உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 9/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உலக சுகாதாரத்தின் புலம்பல்கள்
  • மார்மன்களும் அரசியலும்
  • மனப்புழுக்கத்தால் அதிகரிக்கும் கார் விபத்துகள்
  • நண்டுசிண்டுகளின் பூச்சாண்டிக் கனவுகள்
  • டாக்டர்களே போதைக்கு அடிமையானால்?!
  • நஞ்சுக்களின் உடும்புப்பிடி
  • பிரேஸில் கார்னிவல்
  • “ராசியான லாட்டரி மரம்”
  • அதிக டிவி, குறைந்த படிப்பு
  • பசியறியா முதியோர்
  • பைபிள் இப்போது 2,197 மொழிகளில்
  • கனவுகள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • கார்னிவல் கொண்டாட்டங்கள்—சரியா, தவறா?
    விழித்தெழு!—1996
  • லாட்டரிகள் ஏன் இந்தளவுக்குப் பிரபலமாயிருக்கின்றன?
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 9/8 பக். 28-29

உலகை கவனித்தல்

உலக சுகாதாரத்தின் புலம்பல்கள்

“21-ம் நூற்றாண்டுக்குள் நாம் கால்பதிக்கப்போகும் இக்காலத்திலும் உலகிலுள்ள 33 சதவீத மக்களுக்கு சாவுமணி அடிப்பவை தொற்று நோய்கள்தாம்” என சொல்கிறார் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டாக்டர் டேவிட் ஹேமேன். இப்பிரச்சினைக்கு பல அம்சங்கள் உரமிடுகின்றன. ஜனத்தொகை பெருக்கம், தடுப்பு மருந்து திட்டங்களின் படுதோல்வி, ஜனநெரிசல், சுற்றுச்சூழலியல் மாற்றங்கள், உலக மக்களின் உடல்நலம் சீரழிதல் ஆகியவை அனைத்தும் இதற்கு முக்கிய பங்களிக்கின்றன என்று த ஜெர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் சொல்கிறது. நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்படுதல், அகதிகள், உலகை சுற்றும் பயணிகளின் அதிகரிப்பு ஆகியவை தொற்று நோய்களை பரப்பும் தெளிப்பான்களில் சில. “உண்மையாக பார்க்கப்போனால், இந்தத் தொற்றுநோய்களை ஒழித்துக்கட்ட முடியும், இவற்றை தடுக்கவோ ஒழிக்கவோ மருந்துகள் கிடைக்கின்றன” என்று டாக்டர் ஹேமேன் கூறுகிறார்.

மார்மன்களும் அரசியலும்

பிற்கால புனிதர்களாலான இயேசு கிறிஸ்துவின் சபை, (The Church of Jesus Christ of Latter-day Saints [LDS]) ஐக்கிய மாகாணங்களில் உள்ள தன் அங்கத்தினர்களை அரசியல் களத்தில் குதிக்கும்படி தூண்டுகிறது என கிறிஸ்டியன் சென்சுரி பத்திரிகை குறிப்பிடுகிறது. பர்ஸ்ட் பிரஸிடென்ஸி என்ற அதன் மேல்மட்ட LDS கவுன்சில், தன் அங்கத்தினர்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதத்தை எழுதியது; “கல்வி வாரியங்கள், சட்ட மேலவைகள், அரசாங்க ஏஜென்ஸிகள், சட்டமன்றங்கள், மேலும் தேர்ந்தெடுக்கப்படுகிற அல்லது நியமிக்கப்படுகிற மற்ற உயர் பதவிகளிலும் தங்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சிகளிலும் ஈடுபட முன்வரும்படி” அதன் அங்கத்தினர்களை ஊக்குவித்தது. ஆனால் சர்ச் தன் வேட்பாளரை நிறுத்தவோ, குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஆதரிக்கவோ செய்யாது எனவும் அந்தக் கடிதம் குறிப்பிட்டது. இந்த மதப்பிரிவின் ஆரம்ப காலப்பகுதியைக் குறித்து சொல்லுகையில், “மார்மன்கள் மக்கள் ஆதரவுபெற்ற அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர்; இன்று உட்டா என்றழைக்கப்படும் இடத்தில் தங்களுடைய இறையாட்சியை ஸ்தாபிக்க முயன்றனர்” என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது.

