நாம் இசைக்கு மயங்குவதேன்?
இசையும் மொழியும் மனிதனுக்கே உரிய தனித்தன்மைமிக்க புலமைகள். இவை இரண்டும் இல்லா உலகை கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. “மொழியும் இசையும் முழு மனித இனத்திற்கே உரிய தனிப்பண்புகள்” என்று சொல்கிறது த மியூசிக்கல் மைன்ட் என்ற நூல். அவை நம்முடைய பேச்சுப் பரிமாற்றத்திற்கு உயிர்நாடிகள். ஆகவே, மொழியைப் போலவே, இசை “பேசும்”போது நம்முடைய உணர்வுகள் “கேட்கின்றன” என சொல்லலாம்.
இசை நம்முடைய உணர்வுகளுடன் ஏன் பேசுகிறது, எப்படி பேசுகிறது? இதற்கு விடை காண: (1) இசையின் அம்சங்களையும் (musical elements) நம்முடைய மூளை அவற்றை பகுத்தாராயும் முறையையும்; (2) நாம் இசைக்கு பிரதிபலிக்கும் விதத்தைக் கட்டுப்படுத்தும் நம்முடைய உணர்ச்சி அமைப்பையும் கலாச்சார பின்னணியையும்; (3) நம்முடைய பிரதிபலிப்பை பாதிக்கும் மொழியையும் நாம் ஆராய வேண்டும்.
இசையின் அம்சங்கள்
இசையின் பண்புகள் பெரும்பாலும் “இசையின் அம்சங்கள்” என குறிப்பிடப்படுகின்றன. இசைக் கருவியின் தொனி, அல்லது நாதமே இந்த அம்சங்கள். உதாரணமாக, பிரெஞ்சு இசைக் கருவியாகிய ஊது கொம்பு, “ஆரவாரமிக்கது” அல்லது வலியது என வருணிக்கப்படுகிறது. இதன் தொனி “கர்வமிக்க” தாரையிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. இவை இரண்டுமே காற்றுக் கருவிகளின் குடும்பத்தை அல்லது பிரிவைச் சேர்ந்தவை. என்றபோதிலும், அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான வலிமையில் மேற்சுரங்களை பிறப்பிக்கின்றன. இதுவே ஒவ்வொரு கருவிக்கும் தனித்தன்மைமிக்க தொனியை தருகிறது. கேட்போருடைய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை சுண்டியிழுப்பதற்கு சில ஸ்பெஷல் எஃபெக்டுகளை உருவாக்க இசையமைப்பாளர்கள் இந்தப் பண்புகளை பயன்படுத்துகின்றனர்.
நமக்கு முதன்முதலாக பரிச்சயமாகும் ஒரு அம்சம் சந்தம் (rhythm)—ஒருவேளை நாம் கருப்பையில் இருந்தபோதே நம் தாயின் இதயத் துடிப்பை கேட்டிருப்போம். சந்தத்திற்கு நாம் பிரதிபலிக்கும் விதத்தை நம் இதயத்துடிப்பும் நம் சுவாசமும்கூட கட்டுப்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. ஆகவே நிமிடத்திற்கு 70 முதல் 100 பீட்டுகள் கொண்ட இசையை பெரும்பாலான மக்கள் விரும்புவது ஏதேச்சையானதல்ல. ஏனெனில் ஆரோக்கியமான ஒரு நபருடைய சராசரி இதயத் துடிப்பின் வேகமும் இதுவே. இதைத்தான் பர்செப்சுவல் அண்ட் மோட்டார் ஸ்கில்ஸ் என்ற பத்திரிகை சொல்ல வருகிறது.
