ஃபைப்ரோமையால்கியாவை—புரிந்துகொண்டு வாழுதல்
நீங்கள் உடல் முழுவதும் வலி வந்து துடிக்கிறீர்களா? உங்களுக்கு மிகவும் களைப்பாக இருக்கிறதா? காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போது விறைப்பாகவும் சோர்வாகவும் உணருகிறீர்களா? உங்களுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறதா? இவையெல்லாம் ஃபைப்ரோமையால்கியா என்ற நோயின் ஒரு சில நோய் அறிகுறிகளாக இருக்கலாம்; இதனை எப்எம்எஸ் ஸின்ட்ரோம் (FMS) என்பதாகவும் அழைக்கின்றனர்.
டெட் என்பவர் இவ்விதம் விவரிக்கிறார்: “1989-ஆம் ஆண்டில் ஒரு நாள் தூங்கி எழுந்தபோது, உடல் முழுவதும் வாதத்தால் பாதிக்கப்பட்டதுபோல் 45 நிமிடங்கள் அவதிப்பட்டதை என்னால் மறக்க முடியாது.” a இவ்விதமாகவே டெட் தன் வாழ்க்கையில் ஃபைப்ரோமையால்கியாவுடன் போராட்டத்தை ஆரம்பித்தார்; “தசை நாண், இணைப்பிழை, தசைகள் ஆகியவற்றில் ஏற்படும் வலியை” இந்த வார்த்தைக் குறிக்கிறது.
ஒருவேளை ஒரு நண்பரையோ அல்லது ஒரு குடும்ப அங்கத்தினரையோ எப்எம்எஸ் தாக்கியிருக்கலாம். நீங்கள் அவர்களுக்கு எவ்விதம் உதவ முடியும்? அல்லது உங்களை தாக்கியிருந்தால் என்ன செய்வீர்கள்? இந்தப் பிரச்சினையை குறித்து புரிந்துகொள்வதற்கும் இதை சமாளிப்பதற்கும், இந்த நோயைப்பற்றி நன்றாக தெரிந்து கொள்வது பெரும் உதவியாக இருக்கும். ஆகிலும் மேலே குறிப்பிடப்பட்ட நோய் அறிகுறிகளை உடையவர்களெல்லாம் இந்த நோயால் தாக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஃபைப்ரோமையால்கியாவை விவரித்தல்
அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ருமாட்டாலஜியின் குறிப்பு இவ்விதம் அறிவிக்கிறது: “நோயாளிக்கு தொடர்ந்து, பரவலாக வலி இருப்பதன் அடிப்படையிலும் அவருடைய உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் மிகவும் மிருதுவான பாகங்களை மருத்துவர் கண்டுபிடிப்பதன் அடிப்படையிலும் ஃபைப்ரோமையால்கியா நோய் தாக்கியிருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது.” இவையன்றி வேறு நோய் அறிகுறிகளும் இருக்கின்றன; அவை எப்பொழுதும் களைப்பாய் இருக்கும் நோயின் (CFS) அறிகுறிகளை ஒத்திருக்கின்றன.
உண்மை என்னவென்றால் எப்எம்எஸ் நோய் தாக்கப்பட்டவர்களை CFS நோயும் மற்ற சில நோய்களும் சேர்ந்து தாக்குகின்றன. மனச்சோர்வும், மிகுந்த கவலையும் (FMS) நோயாளிகளிடம் சாதாரணமாக காணப்படுகின்றன; இதற்கு எப்எம்எஸ்தான் முக்கிய காரணம்; இந்த நோய் அறிகுறிகளின் விளைவால் அது ஏற்படவில்லை. அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி அல்லது மிகக்குறைவான உடற்பயிற்சி, மிகக்குளிர்ந்த பிராந்தியத்தில் மாட்டிக்கொள்ளுதல், இரவு முழுவதும் தூங்காதிருத்தல், அல்லது அதிக டென்ஷன் போன்றவற்றால் எப்எம்எஸ் மேலும் அதிகமாக தூண்டிவிடப்படுகிறது.