மனப்புழுக்கத்தால் அதிகரிக்கும் கார் விபத்துகள்

ஒருவர் தன் வேலையை எப்படி கருதுகிறார் என்பது வண்டியோட்டிச் செல்லும்போது அவரை அதிகமாக பாதிக்கிறது என்று ஜெர்மனியிலுள்ள புரொஃபஷனல் அசோஸியேஷன் ஃபார் ஹெல்த் சர்வீஸ் அண்ட் சோஷியல் வெல்பேர் நடத்திய ஆய்வு காட்டுகிறது. வேலையில் அதிக டென்ஷன் உள்ளவர்கள் சாலை விபத்தில் மாட்டிக் கொள்ளும் அபாயம் அதிகம் என ஸூடாய்ச ஸைட்டுங் அறிக்கை செய்கிறது. மேலதிகாரி அல்லது சகபணியாளர்களைக் குறித்து மனசுக்குள்ளே புழுங்குவது வண்டியோட்டும்போது கவனம் சிதறுவதற்கு காரணமாகலாம்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. வேலைக்கு செல்லுகையிலும் திரும்புகையிலும் சாலை விபத்துக்குக் காரணமாயிருக்கிற 75 சதவீத ஆட்கள், “கவனம் செலுத்த முடியாதது, கண்மண் தெரியாத வேகத்தில் ஓட்டுவது, காலில் சுடுதண்ணி ஊற்றியதுபோல பரபரப்பது, அல்லது மனப்புழுக்கம்” ஆகியவற்றை குறைகூறுகின்றனர் என்று அந்த ஆய்வு காட்டியது. இத்தகைய மோசமான மனப்புழுக்கத்தினால் விபத்துக்கு ஆளாகிறவர்களில் ஆண்கள் அதிகமென்றாலும்கூட, மழலையரின் தாய்மார்களே அதிக அபாயத்தில் இருக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கண்டுபிடித்தது. “நேரத்திற்குப் போய் குழந்தைகளை ஸ்கூலிலிருந்து கூட்டிக்கொண்டு வரவேண்டும், மதிய இடைவேளையில் சமைக்க வேண்டும் என்ற பரபரப்பால், அவர்களுக்கு அதிக டென்ஷன் ஏற்படுகிறது” என்று அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

நண்டுசிண்டுகளின் பூச்சாண்டிக் கனவுகள்

பூச்சாண்டிக் கனவுகள் சிறுபிள்ளைகளின் மத்தியில் சர்வசாதாரணம். 10 பிள்ளைகளில் 9 பேர் கனவு கண்டு திடுக்கிட்டு எழுகின்றனர் என்று ஜெர்மனி மேன்ஹைமிலுள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஃபார் மென்டல் ஹெல்த் நடத்திய ஆய்வு காட்டுகிறது. யாரோ விரட்டிக்கொண்டு வர, இவர்கள் அடித்துப்பிடித்து ஓடுவதைப் போலவும், உச்சாணியிலிருந்து தொபுக்கடீரென விழுவதைப்போலவும், சண்டையிலோ, இயற்கையின் சீற்றத்திலோ அழிவதைப் போலவும் கனவு காண்கிறார்கள். கதைகளிலும் நிஜ வாழ்விலும் நடப்பவை சேர்ந்த கலவையே இந்தச் சின்னஞ்சிறுசுகள் காணும் கனவுகள். பொடிப்பயல்கள் சாதாரணமாக தாங்கள் கண்ட கனவை மறந்துவிடுகின்றனர். சிறுமிகளோ அதை மற்றவர்களிடம் சொல்லி விடுகின்றனர், அல்லது எழுதி வைக்கின்றனர். கனவுகளால் ஏற்படும் பயத்தைப் போக்க, சிறுவர்கள் தாங்கள் கண்ட கனவை சொல்லிவிடலாம், அதை ஒரு ஓவியமாக தீட்டலாம், அதன் ஒரு அங்கத்தை ‘ஆக்ட்’ பண்ணி காட்டலாம் என்று நிபுணர்கள் சிபாரிசு செய்வதாக பெர்ரிலினர் ஸைட்டுங் குறிப்பிடுகிறது. இத்தகைய ஆலோசனைகளைப் பின்பற்றினால், சில வாரங்களுக்குள்ளாகவே இத்தகைய கனவுகள் அடிக்கடி வராது, அதோடு பயமுறுத்துபவையாகவும் அவை இருக்காது.

