தயவான செயல்கள் கில்பர்ட் சூறாவளியின் வன்மையான அடிகளை மென்மையாக்குகின்றன
செப்டம்பர் 14, 1988 விடியற் காலை, மெக்ஸிக்கோவின் கரீபிய கரையோரப் பகுதியில் கில்பர்ட் சூறாவளி வீசியது. குவின்டானா ரூ மற்றும் யுக்காட்டான் மாநிலங்களை அது கடுமையாகத் தாக்கியது. 15 மற்றும் 16 தேதிகளில் வட மாநிலங்களாகிய டமாலிப்பாஸும் நூவோ லியானும் அதன் தாக்குதலுக்குள் வந்தன. தான் சென்ற பாதையெல்லாம், கில்பர்ட் பேரழிவின் அடிச்சுவடுகளை விட்டுச் சென்றது. பலத்த காற்றும் மழையும் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தின. தென் கிழக்குப் பிராந்தியத்தில், 50,000 குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். வடக்கே, 30,000 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். சூறாவளியின் 1,000 மைல் பாதையினூடே ஏறக்குறைய 250 மக்கள் மாண்டனர்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளைக்காரியாலயம் உடனடியாகச் செயல்பட ஆரம்பித்தது. சனிக்கிழமை 17-ம் தேதிக்கெல்லாம் உணவு, உடை மற்றும் கூரை போடுவதற்கான சாதனங்கள் ஏற்றிய முதல் லாரி யுக்காட்டான் தீபகற்பத்தை நோக்கிப் புறப்பட்டது. கிளைக்காரியாலயத்திலிருந்து இரண்டு பிரதிநிதிகள் அங்குள்ள நிலைமையைப் பார்வையிடுவதற்கும், உதவி பொருட்களை விநியோகிப்பதற்குக் குழுக்களை நியமிக்கவும் உடன் சென்றனர். விரைவாக, கூடுதலான லாரிகளில் உணவு மற்றும் கூரைப் பொருட்கள் அனுப்பப்பட்டன. மிகவும் போற்றப்பட்ட உதவிகளைக் கொடுப்பதற்காக அரசாங்க அதிகாரிகளும் உடனே செயல்பட்டனர்.
அந்த இடத்திற்கு முதலில் வந்த உதவி பொருட்கள் மெக்ஸிக்கோ நகர யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து வந்த பொருட்கள். இது சாட்சிகளுக்குக் கூடுதல் ஆறுதலும் மகிழ்ச்சியும் கொடுத்தது. சாட்சிகள் அனுப்பிய கூரைப் பொருட்களைத்தவிர உள்ளூரில் வேறு கிடைப்பதாயில்லை, ஒரு மாதம் சென்றாலும் ஒன்றும் கிடைப்பதற்கில்லை. சகோதரர்களின் வீடுகள் எவ்வளவு வேகமாகக் கட்டப்பட்டன என்பதைப் பார்ப்பது அதிக கிளர்ச்சியூட்டுவதாயிருந்தது. காலனி யுக்காட்டானிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய வணக்க இடம்தானே முதலில் கூரையைப் பெற்றது. மெரிடாவில் சாட்சிகளின் வட்டார மற்றும் மாவட்ட மாநாடுகளை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டிடம் தரை மட்டமானது. ஒரு புதிய அசெம்பிளி மன்றத்தைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன.
நூவோ லியான் மற்றும் டமாலிப்பாஸ் மாநிலங்களில் சேதம் அதிகமாக இருந்தது. மான்டெரியில் நியமிக்கப்பட்ட கமிட்டியின் மூலம் உள்ளூர் சாட்சிகள் உடனடியான நிவாரண உதவிகளைப் பெற்றனர். அடிப்படையாகத் தேவைப்பட்ட படுக்கை விரிப்புகள், மேசைகள், நாற்காலிகள், அடுப்புகள், மற்றும் சமையல் பாத்திரங்கள் அளிக்கப்பட்டன. மான்டெரியில் மட்டும் யெகோவாவின் சாட்சிகளுடைய 32 குடும்பங்கள் தங்களுடைய வீடுகள் உட்பட தங்களுக்கு இருந்தவற்றையெல்லாம் இழந்தனர். பூஜியத்தை எட்டிடும் பருவக்காலம் நெருங்கிக்கொண்டிருக்க, விரைவாக ஏதாவது செய்யப்படவேண்டும்.
