லண்டனில் மீண்டும் குளோப்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்குப் பிறப்பிடமான இடம்தான் குளோப் கலையரங்கம்; அது முன்பு அமைந்திருந்த இடமாகிய தேம்ஸ் நதியின் தெற்கே சௌத்வாக் என்ற இடத்தில் மறுபடியுமாக கட்டப்பட்டிருக்கிறது. 1599-ல் கட்டப்பட்ட கலையரங்கத்தின் பழம்பாணியை அப்படியே பின்பற்றி, O வடிவத்தில், 20 பக்கங்கள் உடைய கட்டடமாக இது கட்டப்பட்டிருக்கிறது. இதைப் பார்ப்பதற்குத்தான் ஆர்வத்துடன் உல்லாசப்பயணிகள் வருகின்றனர்.
லண்டனில் கலையரங்கங்கள் தோன்றுவதற்கு முன்பு, கரடி அல்லது காளைமாட்டை அரங்கத்தின் நடுவில் கட்டி நாய்களை விலங்கின் மீது ஏவிவிட்டு அவை கடித்துக் குதறுவதை வேடிக்கைப் பார்ப்பதுதான் ஜனங்களுடைய பிரதான பொழுதுபோக்காக இருந்தது. அரங்கத்தில் இருக்கும் அனைவரும் கூச்சல்போடுவதால் நாய்கள் அந்த மிருகத்தை கடித்து குதறின. இது கலையரங்கம் வருவதற்கு முன்பாக வரிசையான இருக்கைகள் அமைக்கப்பட்ட வட்ட அரங்குகளில் நடைபெற்றது. அரங்கத்தின் மத்திப இடத்தில் விலங்குகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன, அந்த இடம்தான் பின்னர் நாடக மேடையானது.
அதன்பின் நாடகங்கள் லண்டனில் பிரபலமாயின; பல புதிய கலையரங்கங்கள் லண்டனைச் சுற்றி எழும்பின. ஆயிரக்கணக்கானோர் தினமும் அவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். மதிப்புக்குரிய மேயர்கள், அவை மோசமானவை என்றும் அவபக்தியானவை என்றும் குறிப்பிட்டு நாடகங்களைத் தடை செய்ய முயற்சித்தனர். தங்களுடைய தொழிலாளிகள் வேலை நேரத்தில் நாடகம் பார்க்கச் செல்வதாக முதலாளிகள் புகார் செய்தனர்; ஏனெனில் நாடகங்கள் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்தன. ஆகிலும், முதலாம் எலிசபெத் ராணி இதற்குத் தன் ஆதரவை அளித்தார்; அவர்தான் கலையரங்கத்தின் பாதுகாவலர். ராணியின் மகிழ்ச்சியான பொழுதுபோக்கிற்கு அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தேவையாக இருந்தமையால், ராணியின் அதிகாரிகள் இவர்களைப் பாதுகாத்தனர். இவ்விதம் அரண்மனையில் நாடகம் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில், பலமுறை, மற்ற குழுக்களைக் காட்டிலும் ஷேக்ஸ்பியரின் குழுவே தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஐந்தாம் ஹென்றி என்ற நாடகம் முதல் குளோப் கலையரங்கம் திறந்து வைக்கப்பட்ட சமயம் ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்டது. ஆகவே புதிய ஷேக்ஸ்பியர் கலையரங்கத்தின் முதல் சீசனில் இந்த நாடகம் அரங்கேறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நியாயமானதே.
புதிய குளோப்பின் உள்ளே
மூன்று மணிநேர நாடகத்திற்காக நாங்கள் உள்ளே செல்வதற்கு முன் மழை வரக்கூடாதே என்று வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொள்கிறோம்; குடைகள் கலையரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை; ஏனென்றால் அரங்கத்தின் மத்திய பாகத்தில்தான் கூரை கிடையாதே. சுமார் 30 மீட்டர் சுற்றளவில் வட்ட வடிவில் நாடகமேடை அமைந்திருக்கிறது; அதைச் சுற்றி மூன்று அடுக்கில் இருக்கைகள் போடப்பட்டு சுமார் 1,000 பேர் உள்ளே அனுமதிக்கப்படும் அளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அதில் தரை டிக்கெட் தொகுதியில் இருக்கிறோம்; இதில் 500 பேர் இருக்கலாம், இவர்கள் நின்றுகொண்டே நாடகத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கியவர்கள். முதல் கலையரங்கத்தில் 3,000 நபர்கள் புளிமூட்டையில் அடைக்கப்பட்டதைப்போல் அரங்கத்தில் இருந்தனர். ஆனால் நவீன பாதுகாப்புச் சட்டங்கள் அதை அனுமதிப்பதில்லை.
