வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒரு புரியாத புதிர்
பிரிட்டனிலிருந்து விழுத்தெழு! நிருபர்
வரலாற்றிலேயே புகழ் உச்சியை எட்டிய நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்கிறார்கள். அவரைப் பற்றி த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவரைப் போல் ஒரு மாபெரும் நாடக ஆசிரியர் இனி பிறந்துதான் வரவேண்டும் என்கிறார்கள் பலர். இன்றுகூட அவரது நாடகங்கள் . . . பல நாடுகளில், அடிக்கடி அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. வேறு எந்த நாடகமும் இத்தகைய புகழை அடையவில்லை.” அவருடைய படைப்புகள் 70-க்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அவர் எழுதியதாகக் கூறப்படும் ஏராளமான நாடக படைப்புகளைப் பற்றி, த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “நாடகங்களையும், கவிதைகளையும் ஷேக்ஸ்பியர் தன் கைப்படவே எழுதினார் என்பதில் ஷேக்ஸ்பியர் தாசர்களுக்கு துளியும் சந்தேகம் கிடையாது.” ஆனால் அவற்றையெல்லாம் அவர் எழுதவில்லை என்று மற்றவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?
1564-ம் ஆண்டு, ஸ்ட்ரோபோர்ட்-அப்பான்-அவன் என்னுமிடத்தில் ஷேக்ஸ்பியர் பிறந்தார். இந்தப் பூவுலகில் 52 வருடம் வாழ்ந்து, 1616-ல் காலமானார். பலருடைய நெஞ்சங்களில் ஒரேவொரு முக்கிய கேள்வி இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதற்கு விடை தேடி, பொறுமையோடு பல வருடங்கள் செய்த ஆராய்ச்சியின் பலனாக, எண்ணற்ற புத்தகங்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. இதோ அந்தக் கேள்வி: வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதியதாக குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா இலக்கியங்களையும் உண்மையில் அவர்தான் எழுதினாரா?
அடிப்படை பிரச்சினைகள்
அவருடைய நாடகங்களில் உலக அறிவு கரைபுரண்டு ஓடுகிறது. உதாரணத்திற்கு, சட்டத்தைப் பற்றி அவருக்கிருக்கும் அபாரமான அறிவும், அவர் பயன்படுத்தியிருக்கும் நுணுக்கமான சட்ட பதங்களும், அவற்றை அவர் சொல்லும் முறையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 1860-ல், ஷேக்ஸ்பியரின் மருத்துவ அறிவு என்ற ஆங்கில புத்தகத்தில், ஷேக்ஸ்பியருக்கு மருத்துவத்தில் ஆழமான அறிவு இருந்ததை சர் ஜான் பக்னில் என்பவர் சுட்டிக்காட்டினார். அதேபோல் வேட்டையாடுதல், பருந்தை வேட்டைக்குப் பழக்குதல் போன்ற விளையாட்டுகளைப் பற்றியும், இன்னும் வேறு விளையாட்டுகளைப் பற்றியும் அவருக்கு அபாரமான அறிவு இருந்திருக்கிறது. அரச சபையில் நடந்துகொள்ளும் முறையையும் நன்றாக அறிந்திருக்கிறார். ஷேக்ஸ்பியர் தாசரான வரலாற்று ஆசிரியர் ஜான் மெக்னெல், ஷேக்ஸ்பியரை “எல்லா விஷயங்களையும் கரைத்துக்குடித்த எழுத்தாளர்” என்கிறார்.
கப்பல் சேதம் ஏற்பட்ட விவரம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஐந்து தடவை சித்தரிக்கப்படுகிறது. கப்பலைப் பற்றியும் கடல் பயணத்தைப் பற்றியும் குறிப்பான, அவற்றிற்கே உரிய வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தால், நாடக ஆசிரியர் உண்மையில் அனுபவம்வாய்ந்த ஒரு மாலுமியாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அப்படியென்றால், ஷேக்ஸ்பியர் கடற்பயணம் மேற்கொண்டாரா? அல்லது, கப்பற்படையில் சேர்ந்துகொள்ள அவரை கட்டாயப்படுத்தினார்களா? 1588-ல் ஸ்பெயின் கப்பற்படையைத் தோற்கடித்த இங்கிலாந்து கப்பற்படையில் இவரும் இருந்தாரோ? ஷேக்ஸ்பியர் மாலுமியாக இருந்திருந்தால் அல்லது கப்பற்படையில் சேர்ந்திருந்தால் அவர்தான் நாடக ஆசிரியர் என்று அடித்துச் சொல்லலாம். ஆனால் அதற்கு ஆதாரம் ஏதுமில்லை. அதேபோல் இராணுவத் துறையின் விஷயங்களையும், படைவீரர்களின் பரிபாஷையையும் அவர் பிட்டுபிட்டு வைக்கிறார்.