எப்எம்எஸ் நோய், முன்பு நார் திசை அழற்சி போன்ற வித்தியாசமான பெயர்களால் அழைக்கப்பட்டது; இது முடமாக்கும் தன்மையுடையது அல்ல, அதேபோல் உயிருக்கு ஆபத்தானதும் அல்ல. இது பரம்பரை நோய்தான் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், சில குடும்பங்களில் பலரிடத்தில் காணப்பட்டிருக்கிறது. இது லட்சக்கணக்கானோரை தாக்கியிருக்கிறது, எல்லா வயதிலுள்ளவர்களையும் குறிப்பாக ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகம் தாக்குகிறது.
எப்எம்எஸ் ஏற்படுவதற்கான காரணம்
எப்எம்எஸ் ஏற்படுவதற்கான காரணத்தை விவரிக்க வித்தியாசமான கருத்துகளை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அது ஒருவேளை ஒரு வைரஸ்ஸாக இருக்கலாம் அல்லது நியூரோடிரான்ஸ்மீட்டர் செரோடினின் சமநிலை இழந்திருக்கலாம், அதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு, உடலில் வலியை இயற்கையாகவே எதிர்த்து போராடும் என்டார்ப்பின் போன்ற ரசாயனங்கள் சமநிலை இழந்து பாதிப்படைந்திருக்கலாம். இப்படிப்பட்ட கருத்துக்களிலும் வேறு கருத்துக்களிலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
எப்எம்எஸ் நோய் இருப்பவர்களின் தசையை மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் ஆரோக்கியமாகத்தான் தெரிகின்றது; ஆனால், செல்களில் சக்தியை உருவாக்கும் பாகங்கள் இயல்பாக செயல்படாமல் இருக்கலாம். ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணமும் அதை எவ்விதம் குணப்படுத்தலாம் என்ற தீர்வும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் அநேகர், குறிப்பிட்ட உடல் சம்பந்தமான அல்லது அதிர்ச்சிக்குரிய சம்பவத்தால் உணர்ச்சிகள் தாக்கப்பட்ட பிறகு நோய் அறிகுறிகள் தோன்றியதாகச் சொல்கிறார்கள்; மற்றவர்களுக்கு இது எப்பொழுது ஆரம்பித்தது என்பது சரியாக தெரிவதில்லை.
எப்எம்எஸ் நோயை கண்டுபிடிப்பதில் உள்ள பிரச்சினைகள்
இதன் நோய் அறிகுறிகளில் அநேகம் மற்ற நோய்களிலும் காணப்படுவதால், “ஒரு நோயாளி தனக்கு மூட்டுகளில் வலியிருப்பதாக சொல்லும்போது, உடனடியாக இது எப்எம்எஸ்ஸாக இருக்குமோ என்று மருத்துவர் சந்தேகப்படுவதில்லை. பலமுறை சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகும் பிரச்சினைகள் நீடிப்பதாக இருந்தால் அப்போது நாங்கள் அதிகமாக அலசி ஆராய்கிறோம். அது எப்எம்எஸ்தான் என்பதாக நான் கண்டுபிடித்தால் முடவியல் மருத்துவரிடம் அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள அனுப்பிவிடுவேன்” என்று இதைக் குறித்து கனடாவின் டாக்டர் கார்லா அக்லி சொல்கிறார்.
சமீப ஆண்டுகள்வரை எப்எம்எஸ்ஸை எவ்விதம் கண்டுபிடிப்பது என்பதற்கு எந்தவிதமான அடிப்படை விதிமுறைகளும் இருக்கவில்லை. ஆகவே பிரச்சினை ஒரு புதிர்போல் இருந்தது—அதாவது நோயாளி மட்டுமே அதை உணர்ந்து அவதிப்பட்டார்—ஆனால் பரிசோதனை முடிவுகள் எல்லாம் நார்மலாக இருப்பதாகக் காண்பித்தன. ஆகவே அநேக மருத்துவர்கள் இதைப் பற்றி அறியவில்லை. ரேச்சல் என்ற பெண் இவ்விதம் புலம்புகிறார்: “25 வருடங்களா நான் போகாத இடமில்ல பாக்காத டாக்டர்களே இல்ல, எப்எம்எஸ்தான் எனக்குள்ள வியாதிங்கறத கண்டுபிடிக்கிறதுக்கு முன் அநேக ஆயிரக்கணக்கான டாலரை செலவு செஞ்சேன்.”
