உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 10/8 பக். 26-27
  • பேரழிவின் மறுபக்கம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பேரழிவின் மறுபக்கம்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஜனங்கள் விரைந்தனர்
  • சில பலன்கள்
  • புயற்காற்று ஆண்ட்ரு அழிக்க முடியாத காரியங்கள்
    விழித்தெழு!—1993
  • தயவான செயல்கள் கில்பர்ட் சூறாவளியின் வன்மையான அடிகளை மென்மையாக்குகின்றன
    விழித்தெழு!—1990
  • மெக்ஸிகோவில் பேரழிவுகள் மத்தியில் கிறிஸ்தவ அன்பு
    விழித்தெழு!—1996
  • எச்சரிக்கைக்கு கீழ்ப்படிந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்
    விழித்தெழு!—2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 10/8 பக். 26-27

பேரழிவின் மறுபக்கம்

மெக்ஸிகோவிலிருந்து விழித்தெழு! நிருபர்

யெகோவாவின் சாட்சிகளான கோடோஃப்ரேடோ, கிஸ்ஸலா தம்பதியினரும் அவர்களது சின்னஞ்சிறு பிள்ளைகளும் பிரஸ்போர்ட் ஷீட்டுகள் வேயப்பட்டு ஆஸ்ஃபால்ட் பூசப்பட்ட வீட்டிற்குள் இருந்தனர். அப்போதுதான் அந்தக் காற்று சுழன்று சுழன்று வீசியது. அது பாலின் சூறாவளிக் காற்று. அது மெக்ஸிகோவைச் சேர்ந்த வஹாக்கா கடற்கரையோரத்தைத் தாக்கியது. ஆக, அந்த ஷீட்டுகள் ஒவ்வொன்றாகப் பறந்தன. முடிவில் அந்த வீட்டின் பிரேம்களில் ஒரு பகுதி மட்டுமே மீந்திருந்ததால் அந்தக் குடும்பம் உறைவிடம் இல்லாமல் தவித்தது.

தங்கள் எட்டு மாதக் குழந்தையை கிஸ்ஸலா தூக்கிவைத்துக்கொண்டு, மற்ற மூன்று பிள்ளைகளை தானும் கோடோஃப்ரேடோவுமாகச் சேர்ந்து பிடித்துக்கொண்டவாறே, இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக அந்தப் பலத்தக் காற்றை எதிர்த்துப் போராடினர். சில சமயங்களில் அந்தச் சூறாவளி அவர்களைக் கீழே தள்ளிவிட்டு ஒரே உருட்டாக உருட்டியெடுத்தது. முடிவில், எல்லாரும் ஒருவழியாக தப்பினர்.

அகபுல்கோ நகரில் வசித்து வந்த நெல்லி ஒரு யெகோவாவின் சாட்சி. இவர் தன் வீட்டுக்குள் தண்ணீர் புரண்டுவருவதைக் கண்டார். எனவே தன் குடும்பத்தினரை உசுப்பினார். தண்ணீர் மட்டம் எதிர்பாராத வேகத்தில் உயர்ந்தது. தண்ணீர் வேகமாகப் பாய்ந்து நெல்லியை நீரோட்டத்தில் இழுத்து விட்டது, நெல்லியின் மகளோ அவரை வேகமாய் வெளியே இழுத்துவிட்டாள். அவர்கள் அனைவரும் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு தவியாய் தவித்துக்கொண்டிருக்கையில் தண்ணீர் மட்டம் உயர்ந்து அவர்களின் கழுத்தளவுக்கு ஏறிவிட்டது. அப்போது தங்கள் உயிரைக் கையில் பிடித்தவர்களாய் செய்வதறியாது திகைத்தனர். அப்போது ஓர் ஆண் குரல் அவர்களை அழைத்தது. அது அவர்களது பக்கத்து வீட்டுக்காரரது குரல்; அவர்கள் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டுக்குள் செல்வதற்கு அவர் உதவிக்கரம் நீட்டினார். அங்கிருந்து அவர்கள் தங்கள் வீட்டைப் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில், ஒரு கார் வேகமாக மோதியதால், சில நிமிடத்துக்கு முன்பு அவர்கள் இருந்த அந்த வீடு, சுக்குநூறாகி அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

அக்டோபர் 8, 1997-ல், புதன்கிழமை பிற்பகலில் பாலின் சூறாவளி வஹாக்கா மாகாண கடற்கரையோரப் பகுதியின்மீது மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேல் பலமாய் வீசியது. பிறகு அக்டோபர் 9, வியாழக்கிழமை, விடியற்காலையில் குவெர்ரரோ மாகாணத்தை, அகபுல்கோ நகரை பெருமளவில் நாசமாக்கியது. பத்து மீட்டர் உயர அலைகள் சுழன்று சுழன்று எழும்பியதால் வெள்ளம் புரண்டுவந்து வீடுகளையும், கார்களையும், மிருகங்களையும், மக்களையும் ஒரேயடியாக அடித்துச் சென்றது. அந்தப் புயல்காற்று வீசி ஓய்ந்தபின், முன்பு தெருக்கள் இருந்த பகுதிகளிலெல்லாம் 10 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான நீர் நிரம்பிய வாய்க்கால்கள் ஏற்பட்டுவிட்டன. த நியூஸ் என்ற செய்தித்தாள் கூறுவதன்படி, இரண்டு மாகாணங்களையும் சேர்த்து, குறைந்தபட்சம் 400 பேர் உயிரிழந்தனர் எனவும் 20,000 முதல் 25,000 பேர் வீடுகளை இழந்தனர் எனவும் மெக்ஸிகோவைச் சேர்ந்த செஞ்சிலுவை சங்கம் கணித்தது. இச்சமயத்திலும், பேரழிவு ஒருபுறமிருக்க, கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டும் உள்ளத்தை உருக்கும் செயல்களையும் மறுபக்கத்தில் மக்கள் கண்டனர்.