பல்வகை இசைக் கருவிகளையும் அவை பிறப்பிக்கும் ஒலியையும் இன்னிசையையும் ஆராய்கையில் வித்தியாசமான இசை அம்சங்களை பகுத்துணரலாம். மோசார்ட் இயற்றிய பாடலின் இரண்டாவது சுரவரிசையை இசைக்கையில் பாசூன் கருவியின் (ஒருவகை காற்றுக் கருவி) வசீகரிக்கும் ஒலி உள்ளத்தின் ஆழத்திற்கே சென்று உணர்வுகளை தட்டியெழுப்பும். முகாரி பாடும் ஷாக்கூஹாசி என்ற ஜப்பானிய புல்லாங்குழல் இதயத்தை இதமாக வருடலாம். கம்மிய குரலெழுப்பும் டெனர் சாக்ஸாபோனின் தொனி அநேகருடைய மனங்களில் நீலாம்பரி ராகத்தை ரீங்காரம் போட்டுக்கொண்டே இருக்கிறது. ஜெர்மன் இசைக் குழுவிலுள்ள டியூபா என்ற கருவியின் ஊம்ப்பா பக்கவாத்தியம் பொதுவாக மோகனம் பொங்கும் உணர்ச்சியை தூண்டுகிறது. ஸ்ட்ராஸ் வால்ட்ஸ் இசை பாடும் வயலின்களின் பரவசம் பொங்கும் ராகம், சுருதி, ஒலி அநேகரை நடன மேடைக்கு வசீகரித்து இழுக்கும் வலிமையுடையது. ‘இசை முழு மனிதனிடமும் பேசுவதால்’ இப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என கூறுகிறார் நியூ யார்க்கிலுள்ள நார்டாஃப்-ராபின்ஸ் மியூஸிக் தெரபி சென்டரைச் சேர்ந்த க்ளைவ் ஈ. ராபின்ஸ்.
ஒத்திசை, முரணிசை, இன்னிசை
ஒத்திசை (harmony) இனிய ஒலியை பிறப்பிக்கிறது, முரணிசை (discord) கரகரப்பான ஒலியை உண்டாக்குகிறது. ஆனால், இவை சிலசமயங்களில் ஒன்றுக்கொன்று மெருகூட்டுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? கேட்பதற்கு ஒத்திசையைப் போல இருக்கும் இசையில், நீங்கள் கற்பனை செய்து பார்ப்பதைவிட அதிக முரணிசை இருக்கலாம். ஒத்திசையும் முரணிசையும் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்துடன் வருவது, நம்மை அறியாமலேயே நம் உணர்ச்சிகளை பாதிக்கிறது. இந்த உணர்ச்சிப்பூர்வ தாலாட்டு இதமளிக்கிறது. ஆனால் முரணிசை மட்டுமே ஒலித்தால் சகித்துக்கொள்ள முடியாத எரிச்சலூட்டும் உணர்வுகளை எழுப்பும். உதாரணமாக, நகங்களை சிலேட்டிலோ கரும்பலகையிலோ கீறினால் எப்படியிருக்குமோ அதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். மறுபட்சத்தில், இசையானது ஒத்திசையை மட்டுமே அடிப்படையாக கொண்டிருந்தால் சலிப்பூட்டுவதாக இருக்கும்.
ஒற்றைச் சுரங்கள் இனிமையாகத் தொடர்ந்து வந்து இசையை அமைக்கும் முறையே இன்னிசை (Melody). இந்த ஆங்கில வார்த்தை மெலோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கிறது; “பாடல்” என்பதை இது அர்த்தப்படுத்துகிறது என சில ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆகவே மெலடி என்ற ஆங்கில வார்த்தை இனிய இசையை, ஆம், எந்தவொரு இனிய ஓசையையும் குறிக்கிறது என அகராதிகள் காட்டுகின்றன.
ஆனால், தொடர்ச்சியாக எழுப்பப்படும் எந்தவிதமான ஓசையும் இன்னிசையாக இருக்காது. உதாரணமாக, தொடர்ச்சியான ஒலிக் குறிப்புகளுக்கு இடையே அடிக்கடி வரும் பெரிய இடைவெளி, இன்னிசையை உணர்ச்சித் துடிப்புள்ளதாக்குகிறது, ஆனால் இனிமையாக்குவதில்லை. மறுபட்சத்தில், சில நீண்ட இடைவெளிகளே உள்ள தொடர்ச்சியான ஒலிக் குறிப்புகள் மதுரமான இன்னிசையை தருகின்றன. ஒலிக் குறிப்புகள் மற்றும் இடைவெளிகளின் வித்தியாசமான ஒழுங்கமைப்பு, ஓர் இன்னிசையை சோகமாக்கவோ சந்தோஷமாக்கவோ முடியும். ஒத்திசையைப் போலவே இன்னிசையும் உணர்ச்சிகளை பாதிக்கிறது. தொனியின் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, அதாவது, சுரங்கள் எவ்வளவு வலியவை அல்லது மெலியவை என்பதைப் பொறுத்து நம்முடைய உணர்ச்சிகளை பாதிக்கிறது.