வட்டவடிவமான உட்காரும் இடத்திற்கு மேல் உள்ள கூரைப்பகுதி, நெருப்பிலிருந்து பாதுகாக்கும் ரசாயனக் கலவை பூசப்பட்டிருக்கிறது. நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கூரையும் நீரைப் பீச்சி அடிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளும் இன்னும் அதிகமான பாதுகாப்பை அளிக்கின்றன. நாடக மேடையிலிருந்த பீரங்கியிலிருந்து வெளிப்பட்ட சிறிய தீப்பொறியால் கூரை தீப்பிடித்ததன் விளைவாக முதல் குளோப் கலையரங்கம் 1613-ஆம் ஆண்டு தீக்கிரையானது.
தரை டிக்கெட்டு வாங்கியவர்கள் அங்கும் இங்கும் நகருவதற்கும், ஏன் மேடையின் மீது தங்கள் கையை வைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறார்கள். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுப்பாடில்லாத கூட்டம் நாடகம் நடக்கும் சமயத்தில், அங்கேயே உணவு உண்டு, குடித்து, தங்களுக்குள் சண்டையிட்டு கும்மாளம் போட்டனர். நாடகம் நடக்கும்போதே மிகமோசமாக விமர்சித்து இடையிடையே குறுக்கிட்டு, கூச்சல்போட்டு, கைத்தட்டி கலாட்டா செய்தனர். அவர்கள் “கூட்டத்தோடு கூட்டமாக” ஒட்டிக்கொண்டிருந்ததால் அவர்களை அந்தக் காலத்தின் எழுத்தாளர் ஒருவர் “நாத்தம்புடிச்சவங்க” என்று விவரித்தார்.
இப்போதைய குளோப் கலையரங்கம் ஓக் மரத்தால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட ஆறாயிரம் சிறிய ஓக் மரத்துண்டுகள் இணைப்புகளை ஒன்றாகப் பிணைக்கின்றன. 1987-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு சூறாவளி ஆயிரக்கணக்கான ஓக் மரங்களை சாய்த்து விட்டபடியால் அவை சுலபமாகக் கிடைத்தன. மேடையின் முகப்பில் திரைச்சீலையிடுவதற்குத் தேவையான 13 மீட்டர் நீளமுள்ள உத்தர கட்டையை கண்டுபிடிப்பதுதான் மிகக்கடினமாக இருந்தது. தேடோ தேடோ என தேடியபின் லண்டனுக்கு மேற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் 20 மீட்டருக்கும் அதிக உயரமுடைய ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேடையின் திரை முகப்பை பளிங்கு தூண்கள் ஆதரவாகத் தாங்கின, பளிங்குதானா அது? இல்லை, முதல் குளோபைப்போல் அவைகூட மரத்தால் ஆனவைதான்; இதை வியந்து பாராட்டும் ஒருவர் இவ்விதம் கூறினார்: “மிகத் திறமையான தொழிலாளியையே ஏமாற்றும் அளவிற்கு அவ்வளவு அற்புதமாக பளிங்குக் கல்லைப் போலவே பெயின்ட் அடிக்கப்பட்டிருக்கிறது.”
இப்பொழுது இருக்கைகள் நிரம்புகின்றன. தரை டிக்கெட்டு வாங்கியவர்களில் சிலர் மேடைக்கு அருகே முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர், மற்றவர்கள் அரங்கின் மரப்பலகையில் சாய்ந்துகொண்டு நிற்கின்றனர். இசையின் சத்தம் கேட்டவுடன் இரைச்சல் அடங்குகிறது. மேடைக்கு மேலே இருக்கக்கூடிய காலரியில் இடைக்கால உடையில் தோன்றிய ஆறு இசைக் கலைஞர்கள் ஷேக்ஸ்பியர் காலத்து ஊதுகொம்பு, எக்காளம், மற்றும் பல இசைக்கருவிகளை இசைக்கின்றனர்.
