உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 8/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மத சுதந்திரத்தை கிரீஸ் மறுபரிசீலனை செய்கிறது
  • லத்தீனுக்கு உயிர் இருக்கிறதே
  • “குளோனிங்” சிலைகள்
  • பிள்ளைகளை பலிவாங்கும் ஊட்டச்சத்து குறைவு
  • சந்திரனில் தண்ணீரா?
  • வலி நிவாரணிகள் ஜாக்கிரதை
  • பிள்ளைபிடித்தலை தவிர்க்க வகுப்புகள்
  • “அழிந்தது” திரும்பியது
  • “குறையில்லா மருந்தா”?
  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்
    விழித்தெழு!—1993
  • ஆழ வேரூன்றிய காரணிகள், பயங்கர பாதிப்புகள்
    விழித்தெழு!—2003
  • ஒரு பயங்கர அவலம்
    விழித்தெழு!—2003
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 8/8 பக். 28-29

உலகை கவனித்தல்

மத சுதந்திரத்தை கிரீஸ் மறுபரிசீலனை செய்கிறது

“மத சுயாதீன உரிமை தொடர்பான விவாதங்களின் பேரில் சமீப நாட்களில் [கிரேக்க] அரசாங்கத்துக்கு மிகுந்த அக்கறை ஏற்பட்டிருக்கிறது; நிலுவையில் இருக்கும் சட்டப்பூர்வ திருத்தத்தையும் அது கவனத்தில் எடுத்திருக்கிறது. மத சுயாதீனம் தொடர்பான சட்டவரம்பை மறுபரிசீலனை செய்ய அயல் நாட்டுத் தொடர்பு அமைச்சகத்தில் அன்அஃபிஷியல் குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; இதைப்போலவே, மதமாற்றம் செய்வதை தண்டனைக்குரிய குற்றம் என கருதிய சர்வாதிகாரி மெட்டாக்சாவின் சட்டங்களையும் கவனிக்கவிருக்கிறது. அத்துடன், ஆர்த்தடாக்ஸ் மத அமைப்பைச் சேராத சிறுபான்மை மதத்தினரின் சர்ச்சுகளையும் வணக்கத்திற்காக கூடிவரும் இடங்களையும் அனுமதிப்பது தொடர்பான விஷயங்களையும் கவனிக்கவிருக்கிறது” என்பதாக ஆதன்ஸ் செய்தித்தாள் டு விமா அறிவிக்கிறது. கிரீஸ் தேசத்தில் உள்ள அநேக யெகோவாவின் சாட்சிகள், மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகளை பதிவு செய்ததால்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது என்பதாக அந்த அறிக்கை எடுத்துரைத்தது.

லத்தீனுக்கு உயிர் இருக்கிறதே

லத்தீன் மொழியில் ரோமன் கத்தோலிக்க மத சடங்குகள் நடத்தப்படுவது 1960-களிலேயே நிறுத்தப்பட்டாலும், இன்றும்கூட வாடிகன் சிட்டியின் அலுவலக மொழி லத்தீனே. மொழி வல்லுநர்கள் போப்பின் ஆவணங்களை லத்தீனில் மொழிபெயர்க்கின்றனர்; ஆனால் இவை வாடிகனில்கூட அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. 1997-ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் போப், இப்போதெல்லாம் லத்தீன் மொழியில் யாரும் பேசுவதில்லையே என்று சொல்லிப் புலம்பினார்; அது மறுபடியுமாக மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார். வாடிகன் கல்விமான்களின் குழு ஒன்று, எட்டு வருடங்களாக பிரயாசப்பட்டு நவநாகரிக உலகிற்கு ஏற்ற ஒரு லத்தீன் அகராதியை தற்சமயம் தயாரித்திருக்கிறது. “சென்ட் ஸ்ப்ரே,” “ஏர்போர்ட்,” “டிபார்ட்மென்ட் ஸ்டோர்,” “டாக்ஸி,” “டிராஃபிக் ஜாம்” போன்ற நவீன பதங்களுக்கு இணையான லத்தீன் வார்த்தைகள் தற்போது இருக்கின்றன. எங்கும் காணப்படுகிற செல்லுலர் போன், டெலிபோனியம் செல்லுலேர் என்பதாக அழைக்கப்படுகிறது. லத்தீன் பிரியர்களுக்கு இன்னொரு நற்செய்தி காத்திருக்கிறது. ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரி, இன்டர்நெட்டில் லத்தீன் மொழி வெப் ஸைட்டை ஆரம்பித்திருக்கிறார் என்பதாக லண்டனின் த டைம்ஸ் அறிக்கை செய்கிறது.