உங்களுக்கு ஃபைப்ரோமையால்கியா இருப்பதாக நினைத்தால் உதவிக்காக எங்கே செல்லலாம்? கேயல் பேக்ஸ்ட்ராம் என்பவர் தசை வலி எப்பொழுதுமே தொல்லை தரும்போது (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், உடனடியாக ஆர்த்தரிட்டிஸ் பௌன்டேஷனுடைய கிளை அலுவலகத்தை அல்லது முடவியல் மருத்துவரை அணுகும்படி ஆலோசனை கொடுக்கிறார்.
மருத்துவ சிகிச்சை
எப்எம்எஸ்ஸுக்கு சிகிச்சை அளித்து நிவாரணம் அடைந்ததாக இதுவரை ஆதாரம் ஏதும் இல்லை; ஆகவே இதற்கான மருத்துவ சிகிச்சை, நோய் அறிகுறிகளின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகிறது. இதன் முக்கியமான ஒரு பண்பு வலி; அந்த வலியும் நபருக்கு நபர் வித்தியாசப்படும், அதேபோல் ஒவ்வொரு நாளுக்கும் வித்தியாசமாக இருக்கும், இன்னும் சொல்லப்போனால் ஒரே நபரிடமே வித்தியாச வித்தியாசமாக இருக்கும்.
இந்தச் சிகிச்சையில் இருக்கும் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் வலி நிவாரணத்திற்காகக் கொடுக்கப்படும் மருந்துகள் சில காலங்களுக்குப்பின் அவற்றின் ஆற்றலை இழந்துவிடுகின்றன. கேயல் பேக்ஸ்ட்ராம் இவ்விதம் ஆலோசனை கூறுகிறார்: “ஒருவேளை நீங்கள் மறுபடியுமாக இந்த மருந்துகளை கொஞ்ச காலத்திற்குப்பின் உபயோகிக்கத் தொடங்கினால் மறுபடியுமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.” நீங்கள் முதலாவதாக இதைக்குறித்து உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவேண்டும். இந்த மருந்துகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையும் அல்லது அடிமையாக்கும் குணமும் இருக்கின்றன. இதன் காரணமாகத்தான், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ருமாட்டாலஜி பின்வருமாறு பரிந்துரைக்கிறது: “ஆற்றல் வாய்ந்த வலி நிவாரணிகள் தவிர்க்கப்படவேண்டும்.”
இரண்டாவது முக்கிய நோய் அறிகுறியானது, வலியாலும் மற்ற தொந்தரவுகளாலும் உடலை புதுப்பித்து இயல்பான நிலைக்கு கொண்டுவருவதற்கு தேவையான ஆழ்ந்த தூக்கம் தடைபடுவதாகும். வலியை மேற்கொள்ள, மெலனி என்ற பெண் உடலுக்கெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பெரிய தலையணையை உபயோகிக்கிறார்; வெளியிலிருந்து வரும் இரைச்சல்களின் தாக்கங்களை குறைப்பதற்கு, ஈரத்தன்மையை அதிகரிக்க உபயோகிக்கும் இயந்திரத்தை ஓடவிட்டு அதன் சீரான சத்தத்தில் தூங்குகிறார். சத்தத்தைக் குறைப்பதற்கு காதை அடைத்துக்கொள்வதற்கான சாதனம், மெத்தையின்மேல் போடப்படும் பேட் அல்லது முட்டைகளை அடுக்கி வைக்கும் கிரேட்டைப் போன்ற மெல்லிய திண்டு ஆகியவை இதற்காக பயன்படுத்தப்படும் பிரயோஜனமான ஏதுக்கள். b வட கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் ட்வான் அயர்ஸ் என்பவர் இவ்விதம் சொல்கிறார்: “முதலாவதாக, நோயாளிகள் நன்றாகத் தூங்குவதற்கு நான் உதவி செய்தால் மற்ற சிகிச்சை முறைகளுக்கு அவர்களுடைய உடல் நன்கு ஒத்துழைக்கும்.”