அவருடைய படைப்புகளில் பைபிள் மேற்கோள்கள் விஞ்சி நிற்கின்றன. தன் அம்மாவிடமிருந்து அவர் பைபிளை கற்றிருக்கலாம். ஆனால் அவர் அம்மா படித்தவர் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. அவரது பைபிள் அறிவை பார்த்தால், அவர் எவ்வளவு படித்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.
அவர் படித்த மேதையா?
வில்லியமின் தந்தை ஜான், ஒரு கம்பளி வியாபாரி. அவர் கசாப்புக்காரராகவும் இருந்திருக்கலாம் என்கிறார்கள். அவர் படிக்காதவராக இருந்தாலும்கூட, கௌரவமான குடிமகனாகப் போற்றப்பட்டார். ஸ்ட்ரோபோர்ட் இலக்கணப் பள்ளியில் படித்த மாணவர்களின் பட்டியல் இன்று கைவசம் இல்லை. ஆனாலும் வில்லியம் சிறுவனாக இருந்தபோது அங்குத்தான் படித்திருப்பார் என இன்றைய கல்விமான்கள் நிறையப்பேர் நினைக்கிறார்கள். ஷேக்ஸ்பியருக்கு “கொஞ்சம் இலத்தீன் மொழியும், கொஞ்சம் கிரேக்க மொழியும்” மாத்திரம் தெரியும் என்பதாக பல ஆண்டுகளுக்குப்பின் அவரது நண்பரும், நாடக ஆசிரியருமான பென் ஜான்சன் குறிப்பிட்டார். இதிலிருந்து, வில்லியம் அடிப்படை கல்வி மட்டுமே பயின்றார் என்றும் பொருள்கொள்ளலாம்.
ஆனால், நாடக ஆசிரியருக்கு பண்டைய கிரேக்க, ரோம இலக்கியங்களிலும், அநேகமாக பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிய மொழிகளிலும் நல்ல புலமை இருந்திருக்கிறது. அவர் ஏராளமான வார்த்தைகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். இன்று அதிகம் படித்த ஒருவர் சுமார் 4,000 வார்த்தைகளுக்கு மேல் உபயோகிப்பது கிடையாது. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் ஜான் மில்ட்டனே சுமார் 8,000 வார்த்தைகளை மாத்திரம் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் ஷேக்ஸ்பியரோ 21,000 வார்த்தைகளுக்கு குறைவாக பயன்படுத்தவில்லை என்று அடித்துச் சொல்கிறது ஓர் அதிகார வட்டம்!
புத்தகங்களும் கையெழுத்துப் பிரதிகளும்
ஷேக்ஸ்பியருடைய மூன்று பக்க உயிலில் அவரது சொத்துக்கள் எல்லாம் துல்லியமாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் உயிலில் அவருடைய புத்தகங்களைப் பற்றியோ, கையெழுத்துப் பிரதிகளைப் பற்றியோ எந்தவொரு குறிப்பும் இல்லை. அவற்றை தன்னுடைய மூத்த மகள் சூசன்னாவுக்கு கொடுத்துவிட்டாரா? அப்படி அவர் கொடுத்திருந்தால், சூசன்னா தன்னுடைய வாரிசுகளுக்குக் கண்டிப்பாக கொடுத்திருப்பார். ஆகவே தன் மகளுக்கு கொடுத்தாரா இல்லையா என்பது புதிராவே உள்ளது. இப்புதிரை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு ஏற்பட்டது. ஸ்ட்ரோபோர்ட்-அப்பான்-அவன் என்னுமிடத்திலிருந்து சுமார் 50 மைல் சுற்றுவட்டாரத்திற்குள் இருந்த தனியார் நூல்நிலையங்களை எல்லாம் அவர் அலசோ அலசென்று அலசினார். ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு புத்தகம்கூட சிக்கவில்லை.
