இளைஞர் கேட்கின்றனர். . .
நான் ஏன் அப்பா அம்மா இல்லாமல் வாழணும்?
“அப்பா, அம்மா இல்லாம வளர்ந்ததைப் பத்தி சொல்லணும்னா, அது ஒரு சோகக் கத. அவங்களோட அன்பும் பாசமும் இல்லாம வளர்றது ரொம்ப கஷ்டம்.”—ஹ்வாகின்.
“மத்த பசங்களோட அப்பாம்மா மட்டும் ஸ்கூலுக்கு வந்து மார்க் ஷீட்ல கையெழுத்து போடறத பாக்கும்போது எனக்கு ரொம்ப ஏக்கமா இருக்கும். அழுக அழுகையா வரும். எனக்கு மட்டும் அப்பாம்மா இல்லையேன்னு வேதனையா இருக்கும். இப்பகூட சில சமயத்துல அந்த நினைப்பு வந்தா நான் ரொம்ப அப்ஸெட் ஆயிடுவேன்.”—பதினாறு வயது பெண் ஆபலினா.
லட்சக்கணக்கான இளைஞர் பெற்றோரில்லாமல் வளருவதே இன்றைய பரிதாப நிலை. கிழக்கு ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் போரினால் அனாதைகளாகி இருக்கின்றனர். ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் கொள்ளைநோய் தன்பங்குக்கு அநேக தாய் தகப்பன்மாரை கொன்று வஞ்சம் தீர்த்திருக்கிறது. பெற்றோரால் கைவிடப்பட்ட சின்னஞ்சிறுசுகளும் ஏராளம். இன்னும் சொல்லவேண்டுமானால், இயற்கைச் சீற்றமும் போரும்கூட பெற்றோரையும் பிள்ளைகளையும் பிரித்திருக்கின்றன.
பைபிள் காலங்களிலும் இப்படிப்பட்ட நிலைமை சர்வசகஜமான ஒன்றே. உதாரணமாக, திக்கற்றப் பிள்ளைகளின் பரிதவிப்பை பைபிள் மறுபடியும் மறுபடியும் சித்தரித்துக் காட்டுகிறது. (சங்கீதம் 94:6; மல்கியா 3:5) அந்தக் காலத்திலும் குடும்பங்கள் போர்களாலும் மற்ற துயர சம்பவங்களாலும் பிளவுபட்டன. உதாரணமாக, சீரியப் படைகள் எருசலேமை கொள்ளையடித்து சூறையாடியபோது ஒரு சிறுமி அவளுடைய பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டதை பைபிள் விவரிக்கிறது.—2 இராஜாக்கள் 5:2.
இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தால் பெற்றோரில்லாது தவித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கானோரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படியென்றால், அது எவ்வளவு வேதனைக்குரியதென உங்களுக்கே தெரியும். உங்களுக்கு ஏன் இந்தக் கதி?
உங்கள் குற்றமல்ல
கடவுள் ஏதோவொரு விதத்தில் உங்களை தண்டிக்கிறாரோ என்று நீங்கள் குழம்புகிறீர்களா? அல்லது உங்களுடைய பெற்றோர் வேண்டுமென்றே திட்டமிட்டு இறந்ததுபோல் அவர்கள் மீதே கோபப்படலாம். முதலாவது, கடவுளுக்கு உங்கள்மீது கோபம் என்று மட்டும் நினைக்கவே நினைக்காதீர்கள். உங்களுடைய பெற்றோரும், அவர்களே விரும்பி வேண்டுமென்றே உங்களைவிட்டு பிரியவில்லை என்றும் புரிந்துகொள்ளுங்கள். சாவை நாம் யாருமே தடுத்து நிறுத்த முடியாது. இது அபூரண மனிதர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்படவேண்டிய சோக முடிவு. சில சமயங்களில் பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாக இருக்கும்போதே பெற்றோர் எதிர்பாராமல் இறந்துவிடுகின்றனர். (ரோமர் 5:12; 6:23) இயேசுவும்கூட அவருடைய வளர்ப்பு தந்தை யோசேப்பினுடையa சாவை எதிர்ப்பட வேண்டியிருந்தது. அப்படியென்றால் இயேசுவின்மேல் ஏதும் குற்றமிருந்ததா? நிச்சயமாகவே இல்லை.