தேசிய மூட்டு அழற்சி மற்றும் தசை எலும்பு மற்றும் தோல் நோய்கள் நிறுவனம் இவ்விதம் குறிப்பிடுகிறது: “உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை, ஃபிஸியோதெரப்பி, ஓய்வு ஆகியவற்றை எல்லாம் இணைத்து செயல்படுத்தினால் ஃபைப்ரோமையால்கியா நோயாளிகள் அதிக பயனடைவார்கள்.” தசைகளை மஸாஜ் செய்துவிடுதல், கவலைகளை சமாளித்தல், உடலை நிமிர்த்தி நேராக்கும் உடற்பயிற்சிகள் போன்ற சிகிச்சைகளும் செய்யலாம். தொடர்ச்சியாக வலியையும் அல்லது களைப்பையும் அனுபவிப்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய முடியாததுபோல் தோன்றலாம். ஆகவே மெதுவாகவே அதனை ஆரம்பிக்கவேண்டும் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். எந்த உடற்பயிற்சியையும் ஆரம்பிப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனைக் கேளுங்கள்.
ஃபைப்ரோமையால்கியா நெட்வொர்க் என்ற ஜூலை 1997-தேதியிட்ட செய்தி அறிக்கையில், ஆரிகான் மாகாணத்தின் போர்ட்லண்டில், உடலியக்க உடற்பயிற்சியாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக பணிசெய்யும் ஷாரன் க்ளார்க் என்ற பெண் கீழ்க்கண்டவாறு சொன்னதாக குறிப்பிடப்பட்டது. உங்களால் 20 அல்லது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், “நீங்கள், 5 நிமிடம் நடக்கும் பயிற்சியை ஒரு நாளைக்கு ஆறு முறை செய்யலாம்; அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.” உடலில் என்டார்பின் உற்பத்தியாவதற்கும், நல்ல நிம்மதியான தூக்கத்திற்கும் உடலின் தசைகளில் ஆக்ஸிஜன் நன்கு பரவுவதற்கும் மிதமான உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
ஜனங்கள் வித்தியாசமானவர்கள், அவர்கள் எப்எம்எஸ் நோயின் தாக்குதலில் வித்தியாசப்பட்ட நிலைகளில் இருக்கக்கூடும். எலைன் நமக்கு இவ்விதம் சொல்கிறார்: “நான் எங்க முன்வாசலில் ஒரு முறை நடந்திட்டு வந்தேன்னா அதுவே எனக்கு மிகப்பெரிய சாதனை; ஆனா அதே எப்எம்எஸ்ஸால் பாதிக்கப்பட்டிருக்கும் என் அன்பு தோழி ஒரு மைல் நடக்கிறாள்.” இந்தப் பிரச்சினையை “வேதனையில்லையேல் பலனில்லை” என்ற அடிப்படையில் அல்ல, அதற்கு பதில் “விடாமல் முயற்சிக்கவேண்டும்” என்ற அடிப்படையில் கையாள வேண்டும். CFS மற்றும் எப்எம்எஸ்ஸால் பாதிக்கப்பட்ட டெட் இவ்விதம் சொல்கிறார்: “ஆரம்பத்தில நான் என்னோட உடற்பயிற்சிக்கான ஊர்தியை வாரத்தில ஒரே ஒரு முறை, ரெண்டோ மூணோ நிமிஷத்துக்குத்தான் உபயோகிச்சேன். ஆனா இப்பொ வாரத்தில மூணு நாலு முறை 20 நிமிஷத்துக்குமேல் அதுல உடற்பயிற்சி செய்யறேன். ஆனா இந்த அளவுக்கு முன்னேற்றம் செய்யறத்துக்கு எனக்கு நாலு வருஷம் ஆச்சு.”
இங்கிலீஷ் மருத்துவத்துக்கு பதில் அக்குப்பங்சர், தண்டெலும்பில் தடவி நரம்புகளின் செயலை கட்டுப்படுத்தி நோய் குணப்படுத்தும் முறை, மற்ற சிகிச்சை முறைகள் அல்லது மூலிகைகளை உபயோகித்தல், அல்லது பத்திய உணவு உண்பது போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டன. இப்படிப்பட்ட சிகிச்சையை மேற்கொண்டதால் தாங்கள் நன்மை அடைந்ததாக அநேகர் குறிப்பிட்டாலும் மற்றவர்களுக்கு பலனளிக்கவில்லை. ஆராய்ச்சியாளர்கள் இவற்றில் அநேகத்தை ஆய்வு செய்கிறார்கள்; ஆனால் முடிவுகள் தெளிவாக இல்லை.