நாடகங்களின் கையெழுத்துப் பிரதிகள் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ஏனென்றால் ஷேக்ஸ்பியர் கைப்பட எழுதிய ஒரு பிரதிகூட இல்லை. ஷேக்ஸ்பியர் இறந்து, ஏழு ஆண்டுகளுக்குப்பின், 1623-ல் வெளிவந்த ஃபஸ்ட் ஃபோலியோ (First Folio) என்ற பதிப்பில், அவருடைய முப்பத்தாறு நாடகங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவருடைய வாழ்நாள் காலத்திலேயே அவருடைய நாடகங்களைத் திருடி, நிறைய புத்தகங்கள் வெளிவந்தன. ஷேக்ஸ்பியர் ஒரு கெட்டிக்கார வியாபாரியாக இருந்தும்கூட இலக்கிய திருடர்கள்மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
லண்டன் பயணம்—தேடிவந்த புகழ்
15-ம் 16-ம் நூற்றாண்டுகளில் நாடோடி நாடகக்குழுக்களின் நடமாட்டம் பரவலாக இருந்தது. அவர்களில் சிலர் 1587-ல் ஸ்ட்ரோபோர்ட்-அப்பான்-அவனுக்கும் வந்தார்கள். ஷேக்ஸ்பியரும் அந்த நாடகக்குழுவில் சேர்ந்திருந்தால், அவ்வருடம் இளவேனிற்காலத்தில் லண்டன் போய் சேர்ந்திருப்பார். லண்டனில், லார்டு சேம்பர்லேன்ஸ் மேன் என்றொரு புகழ்பெற்ற நாடக கம்பெனியில் ஷேக்ஸ்பியர் உறுப்பினராக ஆனார். பிறகு, அந்தக் கம்பெனி கிங்ஸ் மேன் என்று அழைக்கப்பட்டது. தலைநகரான லண்டனை அவர் அடைந்தது முதல், வெற்றியும், செல்வமும், புகழும் குவிய ஆரம்பித்தன. காலம் கரைந்தோட, அவர் லண்டனிலும், ஸ்ட்ரோபோர்ட்-அப்பான்-அவனிலும் சொத்துக்களை சேகரித்தார். ஆனால் 1583 முதல் 1592 வரை அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற விவரம் தெளிவாக இல்லை. அதனால் அவற்றை “தொலைந்து போன” முக்கிய வருடங்கள் என்கிறார்கள்.
1599-ல் சௌத்வாக் என்ற இடத்தில் குளோப் நாடக அரங்கம் கட்டப்பட்டது. அதற்கு முன்பே ஷேக்ஸ்பியரின் பெயரைத் தாங்கி நிறைய நாடகங்கள் லண்டனில் அரங்கேறின. ஆனாலும் நாடக ஆசிரியர் என்ற புகழ் அவருக்கு அவ்வளவாக கிடைக்கவில்லை. அவருடைய இறுதி ஊர்வலம்கூட எளிய முறையில் நடைபெற்றது. ஆனால் மற்ற நாடக ஆசிரியர்களான பென் ஜான்சன், பிரன்டிஸ் பியோமோன் போன்றவர்களின் இறுதி ஊர்வலம் பிரமாண்டமான முறையில், லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபியில் நடந்தது.
ஊகிக்கப்படும் ஆசிரியர்கள்
ஷேக்ஸ்பியர் என்ற பெயருக்குப் பின்னால், உண்மையான ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் மறைந்துகொண்டார்களா? இவ்வாறு ஊகிக்கப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 60-க்கு மேல் என்கிறார்கள் மக்கள். இந்த எண்ணிக்கையில் நாடக ஆசிரியர் கிறிஸ்டோபர் மார்லோவின்a பெயரே முக்கியமாக அடிபடுகிறது. கார்டினல் உல்சே, சர் வால்டர் ராலி, அரசி முதலாம் எலிசபெத் என்று எதிர்பார்க்கப்படாத பெயர்களும் அடிபடுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டப்படும் பெயர்களில் எதை முக்கியமாக எடுத்துக்கொள்வது?
