உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 5/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கோளைக் குளிரவைக்கும் எரிமலை
  • ஆசியாவின் உடலுறுப்பு வணிகம்
  • அப்பாவிகளின் படுகொலை
  • மக்கள் நெருக்கடி—ஏன்?
  • அதிக ஆயுசு காலம் ஓர் ஆசீர்வாதமா?
  • மொழிகளும் மூளையும்
  • எய்ட்ஸைப் பற்றிய நோக்குநிலைகள்
  • சந்திர ஆற்றல்
  • பயண வாந்தியின் காரணம்
  • நடுத்தரவயதினர் வேலைகளை இழக்கின்றனர்
  • கனிவுள்ள அறம்?
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1998
  • வெனிஸ் ‘கடலில் மிதக்கும் நகரம்’
    விழித்தெழு!—2005
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
  • தூய்மைக்கேடு—இதை உண்டுபண்ணுவது யார்?
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 5/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

கோளைக் குளிரவைக்கும் எரிமலை

பிலிப்பைனின் பினட்டூபோ மலையிலுள்ள எரிமலை 1991-ல் வெடித்தபோது, அதன் விளைவாக நம்முடைய கோள் சிறிது குளிர்ச்சியடையும் என விஞ்ஞானிகள் முன்னறிவித்தனர். அவர்கள் சொன்னது சரியே, ஏனென்றால் அது அவ்வாறே ஆயிற்று. இந்த எரிமலை சுமார் 20 மில்லியன் டன் கந்தக டைஆக்ஸைட் வாயுவைச் சீரடுக்கு மண்டலத்தினுள் (Stratosphere) கக்கிற்று. அந்த வாயு கந்தக அமிலத்தின் சிறிய சிறுதுளிகளாலான ஒரு பெரிய மேகக்கூட்டத்தை உண்டாக்கிற்று. பிறகு உயரத்தில் வேகமான சுழற்காற்றுகளினால் அடிக்கப்பட்டு சில வாரங்களுக்குள் பூமியைச் சுற்றி பரப்பப்பட்டன. இந்தச் சிறுதுளிகள் பரவி சூரிய ஒளிக்கதிர்கள் சிலவற்றை மறைத்ததன் காரணமாகக் கீழே பூமியில் குளிர்ந்த தட்பவெப்பநிலையில் விளைந்தது. சைன்ஸ் நியூஸ் சொல்கிறபடி, இந்த எரிமலை வெடித்ததிலிருந்து, வட அரைக்கோளத்தின் பாகங்களில் சராசரி வெப்பநிலையில் சுமார் ஒரு டிகிரி சென்டிகிரேட் குறைவு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விளைவு தற்காலிகமானதே, எனவே இது கண்ணாடி அறை விளைவிற்கெதிரான ஒரு மாற்றம் என்று கருதப்படக்கூடாது. தட்பவெப்பநிலை நிபுணர் ஒருவர் இந்த எரிமலையினால் தூண்டப்பட்ட குளிர்ச்சி போக்கு 1994-ல் மறைந்துபோகுமென முன்னுரைக்கிறார்.

ஆசியாவின் உடலுறுப்பு வணிகம்

மனித உடலுறுப்புகளின் வணிகம் என்ற பொருளின்மீது “விநியோகமும் தேவையும் தேசத்தின் சட்டம்,” என்று சொல்கிறது ஏஷியாவீக் பத்திரிகை. ஹாங்காங்கில் 1992-ன் வசந்த காலத்தில் சுமார் 600 பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் 50 பேர் மட்டுமே அந்த வருடக்கடைசியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெறுவார்களென எதிர்ப்பார்க்கப்பட்டனர். எனவே, அநேகர், இந்தியாவைப்போன்ற மற்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். ஏனென்றால் இங்கு வருடத்திற்கு 2 கோடி டாலர் வியாபாரத்தில் சுமார் 6,000 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் ஏழைகளோ பணக்கஷ்டத்தினால் அல்லல்பட்டோரோ ஒரு சிறுநீரகத்தை விற்பதற்கு மனமுள்ளவராயிருக்கின்றனர். காரணம், பொதுவாகவே ஒரே ஒரு சிறுநீரகத்தோடு மட்டும் பிழைத்திருப்பது கூடிய காரியமே. ஆனால் இந்த உடலுறுப்பு வணிகம் ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று ஏஷியாவீக் குறிப்பிடுகிறது. சிறுநீரகத்தைக் கொடுத்த சிலர் ஊழல் நிறைந்த தரகர்களால் பணம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அறிக்கை செய்யப்பட்டவிதமாக ஒரு மனிதன் வயிற்றிலுள்ள ஒரு சிறிய பிரச்னைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்று ஒரு சிறுநீரகம் குறைவுபட்டவனாகத் திரும்பினான்—அவனுடைய சம்மதமின்றி அது நீக்கப்பட்டிருந்தது!