டாக்டர்களே போதைக்கு அடிமையானால்?!

பிரிட்டன் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை கனடாவின் த மெடிக்கல் போஸ்ட் இவ்வாறு குறிப்பிடுகிறது: “15 டாக்டர்களில் ஒருவர் மதுபானத்தின் அல்லது போதை மருந்தின் கோரப்பிடியில் சிக்கி அவதிப்படுகிறார்.” இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராட, போதைக்கோ மதுவுக்கோ அடிமையான டாக்டர்களை சலித்தெடுக்க போதை மருந்து சோதனைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்த முன்னணி பிரிட்டன் மருத்துவ அமைப்புகள் விரும்புகின்றன. பிரிட்டனில் உள்ள 9,000-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், பாலின பாகுபாடின்றி போதையின் அல்லது மதுவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் தரும் விஷயம் எதுவென்றால், சில டாக்டர்கள், “தங்களுக்கும் உதவ ஆட்கள் இருக்கிறார்கள் என அறியாததால், எந்த உதவியையும் நாடுவதில்லை” என்று அந்தப் பத்திரிகை சொல்கிறது.

நஞ்சுக்களின் உடும்புப்பிடி

இறைச்சியை சமைத்த பிறகு, பிரிஜ்ஜில் வைக்காமல், இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக வெளியே வைத்திருந்தால், அதை சாப்பிடக்கூடாது என டுப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் அண்ட் நியுட்ரீஷன் லெட்டர் தெரிவிக்கிறது. ஆனால் திரும்பவும் சூடாக்குகையில், அதிலுள்ள தீங்கான பாக்டீரியா செத்துவிடாதா? என நீங்கள் முனகுவது புரிகிறது. “வெளியே வைக்கப்பட்ட இறைச்சியை மீண்டும் சூடாக்குவது அதன் மேற்புறத்தில் வளர்ந்துள்ள பாக்டீரியாவைத்தான் அழிக்கும். ஆனால், குறிப்பிட்ட வகை பாக்டீரியாவின் கெடுதி விளைவிக்கும் நஞ்சுக்களை இவை அடித்து விரட்டுவதில்லை” என நியூடிரீஷன் லெட்டர் குறிப்பிடுகிறது. சாதாரணமாக காணப்படும் ஸ்டபிலோகாக்கஸ் பாக்டீரியாக்களின் நஞ்சுக்கள் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் உணர்ச்சி, குளிர் நடுக்கம், காய்ச்சல், தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தலாம். “உணவுகளை எவ்வளவுதான் சூடாக்கினாலும் இத்தகைய நஞ்சுக்கள் சாகா.”

