உலகை கவனித்தல்
“உலகம் தீப்பிடித்த வருடம்”
“1997-ஆம் வருடம்தான் இந்த உலகம் தீப்பிடித்த வருடம் என்று அனைவரும் நினைவுகூருவார்கள்” என்பதாக உலகளாவிய இயற்கை காடுகள் நிதி அமைப்பின் தலைவர் ஸான்-பால் ஸான்ரனோ குறிப்பிடுகிறார். அன்டார்க்டிகாவைத் தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் குபுகுபுவென தீப்பற்றி எரிந்தது. சுவிட்சர்லாந்தின் பரப்பளவிற்கு சமமான வளம் கொழிக்கும் காட்டுப்பகுதிகள் இந்தோனேசியா, பிரேசில் போன்ற நாடுகளில் தீக்கிரையானதை ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். விவசாயம் செய்வதற்காக காட்டு நிலத்தை விளைநிலமாக மாற்றியமைத்தது வறட்சிக்கு வழிநடத்தியதாகவும், எல் நினோவால் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த வறட்சிக்குக் காரணம் எனவும் கருதுகின்றனர். மக்கிப்போன செடிசெத்தைகளை எரிப்பதால் காற்றில் கார்பன்-டை-ஆக்ஸைடு அதிக அளவில் கலந்துவிடுகிறது; அதனால் காற்று மாசுபடுத்தப்பட்டு உலகளாவிய வெப்பம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதாக தி இன்டிபென்டன்ட் என்ற லண்டனின் செய்தித்தாள் அறிவிக்கிறது. “தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அதிகமாகி வரும் காட்டுத்தீயே காரணமாக இருக்கிறது; அதே சமயத்தில் இந்தக் காட்டுத்தீயே அப்படிப்பட்ட தட்பவெப்பநிலை மாற்றங்களுக்கு வித்திடுகிறது; இவ்வாறு அவிழ்க்க முடியாமல் பின்னிப்பிணைந்திருக்கும் அழிவின் முடிச்சுகளை நாமே போட்டுவிடுகிறோம்” என்பதாக ஸான்ரனோ எச்சரிக்கிறார்.
கால்சியம் பற்றாக்குறை
ஜெர்மன் செய்தி மடல் கெஸுன்தைட் இன் வார்ட் உன்ட் பிளிட் (வார்த்தையிலும் உருவத்திலும் ஆரோக்கியம்) பின்வருமாறு எச்சரிக்கிறது: “இளைஞர்களின் எலும்பு வளர்ச்சியடைவதால் அவர்களுக்கு மற்றவர்களைவிட அதிகமான கால்சியம் சத்து தேவை.” அவர்கள் தினமும் 1,200 மில்லிகிராம் கால்சியம் உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது; ஜெர்மனியில் உள்ள 15 முதல் 19 வயதிற்குட்பட்ட இளம் பெண்களில் 56 சதவீதத்தினரும் வாலிபர்களில் 75 சதவீதத்தினரும் மட்டுமே இந்த அளவின்படி உட்கொள்கின்றனர். யூரோப்பியன் ஃபௌன்டேஷன் ஃபார் ஆஸ்டியோபோரொஸிஸ் அமைப்பைச் சேர்ந்த மேரி ஃபிரேஸர், “ஐரோப்பா முழுவதிலுமுள்ள இளம் பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். இந்தப் பற்றாக்குறை இருந்துவருவதை வெகுகாலமாய் கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும், இந்தப் பற்றாக்குறை பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோஸிஸ் ஏற்படுவதற்கு அடித்தளம் அமைக்கலாம். “ச்சீஸ், பால், யோகர்ட், எள், அமராந்த் விதைகள், சோயாபீன்ஸ், பச்சை காய்கறி வகைகள், கொட்டைகள், மீன் ஆகிய உணவுப் பொருட்களில் கால்சியம் சத்து மிகுந்துள்ளது” என்பதாக அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
எங்கும் புழங்கும் டாலர்
யு.எஸ். நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் இவ்விதம் அறிவிக்கிறது: “யு.எஸ் பணம் அமெரிக்கா நாட்டுக்கு உள்ளே புழங்குவதைவிட வெளியேதான் அதிகமாய் புழங்குகிறது என்பது அநேக அமெரிக்கர்களுக்குத் தெரியாது. ஜனங்களுடைய பர்ஸுகளிலும், கேஷ் ரெஜிஸ்டர்களிலும், வங்கிப் பெட்டிகளிலும், மெத்தைகளிலும் புதைந்திருக்கும் 450 பில்லியன் டாலர் பணம் மற்றும் நாணயங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அதாவது 300 பில்லியன் டாலர் வெளிநாடுகளில்தான் புழக்கத்தில் இருக்கிறது.” அந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் 15 பில்லியனிலிருந்து 20 பில்லியன் வரை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் பணம் பொதுவாக 