யெகோவாவின் ஜனங்கள் விரைந்தனர்

பாலின் சூறாவளியைப் பற்றிய செய்தி கிடைத்தவுடன், மெக்ஸிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துக்கு டெலிபோன்கள் வந்தவண்ணம் இருந்தன. அதாவது சுற்றியிருந்த யெகோவாவின் சாட்சிகள், தாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு போன் செய்தனர். வெளிநாடுகளிலிருந்தும் உதவிகள் வந்து குவிந்தன. நிவாரணக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. டன் கணக்கில் உணவும், துணிமணிகளும் பிற பொருட்களும் விநியோகிக்கப்பட்டன.

மேலுமாக, கட்டுமானப் பொருட்கள் விலைக்கு வாங்கப்பட்டன. சேதமடைந்திருந்த அல்லது தரைமட்டமாக்கப்பட்டிருந்த 360 வீடுகளையும் பல ராஜ்ய மன்றங்களையும் ரிப்பேர் செய்யும் வேலை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நன்கொடை அளிப்பது, பொருட்களைப் பிரிப்பது, பேக் செய்வது, அவற்றை வாகனங்களில் அனுப்புவது, நிவாரணப் பொருட்களை வழங்குவது, சேதமான பாகங்களை ரிப்பேர் செய்வது என பம்பரமாய் சுழன்றனர்.

சாட்சிகளின் நடவடிக்கையைப் பார்த்து வாயில் கை வைத்தவர்களாய், ஸ்டோர்கீப்பர்கள் சிலர் உணவையும், கட்டுமானப் பொருட்களையும் பிற பொருட்களையும் நன்கொடையாக வழங்கினர். மற்றவர்களோ குறைந்த விலையில் பொருட்களை விற்றனர். பாதிக்கப்பட்ட சாட்சிகள் தங்கள் பேரில் காட்டப்பட்ட அன்பால் உள்ளம் நெகிழ்ந்தனர். குறிப்பாக, அனுப்பப்பட்ட பொருட்களோடு உற்சாகப்படுத்தும் கடிதங்களை வாசித்தபோது நெகிழ்ந்துபோயினர்.

விசனகரமாக, ஹோஸே ஃபௌஸ்டினோ என்ற 18 வயது சாட்சியும், சாட்சிகளுடன் பைபிளை படித்துக்கொண்டிருந்த மூன்று பேரும் இந்தச் சூறாவளியால் கொல்லப்பட்டனர். அவர்களுடைய உறவினர்கள், குறிப்பாக ஹோஸேயின் பெற்றோர் தங்கள் சார்பில் ஏறெடுக்கப்பட்ட ஜெபங்களுக்காகவும் சபையாரால் அளிக்கப்பட்ட உற்சாக வார்த்தைகளுக்காகவும் நன்றியோடு பாராட்டினர்.

சில பலன்கள்

பாலின் சூறாவளிக்காற்று வீசி ஓய்ந்தபிறகு, அநேகர் தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தப்படும்படியாக கேட்டுக்கொண்டனர். அவர்களில் சாட்சிகளுடைய உறவினர்களும், சாட்சிகளது நம்பிக்கையின் செய்தியைக் கேட்க மனமுள்ள அயலகத்தார்கள் அநேகரும் அடங்குவர். மேலும், உணவை வழங்கும் பொது நிவாரணப் பணியிலும் சாட்சிகள் பங்கேற்றனர். உதாரணத்திற்கு, ஒருவருடைய கம்பெனி உணவை நன்கொடையாக அளித்தது. அந்த உணவுகளை விநியோகிக்க யெகோவாவின் சாட்சிகளை அவர் தெரிவு செய்ததற்குக் காரணம் என்ன என்று சாட்சி ஒருவர், ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: “நீங்கள் ஒழுங்கமைக்கப்பட்டவர்களாயும் நேர்மையானவர்களாயும் இருக்கிறீர்கள். அத்துடன், இந்த ஏரியா முழுவதும் உங்களுக்கு அத்துப்படி. ஆகவே யார் யாருக்கு உண்மையிலேயே உதவி தேவை என்றும் உங்களுக்குத் தெரியுமல்லவா, அதனால்தான் சாட்சிகளைத் தெரிவு செய்திருக்கிறேன்.”

முடிவு நெருங்கி வருவதாலும், உலகமுழுவதிலும் பேரழிவுகள் அதிகமதிகமாய் ஏற்படுவதாலும், கஷ்டங்களின் மத்தியிலும் பைபிள் நியமங்களைச் செயலில் காட்டுவது எப்பொழுதுமே உற்சாகமளிக்கிறது.

[பக்கம் 26-ன் படம்]

கட்டிடம் புதுப்பிக்கும் வேலையில் இளைஞர் உதவுகின்றனர்

[பக்கம் 27-ன் படம்]

பாலின் சூறாவளி ஓய்ந்தபிறகு வஹாக்காவில் ஒரு புதிய ராஜ்ய மன்றத்தை சாட்சிகள் கட்டுதல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்