பிரேஸில் கார்னிவல்

“கார்னிவல் கொண்டாட்டம் ரியோ டி ஜனீரோ நகரை பிரபலமாக்கியிருக்கலாம், ஆனால் பிரேஸிலிய மக்களுக்கு அதில் துளியும் ஆர்வமில்லை” என்று குறிப்பிடுகிறது நான்டோனட். வருடம் ஒருமுறை வரும் இந்த பண்டிகையின் மீது பிரேஸிலிய மக்கள் உயிரையே வைத்திருக்கின்றனர் என்பது உலகம் முழுவதிலுமுள்ள அநேக ஆட்களின் பரவலான கருத்து. மறுபட்சத்தில், பிரேஸிலின் சமூக ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு வேறுபட்ட காட்சியை சித்தரிக்கிறது. 63 சதவீத பிரேஸிலிய மக்கள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குகொள்வதில்லை, 44 சதவீத மக்களுக்கு “அதில் கொஞ்சம்கூட நாட்டமில்லை,” 19 சதவீதத்தினர் “கார்னிவல்லை வெறுத்தனர்” என அது கண்டறிந்தது. இந்த வருட சம்பா பரேட் போட்டி நிகழ்ச்சிகளை முக்கிய தேசிய டிவி நெட்வர்க் ஒலிபரப்பவும் இல்லை என்று ஷார்னல் டோ பிரேஸில் செய்தித்தாள் குறிப்பிட்டது. ஆனாலும், இந்தத் திருவிழாவை கண்டுகழிக்க ஆயிரக்கணக்கான டூரிஸ்ட்டுக்கள் பிரேஸிலுக்குள் திரண்டு வருகின்றனர். அதோடு பிரேஸில், உலகிலேயே அதிகளவு எய்ட்ஸ் பெருகிவரும் நாடுகளில் ஒன்றாக இருப்பதால், கார்னிவலின்போது சுகாதார அமைச்சகம் லட்சக்கணக்கான காண்டோம்களை விநியோகித்தது.

“ராசியான லாட்டரி மரம்”

சூதாட்ட கம்பெனியே, “ராசியான லாட்டரி மரத்தை” எரித்துப்போட முயன்றதாக தாய்லாந்திலுள்ள பாங்காக் அருகே வாழும் கிராம மக்கள் கருதுகின்றனர்; அதனால் கொதித்தெழுந்த மக்கள் அந்தக் கம்பெனிக்குப் பொல்லாப்பு செய்யப்போவதாக மிரட்டியிருக்கின்றனர் என சௌத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவிக்கிறது. லாட்டரி அடிப்பதற்கு உதவிய இந்த “ராசியான மரம்” தேசிய அளவில் புகழ்பெற்றிருந்தது; எனவே இந்த மரத்தை ஒருவர் தீக்கொளுத்தி விட்டார் என்பதை அறிய வந்தபோது உள்ளூர் கிராமவாசிகள் மிகவும் ஆத்திரமடைந்தனர். டாங்மாலி என்ற பெண் சொல்கிறார்: “அத நினைச்சா எனக்கு கெட்டகோபம் வருது, இந்த மரத்தால எனக்கே நிறைய தடவ லாட்டரி விழுந்திருக்கு. அத எப்படி தெரிஞ்சுக்கறதுனு சொல்லிக் கொடுத்தும்கூட எக்கச்சக்கமா பணம் சம்பாதிச்சிருக்கிறேன்.” ஆனால், அந்த மரத்தை எரித்ததிலிருந்து அதிலிருக்கும் ஆவி கோபமடைந்திருக்கிறது என்பதாக சொல்லப்படுகிறது. அதனால் லாட்டரியில் ஜெயிப்பதற்கான உதவியை அந்த ஆவி இப்போது கொடுப்பதில்லை என்றும் கிராமவாசிகள் கூறுகின்றனர். லாட்டரியில் ஜெயிப்பதற்கு மரத்தில் குடிகொண்டுள்ள ஆவி உதவும்படி அதன் கருணைக் கண்ணை திறக்க செய்வதற்காக புத்த துறவிகளை அழைத்துவர கிராமவாசிகள் திட்டம் போட்டிருக்கிறார்கள் என அறிக்கை காட்டியது.