இவையெல்லாம் ஒன்றுசேரும்போது, நம்முடைய உணர்ச்சிகளை சாந்தப்படுத்தக்கூடிய அல்லது தூண்டக்கூடிய சக்திவாய்ந்த ஒலிகள் உருவாகின்றன. ஏனெனில் இசையை நம்முடைய மூளை வித்தியாசமான விதங்களில் பகுத்தறிந்து செயல்முறைப்படுத்துகிறது.
இசையும் மூளையும்
மொழியையும் தர்க்கரீதியையும் புரிந்துகொள்ள மூளையின் இடது பாகம் பயன்படுகிறது. ஆனால் மூளையின் வலது பாகத்தின் வேலையோ இசையை உணர்ந்துகொள்வதாகும். இந்த வலதுபக்கம்தான் அதிகமாக உணர்ச்சிகளை கையாளுகிறது என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஆனால் இது உண்மையோ பொய்யோ, செவிகொடுத்துக் கேட்போரை இசை உடனடியாக பிரதிபலிக்க வைக்கிறது என்பது மட்டும் தெளிவு. பர்செப்சுவல் அண்ட் மோட்டார் ஸ்கில்ஸ் இதை இவ்வாறு தெரிவிக்கிறது: “விரைவாகவும் திறம்பட்ட முறையிலும் உணர்ச்சிகளை உருவாக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. உணர்ச்சிகளை வருணிப்பதற்கு ஒரு புத்தகத்தில் பல வாக்கியங்கள் தேவைப்படுமென்றால், இசையில் அவற்றை ஒரேவொரு சுர அடுக்கிலேயே வெளிப்படுத்திவிடலாம்.”
பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இடையேயுள்ள தொடர்பை பற்றியும், இவை ஒவ்வொன்றுக்கும் பிரதிபலிப்பதைப் பற்றியும் இசையும் மனமும் என்ற ஆங்கில நூல் சுவாரஸ்யமான இந்தச் செய்தியை தருகிறது: “பார்ப்பதற்கும் உணர்ச்சி தூண்டுதலுக்கும் இடையே உள்ள உறவைவிட, கேட்பதற்கும் உணர்ச்சி தூண்டுதலுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. . . . காயம்பட்ட ஒரு மிருகத்தையோ அல்லது மௌனமாக துன்பப்படும் ஒரு நபரையோ எடுத்துக்கொள்ளுங்கள். இவர்களை கண்ணால் காண்பதுதானே, காண்பவருடைய உணர்ச்சியை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் அவை/அவர்கள் கூக்குரலிட ஆரம்பித்தால், அதை பார்ப்பவர் பொதுவாக மிகவும் நெகிழ்ந்து போகிறார்.”
இசையும் பாடலும் நீங்களும்
குறிப்பிட்ட ஒருவகை இசை, கேட்போர் எல்லார்மீதும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என சிலர் கூறுகின்றனர். ஆனால், ஓர் இன்னிசைக்கோ அல்லது பாடலுக்கோ பிரதிபலிப்பது தனிப்பட்ட நபருடைய மனநிலையை அல்லது கடந்தகால அனுபவத்தைப் பொறுத்தது என்பது மற்றொரு சாராரின் கருத்து. உதாரணமாக, அன்பானவரை மரணத்தில் இழந்தவர் ஒரு பாடலை கேட்கிறார், ஒருவேளை கோயிலில் அந்தப் பாடலை கேட்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடல் சில சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்து அவரை சோகத்தில் ஆழ்த்தலாம் அல்லது அந்நபருடைய கண்களில் கண்ணீரை வரவழைக்கலாம். ஆனால் அந்தச் சூழலில் இல்லாத மற்றவர்கள் அதே பாட்டை ஆனந்தம் பொங்க பாடலாம்.
