உலகை கவனித்தல்
விலைமதிப்பற்ற ஒன்றின் விலை மதிப்பு
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பதிமூன்று விஞ்ஞானிகள், இயற்கை அள்ளித் தருபவற்றை டாலர் கணக்கில் மதிப்பிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். இது ஏற்கெனவே வெளியான 100-க்கும் அதிகமான அறிக்கைகளின் ஒரு தொகுப்பு. இந்தப் பூமி ஆற்றும் வெவ்வேறு பணிகளை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்துக்குமான பண மதிப்பை நிர்ணயிப்பதே அவர்களது நோக்கம். (ஒரு ஹெக்டேர் என்பது சுமார் 2.5 ஏக்கருக்கு சமம்.) உதாரணத்திற்கு ஒரு ஆராய்ச்சியை எடுத்துக்கொள்வோம். அதன்படி, ஐக்கிய மாகாணங்களில் நஞ்சை நிலங்களை வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தியதால், “வெள்ளம் வரும்போது தண்ணீரை பூமி ஈர்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் ஏற்படும் வெள்ளச் சேதங்களுக்கான வருடச் செலவு, ஒரு ஹெக்டேருக்கு, 3,300-லிருந்து 11,000 டாலராக அதிகரித்திருக்கிறது” என்பதாக சைன்ஸ் பத்திரிகை சொல்கிறது. இந்தப் பூமி ஆற்றும் பணிகளையும் அதன் இயற்கைச் செல்வங்களையும் அநேகர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் விஞ்ஞானிகள் மதிப்பிடும் அவற்றின் பண மதிப்பைக் கேட்டு அசந்துவிடாதீர்கள், அது வருடத்திற்கு 33,30,000,00,00,000 டாலர்!!! இது முழு உலகத்தின் ஒட்டுமொத்த தேசிய உற்பத்தியின் மதிப்பைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
கியூபாவிற்கு போப் விஜயம்
சென்ற ஜனவரியில் இரண்டாம் போப் ஜான் பால் கியூபாவிற்கு விஜயம் செய்தபோது, அந்நாட்டில் கத்தோலிக்க சர்ச் இனி அதிகப் பங்காற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். பெற்றோர்கள் “தங்கள் பிள்ளைகள் முழுமையான கல்வியைப் பெற ஒழுக்க, சமூக, மற்றும் மத சம்பந்தமான பாடங்களை . . . தேர்ந்தெடுப்பதற்கு உரிமை பெறவேண்டும்” என அவர் சொன்னதாய் லாஸேர்வாடோரே ரோமானோ தெரிவிக்கிறது. ஆகவே அந்நாட்டிலுள்ள கத்தோலிக்க பள்ளிகளை மீண்டும் திறந்துவைக்க போப் விரும்புகிறார். என்றாலும் பொதுக் கல்வியின்பேரில் அரசுக்கு மாத்திரமே இருக்கும் உரிமையை இழக்க தாங்கள் தயாரில்லை என கியூபன் அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனாலும் ல மான்ட் டிப்ளோமாடிக் என்ற பிரெஞ்சு பத்திரிகை போப் விஜயத்தைப் பற்றிய கியூபன் அரசின் கருத்தை சொல்கிறது: “கியூபன் அரசு இவ்வளவு காலம் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தாலும் போப் செய்த இந்த விஜயமே தங்களுக்குக் கிடைத்த வெற்றி என ஃபிடெல் காஸ்ட்ரோ கருதுகிறார்.” கியூபாவில் போப் சொன்ன சில விஷயங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதில் சந்தேகமில்லை. யெகோவாவின் சாட்சிகளோ தங்கள் மத நடவடிக்கைகளில் அரசியல் நடுநிலைமை வகிக்கின்றனர்.
சாதனை படைக்கும் கூந்தல்
வட தாய்லாந்தில் மாங் மலைஜாதியைச் சேர்ந்தவரே ஹூ சாடியோ. 85 வயதான இவர் கிட்டத்தட்ட 70 வருடங்களாக தன் முடியை வெட்டவேயில்லை. “18 வயதில் முடி வெட்டினேன், ஆனால் படுத்த படுக்கையாகிவிட்டேன்” என சொன்னார் ஹூ. உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தின் நீதிபதி சமீபத்தில் அளந்தபோது அதன் நீளம் 17 அடி 2 அங்குலம். இப்போது இது உலக சாதனைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது என அசோஸியேட்டட் ப்ரெஸ் அறிக்கையிடுகிறது. ஹூ வருடத்திற்கு ஒருமுறை தலைக்குக் குளிக்கிறார். பின் தன் கூந்தலை ஒரு தட்டியின் மீது விரித்துப்போட்டு காயவைக்கிறார். கூந்தல் மன்னன் என்ற லிஸ்டில் அடுத்து வருபவர் 87 வயதான இவரது அண்ணன் யி. இவர் 1957-ல் கடைசியாக முடி வெட்டினார். ஆனாலும் சென்றமுறை சாதனை படைத்த, 13 அடி 8 அங்குலம் நீளமான கூந்தல்கொண்ட இந்தியப் பெண்மணியையும் விஞ்சிவிட்டார் இவர். நீளமான கூந்தலால் சௌகரியம் ஜாஸ்தி என நினைக்கிறார் ஹூ. அதுவும் முக்கியமாக அவர் தாய்லாந்திலுள்ள உயர்ந்த மலைமீது வசிப்பதால், “குளிரில் அது என்னை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்கிறது” என சொல்கிறார்.