“குளோனிங்” சிலைகள்

வருஷம் 2000-த்தில் ரோம் நகர பார்க்குகள் எல்லாவற்றிலும் உள்ள சிலைகள் அனைத்தும் டூப்ளிக்கேட்டுகளாகத்தான் இருக்கும். ஏன் இந்த நிலை? “ஞாபகச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் டூப்ளிக்கேட்டு சிலைகளை விட்டால் வேறு கதியில்லை” என்பதாக ரோமின் சரித்திர சங்கங்களில் ஒன்றைச் சேர்ந்த கார்லா பெனோசி என்பவர் குறிப்பிடுகிறார். அவற்றில் சில, “நீண்ட காலமாக அம்போ என விட்டுவிட்டதாலும், வாகனங்களாலும், நாச வேலையாட்களாலும், திருட்டுப் பொருட்களை வாங்குபவர்களாலும் பரிதாபமான நிலையில் இருக்கின்றன” என்பதாக அவர் தொடர்ந்து அறிவித்தார். அதே கலை உணர்ச்சியை ஏற்படுத்தவும், அதே சமயத்தில் பனிப்புகையிலிருந்தும் (smog) நாச வேலையாட்களின் தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கும் எந்தப் பொருட்களை உபயோகிக்கலாம் என்பதற்கு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. சில “குளோன்கள்” ரெஸின்களால் ஆனவை; மற்றவை சிமென்ட்டால் செய்யப்பட்டு சலவைக்கல் தூளால் மேற்பூச்சு பூசப்பட்டவை. அவை “அசலைப் போலவே இருந்ததால், அவை உண்மையான சிலைகள் தான் என்பதாக நினைத்த சில திருடர்கள், அவற்றில் ஒன்றின் தலையைத் திருடிவிட்டனர். இன்னொன்றை அலாக்காக தூக்கிச் செல்ல முயன்றனர்” என்பதாக பெனோசி குறிப்பிட்டார். அப்படியென்றால் அசல் சிலைகளுக்கு என்ன ஆகும்? அவை மியூஸியத்தில் காட்சிப் பொருட்களாக வைக்கப்படும், அங்கே எந்த இடையூறும் இன்றி மற்றவர்கள் அவற்றைக் கண்டு ரசிக்கலாம்.

பிள்ளைகளை பலிவாங்கும் ஊட்டச்சத்து குறைவு

“கொள்ளைநோய், இயற்கை சீற்றம், போர் போன்றவற்றால் சாகும் பிள்ளைகளைவிட, ஊட்டச்சத்துக் குறைவால் சாகும் பிள்ளைகள்தான் அதிகம்” என்பதாக பிரெஞ்சு செய்தித்தாள் லா மாண்ட் அறிவிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைவால் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் 70 லட்சம் பிள்ளைகள் இறக்கின்றனர் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இறக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட 1.2 கோடி பிள்ளைகளில் 55 சதவீதத்தினர் ஊட்டச்சத்துக் குறைவால் இறப்பதாக 1997-ஆம் ஆண்டின் ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் (UNICEF) அறிக்கை குறிப்பிடுகிறது. ஊட்டச்சத்துக் குறைவு இவ்விதம் பிள்ளைகளை பலிவாங்குவதோடு விட்டுவிடுகிறதா? அதுதான் இல்லை. ஏராளமான பிள்ளைகளின் உடல்ரீதியான, மனோரீதியான ஊனத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவுக்கும் இதுவே காரணம். தெற்கு ஆசியாவில் இரண்டு பிள்ளைகளில் ஒருவரும், ஆப்பிரிக்காவில் மூன்று பிள்ளைகளில் ஒருவரும் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினை, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. உதாரணமாக, ஐக்கிய நாடுகளில் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளில் நால்வரில் ஒருவருக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதாக யுனிசெஃப் அறிவிக்கின்றது.

சந்திரனில் தண்ணீரா?