அந்த நாடகம்
இசை ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியவுடன், நடிகர்கள் மேடைக்கு வந்து இசைக்கு ஏற்ப தங்கள் கைகளில் உள்ள கோல்களால் மேடையைத் தட்டுகின்றனர். தரை டிக்கெட்டு ஆசாமிகள் அதற்கு ஏற்ப தங்கள் கால்களால் தரையில் தாளம் போடுகின்றனர். திடீரென எல்லா சத்தமும் நின்றுவிடுகிறது. ஒரு நடிகர் மேடையில் தோன்றி அந்தக் காட்சி என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறார். எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டுகிறது. திடீரென இரண்டு சிகப்பு நிற ஆடை அணிந்த நடிகர்கள் மேடையில் தோன்றுகின்றனர்—அவர்கள் கேன்டன்பரியின் பிரதான பிஷப் மற்றும் எலையின் பிஷப். நாடகம் ஆரம்பமாகிறது, அதில் சர்ச்சின் மாய்மாலமும் இங்கிலாந்தின் ராஜாவான ஐந்தாவது ஹென்றியோடு செய்யப்பட்ட சதித்திட்டமும் ரத்தக்காடாக மாற்றப்பட்ட அக்னிகொர்ட் என்ற இடத்தில் பிரான்ஸ் தோல்வி அடைகையில் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.
வெகு சீக்கிரத்தில் காட்சியில் ராஜ அரியணை மேடையில் அமைக்கப்படுகிறது, அங்கே ராஜா ஹென்றி மூன்று அவையோருடன் பேசுவதை கவனிக்கிறோம். அரண்மனை அதிகாரிகள் மேடையில் தோன்றும்போது அவர்களுடைய உடை அலங்காரம் இடைக்காலத்தில் இருந்த உடைகளைப்போலவே பொருத்தமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் அசந்துவிடுகிறோம். ஆனாலும் அந்த நாடக நடிகர்களைப் பார்க்கிறபோது ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது. நாங்கள் எங்கள் கைகளில் இருக்கும் நிகழ்ச்சிநிரலை கூர்ந்து கவனிக்கிறோம். உண்மையில் எல்லா நடிகர்களும் ஆண்களே என்பது தெரிகிறது! எலிசபெத் காலத்திய நாடகங்களில் பெண்கள் நடிக்கவில்லை. சமூக சரித்திர ஆசிரியர் ஜி. எம். டிரவெலின் இவ்விதம் குறிப்பிடுகிறார்: பையன்கள் “சிறுபிராயத்திலிருந்தே பெண்களின் பாத்திரத்தில் கண்ணியத்துடனும் சந்தோஷத்துடனும் திறமையுடனும், நடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டனர்.” இன்றும்கூட அதே முறையைப் பின்பற்றுகின்றனர்.
கைதட்டல் ஓய்கிறது, நாங்கள் வெளியேறுகிறோம். நாங்கள் கலையரங்கத்தை கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்கு திரும்புகிறோம்; அதனுடைய மஞ்சள் கூரை ஓக் மரத்தைப்போலவே மெல்ல மெல்ல இருட்டில் மறைய ஆரம்பிக்கிறது. இது உண்மையில் ஓர் வித்தியாசமான அனுபவம்; ஏனென்றால் சுமார் 400 ஆண்டுகள் அல்லவா பின்னோக்கி சென்று திரும்பியிருக்கிறோம்.
அதன்பின் நாங்கள் ஷேக்ஸ்பியர் குளோப் பொருட்காட்சியை சுற்றி பார்வையிடுகிறோம். எங்கே திரும்பினாலும் ஷேக்ஸ்பியரின் பெயர்தான். அங்கே இருந்த காட்சிகளை கவனித்தபோது எங்கள் மனதில் எழுந்த கேள்வி, உண்மையில் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற அந்த நாடகாசிரியர் யார்? விசித்திரமான மனிதராகிய வில்லியம் ஷேக்ஸ்பியரைப் பற்றிய ஒரு கட்டுரை இனி வரவிருக்கும் விழித்தெழு! பத்திரிகையில் இடம் பெறும்.
[பக்கம் 25-ன் படம்]
முதல் குளோப் கலையரங்கத்தின் வரைபடம்
[படத்திற்கான நன்றி]
The Comprehensive History of England, Volume II என்ற புத்தகத்திலிருந்து
[பக்கம் 26-ன் படங்கள்]
இன்றைய குளோப் கலையரங்கம்
[படத்திற்கான நன்றி]
John Tramper
Richard Kalina