சில சமயங்களில் மருந்துகள் அகோரப் பசியை ஏற்படுத்திவிடுகின்றன அல்லது கவலையை மறப்பதற்காக உணவு உண்ணும் பழக்கம் ஏற்படுகிறது. இதனால் உடலின் எடை அதிகரித்து தசைகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது; அதன் விளைவோ இன்னும் அதிகமான வலி. ஆகவே டாக்டர்கள் சில நோயாளிகளிடம் எடையை குறைக்க வேண்டும் என்று குறிப்பிடுவர்.
எப்எம்எஸ் நோயால் தாக்கப்பட்டிருக்கிறார் என்று அறியவரும்போது பாதிக்கப்பட்டவருக்கு பயமும் கோபமும் ஏற்படும். இவ்விதம் ஏற்படுகையில் இந்த இயல்பான உணர்ச்சிகளால் யாரும் பாதிக்கப்படாமல் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வழி இருக்கிறது. துக்கம் என்பதும் இன்னொரு சாதாரண உணர்ச்சியே. நமக்கு மிகவும் அருமையான ஏதோ ஒன்றை இழந்தால் நாம் துக்கப்படுவது இயல்புதானே; ஆகவே நம் ஆரோக்கியத்தை இழந்தாலும் துக்கப்படலாம்.
அது உங்கள் வேலையை பாதிக்கும்போது
எப்எம்எஸ்ஸால் அவதிப்படுபவர்களுக்கு வேலையில் சில பாதிப்புகள் ஏற்படலாம். லீ என்ற பெண் தொடர்ந்து பல ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார்; ஆனாலும் அவரது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை. அவர் தன்னுடைய முதலாளியிடம் இதைக் குறித்து பேசினார்; பின்னர் அவருக்கு அதே கம்பெனியில் பகுதி நேர வேலை கொடுக்கப்பட்டது; இதனால் அவருக்கு இருந்த கவலை குறைந்தது. ஆனாலும் அவர் ஆச்சரியப்படும் வகையில் அவருக்கு மணிநேர ஊதியத்தில் உயர்வு அளிக்கப்பட்டது.
உடலுக்கு அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் நீங்கள் வேலை செய்வதற்கு உடற்பயிற்சி மருத்துவர் உதவக்கூடும். கை வைத்த நாற்காலியைப் பயன்படுத்துவது தனக்கு உதவியதாக லிசா என்ற பெண் அறிந்துகொண்டார். ஈவன் என்பவருக்கு புதிய நாற்காலி மட்டும் அல்ல புதிய மேஜையும் தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது. ஒருவேளை தற்போதைய வேலையிலிருந்து மாற்றம் தேவை என்று நினைத்தால் உங்களுக்கு உதவி செய்வதற்கு சில நிறுவனங்கள் இருக்கின்றன.
நீங்கள் எவ்விதம் உதவலாம்
எப்எம்எஸ் என்றால் என்ன என்பதையும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பதைப்போல் தோன்றினாலும், இந்த நோயால் அவருக்கு தாங்கமுடியாத வலியுடன் கூடிய களைப்பு இருக்கிறது என்பதையும் சிறுவர்கள் உட்பட ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் உணர்ந்துகொள்வது அவசியம். நல்ல பேச்சுத்தொடர்பு மிக அவசியம். ஜென்னி இவ்விதம் சொல்கிறார்: “நாங்கள் அவ்வப்போது குடும்பமாக கலந்தாலோசிக்கிறோம்; இதனால் ஒவ்வொருவரும் எவ்விதம் உதவலாம் என்பதை தீர்மானிக்க முடிகிறது.” எப்எம்எஸ்ஸுடன் வெற்றிகரமாக வாழவேண்டுமென்றால் அதால் பாதிக்கப்பட்டவர் எல்லா பணிகளையும் செய்துகொண்டே எவ்விதம் சக்தியை சேமித்து வைப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு சற்று தைரியமும் மற்றவர்களுடைய ஒத்துழைப்பும் அவசியம். இந்த விஷயத்தில்கூட ஒரு உடற்பயிற்சி மருத்துவர் உதவக்கூடும்.