20 டாலர் நோட்டுகளாக இருக்கும்போது அதற்கு வெளியே புழக்கத்தில் இருக்கும் பணம் பொதுவாக 100 டாலர் நோட்டுகளாகவே இருக்கின்றன; இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அந்தப் பணம் சாதாரணமாக தினந்தோறும் பொருட்களை வாங்குவதற்காக பயன்படுவதற்கு பதில் சேமிப்பிற்காகவும் வர்த்தகரீதியில் கொடுக்கல் வாங்கல்களுக்காகவுமே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பணவீக்கம் அதிகமாக இருக்கும் நாடுகளிலும், மக்கள் வங்கிகளை நம்பாத நாடுகளிலும் இவ்வாறுதான் பணம் புழங்குகிறது. சென்ற வருடம் அமெரிக்காவில் அச்சடித்த 100 டாலர் நோட்டுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் உடனடியாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது. அமெரிக்க அரசைப் பொருத்தவரை, வெளிநாடுகளில் புழக்கத்தில் இருக்கும் இந்தப் பெரிய தொகையை, அமெரிக்க அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட வட்டி இல்லாத கடனுக்கு ஒப்பிடலாம். இதற்கு பிரதிபலனாக அரசாங்கம் விற்பனைப் பொருட்களையோ அல்லது சேவையையோ தரவேண்டிய அவசியமில்லை; இதனால் அரசாங்கத்திற்கு பல பில்லியன் டாலர் மிச்சமாகிறது.
திருடுவதற்கு லைஸென்ஸா?
“பிரேஸிலைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தலைவர்கள் ஏழைகளுக்கும், பட்டினியால் வாடுவோருக்கும் ஆதரவாய் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர்; வயிற்றுக்காக திருடுபவர்களை ஆதரிக்கின்றனர்” என்பதாக இஎன்ஐ புல்லட்டின் அறிவிக்கிறது. பிரேஸிலின் வடகிழக்கே ஏற்பட்ட கடும் வறட்சியால் சூப்பர்மார்கெட்டுகளிலும் கிடங்குகளிலும் திருடுவதை அவர்கள் அங்கீகரித்தனர். “யாராவது வயிற்றுப்பசியை போக்கிக்கொள்வதற்காக உணவுப்பொருட்களை எங்கிருந்தாவது எடுத்தால் அதை சர்ச் கண்டனம் செய்யாது” என பெலோ ஹரிஸான்டேயைச் சேர்ந்த தலைமைக்குரு கார்டினல் சேராஃபீங் ஃபெர்னான்டஸ் டி ஆராவூஸு கூறினார். “நியோ-லிபரலிஸத்தை அதாவது தனிச்சலுகை பெற்றவர்களின் கையில் செல்வங்கள் குவிந்து விடுவதால் ஏழைகள் பரம ஏழைகளாவதை எதிர்த்து போராடுவோம். நகரவாசிகளும் கிராமவாசிகளும் இதைப் புரிந்துகொள்ளும் காலம் வந்துவிட்டது” என கார்டினல் பவுலு இவாரிஸ்டு ஆர்ன்ஸ் குறிப்பிட்டார் என்பதாக சொல்லப்படுகிறது.
கடன் சுமை
வான்கூவர் சன் செய்தித்தாள் பின்வருமாறு அறிவிக்கிறது: “ஒரு சாதாரண கனடா குடிமகன் பரிசுப்பொருட்களை வாங்குவதில் சராசரியாக 1,236 டாலரை செலவிடுகிறார். அதில் ஏராளமான தொகை கிரெடிட் கார்ட் மூலமே செலவிடப்பட்டது.” கிறிஸ்மஸ் சமயத்தில் எக்கச்சக்கமாக செலவிட வேண்டும் என்ற மனப்புழுக்கம் இருக்கிறது என்பதாக நிதி ஆலோசனையாளர்கள் சொல்கின்றனர்; அச்சமயம் கையில் பணம் குறைவாக இருந்தால் கிரெடிட் கார்ட் மூலம் செலவழிப்பது மிக சுலபம். பொருட்களை வாங்குபவர்கள் தங்களுக்கு நிரந்தரமான வேலை இருக்கிறது என்ற “தைரியத்தில்தான் கடனை அடைப்பதற்கு பதில் அதிகமதிகமாக கடன் வாங்குகின்றனர்” என்பதாக ஒரு ஆலோசகர் நம்புகிறார். கிரடிட் கார்ட் கடனை கட்டாமல் இருந்ததால், 1997-ஆம் வருட கடைசியில் கனடா நாட்டவர்கள் 20.42 பில்லியன் டாலர் கடன் என்ற புதிய ரெக்கார்டை ஏற்படுத்தினர்—1991-ஆம் ஆண்டின் கணக்கோடு ஒப்பிடும்போது இது இரண்டு மடங்காகும். நிபுணர்களுடைய கணிப்பின்படி சாதாரணமாக விடுமுறை சமயத்தில் ஷாப்பிங் போகும் ஒரு நபர் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்டி முடிக்க ஆறு மாதமாகிறது; அவர்களில் சிலர் இன்னும் அந்தக் கடனை அடைத்திருக்கமாட்டார்கள்; அதற்குள் அடுத்த கிறிஸ்மஸ் சீசன் வந்துவிடுவதால் ‘புயல் வேக ஷாப்பிங்’ ஆரம்பித்துவிடுவர்.
