இசையை “அடக்கி வாசியுங்கள்”
இசை—இன்று கோடிக்கணக்கான டாலர் புரளும் ஒரு துறை. பிரபல இசைவாணர்களும் அவர்களை ஊக்குவிப்பவர்களும் பெரும் பணம் குவிக்கிறார்கள். ஆனால் அகால மரணம், கவலை, தற்கொலை ஆகியவை வெற்றிபெற்ற இசைவாணர்களுக்கே முகாரி ராகம் பாடியிருக்கிறது என்பது மெய்மை. சிலவகை இசை ஒழுக்க ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தரக்குறைவாக இருக்கிறது, அது வன்முறைக்கும் சமூகவிரோத நடத்தைக்கும் வழிநடத்தும் என்பது அரங்கேற்றப்பட்ட உண்மை.
ஆனால், இசையை குறித்ததில் சமநிலையான நோக்கு அவசியம். இந்தக் கலையில் நல்லதும் கெட்டதும் இருக்கிறபோதிலும், இனிய இசை ஒருவருடைய வாழ்வை வளப்படுத்தி, ஓரளவு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொண்டுவரலாம். உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் இது நம்மை உயர்த்தலாம். சில உதாரணங்களை இப்பொழுது கவனியுங்கள்.
கவிதைகள், புனித பாடல்கள், ஜெபங்கள் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற இலக்கிய படைப்புகள்தாம் பைபிளிலுள்ள 150 சங்கீதங்கள். இன்று நூற்றுக்கணக்கான மொழிகளில் மகிழ்ச்சியோடு எண்ணற்றோர் இவற்றை வாசிக்கிறார்கள். ஆனால், பூர்வ எபிரெயர் அந்தச் சங்கீதங்களை வெறுமனே வாசிக்கவில்லை; மாறாக அவற்றை பாடினார்கள். அநேக சந்தர்ப்பங்களில் இனிய இசையோடு பாடினார்கள். இது, அதன் வார்த்தைகளில் வசனிக்கப்பட்டுள்ளபடி, அவர்களுடைய கடவுளாகிய யெகோவாவின் ஞானத்தோடு இணைக்கும் ஓர் சக்திமிக்க வழி. செவிகொடுத்துக் கேட்போரை பயிற்சிபெற்ற பாடகர்கள் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். எபிரெயருடைய இசையின் தரமும் பாணியும் பழமையாகவோ அரிச்சுவடியாகவோ இல்லை. மாறாக, அக்காலத்தில் அவர்களைச் சுற்றியிருந்த மக்களுடைய இசையைவிட சிறப்புற்று விளங்கியது.
பிற்பாடு, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கடவுளை துதிப்பதற்கும் துவண்ட உள்ளங்களிலிருந்து துள்ளி வெளிவரவும் சங்கீதங்களையும் வேறுசில புனித பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறு, அவர்களுடைய வாழ்க்கை வயலில் இசை எனும் இன்ப வெள்ளம் பாய்ந்து வளப்படுத்தியது. மேலும், பாடுவதன் மூலம் கடவுளைப் பற்றிய அறிவை—தங்களுடைய வாழ்க்கைப் பாதைக்கு தீபமாக திகழும் அறிவை—இதயத்தில் வேரூன்றச் செய்தார்கள்.—மத்தேயு 26:30; அப்போஸ்தலர் 16:25.
மனித ஆளுமையை வடிப்பது இசையே, ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ அதிக முழுமை பெற்றவர்களாக்குவதும் இசையே என பூர்வ கிரேக்கர் நம்பினார்கள். அறிவியல், பொருளாதாரம், தர்க்கரீதி ஆகியவற்றில் கல்வியறிவு பெறுவதை வலியுறுத்துகிற இந்த 20-ம் நூற்றாண்டில், கலைகள் மூலம் மனித ஆளுமையின் உணர்ச்சியை வளர்க்கும் அம்சம் அசட்டை செய்யப்படுகிறது.