அப்பாவிகளின் படுகொலை

ஐக்கிய மாகாணங்களில் குறைந்தது 1,383 குழந்தைகள் துர்ப்பிரயோகத்தாலோ அசட்டையாலோ 1991-ல் கொல்லப்பட்டனர் என்று தி வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை செய்கிறது. தேசீய குழந்தை துர்ப்பிரயோக தடுப்புக் குழுவால் கொடுக்கப்பட்ட இந்த மிதமான மதிப்பீடு, திடுக்கிடவைக்கிற, நாளொன்றுக்குக் குழந்தைகள் துர்ப்பிரயோக சம்பந்தமான நான்கு மரணங்களுக்கு சமமாயிருக்கிறது. இது கடந்த ஆறு வருடங்களிலிருந்ததைவிட ஒரு 50-சதவீத அதிகரிப்பாகும். இந்த அதிகரிப்புக்குக் காரணங்கள் பலவிதம். வேலையிழப்பு, குறைந்த வருமானம், மற்றும் நம்பிக்கையின்மை போன்றவற்றைக்கொண்ட—மோசமாகிக்கொண்டிருக்கும் பொருளாதார நிலைமைகள், மக்கள் தங்கள் ஏமாற்றங்களை இந்த உதவியற்ற பலியாட்களிடமாக வெளிக்காட்டும்படியாகச் செய்வதைக் குற்றஞ்சாட்டுகின்றனர் சில நிபுணர்கள். நன்கு அறிக்கை செய்யப்பட்ட அநேக வழக்குகள் தங்களுடைய பொறுப்பில் இருந்த குழந்தைகளைத் துர்ப்பிரயோகம் செய்த குழந்தையைப் பேணும் வேலையாட்களை (Baby-sitters) உட்படுத்தியிருந்தபோதிலும், “இந்த எண்ணிக்கைகளின் பின்னணியில் இருக்கும் உண்மை சரித்திரம் வழக்கமாக, தங்களுடைய குழந்தைகளை மிகவும் சிநேகிக்கவேண்டிய அப்பாவையும் அம்மாவையும் உட்படுத்துகிறது” என்பதாக போஸ்ட் குறிப்பிடுகிறது.

மக்கள் நெருக்கடி—ஏன்?

ஏழை நாடுகளில் மக்கள் நெருக்கம் பரவலாக உள்ளது ஏன்? விஸவுன் பத்திரிகையில், பிரேஸிலின் சுற்றுச்சூழல் துறையின் முன்னாள் செயலர், பாலோ நொகேர நெடோ, பதிலை வல்லமைவாய்ந்த வழியில் சொல்கிறார்: “பிரேஸிலில் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. ஏன் அவனுக்கு ஒன்பது குழந்தைகள் இருக்கின்றனர் என்று கேட்கப்படும்போது, ஒரு மனிதன் சொல்கிறான், ‘ஏனென்றால் குழந்தையாயிருக்கும்போதே மூவர் இறந்துவிடுகின்றனர்; மூவர் சாவோ பாலோ, ரியோடி ஜனீரோ, அல்லது பிரேஸிலியா போன்ற ஊர்களுக்கு இடம் மாறிச் சென்றுவிடுகின்றனர், இன்னும் மூவர் நாங்கள் வயதாகும்போது எங்களைக் கவனித்துக்கொள்ள இங்குத் தங்குகின்றனர்.’ ஒரு குழந்தை ஏழை மக்களின் சமூகப் பாதுகாப்பு.” நெடோ முன்னெச்சரிப்பாக, மேலும் கூறுகிறார்: “எங்கு ஏழ்மை இருக்கிறதோ அங்கு மக்கள்தொகை வெடிப்பு இருக்கிறது. அது தொடருமானால், இக்கோளம் அழிக்கப்படும். அளவான வளங்களுள்ள ஓர் உலகில், ஆவிக்குரிய, ஒழுக்கசம்பந்தமான, அல்லது அறிவியல் வளர்ச்சியைத் தவிர, நாம் வேறு எந்த வளர்ச்சியையும் அளவுக்குமீறி கொண்டிருக்கமுடியாது. இதை நாம் உலகமுழுவதும் எளிதில் கவனிக்கலாம்.” (g93 1/22)

அதிக ஆயுசு காலம் ஓர் ஆசீர்வாதமா?