மரணத்தோடு விளையாட்டு
“மரணத்தோடு பிள்ளைகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டுமென்றால் பெற்றோரும் ஆசிரியர்களும்தான் ஒரு முக்கிய பங்காற்ற வேண்டும்; சினிமாவிலும் டிவியிலும் காட்டப்படும் வீரதீர சாகஸங்களை குறைக்க முயல வேண்டும்” என்பதாக ஸூர்னர் டூ பிரேஸில் என்ற செய்தித்தாள் விவரிக்கிறது. ரியோ டி ஜனீரோவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, பிள்ளைகளில் 13 வயதிற்குக் குறைவானவர்களே 10 சதவீத குற்றச்செயலில் ஈடுபடுகின்றனர். “இந்தப் பிள்ளைகள் துப்பாக்கி எடுத்து செல்கின்றனர்; சக மாணவர்களை தாக்கி, ஊனமாக்கி அல்லது கொன்றேவிடுகின்றனர்; தங்களைவிட வயதில் சிறியவர்களை பாலின துர்ப்பிரயோகமும் செய்துவிடுகின்றனர்” என்பதாக அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. ஆல்ஃபிரடூ காஸ்ட்ரூ நெட்டூ என்ற மனநல மருத்துவர் சொல்கிறார்: “இப்போது இருக்கும் நம்முடைய கலாச்சாரம், போட்டியை உற்சாகப்படுத்துகிறது; தனக்குத் தேவையான ஒன்றைப் பெற வேண்டுமானால் கொலையும் செய்யலாம் என்பதாக திரைப்படங்களில் காட்டுகிறது; இதனால் இந்தப் பிள்ளைகளின் மனதில் குழப்பம் அதிகரித்துவிடுகிறது.” துப்பாக்கிகளுக்கு பதில் கல்வி புகட்டும் விளையாட்டு சாதனங்களை பரிந்துரைக்கிறார் கல்வியாளர் ஸுஸெஃபா பெக். “எல்லாரையும் கொன்று குவிக்கும் ஒரு ஹீரோவின் இமேஜ் முட்டாள்தனமானது, நிஜமானது அல்ல, போராயுதங்கள் மதிப்பின் சின்னங்களோ பலத்தின் சின்னங்களோ அல்ல, அவை மக்களைக் கொல்லும் ஆயுதங்களே” என்று பிள்ளைக்கு எடுத்துக்காட்டுவது மிக முக்கியம்.
கல்லறைக்குப் போவதிலும் ரெக்கார்டு
“இரண்டாம் உலக யுத்தத்திலும் வியட்நாம் போரிலும் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகமான அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதால் மரிக்கின்றனர்” என்று யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பெர்க்லே வெல்னஸ் லெட்டர் குறிப்பிடுகிறது. “ஒவ்வொரு நாளும் 1,200-க்கும் அதிகமான அமெரிக்கர்கள் புகைபிடித்தல் தொடர்பான நோய்களால் இறந்துவிடுகின்றனர்; இது, மூன்று அல்லது நான்கு ஜம்போ ஜெட் விமானங்கள் நொறுங்கி விழுந்ததால் உயிர்பிழைக்காமற்போன பயணிகளின் எண்ணிக்கைக்குச் சமம்.”