சமநிலையோடிருங்கள்
இனிய இசையை கேட்பது நன்மையாகவும் இருக்கும் இன்பமாகவும் இருக்கும். ஆனால், ஒரு இசைக் கருவியை இசைப்பவர் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து பாடுபவர் இதைவிட அதிக மகிழ்ச்சியை அனுபவிப்பார். இசை ஞானம் மெய்யான மகிழ்ச்சிக்கு வாயிலாக இருக்கலாம்.
நிச்சயமாகவே, வாழ்க்கையில் மற்ற மகிழ்ச்சியான விஷயங்களைப் போலவே, பொழுதுபோக்கிற்குரிய இந்த அம்சத்திலும் மிதம், நல்நிதானிப்பு, தெரிந்தெடுப்பு தேவை. தெரிந்தெடுக்கும் இசையைக் குறித்ததில் மட்டுமல்ல, கேட்பதிலும் இசைக் கருவிகளை வாசிப்பதிலும் செலவிடும் நேரத்தைப் பொருத்ததிலும் இது உண்மையாக இருக்கிறது.
சிலவகை இசை உங்களுடைய உணர்ச்சிகள்மீது, செயல்கள்மீது, உறவுகள்மீது எரிமலை புகையை கக்க ஆரம்பித்தால், வேறுவகை இசையை தெரிந்தெடுங்கள். உங்களுடைய உணர்ச்சிகளை காத்துக்கொள்ள உங்களுடைய செவியை காத்துக்கொள்ளுங்கள், இப்படி செய்தால் உங்களுடைய இருதயத்தையும் மனதையும் காத்துக்கொள்ள முடியும்.
பாடல்களைப் பொருத்தளவில் இது மிகவும் உண்மை. வாழ்க்கையை குறித்ததிலும் ஒழுக்கத்தைக் குறித்ததிலும் உங்களுடைய நோக்குநிலையை கொண்டிராதவர்களுடைய விருப்பங்களின்படி இப்பாடல்கள் உங்களை வடிவமைக்கலாம். தேவபக்தியற்ற, ஒழுக்கயீனமான வாழ்க்கை-பாணிகளை முன்னேற்றுவிக்கிறவர்களுடைய விருப்பங்களின்படி இவை உங்களை வடிவமைக்கலாம். சில சந்தர்ப்பங்களில், ஒரு பாடலின் தலைப்பே தவறான உணர்ச்சிப் பொறிகளை தூண்டிவிடலாம்.
‘உங்களுடைய நியாயங்காட்டும் வல்லமையால் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் கடவுளுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்’ என்று கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் புத்திமதி கூறுகிறது. (ரோமர் 12:1, NW) தெளிவாகவே, நம்முடைய உணர்ச்சிகள் ‘ஜீவபலியின்’ பாகமானவை. ஆகவே, இசையின் வலிமை உணர்ச்சிகளை மழுங்கடித்து முக்கியமான தீர்மானமெடுப்பதை, நியாயமாக நடப்பதை, சரியான நடவடிக்கையெடுப்பதை தடைசெய்ய ஆரம்பித்தால், காலம் கடத்தாதீர்கள். இசையை கேட்கும் நம்முடைய பழக்கங்களை மாற்றிக்கொள்வதற்கான சரியான சமயம் இதுவே. இசை—அது உங்களுடைய இதயத்தையும் மனதையும்—நல்லதுக்கோ கெட்டதுக்கோ—பாதிக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
கற்றுக்கொள்ளும் திறமையை அதிகரித்தல்
“ஒத்திசையை தவறாமல் கேட்பது, ஒரு குழந்தையின் கற்றுக்கொள்ளும் திறமையை அதிகரிக்கிறது என ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. ஆனால் பெரும்பாலான வீடுகளில், குழந்தைகள் எதுவுமே கேட்பதில்லை.”—ஆடியோ, மார்ச் 1999.