மருத்துவ அறிவியல் சமீப காலத்தில் மனிதனுடைய சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பை ஓரளவு அதிகரித்திருந்தபோதிலும், “உலக மக்களுடைய வாழ்க்கையின் ஆரோக்கியமும் தரமும் முன்னேற்றமடையாத நிலையிலிருக்கின்றன,” என உலகச் சுகாதார நிறுவன (WHO) பொது இயக்குநர், டாக்டர் ஹிரோஷி நாகாஜிமா ஒப்புக்கொள்கிறார். ல ஃபிகாரோ என்ற பாரிஸ் செய்தித்தாளுக்கு அவர் கொடுத்த பேட்டியில், டாக்டர் நாகாஜிமா சொன்னார்: “எங்களுடைய தகவலின்படி, நோயுற்றோர் அல்லது ஊனமுற்றோர் ஆகியோரின் எண்ணிக்கையுங்கூட, முக்கியமாக வயதானவர்கள் மத்தியில், அதிகரித்திருக்கக்கூடும்.” உலகமுழுவதும் இப்பொழுது சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு 65 வருடமாக இருக்கிறது. தொழிற்முன்னேற்றமடைந்த நாடுகளில் அது 76 வருடமாய் இருக்க, வளரும் நாடுகளில் சராசரியாக 62 வருடமும், பூமியின் மிகக்குறைவான வளர்ச்சிப் பெற்ற பகுதிகளில் வெறுமனே 50 வருடங்கள் மட்டுமேயாகும். அடுத்த ஐந்து வருடங்களில், சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பில் 4 மாதங்களைக் கூட்ட WHO எதிர்பார்க்கிறது. ஆனால் டாக்டர் நாகாஜிமா குறிப்பிடுகிறார்: “வாழ்நாளில் ஏற்படும் அதிகரிப்புகள்தானே, முடம் அல்லது நீடித்த நோய் போன்றவை இல்லாத வாழ்க்கை, என்று அர்த்தப்படுத்தவேண்டுமென்று அவசியமில்லை என்பது தெளிவாக இருக்கிறது.” (g93 2/8)

மொழிகளும் மூளையும்

இத்தாலியின் ட்ரீஸ்டி பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சியாளராக இருக்கும், ஃப்ராங்கோ ஃபாப்ரோ கூறுகிறபடி, நாம் அறிந்திருக்கிற, அல்லது அரைகுறையாக அறிந்திருக்கிற ஒவ்வொரு மொழியும், நமது மூளையில் வரையறுக்கப்பட்ட ஓர் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவர் எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார்? மூளை சேதத்திற்கு ஆளான பன்மொழிபேசும் பல ஆட்கள் தங்களுடைய சொந்த மொழியில் தங்களுடைய எண்ணங்களைச் சரியாக விவரிக்கமுடியாமற்போயிற்று. ஆனால் தங்களுக்கு மேற்போக்காகத்தான் தெரியும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்த ஒரு மொழியில் சரளமாக பேசத் தொடங்கிவிட்டனர். “இது தாய்மொழி மற்ற மொழிகளோடு குறுக்கிட்டு, அவற்றைப் பேசுவதற்கான திறனைக் குறைக்கிறது,” என்பதைச் சுட்டிக்காட்டுகிறது, என லெஸ்ப்ரஸ்ஸோ பத்திரிகை கூறுகிறது. (g93 1/22)

எய்ட்ஸைப் பற்றிய நோக்குநிலைகள்

“அநேக தென்னாப்பிரிக்கர்கள் [எய்ட்ஸின்] முக்கியத்துவத்தை உணரத் தவறினர் அல்லது அந்த நோய் இருக்கிறதென்பதையே மறுக்கின்றனர்,” என்று தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்கிலுள்ள ஸேட்டர்டே ஸ்டார் அறிக்கை செய்கிறது. “இனவேற்றுமை, ஏழ்மை அறியாமை போன்றவற்றால் ஆன பலம்வாய்ந்த ஒரு கலவை இந்தக் குணப்படுத்தமுடியாத நோய் பரவுவதை விரைவுபடுத்துகிறது.” ஆப்பிரிக்காவைப் பலவீனப்படுத்துவதற்கான மேலைநாட்டவரின் ஒரு சதித்திட்டம் அல்லது அந்த நோய் ஆப்பிரிக்க கருப்பர்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வெள்ளையனின் ஏதோ கண்டுபிடிப்பு என்றெல்லாம் சிலர் உணருகின்றனர். எய்ட்ஸைப் பற்றிய மக்களின் நோக்குநிலையைப் பாதிக்கும் மற்றொரு காரணம், அநேகருடைய அனுதின வாழ்க்கையின் பாகமாகிவிட்டிருக்கும் வன்முறையாகும். சண்டை நிறைந்த பகுதியில் வாழும் ஒரு தென்னாப்பிரிக்க மனிதன் ஓர் எய்ட்ஸ் ஆலோசகர் குழுவிடம் சொன்னார்: “10 வருடங்களில் எய்ட்ஸ் என்னை நோயுறச் செய்யும் என்று சொல்கிறீர்கள். ஆனால் கடந்த வார இறுதியில் [அரசியல் வன்முறையில்] . . . 25 பேர் இங்கு இறந்துபோயினர். ஏற்கெனவே இருப்பதைவிட அதிகமாகவா எய்ட்ஸ் வாழ்க்கையை மோசமாக்கிவிடப்போகிறது?” நோக்குநிலைகளில் மாற்றம் ஏற்படவில்லையெனில், அடுத்த 10 முதல் 15 வருடங்களுக்குள் தென்னாப்பிரிக்காவில் இந்த நோய் தீவிரமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டது.