உங்கள் நண்பர் ஒருவர் எப்எம்எஸ்ஸால் தாக்கப்பட்டவராக இருந்தால், நீங்கள் குற்றங்கண்டுபிடிக்காத “செவிகொடுப்பவராக” இருப்பதன் மூலம் அவருக்கு உதவக்கூடும். நீங்கள் அவரோடு பேசும்போது ஆக்கப்பூர்வமாகவே பேச்சை வைத்துக்கொள்ள முயலுங்கள்; ஃபைப்ரோமையால்கியா பற்றியே எல்லா சமயத்திலும் பேசுவதை கவனமாக தவிர்த்துவிடுங்கள். எதைப்பற்றி பேசலாம் அல்லது எதைப்பற்றி பேசக்கூடாது? பக்கம் 23-ல் உள்ள பெட்டியை கூடுதல் குறிப்புகளுக்கு காண்க. உங்களுக்கு எப்எம்எஸ் இருக்கிறது என்றால் உங்களது பிரச்சினைகளைப்பற்றி கேட்பதற்கு “ஒருவரை” அல்ல “பலரை” தெரிவு செய்யுங்கள்; இதனால் ஒருவர் மாத்திரமே உங்களது பிரச்சினைகளைக் கேட்டு கேட்டு சலிப்படைவதை தடுக்கலாம். எல்லாரும், எல்லா சமயத்திலும் எப்எம்எஸ்ஸைப் பற்றி கேட்க ஆவலாக இருக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைக்கவேண்டும்.
மாற்றங்களுக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளுதல்
சில சமயங்களில் நம்மீது சில மாற்றங்கள் திணிக்கப்பட்டால் அவற்றை வெறுக்கிறோம். ஆனால், சுமார் 100 எப்எம்எஸ் நோயாளிகளுக்கு உதவிய உடற்பயிற்சி மருத்துவர் இவ்விதம் சொல்கிறார்: “அவர்கள், தங்களுடைய சமீபத்திய சூழ்நிலையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை புரிந்துகொள்வதற்கு உதவிசெய்கிறேன். தற்செயலாக தோல்வி ஏற்படுவதாலோ அல்லது பயங்கர கோபம் வருவதாலோ சோர்ந்து போகக்கூடாது; அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களையும் செய்யவேண்டும். சுயமாக காரியங்களை ஒழுங்கமைப்பது, அறிவு, புரிந்துகொள்ளுதல், உடற்பயிற்சி போன்றவற்றால் எப்எம்எஸ் நோய், அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பதில் அவர்கள் அந்த நோயை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.”
டேவ் என்பவர் இவ்விதம் சொல்கிறார்: “ஒரு நாள் உடம்பு கொஞ்சம் நல்லா இருக்குன்னா ஒடனே எல்லா வேலையையும் இழுத்துபோட்டுகொண்டு செய்துடனும் அப்படிங்கர மனப்பான்மை உங்களுக்கு இருந்தாலும், அடுத்த நாளுக்காக உங்க சக்தியை கொஞ்சம் சேமிச்சு வைக்கறதுதான் புத்திசாலித்தனம்; அப்படி செய்யலேன்னா அந்த வாரத்தின் மற்ற நாட்களில் நீங்க படுக்கையே கதின்னு இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.” இருந்தாலும்கூட ஒரு சமூக நிகழ்ச்சி அல்லது ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்காக பின்னர் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். உங்கள் மீது உண்மையான அன்பு செலுத்துகிறவர்களிடம் உங்களை எப்எம்எஸ் நோய் தாக்கியிருக்கிறது என்ற உண்மையை மறைப்பது ஞானமான செயல் அல்ல. எப்பொழுதும் நகைச்சுவை உணர்வுடையவர்களாக இருப்பதற்கு முயலுங்கள். அன்ட்ரே என்பவர் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “நான் நல்லா சிரிச்சேன்னா அல்லது நகைச்சுவை படம் பார்த்தேன்னா அன்னைக்கு ராத்திரி நிம்மதியா தூங்கறேன்.”
