10:23, 24) கண்ணியத்தை காற்றில் பறக்கவிட்டு, எதையும் சட்டைசெய்யாமல், வெறித்து ஆடும் ஆட்டத்தை தவிர்க்க கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். வேண்டுமென்றே பாலுணர்வுகளைத் தூண்டும் வகையில் ஆடவும் அவர்கள் விரும்புவதில்லை. தம்பதிகள் ஆடும்போது, ஆட்டத்தில் எல்லைமீறி, தாம்பத்திய நெருக்கத்தை அதிகம் வெளிக்காட்டாதபடி கவனமாக இருக்கிறார்கள்.
எதையும் அளவோடு செய்ய வேண்டும் என்பதும் கிறிஸ்தவர்களிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பார்ட்டிகளில் இசையின் சத்தத்தை குறைத்து வைத்து, ரொம்ப நேரம் பார்ட்டிகள் நடைபெறாதபடி பார்த்துக்கொள்வார்கள். காதைப் பிளக்கும்படி சத்தமாக இசையைப் போட்டு, விடிய விடிய கும்மாளம்போடும் ‘களியாட்டத்தில்’ எப்போதுமே யெகோவாவின் வணக்கத்தார் ஈடுபடக்கூடாது. அதற்கு பதிலாக, அவர்கள் நல்ல தரமான இசையை இஷ்டம்போல் கேட்டு மகிழலாம். பைபிள் இவ்வாறு அறிவுறுத்துகிறது: “சென்ற வாழ்நாட்காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.”—1 பேதுரு 4:3.
இன்றைய பொழுதுபோக்குத் துறையில் ஒழுக்கங்கெட்ட விஷயங்கள் மலிந்துகிடக்கின்றன. ஆனாலும் கேட்டு ரசிக்கும்படி, நல்ல தரமான பல்வேறு இசைகள் உள்ளன. இசை கடவுள் தந்த பரிசு. பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. . . . புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 4) தாளம் போடவைக்கும், விறுவிறுப்பான இசை உங்களுக்கு பிடிக்கும் என்றால், இலத்தீன் இசையின் விறுவிறுப்பான பாடல்களை கேட்கவும், அவற்றின் சுண்டி இழுக்கும் தாளங்களுக்கு ஏற்றபடி ஆடவும் நிச்சயம் விரும்புவீர்கள். ஆனால், எல்லை மீறி போகாமல், ஒரு கிறிஸ்தவனுக்கு தகுந்தபடி, அளவோடு செய்யுங்கள்.—1 கொரிந்தியர் 10:31; பிலிப்பியர் 4:8.