சந்திர ஆற்றல்

சந்திரன், பூமியின் பெருங்கடல் அலைகளின் எழுச்சி மற்றும் ஓட்டங்கள் போன்றவற்றை உண்டாக்குகிறது என்பது வெகு காலங்களுக்கு முன்பே அறியப்பட்டதுதான். எனினும், சந்திரன் பூமியின் நிலப்பரப்புகள்மீதும் அதைப்போன்ற ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது என பிரெஞ்சு தேசீய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ([CNRS] French National Center of Scientific Research) விஞ்ஞானிகள் இப்போது உறுதிப்படுத்துகின்றனர் என்று டெர் சோவாஜ் என்ற பிரெஞ்சு பத்திரிகை அறிக்கை செய்கிறது. பூமியின் நிலத்திற்கடியில் 1,000 மீட்டர் ஆழத்தில் அடைக்கப்பட்ட ஒரு குகையில் உள்ள ஓர் உப்புநீர் குளத்தில் வைக்கப்பட்ட ஒரு நுழைகோலின் மூலம், ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கும் குகையின் உட்பொருள்களில் ஓர் எழுச்சியும் இறக்கமும் ஏற்படுவது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. குகை சுவர்களின் நுண்ணிய விரிவடைதலாலும் சுருங்குதலாலும் ஏற்படுத்தப்படக்கூடிய இந்த அசைவு, சந்திரன் பூமியைச் சுற்றி சுழல்வதற்கு இசைவாக இருக்கிறது. இது டெர் சோவாஜ் பத்திரிகையால் அழைக்கப்படும் “ஆச்சரியத்திற்குரிய நிலத்தடி சுவாசம்,” என்பதற்குச் சந்திரன் மூலகாரணமாக இருக்கிறது என நிரூபிக்கிறது.

பயண வாந்தியின் காரணம்

அநேக மக்கள் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் பயண வாந்தியினால் அவதிப்பட்டிருக்கின்றனர். இலட்சக்கணக்கானோர் தாங்கள் பயணம் செய்யும்போதெல்லாம் தவறாமல் இதை எதிர்ப்படுகின்றனர். இந்தத் தனித்தன்மைவாய்ந்த குமட்டலைத் தூண்டுவிப்பது எது என்பதைத் தாங்கள் புரிந்துகொண்டதாக விஞ்ஞானிகள் இப்போது நம்புகின்றனர். இந்தப் பிரச்னை மூளையில் தொடங்குகிறது. மூளையில் கண்களால் கடத்தப்படும் தகவல்கள் உட்செவியினால் உணரப்படும் தகவல்களோடு பொருந்துவதில்லை. உதாரணமாக, அசைந்தாடும் படகில் உள்ள உடலின் சலனத்தை உட்செவி உணர்கிறது. ஆனால் உடல் படகோடு அசைந்தாடிக்கொண்டிருக்கும்போது கண்கள் காண்பதோ ஒரு நிலையான காட்சிதான். மூளையால் பெறப்படும் இந்த முரண்பாடான தகவல்கள், அழுத்த சம்பந்தமான ஓர் இயக்குநீரை உற்பத்தி செய்வித்து, வயிற்றுத் தசைகளின் மின் அலை வீதங்களில் ஓர் அதிகரிப்பையும் ஏற்படுத்துகிறது. நேரப்போக்கில் இது குமட்டலிலும் வாந்தியிலும் விளைவடைகிறது. பயண வாந்தியைத் தவிர்த்தலுக்கான வழிகள், பயணத்திற்கு முன் குறைந்தளவு, கொழுப்புக்குறைந்த, மாவுப்பொருள் நிறைந்த உணவைச் சாப்பிடுவது; உட்செவி எதை உணர்கிறதோ அதையே கண்கள் காணும்பொருட்டு, ஒரு காரில் பயணம் செய்யும்போது வளைந்து செல்லும் ஒரு சாலையின் வளைவுகளையும் அல்லது ஒரு படகில் பயணம் செய்யும்போது தொடுவானத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது; தலை மற்றும் உடலின் இயக்கங்களைக் குறைப்பது; மனதை மற்ற எண்ணங்களில் ஈடுபடச் செய்வது போன்ற காரியங்களை உட்படுத்தும்.