சரித்திரத்திலும் மூன்று விதம்
பாஸ்னியா பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு வரலாறு, கலை, மொழி ஆகிய பாடங்கள் மூன்று விதமாக கற்றுத்தரப்படுகின்றன. அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பது, மூன்று முக்கிய இனத் தொகுதிகளில் எதைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்ததே என த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கையிடுகிறது. உதாரணத்திற்கு, 1914-ல் ஆஸ்திரிய இளவரசரான ஃபெர்டினான்டை கொலைசெய்து முதல் உலகப் போர் துவங்குவதற்கு காரணமான ஆள் “ஒரு மாவீரன், கவிஞன்” என ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸ் செர்பிய பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க குரோஷிய மாணவர்களுக்கோ அந்த ஆள் “இந்தப் பயங்கரவாதச் செயலை செய்வதற்காக செர்பியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட ஒரு கொலையாளி” என சொல்லித்தரப்படுகிறது. அதேசமயம் முஸ்லிம்கள் அதே சம்பவத்தை விளக்கும்போது அந்த ஆள் “ஒரு தேசியவாதி, அவன் செயலால் செர்பியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. மூன்று இனத் தொகுதிகளையும் சேர்ந்த போலீஸ்காரர்கள் அதைத் தடுத்து நிறுத்தினர்” என சொல்கின்றனர். முதலில் மாணவர்களது இனம், அதாவது அவர்கள் செர்பியர்களா, முஸ்லிம்களா, குரோஷியர்களா என கேட்கப்படுகிறது. பின் அந்தந்த இனத்திற்குரிய தனித்தனி வகுப்பறைகளுக்கு அவர்கள் அனுப்பப்படுகின்றனர் என சொல்கிறது அந்த அறிக்கை.
பச்சைப்பசேல் ஸ்டேடியம்
விட்டெஸா ஆர்னெம் என்ற டச் கால்பந்து கிளப்புக்காக கட்டப்பட்ட, 28,000 இருக்கைகள்கொண்ட ஸ்டேடியத்தில் அருமையான புல் மைதானம் உண்டு. அதேசமயம் கூரையும் உண்டு. புல்லுக்கும் கூரைக்கும் சம்பந்தமேது, சூரியவொளியும் மழைநீரும் இருந்தால்தானே புல் பச்சைப்பசேலென்று இருக்கும், இல்லாவிட்டால் பழுப்பேறி காய்ந்துவிடுமே என நீங்கள் கேட்பது புரிகிறது. இங்குதான் விஷயமே இருக்கிறது. அப்படி புல் காய்ந்துவிடாதபடி ஸ்டேடியத்தை கட்டியிருக்கிறார்கள் என சொல்கிறது நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை. அந்தப் புல் மைதானம் ஒரு கான்க்ரீட் ப்ளேட்மீது அமர்ந்திருக்கிறது, அந்தப் ப்ளேட்டோ ஒரு ப்ளாஸ்டிக் ஆதாரத்தின்மீது உருளுகிறது. பயன்படுத்தப்படாதபோது 11,000 டன் எடையுள்ள அந்த முழு புல் மைதானமும் நான்கு ஹைடிராலிக் இயந்திரங்களைக் கொண்டு ஸ்டேடியத்திலிருந்து வெட்டவெளிக்கு எடுத்துச்செல்லப்படும். இதன் இன்னொரு நன்மை என்ன தெரியுமா? மைதானம் வெளியே எடுத்துச்செல்லப்பட்ட பிறகு ஸ்டேடியத்தின் தரையை கச்சேரிகளுக்காகவும் அதுபோன்ற மற்ற நிகழ்ச்சிகளுக்காகவும் பயன்படுத்தலாம்.