சந்திரனின் துருவப் பகுதிகளில் உறைந்துபோன தண்ணீரைப்போல் தோற்றமளிக்கும் ஏதோ ஒன்றை லூனார் ப்ராஸ்பெக்டர் என்ற விண்கலம் கண்டுபிடித்ததாக த நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது. அங்கே ஹைட்ரஜன் இருப்பதாக அந்த விண்கலத்தில் இருந்த கருவிகள் காட்டின; சந்திரனில் ஹைட்ரஜன் தண்ணீரின் வடிவில்தான் இருக்க வேண்டும் என்பதாக நம்பப்படுகிறது. அந்தத் தண்ணீரும், மண் துகள்களோடு சேர்ந்த சிறு சிறு ஐஸ் படிகங்களாகவே அங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. அதுவும் அங்கிருக்கும் பாறை நிலத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கலாம். அந்தத் தண்ணீர், அங்குக் குடியிருக்க நினைக்கும் மனிதரின் தேவையைப் பூர்த்தி செய்யலாம் என சில விஞ்ஞானிகள் முன்கணிக்கின்றனர். அதே சமயத்தில் அங்கிருந்து ஏவப்படும் விண்கலன்களின் எரிபொருளுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும்கூட அந்தத் தண்ணீர் வழங்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். அங்கே ஒருவேளை தண்ணீர் இருந்தாலும்கூட அதைச் சிக்கனமான முறையில் எடுத்து உபயோகிக்க முடியாது என்று மற்றவர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். சந்திரனில் தண்ணீரை எடுப்பதற்கு ஆகும் செலவைவிட பூமியிலிருந்து அங்கே எடுத்துச்செல்வது மலிவாக இருக்கும் என்பதாக கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த டாக்டர் புரூஸ் மர்ரே குறிப்பிடுகிறார்.

வலி நிவாரணிகள் ஜாக்கிரதை

“அஸிட்டமினோபென் அடங்கிய மருந்துகளை சற்றே அதிக அளவில் எடுத்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டுவிடும். கோல்டாரின், அனாசின் போன்ற மருந்துகளில் உள்ள முக்கிய வேதிப்பொருள் இதுவே. குறிப்பாக, மருந்து சீட்டு இல்லாமல் கிடைக்கும் அநேக மருந்துகளை மதுவோடு சேர்த்து உட்கொண்டால் அதன் பாதிப்பு பெருமளவில் இருக்கும்.” ஏன் மரணமேகூட ஏற்படலாம் என்பதாக ஹெல்த் பத்திரிகை எச்சரிக்கிறது. “மருந்து சீட்டில் இருப்பதைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உட்கொண்டாலும் இம்மருந்துகள் ஒன்றும் செய்யாது என்பதாக அநேகர் நினைக்கின்றனர். அதில் துளிகூட உண்மையில்லை” என்பதாக டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தின், சவுத் வெஸ்டர்ன் மெடிக்கல் சென்டரில் பணி புரியும் மருத்துவ நிபுணர் வில்லியம் லீ குறிப்பிடுகிறார். ஏனெனில், அஸிட்டமினோபென் ஜீரணிக்கப்படுகையில், கல்லீரலைப் பாதிக்கும் ஒரு நச்சுப்பொருள் வெளிப்படுகிறது. ஆனால் இந்த நச்சுப்பொருளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கல்லீரல் குளூட்டா-தையோனை உற்பத்தி செய்கிறது. ஆனால் அஸிட்டமினோபெனை அதிகமாக எடுத்திருந்தால் அது கல்லீரலின் எதிர்ப்புச் சக்தியை நொறுக்கிவிடும். மதுபானமும் குளூட்டா-தையோனை அழித்துவிடும். ஆகவே மது அருந்துவதுடன்கூட இந்த மாத்திரைகளையும் உட்கொண்டால் நிச்சயமாகவே ஆளை பதம்பார்த்துவிடும். 300-க்கும் மேற்பட்ட மருந்துகளில் அஸிட்டமினோபென் கலந்திருப்பதால், ஒருவர் தனக்குத் தெரியாமலேயே அதிக அளவில் இந்த மருந்தை உடலில் எடுத்துக்கொள்ளக்கூடும்.