மேலும், பிரெஞ்சு ஊது கொம்பு கருவியையும் தாரை கருவியையும் பற்றிய விவரிப்பை கவனியுங்கள். பிரெஞ்சு ஊது கொம்பு ஆரவார தொனி என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். உங்களுக்கு அதன் தொனி சிரிப்பூட்டலாம். ஆனால் தாரையோ ஆத்மார்த்தமாக இருக்கலாம். இவ்வாறு நம் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்த உணர்ச்சிகளின் ஊற்று உண்டு. அதை இசை பொங்கிவழியச் செய்யலாம்—இதனால் நம் சொந்த ரசனைக்கேற்ப பிரதிபலிக்கிறோம்.
வார்த்தைகளை அல்லது எண்ணங்களை உணர்ச்சிகளோடு சங்கமமாக்க இசை உதவுகிறது. ஆகவேதான், தொலைக்காட்சி அல்லது வானொலி விளம்பரங்கள் பின்னணி இசையின்றி வருவது அரிது. பெரும்பாலும் வார்த்தைகள் அவ்வளவு கருத்தாழமிக்கதாக இருப்பதில்லை. ஆனால், பின்னணியில் சரியான இசை ஒலித்தால் போதும், செவிகொடுப்பவரின் உணர்ச்சி கவர்ந்திழுக்கப்படுகிறது. ஒரு பொருளை வாங்குவது நியாயமானது என்று நினைக்கச் செய்வதைவிட வாங்கவேண்டுமென்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதே பெரும்பாலான விளம்பரங்களின் இலக்கு என்பது எவ்வளவு உண்மை!
விளம்பரங்கள் பொதுமக்களுடைய ‘பாக்கெட்டை’ காலிசெய்கின்றன, ஆனால் பாடலும் இசையும் இதைவிட மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. மற்றவர்களுடைய கருத்துக்களை கண்டுகொள்ளாதீர்கள், “பிடிவாதமாக இருங்கள்” என்ற எண்ணத்தையே திரும்பத் திரும்ப வரும் பாடல் வரிகளில் பாடலாசிரியர்கள் இளைஞர்களுக்கு கற்பிக்கிறார்கள் என ஜர்னல் ஆஃப் யூத் அண்ட் அடோலஸன்ஸ் என்ற பத்திரிகை கருத்து தெரிவிக்கிறது. ‘சர்ச்சைக்குரிய ராப் பாடல்களால் [தெரிவிக்கப்படும் செய்தி] ஹெவி மெட்டல் இசையைவிட அதிக தத்ரூபமாக இருக்கின்றன.” இவை கேட்பவருடைய உணர்ச்சிகளோடு ஒன்றர கலந்துவிடுவது மட்டுமல்லாமல், சமூகவிரோத நடத்தைக்கும் வழிவகுக்கலாம் என மற்றொரு பத்திரிகை சொல்கிறது.
பாடலின் வரிகளை விட்டுவிட்டு இசையை மட்டும் ஒருவர் கேட்டால் மோசமான விளைவுகளை தடுக்க முடியுமா? பெரும்பாலும் ஹெவி மெட்டல் இசையிலும் ராப் இசையிலும் வார்த்தைகளைக் கேட்பது கடினமே. சொல்லப்போனால், இசையின் பேரிரைச்சலில் பாடலின் வார்த்தைகள் இருக்கும் இடமே தெரிவதில்லை. ஆனால், வார்த்தைகள் விளங்கினாலும் சரி விளங்காவிட்டாலும் சரி, துடிப்பான சந்தத்திலும் அடிக்கடி வரும் மெல்லிசையிலுமே செய்தி தெரிவிக்கப்பட்டுவிடுகிறது.
எப்படி என்று யோசிக்கிறீர்களா? சில தலைப்புகளே மனதில் பிரமையை ஏற்படுத்துகின்றன. மேலும், இசையின் தன்மையிலேயே செய்தி அடங்கியிருக்கிறது. என்ன செய்தி? இளைஞருக்கான ஒரு பத்திரிகை சொல்வதை கவனியுங்கள்: “அதிகாரம், சாதனை படைக்கும் திறமை, பாலின வெற்றி போன்ற ஐடியாக்களை இது உருவாக்குகிறது.” மற்றொரு பத்திரிகை சொல்கிறது: “அடிப்படை விஷயமே . . . மூர்க்கத்தனமான கலகம், வன்முறை, போதைப் பொருட்கள் துஷ்பிரயோகம், பாலின ஒழுக்கக்கேடு, நெறிமுறையற்ற வாழ்க்கை, சாத்தானிய கோட்பாடு போன்றவைதான்.”