யெகோவா தேவன் உங்கள் செயல்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது கிடையாது என்பதை நீங்கள் நினைவில் வைக்கவேண்டும்; அதற்கு பதில் நீங்கள் காட்டும் ஆழ்ந்த அன்பையும் விசுவாசத்தையும் அவர் வெகுவாய் போற்றுகிறார். (மாற்கு 12:41-44) ஜாக்கிரதையாக இருப்பதே வாழ்க்கை என்பதாகவோ அல்லது எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகவோ இருப்பதை தவிர்த்து, உங்களுக்கு இருக்கும் குறைபாடுகளை ஒப்புக்கொண்டு அதற்கு இசைய வாழ பழகிக்கொள்ளுதலே அவசியம். உங்களால் இயன்றதையெல்லாம் செய்ய யெகோவா உங்களுக்கு ஞானத்தையும் பலத்தையும் தருவார் என்பதில் நம்பிக்கையாக இருக்கலாம். (2 கொரிந்தியர் 4:16) இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாற்றப்படும் என்ற வாக்குறுதியை உங்கள் இருதயத்தில் ஒரு பொக்கிஷத்தைப் போல் போற்றுங்கள்; அந்தச் சமயத்தில் “அங்கு குடியிருப்பவர்களில் ஒருவர்கூட நான் வியாதிப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதில்லை.” (ஏசாயா 33:24, NW) நிச்சயமாகவே, எதிர்காலத்தில் நீங்கள் மறுபடியும் ஆரோக்கியமடைவீர்கள்!
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b விழித்தெழு! தூங்குவதற்கு உதவும் குறிப்பிட்ட எந்தச் சாதனத்தையும் சிபாரிசு செய்வதில்லை அதேபோல் எப்எம்எஸ்ஸுக்காக எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் சிபாரிசு செய்வதில்லை.
[பக்கம் 22-ன் பெட்டி]
பைபிள் தரும் ஆறுதல்
• ஆவியில் நொறுங்கியவர்களை யெகோவா ரட்சிக்கிறார்.—சங்கீதம் 34:18.
• யெகோவா உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.—சங்கீதம் 41:3.
•உங்கள் பாரத்தையெல்லாம் யெகோவாவின் மேல் எறிந்துவிடுங்கள்; அவர் உங்களை ஆதரிக்கிறார்.—சங்கீதம் 55:22; 1 பேதுரு 5:7, NW.
• நீங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவை சேவிப்பதற்கு முயற்சி எடுக்கையில், அது எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் சரி, அதில் அவர் சந்தோஷப்படுகிறார்.—மத்தேயு 13:8; கலாத்தியர் 6:4; கொலோசெயர் 3:23, 24.
• நாங்கள் மனம் தளர்ந்துவிடுவதில்லை.—2 கொரிந்தியர் 4:16-18.
[பக்கம் 23-ன் பெட்டி]
என்ன சொல்வது
• உங்கள பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.
• இங்க வர்ரதுக்குன்னு நீங்க எவ்வளவு முயற்சி செஞ்சிருப்பீங்க.
•நான் உங்களுக்கு உதவி செய்யலாம்னு வந்திருக்கேன். எனக்கு உங்ககிட்ட அன்பு இருக்குங்க.
•உங்களால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சா போதுங்க; அதுதாங்க எனக்கு சந்தோஷம்.
எதைச் சொல்லக்கூடாது
• நீங்க எவ்வளவு கஷ்டப்படரீங்கங்கறது எனக்கு நல்லா புரியுதுங்க.
• உங்கள பார்த்தா ஒடம்பு சரியில்லாதவர் மாதிரியா இருக்கு? ரொம்ப நல்லாவே இருக்கீங்க.
• உங்களுக்கு ஏதாவது உதவணும்னா என்னை கூப்பிடுங்க.
[பக்கம் 21-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உடலில் கரும் புள்ளிகள் உள்ள இடங்கள்தாம் மிக மென்மையாக மாறும் சில பகுதிகள்; ஃபைப்ரோமையால்கியா நோயை கண்டுபிடிப்பதற்கு இவற்றையே தேடுகிறார்கள்
[பக்கம் 24-ன் படம்]
நல்ல பேச்சுத்தொடர்பும் குடும்பமாக சேர்ந்து கலந்தாலோசிப்பதும் அவசியம்