இரண்டு சாட்சிகள், ஒருவர் கட்டிடக் கலைஞர், மெக்ஸிக்கோ நகரிலிருந்து விமானத்தில் சென்றனர். அங்குள்ள மூப்பர்களையும் பயணக் கண்காணிகளையும் அவர்கள் சந்தித்தார்கள். 32 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் அளிப்பதற்கான கட்டிட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இது நிலமும் தேவையான கட்டிடங்களுக்கான பொருட்களை செய்வதற்கு உபகரணங்களும் வாங்குவதை உட்படுத்தியது. சாட்சிகளுக்கு உடனடியாக உணவு, உடை மற்றும் படுக்கைகள் கொடுக்கப்பட்ட போது, தேவையிலிருந்த தங்கள் சகோதரருக்கு மற்ற சாட்சிகள் காண்பித்த அன்பும் அவர்களுடைய தாராள மனப்பான்மையும் அயலகத்தாரை அதிகமாகக் கவர்ந்தது. அந்த 32 குடும்பங்களும் இரண்டு படுக்கை அறை கொண்ட அவர்களுடைய புதிய வீடுகளுக்குச் செல்வதை இவர்கள் பார்க்கும்பொழுது எவ்வளவாகக் கவர்ந்திழுக்கப்படுவார்கள்!
யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய சகோதரத்துவத்துக்கு இது ஒரு மாதிரி. தங்களுடைய சகோதரர்களுக்கு உதவிட மெக்ஸிக்கோவிலுள்ள சாட்சிகள் மட்டும் பொருள், உழைப்பு மற்றும் பண உதவி அளிக்கவில்லை, உலகத்தின் மற்ற பகுதிகளிலுள்ளவர்களுங்கூட அப்படிச் செய்தனர். தொலைக்காட்சி செய்தி கில்பர்ட் சூறாவளி ஏற்படுத்திய சேதத்தைப் பற்றி குறிப்பிட்ட உடனேயே, நியு யார்க்கிலுள்ள புரூக்ளினில் அமைந்த யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்திற்கு நன்கொடைகள் வர ஆரம்பித்துவிட்டன. இதற்கு சில உதாரணம்:
“நம்முடைய சகோதரரில் யாரெல்லாம் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்தச் சிறிய நன்கொடைகளைப் பயன்படுத்துங்கள். எனக்கு இன்னும் அதிகம் அனுப்ப ஆசைதான், ஆனால் இந்த வாரம் என்னுடைய மனைவியின் காரில் என்ஜினைப் பழுதுபார்க்க வேண்டியதாயிருக்கிறது. என்னுடைய அடுத்த சம்பளத்தை நான் பெற்ற உடனே கூடுதல் பணம் அனுப்புகிறேன்.”
“சூறாவளி பாதித்த பகுதியில் வாழும் நம்முடைய சகோதரருக்கு உதவியாக இந்த நன்கொடையை அனுப்புகிறோம். எங்களுடைய அன்பையும் அக்கறையையும் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். பேதுரு சொன்னது போல்: “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்.”—1 பேதுரு 4:8.
“நிவாரண பணிகளுக்கு ஒரு சிறிய நன்கொடையாக 17,000 ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள். அது இன்னும் அதிகமாக இருந்தால் நன்றாயிருக்கும் என்று உணருகிறேன், ஆனால் யெகோவா எனக்கு அளித்திருப்பவற்றில் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்.”
“340 ரூபாய் அடங்கிய இந்தப் பண அஞ்சலைப் பெற்றுக்கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் எல்லாப் பணமுமே எனக்குத் தேவையாயிருந்தது, ஆனால் நம்முடைய அன்பான சகோதரரில் சிலர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள் என்பதை நான் உணர்ந்த போது என்னால் உதவி செய்யாமல் இருக்க முடியவில்லை.”
“425 ரூபாய்க்கு ஒரு காசோலை அனுப்புகிறேன். நிவாரண நிதிக்கு இதை நன்கொடையாகக் கொடுக்க விரும்புகிறோம். இது சிறிய ஒரு வெகுமதிதான், என்றாலும், இந்தப் பகுதியிலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக எங்கள் முழு இருதயமும் வாஞ்சையாயிருக்கிறது.”
இந்தச் சர்வலோகம் முழுவதற்கும் சொந்தகாரராக இருக்கும் யெகோவாவுக்குக் கடன்கொடுப்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க முடிகிறதா? இருந்தாலும், நன்கொடையளிக்கும் இப்படிப்பட்டவர்கள் அதைத்தான் செய்கிறார்கள், ஏனென்றால், நீதிமொழிகள் 19:17, (தி.மொ.) உரைப்பதாவது: “ஏழைக்கு இரங்குவோன் யெகோவாவுக்குக் கடன் கொடுப்பவன், அவன் செய்ததற்கு அவர் பிரதிபலன் அளிப்பார்.” (g89 3/22)