இது உண்மையென்றாலும், அது தங்களை அவ்வாறு மோசமாக பாதிப்பதில்லை என சில இளைஞர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். தனிப்பட்ட ஆட்களாக தங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இவை உதவி செய்வதால், இப்படிப்பட்ட இசை நல்லதுதான் என அவர்கள் வாதாடுகிறார்கள். ஆனால் இது உண்மையா? ஜர்னல் ஆஃப் யூத் அண்ட் அடோலஸன்ஸ் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “கோபம், பகைமை, அதிகாரம் ஆகியவற்றை சில பையன்கள் ஹெவி மெட்டல் இசையோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள். அதிக மதிப்பெண்கள் பெறாத மாணவர்களே முக்கியமாய் இந்த இசையை நாடுகிறார்கள். நாள் முழுக்க லாயக்கற்றவன் என்ற ஏளனப் பேச்சைக் கேட்டு வெறுத்துப்போய் வீடு திரும்பும் இவர்களுக்கு இப்பாடல்கள் ரசமூட்டலாம்.” பின்பு அந்தப் பத்திரிகை தொடர்ந்து சொல்கிறது: “இதிலுள்ள நகைச்சுவை அல்லது குழப்பம் என்னவென்றால், பிரத்தியேக நபர்களாய் தனித்து நிற்க வழிதேடும் இளைஞர்கள், எல்லாருக்கும் பொதுவாக உள்ள சாதனத்தை அதற்காக பயன்படுத்துகின்றனர். தனித்துவத்தை தனிமையில் நாடுவதற்கு பதிலாக அவர்கள் கமர்ஷியல் மியூசிக் இன்டஸ்ட்ரி தயாரித்து வழங்கும் “ரெடிமேட் பர்ஸனாலிட்டியை” வாங்கிக்கொள்கிறார்கள்.” வேறு வார்த்தையில் சொல்லப்போனால், எதை யோசிக்க வேண்டும், எப்படி உணர வேண்டும் என்பதை இந்த இளைஞர்களுக்கு சொல்வது வேறு யாரோ.
ராக் இசைக் கச்சேரிகளுக்கு கவனத்தைத் திருப்புவோம். அங்கு அலைமோதும் கூட்டத்தார்மீது அவை எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன? இசையும் மனமும் என்ற புத்தகம் பதிலளிக்கிறது: “உணர்ச்சிகள் உச்சத்திற்கே செல்கின்றன. ஆனால் ஒவ்வொருவரது உணர்ச்சிகளும் தனித்தனியாக அல்ல, அனைவரது உணர்ச்சிகளும் ஒருசேர எகிறுகின்றன. இவ்வாறு கூட்டத்தோடு கூட்டமாய் உணர்ச்சிகளுக்கு ஆளாகையில் சுய உணர்வையும் பகுத்தறிவையும் இழக்க நேரிடுகிறது. சிறிதும் யோசிக்காமல் குருட்டுத்தனமாக அந்த நேர உணர்ச்சிக்கு அடிமையாகிவிடுகின்றனர். கும்பலாக கூடினாலே இப்படிப்பட்ட ஆபத்தில்தான் போய் முடிகிறது.” ராக் இசை கச்சேரிகளில் கொஞ்சமும் சுயகட்டுப்பாடில்லாமல் காட்டுத்தனமாக கும்மாளமடிக்கும் காட்சிகளை பார்த்திருப்போம். இதுவே மேற்சொன்ன மேற்கோளுக்கு சான்று.
ஆகவே, மனதையும் இருதயத்தையும் களங்கப்படுத்துவதை தவிர்ப்பதற்கு, நாம் தெரிந்தெடுக்கும் இசையைக் குறித்ததில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதை நாம் எப்படி செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கு எமது கடைசி கட்டுரை பதிலளிக்கும்.
[பக்கம் 7-ன் படம்]
இசைக்கு லயிப்பவர்களை அது பெரும்பாலும் ஆடவைக்கிறது