பிள்ளைபிடித்தலை தவிர்க்க வகுப்புகள்

தைவானிலுள்ள பிள்ளைகளுக்கு ஒரு புதிய வகுப்பு நடத்தப்படுகிறது. அது, பிள்ளைபிடித்தலைப் பற்றிய வகுப்பு. “பிலிப்பீன்ஸை அடுத்து தைவானில்தான் பிள்ளைகள் அதிகமாக கடத்தப்படுகின்றனர்; சராசரியாக இரண்டரை நாட்களுக்கு ஒரு பிள்ளை வீதம் கடத்தப்படுகின்றனர்” என்பதாக ஏஷியாவீக் பத்திரிகை அறிவிக்கிறது. இந்தக் குற்றச்செயல் தொடர்ந்து அதிகரித்ததால், அடுத்ததாக தங்கள் பிள்ளைதான் கடத்தப்படுமோ என்ற பயத்தில் பெற்றோர் இப்படியொரு வகுப்பை நடத்துமாறு விண்ணப்பித்தனர். இந்த வகுப்பில், பிள்ளைகள் தனியாக நடந்து செல்லும்போது, லிஃப்ட்டிற்குள் ஏறுவதற்கு முன்பு, பஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது என பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாக்கிரதையாக இருப்பதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சந்தேகப்படக்கூடிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஒருவேளை கடத்தப்பட்டால் எவ்விதம் நடந்துகொள்வது எனவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இந்த வகுப்பில் இப்படிப்பட்ட சஞ்சலப்படுத்தும் விஷயங்கள் போதிக்கப்பட்டாலும், வாழ்க்கையை ஒளிமயமான ஒன்றாக நினைக்க அவர்களுக்கு உதவும்படியான முயற்சி செய்யப்படுகிறது.

“அழிந்தது” திரும்பியது

அழிந்து போய்விட்டதாக எண்ணப்பட்ட காட்டு ஆந்தை (Blewitt’s owl) இந்தியாவில் மும்பைக்கு வடகிழக்கிலே ஷாஹ்டா என்ற இடத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் காணப்பட்டு போட்டோ எடுக்கப்பட்டது; கடந்த 113 ஆண்டுகளாக இது எங்குமே காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 20 சென்டிமீட்டர் உயரமான பிரௌன் நிறமுள்ள இந்தப் பறவைக்கு முட்டைக் கண்களும் அளவுக்கு மிஞ்சிய அலகும், கால்களும் நகங்களும் உள்ளன. வாஷிங்டனில் உள்ள த நேஷனல் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்ட்ரியைச் சேர்ந்த பமேலா ரஸ்மூசீன், தன்னோடு வேலை செய்யும் இரண்டு சகாக்களுடன் இந்தப் படங்களை எடுத்தார்; அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்தியாவின் புதிர்ப்பறவைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இது அத்தி பூத்தாற்போல் நிகழும் சம்பவம்.” இந்தியாவில், தப்பிப் பிழைத்திருக்கின்றன என்ற அத்தாட்சி எதுவுமின்றி இருக்கும் இன்னும் இரண்டு புதிர்ப்பறவைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, பிங்க் நிற தலையுடைய வாத்துகள்; இவற்றை 1930-களிலிருந்து காணமுடியவில்லை; மற்றொன்று, இமய மலை காடைகள்; இவை கடந்த 100 ஆண்டுகளாக கண்ணில் படவேயில்லை.

“குறையில்லா மருந்தா”?

உற்சாகமடையச் செய்யும், சோர்வை அகற்றும், பாலுணர்வைத் தூண்டும் பண்புகள் சாக்லெட்டில் இருப்பது பற்றி பல நூற்றாண்டுகளாகவே பறைசாற்றியிருக்கின்றனர். “கவலையின் அளவையும், மன அமைதியையும், பாலுணர்வு நடவடிக்கைகளையும்” சாக்லெட் பாதிக்கிறது என்பதாக சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள் காட்டுகின்றன என்று பிரெஞ்சு செய்தித்தாள் லா மாண்ட் அறிக்கை செய்கிறது. ஆம்ஃபிடெமினைப் போன்ற ஒரு பொருளும், “சோர்வை அகற்றும்” இன்னொரு பொருளும் சாக்லெட்டில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அனன்டமைட் என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர் அதில் இருக்கிறது என்பதையும் புதிய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது; கஞ்சா போன்ற பொருட்களை உபயோகிக்கும்போது ஏற்படும் “சந்தோஷத்தில் மிதக்கும் உணர்ச்சியை” இது ஏற்படுத்துகிறது. சாக்லெட்டில் நச்சுத்தன்மையும் குறைவாக இருப்பதால் அந்தச் செய்தித்தாள் இறுதியாக கூறுவதாவது: “உடல் உழைப்புக்கும் புத்திக்கூர்மையான செயல்களைச் செய்வதற்கும் தேவையான தூண்டுதலோடு, சக்தியையும் அளிக்கிறது; எந்தவிதமான பின்விளைவுகளும் இல்லாமலே சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பெறும் உணர்ச்சியைத் தருகிறது; அடிமைப்படுத்தும் தன்மையோ சிறிதளவே. இத்தனை பண்புகளும் சாக்லெட்டில் இருப்பதால் அது ஒரு குறையில்லா மருந்தாக தகுதிபெறுகிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்