அதிக டிவி, குறைந்த படிப்பு

கிரீஸில் 35 லட்சம் வீடுகளை 3.8 மில்லியன் டிவி செட்டுகள் ஆக்கிரமித்திருக்கின்றன; மூன்று வீட்டிற்கு ஒன்று என்ற வீதத்தில் வீடியோ கேஸட் ரெக்கார்டரும் இருக்கிறது என்று கிரீஸின் ஆடியோவிஷுவல் மீடியா இன்ஸ்டிட்யூட் நடத்திய சர்வே காட்டுகிறது. 1996-ல் கிரேக்க நாட்டினர் தினமும் சராசரியாக நான்கு மணிநேரம் டிவி பார்த்தனர்; ஆனால் 1990-ம் ஆண்டிலோ இரண்டரை மணிநேரத்துக்கும் குறைவாகவே டிவி பார்த்தனர் என ஆதன்ஸ் செய்தித்தாள் டா விமா குறிப்பிட்டது. வாசிக்கும் பழக்கம் அடியோடு சரிந்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சராசரி கிரேக்க நாட்டவர் 1989-ல் 42.2 செய்தித்தாள்களை வாசித்தனர்; ஆனால் 1995-ல் அது 28.3 ஆக குறைந்துவிட்டது என அந்த ஆய்வு காட்டியது. அதேவிதமாக, பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கமும் அதே காலப்பகுதியில் 10 சதவீதம் குறைந்துவிட்டது.

பசியறியா முதியோர்

“வயதானவர்கள் போதுமான அளவு சாப்பிடுவதில்லை; எனவே வியாதி வருவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு அதிகம்” என ஜெர்மனி, ஃபிராங்க்ஃபர்ட்டின் நாசொஸி நாயி பிரெஸி அறிவிக்கிறது. பத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட 2,500-க்கும் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பேட்டி கண்ட பிறகே இந்த முடிவுக்கு வந்தது. வயதானவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது என அநேகர் நினைக்கின்றனர்; ஆனால் குறைவான அளவு கலோரிகள் அவர்களுடைய எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது. வயதானவர்களின் சாப்பாடும் அந்தளவுக்கு சத்துள்ளதாக இல்லை. அதிக சாப்பாட்டை சீக்கிரம் சமைத்து வைத்துக்கொண்டு அநேக நாட்களுக்குச் சாப்பிடுவதே இதற்கு காரணம். அதோடு, அநேகர், பிரெஷ்ஷான பழங்களையும் காய்கறிகளையும், முக்கியமாக அவை கிடைக்காத சீசன்களில், கொஞ்சம்தான் சாப்பிடுகின்றனர். “நல்லா சாப்பிடுங்க, டைமுக்கு சாப்பிடுங்க” என்று வயதான நோயாளிகளுக்கு டாக்டர்கள் நினைவுபடுத்த வேண்டுமென அந்த ஆய்வு முடிவாகச் சொன்னது. வயதானவர்களை உடற்பயிற்சி செய்வதற்கும் பழக்க வேண்டும், ஏனென்றால், உடம்பை வளைப்பது, நன்கு பசியை தூண்டும் என்றும் அது சிபாரிசு செய்தது.

பைபிள் இப்போது 2,197 மொழிகளில்

“கடந்த ஆண்டு கூடுதலாக 30 மொழிகளில் பைபிளின் சில பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; இதனால் பைபிள் கிடைக்கும் மொழிகளின் மொத்த எண்ணிக்கை 2,197 ஆக உயர்ந்துள்ளது” என ஸ்விட்ஸர்லாந்து, ஜெனீவாவின் இஎன்ஜ புல்லட்டின் தெரிவிக்கிறது. எஸ்பெரன்டோ போன்ற உருவாக்கப்பட்ட மொழிகள் உட்பட, இன்று முழுமையாக பைபிள் 363 மொழிகளில் கிடைக்கிறது. பைபிள் புத்தகங்களில் ஒன்றாவது மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அந்த மொழியை யுனைடெட் பைபிள் சொஸைட்டீஸ் (UBS) தன் பட்டியலில் வைத்திருக்கிறது. “கடவுளுடைய வார்த்தையை மக்களின் தாய்மொழியில் கிடைக்கச் செய்வதே” இலட்சியம் என UBS-ன் ஜெனரல் செகரட்டரி பர்கஸ் மேக்டெனால்ட் தெரிவித்தார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்