லெம்மிங் புதிர் தவறுதான்
வடக்கில் உள்ள குளிர்ப் பிரதேசங்களில் வசிக்கும் சிறிய எலிகளைப்போன்ற லெம்மிங் பிராணிகள் கூண்டோடு தற்கொலை செய்துகொள்கின்றனவா? ஆம் என்பதாக இன்னும்கூட அநேகர் நம்புகின்றனர். பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள்கூட இதை நம்பமுடியாமல் சந்தேகித்தனர்; ஆனால் இப்போதோ ஒரு பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின், வைல்ட் லைப் ஆன் ஒன்னின் குழுவினர் இந்த புதிர் தவறு என்பதாக நிரூபித்து விட்டனர்; இவர்கள் மேற்கு கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் ஆறு மாதங்கள் படமெடுத்தனர். லெம்மிங் பிராணிகள் பெரும் கூட்டமாக இருந்தாலும் உணவுதட்டுப்பாடு இல்லாதவரை கொழுகொழுவென்று வளருகின்றன. அப்படியென்றால் கூண்டோடு அவை தற்கொலை செய்துகொள்கின்றன என்ற கதை எவ்வாறு கிளம்பியது? நார்வே நாட்டு லெம்மிங் பிராணிகள் மலைகளிலிருந்து பசும்புல்வெளிகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும்போது தற்செயலாக அவை தண்ணீரில் விழுவதை அநேகர் பார்த்திருக்கின்றனர் என்பதாக த கார்டியன் செய்தித்தாள் அறிவிக்கிறது.
நோயாளிகளிடம் திருட்டு
ஜெர்மனியிலுள்ள ஆஸ்பத்திரிகள் எங்கும் கொள்ளைநோய் போல் கொள்ளையர் மயம். “கலோனில் உள்ள யுனிவர்சிட்டி மருத்துவமனைகள் ஒரு வருடத்திற்கு முந்நூறு திருட்டுகளை அறிக்கை செய்கிறது” என்பதாக எம்ஸ்டெட்டென்னர் டாகப்லாட் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. “கையில் அழகிய மலர்க்கொத்து; முகத்திலோ வசீகரிக்கும் புன்னகை; இப்படிப்பட்ட திருடனுக்கு தான் திருடப்போகும் திருட்டுச்சொத்து கிடைத்த மாதிரியேதான்.” திருடர்கள் நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள்போல் வேஷம்போட்டு வந்து படுக்கை அருகில் இருக்கும் டேபிளிலிருந்து கோட்ஸ்டான்ட் வரை நடமாடுகின்றனர். வயதான நோயாளிகளாக இருந்தால் திருடுவது இன்னும் சுலபம். உதாரணத்திற்கு, ஒரு தாத்தா பல ஆயிர ஜெர்மன் மார்க்குகளை தன் படுக்கை தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்துபோகலாம் என்பதால் அது திருடர்களுக்கு வெகு தோதாக அமைந்து விடுகிறது. மேலும் ஆஸ்பத்திரி என்பதால் யார் வேண்டுமானாலும் வந்து போகலாம்; யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆகவே நோயாளிகள் தங்களுடைய பணத்தையும் விலையுயர்ந்த பொருட்களையும் ஆஸ்பத்திரியிலுள்ள பாதுகாப்பு பெட்டியிலோ வேறு எங்காவதோ வைக்கும்படியோ, வேறு யாரிடமாவது அவற்றை பத்திரமாக கொடுத்து வைக்கும்படியோ எச்சரிக்கப்படுகின்றனர்.
காது ரேகை
சமீபத்தில் ஒரு திருடன் லண்டனில் பிடிபட்டான்; அவனைக் காட்டிக்கொடுத்ததோ அவன் காதுதான். எவ்வாறு? இவன் திருடும்போது வெகு ஜாக்கிரதையாக எந்த இடத்திலும் கைரேகை படியாமல் பார்த்துக்கொண்டபோதிலும், திருடுவதற்காக வீட்டில் நுழைவதற்குமுன் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள தன் காதை ஜன்னலிலோ, சாவித்துவாரத்திலோ வைத்துக் கேட்பது வழக்கம்; இதனால் காது ரேகை பதிந்துவிட்டது. ஸ்காட்லாந்து கிளாஸ்கோ யுனிவர்சிட்டியைச் சேர்ந்த தடய நிபுணரான பேராசிரியர் பீட்டர் வானஸஸ் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “கைரேகையைப் போலவே காதுரேகையும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.” கைரேகையைப் போல் இல்லாமல், முடி, நகம் இவற்றைப்போல் வயதான பின்பும் காது தொடர்ந்து வளரும் பண்புடையது என்பதாக லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. இந்தக் குற்றவாளியின் காதைப்போலவே, எந்த சைசாக இருந்தாலும் காதுகள் தனித்தன்மை வாய்ந்தவை என்ற விவரம் போலீஸுக்கும் நன்றாகத் தெரியும்; பிரிட்டனில் காதுரேகை தடயத்தின் மூலம் முதன்முறையாக தண்டனை பெற்றவன் இவன்தான்; தான் ஐந்து திருட்டுக் கேஸில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான்.