ஷேக்ஸ்பியரின் பெயரில் எழுதியதாக ஊகிக்கப்படும் முதல் ஆசிரியர் பிரான்ஸிஸ் பேகன். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். ஷேக்ஸ்பியரைவிட மூன்று வயது மூத்தவர். புகழ்பெற்ற வழக்கறிஞர். அரசவை அதிகாரியாக இருந்தவர். பல இலக்கிய படைப்புகளுக்கு காரணகர்த்தா. 1769-ல், ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பேகனுடையவை என்று முதன்முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் அதை யாரும் காதில் வாங்கவில்லை. அப்படியே கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த வழக்கிற்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காக, 1885-ல் பேகன் சங்கம் நிறுவப்பட்டது. சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதரவாக நிறைய சாட்சியங்கள் கொண்டுவரப்பட்டன. உதாரணத்திற்கு, வட லண்டனிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திலும், செயின்ட் ஆல்பென்ஸுக்கு பக்கத்திலும் இருந்த ஒரு டவுனில் பேகன் வாழ்ந்தார். இந்த டவுனைப் பற்றி ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் 15 தடவை குறிப்பிடப்படுள்ளது. ஆனால் ஷேக்ஸ்பியரின் சொந்த டவுனான ஸ்ட்ரோபோர்ட்-அப்பான்-அவன் ஒரு தடவைகூட குறிப்பிடப்படவில்லை.
ஊகிக்கப்படும் ஆசிரியர்கள் வரிசையில் ரட்லாண்டைச் சேர்ந்த ஐந்தாம் பிரபு (Earl) ரோஜர் மேனல்ஸ் என்பவரும், டெர்பியைச் சேர்ந்த ஆறாம் பிரபு வில்லியம் ஸ்டான்லியும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாளர்களும் உள்ளனர். இவர்கள் அதிகம் படித்தவர்கள். அதோடு அரசவை வாழ்க்கையில் மூத்த அனுபவம் பெற்றவர்கள். அப்படியென்றால் அவர்கள் எதற்காக தங்கள் இலக்கிய படைப்புகளை மறைக்க வேண்டும்? 1939-ல் ரட்லாண்ட் பிரபுவுக்கு ஆதரவாக பேராசிரியர் பி. எஸ். போரோஃப்ஷிகாப் கூறியதாவது: “முதன்முதலில் அவர் வெளியிட்ட இலக்கிய படைப்புகள் எல்லாம் பெயர் இல்லாமலே வந்தன. மற்ற இலக்கிய படைப்புகள் புனைபெயரில் வெளிவந்தன. இது ஏனென்றால் அரசவையில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் சாதாரண நாடக கம்பெனிகளுக்கு நாடகம் எழுதுவது சமுதாயத்தில் கேவலமாகக் கருதப்பட்டது.”
நிறைய எழுத்தாளர்கள், தங்கள் தங்கள் திறமைகளை கொட்டி உருவாக்கிய கூட்டுக்கலவையே ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என்று ஒருசிலர் சொல்கிறார்கள். அப்படியென்றால், சிறந்த நடிகரான ஷேக்ஸ்பியர் மற்றவர்களது நாடகங்களை அரங்கேற்றுவதற்காக, அந்த நாடகங்களை எடிட்டிங் செய்து, தயாரித்திருப்பாரா? மற்றவர்களது நாடக உரைகளை எடிட்டிங் செய்து, ஏதாவது சிறு சிறு மாற்றங்களை அவர் செய்திருந்தால் இதை உண்மை என்று நம்பலாம். ஆனால் அவர் எப்போதுமே நாடக உரையிலிருந்து ‘ஒரு வரியைக்கூட அழித்ததே கிடையாது’ என்கிறார்கள்.