துள்ளும் மேடைகள் தரும் காயங்கள்
சமீப ஆண்டுகளில் துள்ளும் மேடைகள் (trampolines) மிகப் பிரபலமாகிவிட்டன. அதேசமயம் அவற்றால் பிள்ளைகளுக்கு அதிக காயம் ஏற்படுகிறது என த நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது. “துள்ளும் மேடைகள் பஞ்சுபோல் மெத்மெத்தென்று இருக்கும் என மக்கள் தவறாக நினைத்துவிடுகின்றனர்” என்கிறார் டாக்டர் காரி ஏ. ஸ்மித். அவர் அ.ஐ.மா., ஒஹாயோ, கொலம்பஸில் உள்ள பிள்ளைகள் மருத்துமனையில் பணிபுரிகிறார். பிள்ளைகள் துள்ளும் மேடையிலிருந்து கீழே விழுந்துவிடலாம், மெத்தைமீது சரியாக குதிக்காமல்போகலாம், தங்களோடு சேர்ந்து குதிக்கும் இன்னொரு பிள்ளையோடு மோதிக்கொள்ளலாம் அல்லது மெத்தையில்லாத பகுதியில் இடித்துக்கொள்ளலாம். இப்படி பல காரணங்களால் காயமடைகின்றனர். ஏணிகளுள்ள துள்ளும் மேடைகள் பெரும் ஆபத்தானவை, ஏனென்றால் சிறு பிள்ளைகளும்கூட அவற்றில் சுலபமாக ஏறிவிடுவார்கள். இவர்கள்தான் எளிதில் காயமடைகிறார்கள் என்று அவர் சொல்கிறார். நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையத்தைச் சேர்ந்த ஆன் ப்ரௌன், ஆறு வயதுக்குக் குறைவான பிள்ளைகள் இதில் குதிக்கக்கூடாது என்றும் ஒருசமயத்தில் ஒரு பிள்ளைதான் குதிக்கவேண்டுமென்றும் பரிந்துரைக்கிறார். அவர் சொல்கிறார்: “பிள்ளைகளை நீச்சல் குளத்தில் விடும்போது நம் கவனமெல்லாம் அவர்கள்மீதே இருக்குமல்லவா, அதேவிதமாய் துள்ளும் மேடையில் விடும்போதும் அவர்களை சதா கவனிக்கவேண்டும்.”
அன்புக்கு இல்லை தோல்வி
“பெற்றோர்களோடும் ஆசிரியர்களோடும் மிகவும் பாசமாக இருக்கும் டீனேஜ் பிள்ளைகளுக்கு, போதைப்பொருட்களையும் மதுபானத்தையும் உட்கொள்வது, தற்கொலை முயற்சி செய்வது, வன்முறையில் பங்கேற்பது, சிறு வயதிலேயே பாலுறவில் ஈடுபடுவது போன்ற பிரச்சினைகள் அதிகம் இருப்பதில்லை” என த வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை செய்கிறது. மின்னெஸோட்டா மற்றும் சேபிள் ஹில்லைச் சேர்ந்த நார்த் காரோலினா யூனிவர்ஸிட்டிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெற்றோரில் ஒருவரால் மட்டும் வளர்க்கப்பட்டாலும்சரி இருவராலும் வளர்க்கப்பட்டாலும்சரி எல்லா பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் என கண்டுபிடித்திருக்கின்றனர். பிள்ளை, தனக்கு பாசமும் போற்றுதலும் கிடைக்கிறது, தன்னை புரிந்துகொண்டும் நடத்துகிறார்கள் என உணர வேண்டியதுதான் முக்கியம். அந்த ஆராய்ச்சி இன்னொரு விஷயத்தையும் வலியுறுத்தியது. அதாவது, “பிள்ளைகள் டீனேஜ் பருவமடைந்தவுடன் பெற்றோர் தங்கள் கடமை மெதுமெதுவாக குறைந்துவருவதாக நினைக்கலாம். ஆனாலும் அந்தப் பருவம் முழுவதும் அவர்கள் பிள்ளைகளோடு முடிந்தளவு நேரம் செலவிடவேண்டியது அவசியம்” என சொல்கிறது போஸ்ட்.