மேலும், நாம் ‘கொடிய காலங்களில்’ வாழ்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். (2 தீமோத்தேயு 3:1-5) இந்த நூற்றாண்டில் போரும் குற்றச்செயல்களும் வன்முறையும் லட்சக்கணக்கானோரை கண்மூடித்தனமாக கொன்று குவித்திருக்கின்றன. மேலும், ‘எதிர்பாரா சம்பவங்களால்’ இன்னும் பலர் பலியாகி இருக்கின்றனர். (பிரசங்கி 9:11, NW) உங்களுடைய பெற்றோரின் மரணம் மிக்க வேதனைக்குரியதே. ஆனால், அது உங்கள் குற்றமல்ல. குற்றவுணர்வால் உங்களை நீங்களே வாட்டி வதைத்துக்கொள்ளாதீர்கள். மீளா துக்கத்தாலும் நிலைகுலைந்து போய்விடாதீர்கள். இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களெனb கடவுள் வாக்களித்திருக்கிறார். ஆகவே மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள். “இதைக்குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். இதோ! நேரம் வருகிறது. அப்போது கல்லறையில் இருப்பவர்கள் எல்லாரும் அவருடைய [கடவுளுடைய] குரலைக் கேட்டு உயிரோடு வருவார்கள்” என்று இயேசுவும் சொல்லியிருக்கிறார். (யோவான் 5:28, 29, NW) ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆபலினா இவ்வாறு கூறுகிறாள்: “யெகோவாமேல இருந்த அன்பும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையுந்தான் எனக்கு பக்கபலமா இருந்தது.”
அப்பாம்மா உயிரோடு இருக்கும்போதே உங்களைக் கைவிட்டிருந்தால், அப்பொழுது? பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய அன்றாட தேவைகளை கவனித்து, நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். (எபேசியர் 6:4; 1 தீமோத்தேயு 5:8) இருப்பினும் சிலர் தங்கள் பிள்ளைகள்மீது ‘பாசமே’ இல்லாதிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; வருத்தமும் தருகிறது. (2 தீமோத்தேயு 3:3, NW) இன்னும் பலர், கொடிய வறுமை, சிறைதண்டனை, மது அல்லது போதைமருந்துக்கு அடிமையாதல் ஆகிய காரணங்களால் பிள்ளைகளை கைவிட்டுவிடுகின்றனர். சுயநலமிகளாக தங்களுடைய பிள்ளைகளை கைவிடுகிற பெற்றோரும் இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. காரணம் எதுவாயிருந்தாலும், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது நெஞ்சை பிளக்கும் வேதனையான விஷயம். ஆனால் இதற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல. குற்றவுணர்வால் உங்களை நீங்களே வாட்டி வதைத்துக்கொள்ள வேண்டியதுமில்லை. உங்களைக் கைவிட்டதற்காக உங்கள் பெற்றோர் கட்டாயம் கடவுளுக்கு கணக்கு கொடுக்கவேண்டும். (ரோமர் 14:12) வியாதி அல்லது இயற்கை நாசங்கள் போன்ற மனிதசக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களால் உங்களிடமிருந்து அவர்கள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டிருந்தால், அது யாருடைய குற்றம்? யாருடைய குற்றமுமல்ல. ஒன்றுசேரும் வாய்ப்பு இருக்கிறதே! அது சுலபமல்லவென்றாலும், ஒருக்காலும் நடக்காது என சொல்லிவிட முடியாது. ஆகவே, மனதைத் தளரவிடாதீர்கள்.—ஆதியாகமம் 46:29-31-ஐ ஒப்பிடுக.
மனதைத் தொடும் அனுபவம்
இதற்கிடையில், நீங்கள் நிறைய துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கலாம். ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பு போர்க்களத்தில் பிள்ளைகள் என்ற பெயரில் ஓர் ஆய்வு நடத்தியது. அது கூறுவதாவது: “பதினெட்டு வயது நிரம்பாத மைனர்கள் பகடைக்காய்போல் உருட்டப்படுகின்றனர். . . . ஆதரவற்றவர்களாக, துர்ப்பிரயோகம் செய்யப்படுவதால் அவர்கள் வாழ்க்கையே சின்னாபின்னமாகிறது. பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவது பிள்ளைகளின் மனதைக் கலங்கடிக்கும் ஒன்று.” ஒருவேளை நீங்களும்கூட ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் விரட்ட போராடிக் கொண்டிருக்கலாம்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஹ்வாகினின் நிலைமையை சற்று சிந்தியுங்கள். முதலில் அவனுடைய அப்பாவும் அம்மாவும் பிரிந்தனர். பிறகு, அவனையும் அவனுடைய அக்கா, அண்ணன்களையும் கைவிட்டனர். அப்பொழுது அவனுக்கு ஒரு வயது. அவனுடைய அக்காமார்கள்தான் வளர்த்தார்கள். அவன் சொல்லுகிறான்: “என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் அப்பாம்மா இருக்காங்க. ஏன் நமக்குமட்டும் இல்லைன்னு நான் அடிக்கடி கேப்பேன். யாராவுது அப்பாவும் பையனும் விளையாடிக்கிட்டிருக்கறதைப் பாத்தா, அவரு என்னோட அப்பாவா இருந்திருக்கக்கூடாதான்னு ஏங்குவேன்.”