ஷேக்ஸ்பியர்தான் ஆசிரியரா என்ற சந்தேகம் வர முக்கிய காரணம் யாது? “ஸ்ட்ரோபோர்ட்-அப்பான்-அவன் என்ற இடத்திலிருந்து வரும் ஒரு சாதாரண நடிகர் எப்படி இத்தகைய நாடகங்களை எழுதியிருப்பார் என்று [மக்கள்] நம்ப மறுக்கிறார்கள். மாமேதைகளே நாடகங்களை படைக்க முடியும் என்ற எண்ணம் மக்கள் உள்ளத்தில் இருப்பதால், சாதாரண நாட்டுப்புறத்திலிருந்து வரும் ஷேக்ஸ்பியர் எழுதினார் என்றால் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை” என்று த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. ஷேக்ஸ்பியரின் பெயரில் எழுதியதாக ஊகிக்கப்பட்ட ஆசிரியர்கள் எல்லாரும் “பெரிய இடத்தை சேர்ந்தவர்கள்” என்று என்ஸைக்ளோப்பீடியா மேலும் கூறுகிறது. ஆகவே, ஷேக்ஸ்பியர்தான் எழுதினாரா என்று சந்தேகிக்கும் பலர், “நன்றாகப் படித்த, பெரிய இடத்திலிருந்து வந்த, உயர்ந்த சமூக அந்தஸ்துள்ள நபர்கள் மாத்திரம் நாடகங்களை எழுதியிருக்க முடியும்” என்று நம்புகிறார்கள். ஆனால், இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போல், ஷேக்ஸ்பியரின் அநேக தாசர்கள் எல்லாருக்கும் ஷேக்ஸ்பியர்தான் எழுதினார் என்பதில் சந்தேகமே கிடையாது.
இந்த வழக்கை விரைவில் தீர்க்க முடியுமா? முடியாது என்றே தெரிகிறது. தொலைந்த வருடங்களில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதைப் பற்றி புதிய ஆதாரங்களோ கையெழுத்துப் பிரதிகளோ அல்லது உண்மைகளோ கிடைத்தால் ஒழிய, வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற, “வார்த்தைகளின் மன்னன்” ஒரு புரியாத புதிராகவே நிலைத்திருப்பார்.
[அடிக்குறிப்புகள்]
a முதன்முதலில் வெளிவந்த ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கிறிஸ்டோபர் மார்லோவின் சாயல் இருப்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் 1593-ல், தனது 29-ம் வயதில் மார்லோ லண்டனில் இறந்துபோனார். உணவுவிடுதியில் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்பது வெறும் கண்துடைப்பு. அவர் இத்தாலிக்கு போய் தனது எழுத்துப் பணியை தொடர்ந்தார் என்று ஒருசிலர் சொல்கிறார்கள். அவரது சவ அடக்கம் நடந்ததற்கு எந்தவொரு பதிவும் இல்லை.
[பக்கம் 24-ன் பெட்டி]
எழுத்தறிவும் பெயரும்
இன்றுவரை தப்பி வந்திருக்கும் நான்கு பத்திரங்களில் வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆறு தடவை கையெழுத்து போட்டிருக்கிறார். அதுவும் ஓரளவுக்குத்தான் பெயர் தெளிவாக இருக்கிறது, ஸ்பெல்லிங் வேறு மாறி மாறி உள்ளன. உயிலில் ஷேக்ஸ்பியருக்காக அவருடைய வக்கீல்கள் கையெழுத்துப் போட்டிருக்கலாம் என்று ஒருசில அதிகாரிகள் சொல்கிறார்கள். அதனால், வில்லியம் ஷேக்ஸ்பியர் படித்தவர்தானா என்ற தர்மசங்கடமான கேள்வி எழுகிறது. அவர் கைப்பட எழுதிய எந்தக் கையெழுத்துப் பிரதிகளும் இல்லை. அவருடைய மகள் சூசன்னாவுக்கு கையெழுத்து போடத் தெரியும். அதற்குமேல் தெரியும் என்பதற்கு ஆதாரம் கிடையாது. ஷேக்ஸ்பியரின் இளைய மகள் ஜூடியத் தன் அப்பாவோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆனால் படிக்காதவர். கைநாட்டுதான் போடுவார். மாபெரும் பொக்கிஷமான இலக்கிய படைப்புகளை அனுபவிக்கும் வாய்ப்பை பிள்ளைகளுக்கு விட்டுச்செல்ல ஏன் ஷேக்ஸ்பியர் தவறிவிட்டார் என்று யாருக்குமே தெரியவில்லை.
[பக்கம் 23-ன் படங்கள்]
ஷேக்ஸ்பியர் எப்படி இருந்தார் என்று தெரியாவிட்டாலும், அவரது அந்தக்கால படங்கள்
[படத்திற்கான நன்றி]
Encyclopædia Britannica/11th Edition (1911)
Culver Pictures