இயற்கையின் சிறந்த நண்பன்
சரித்திரப் புகழ்பெற்ற கடற்கரையோர கோட்டை ஒன்றின் செங்கல் சுவர்களைப் பாதுகாப்பதற்காக பிரிட்டனின் கப்பற்படை ஆடுகளை பயன்படுத்துகிறது என த சன்டே டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. முட்புதர்கள், மரங்கள், களைகள் ஆகியவற்றின் வேர்கள் செங்கற்களையும் காரையையும் சேதப்படுத்தி வந்தன. பொதுவாக அவற்றை அகற்றுவதற்கு அறுக்கும் இயந்திரங்களும், களைக் கொல்லிகளுமே பயன்படுத்தப்படும். ஆனால் அவை விலையுயர்ந்தவை, ஆபத்தானவையும்கூட. அதோடு அரிதான செடிகளையும், லிச்சன்களையும் (ஒருவகை தாவரம்), பூச்சிகளையும் அவை அழிக்கும். என்றாலும் சுறுசுறுப்பான ஆடுகளால் செலவு குறைவு, அழிந்துவரும் செடிகளுக்கும் மிருகங்களுக்கும்கூட ஆபத்தில்லை. இத்திட்டத்தின் ஆலோசகரான மைக் பிச்சம் சொல்கிறார்: “இன்னும் 10 வருடங்களில் பெரும்பாலான பாதுகாப்பு அமைப்புகள், புதர்நிலங்களுக்கு மறுவாழ்வு தர ஆடுகளையே பயன்படுத்துவார்கள்.”
வன்முறைமிக்க கம்ப்யூட்டர் கேம்ஸ்
இதுவரை தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் கேம்ஸுகளிலேயே பயங்கரமான வன்முறை நிறைந்தது குவேக் II என்ற கேம். ஆனால் அது போதாதென்று இப்போது இன்னுமதிக வன்முறை சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் புரோகிராம், “இது கம்ப்யூட்டர் ஸ்கிரீனா இல்லை போர்க் களமா என நினைக்குமளவு வெறும் ரத்தத்தையும் கண்டம் துண்டமாக்கப்பட்ட உடல் உறுப்புகளையுமே காண்பிப்பதால் இதற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவாகியிருக்கிறது” என்று த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையிடுகிறது. “இரத்தம் அவ்வளவாக பெருக்கெடுத்து ஓடவில்லை என விமர்சனம் வந்ததால், அப்படிப்பட்டவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கவே கூடுதலான வன்முறையை இப்போது சேர்த்துள்ளோம்” என அந்தப் புரோகிராமின் தலைவர் ஜான் கார்மாக் சொல்கிறார். குவேக் II கேமில், சாவுப் போட்டிகள் என்ற இரட்டையர் விளையாட்டு உண்டு. அதாவது, இன்டர்நெட்டில் விளையாடும் மற்ற டஜன் கணக்கான ஆட்களோடு சண்டைபோட்டு அவர்களை “விதவிதமாய் கொன்று குவிக்கலாம்.” எதிரிகளைப் பார்த்து ஆபாசமான சைகைகளையும் காண்பிக்க முடியும். இந்தக் கேமின் தயாரிப்பாளர்களும் ஆர்டிஸ்டுகளும், “பளு தூக்கும் அறையும் நொறுக்குத்தீனிகள் குவித்துவைக்கப்பட்டிருக்கும் சமையலறையும் உள்ள கேம் ப்ளேயர்ஸ் பாரடைஸில் வேலை செய்கிறார்கள். அபார்ட்மெண்ட் நம்பர் 666, இது . . . பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் உள்ள நம்பர்.”
இந்தப் பைபிளில் கடவுள் இல்லை
டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு மருத்துவர் எபிரெய வேதாகமங்களின் ஒரு புதிய மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளார். அதில் கடவுள் என்ற வார்த்தையே இல்லை. கடவுளும் விசுவாசமும் “நம் சுதந்தரத்தைப் பறித்துப்போடும் ஹைதரலி காலத்துச் சமாச்சாரங்கள்” என டாக்டர் ஸ்வென் லிங்ஸ் நினைப்பதாக டென்மார்க் செய்தித்தாளான க்ரிஸ்டலிட் டௌப்ளெத் அறிக்கை செய்கிறது. இன்று நிறைய பேர் சந்தோஷமில்லாமல் தனிமையில் தவிக்கின்றனர் என லிங்ஸ் சொல்கிறார். “நாம் யூத-கிறிஸ்தவ கலாச்சாரத்தில் வாழ்கிறோம். இதுவே நம் சந்தோஷத்தைப் பறித்துப்போட்டிருக்க வேண்டும்” என்கிறார் அவர். இப்புதிய பைபிள் வர்ஷனின் மூலம் “இந்தக் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பதுதான்” லிங்ஸின் இலட்சியம் என்கிறது அந்தச் செய்தித்தாள். லிங்ஸ் வெளியிட்டிருக்கும் கடவுள் இல்லாத பைபிள்-ல் ஆதியாகமம் 3:12 இப்படி சொல்கிறது: “ஆதாம் மனதில் நினைத்துக்கொண்டான்: ‘என்னுடனே இருக்கும் ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்.’” அந்தச் செய்தித்தாளின்படி, “இது, பனியிலிருந்து தண்ணீரை அகற்றிவிட்டு என்ன மீந்திருக்கிறது என்று பார்ப்பதைப் போலல்லவா இருக்கிறது?”