நடுத்தரவயதினர் வேலைகளை இழக்கின்றனர்

“நீங்கள் 40 வயதுற்கு மேற்பட்டவரானால், உங்களுடைய வேலையை மாற்றுவதைப்பற்றி நினைத்துக்கூட பார்க்காதீர்கள்,” என்று தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்கிலுள்ள ஒரு செய்தித்தாள் தி ஸ்டார் சொல்கிறது. தென்னாப்பிரிக்காவிலுள்ள அநேக பணியாளர்கள் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக தற்காலிக வேலைநீக்கம் செய்யப்படுகின்றனர். ஓய்வுபெறும் வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் வயதான ஆட்களே பெரும்பாலும் முதலில் வேலைகளை இழக்கின்றனர். மனித வளத்துறையிலிருந்துவரும் புள்ளிவிவரங்களின்படி தென்னாப்பிரிக்காவில் மாதம் ஒன்றுக்கு 50 வயதுக்கு மேற்பட்ட 37,500 ஆட்கள் தங்களுடைய வேலைகளை இழக்கின்றனர். “தென்னாப்பிரிக்காவின் இந்த நிலைமை மற்ற நாடுகளிலுள்ள போக்குமுறைகளைவிட வித்தியாசமானதல்ல. இந்நாடுகளில் 55 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் வேலைசெய்யுமிடத்தில் விரைவில் ஆபத்துக்குள்ளாகிவரும் ஓர் இனமாகி வருகின்றனர்,” என்பதாக தி ஸ்டார் கூறுகிறது. “ஐம்பத்தைந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் விதிமுறைகளின்படி வேலைக்கு அமர்த்துவது ஏற்றுக்கொள்ளப்படும் பாணியல்ல. . . . இதற்கு விதிவிலக்கு வயதான ஜப்பானியர்களாகும். இவர்களில் 60 சதவீதத்தினர் வேலைசெய்கின்றனர்,” என்று உலகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக் குழு (Organisation for Economic Co-operation and Development) சொல்கிறது. (g93 2/8)

கனிவுள்ள அறம்?

கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் பத்திரிகை, நண்பர்களிடமிருந்தும் அயலகத்தாரிடமிருந்தும் நன்கொடைகளைத் திரட்டி தங்களுக்கு அனுப்பிவைக்குமாறு மக்களிடம் கேட்டுக் கடிதங்களை அனுப்பிய ஒரு புற்றுநோய் அறநிலையத்தை, சமீபத்தில் பிரித்துக்காட்டியது. அந்தக் கடிதத்தின் பின்புறம் இருந்த நுண்ணிய எழுத்துக்களைப் புரிந்துகொண்டது சில ஆர்வத்துக்குரிய உண்மைகளை வெளியாக்கியது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உதாரணமாக, கடந்த வருடம் இந்த அறநிலையம் கிட்டத்தட்ட 25 லட்சம் டாலர்களைத் திரட்டிற்று. ஒவ்வொரு டாலரிலும் உண்மையிலேயே ஒரு பென்னிக்கு (Penny) குறைவாகவே புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்குச் சென்றது. “மீதியைத் தொழில்ரீதியில் நிதி திரட்டும் ஒருவருக்கும், நிதி திரட்டும் செலவுகளைச் சரிகட்டியதற்கும், நிதிநிர்வாகஞ்செய்ததற்கும், முன்பு ஏமாற்றி நிதி திரட்டியதன் வழக்குகளைத் தீர்த்ததற்கும், ‘பொதுக் கல்வி’க்காகவும் கொடுக்கப்பட்டது,” என அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது. அது புற்றுநோய்த் தடுப்புக்காக “உங்களுடைய வேலைசெய்யுமிடங்களைப் புற்றுநோய் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்பதைப் போன்ற மிகச்சாதாரண, பொதுவான அறிவுரைகளைக் கொடுத்த, கேள்விக்குள்ளான பொதுக் கல்வியை ஓர் உதாரணமாகக் காட்டிற்று. (g93 1/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்