உதவி பெறுதல்
பெற்றோரில்லாமல் வளர்வது பெரும்பாடு என்றாலும் உங்கள் வாழ்க்கையே தோல்வியில்தான் முடியும் என்று அர்த்தமில்லை. தேவையான உதவியும் ஆதரவும் கிடைத்தால், நிலைமைகளை சமாளித்து நன்கு வளமாக வாழமுடியும். துக்கத்திலும் வேதனையின்பிடியிலும் நீங்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதை லேசில் நம்பமுடியாது. இருந்தாலும், இப்படிப்பட்ட உணர்ச்சிகள் நார்மலே. அதுமட்டுமல்ல இவை உங்களை நிரந்தரமாக வதைக்கப்போவதில்லை. பிரசங்கி 7:2, 3-ல் இவ்வாறு நாம் வாசிக்கிறோம்: “விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம். . . . நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம். முகத்துக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்.” ஆம், பயங்கரமான துயரத்தில் இருக்கும்போது மனதிலிருக்கும் துக்கத்தை அழுது கொட்டித் தீர்ப்பது இயல்பானதே. அது பாரத்தை குறைத்து மனதை லேசாக்கும். உங்களை புரிந்துகொள்ளுகிற ஃப்ரெண்டிடமோ அல்லது சபையில் அனுபவமுள்ள ஒருவரிடமோ மனம்திறந்து பேசுவதும் வேதனையை குறைக்கும்.
யாருடைய தொந்தரவும் இல்லாமல் தனிமையில் இருக்க நீங்கள் விரும்பலாம். ஆனால், நீதிமொழிகள் 18:1 (பொது மொழிபெயர்ப்பு) எச்சரிக்கிறது: “பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.” அன்பும் பரிவும் காட்டும் ஒருவரின் உதவியை நாடுவது நல்லது. நீதிமொழிகள் 12:25 (பொ.மொ.) கூறுகிறது: “மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.” உங்களுடைய ‘மனக்கவலையை’ யாரிடமாவது சொன்னால்தான் உங்களுக்கு “இன்சொல்” கிடைக்கும்.
யாரிடம் நீங்கள் பேசலாம்? கிறிஸ்தவ சபையில் உள்ளவர்களிடம் பேசலாம். உங்கள்மேல் அன்பும் ஆதரவும் காட்டும் “சகோதரரையும் சகோதரிகளையும் தாய்களையும்” அங்கு காணமுடியுமென இயேசு உறுதியளித்தார். (மாற்கு 10:30) ஹ்வாகின் சொல்லுகிறான்: “வாழ்க்கைய வேற கோணத்துல பாக்க முடிஞ்சிது. இதுக்கு கிறிஸ்தவ சகோதரங்களோட சகவாசம் ரொம்ப உதவியாயிருந்தது. மீட்டிங்குக்கு ஒழுங்கா போனது யெகோவாவ இன்னும் அதிகமா நேசிக்கறதுக்கும் அவரோட வேலைய ஜாஸ்தி செய்யறதுக்கும் எனக்கு உதவுச்சு. முதிர்ச்சிவாய்ந்த பிரதர்ஸ் என்னோட குடும்பத்துக்கு ஆவிக்குரிய உதவியும் ஆலோசனையும் குடுத்தாங்க. இப்போ, என் கூடபிறந்தவங்கள்ள சிலர் முழுநேர ஊழியத்துல இருக்காங்க.”
யெகோவா “திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனுமாய்” இருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். (சங்கீதம் 68:5, 6) பைபிள் காலங்களில், திக்கற்ற பிள்ளைகளை நியாயமாகவும் இரக்கத்தோடும் நடத்தும்படி கடவுள் அவருடைய மக்களை உற்சாகப்படுத்தினார். (உபாகமம் 24:19; நீதிமொழிகள் 23:10, 11) அப்பாம்மா இல்லாத இளைஞர்களிடம் அதே பரிவிரக்கத்தை இன்றும் அவர் காட்டுகிறார். எனவே, நீங்கள் அவரிடம் ஜெபம் செய்யுங்கள். உங்கள்மேல் அக்கறையுள்ளவராய் இருப்பதால் உங்கள் ஜெபத்திற்கு நிச்சயம் பதிலளிப்பார். தாவீது ராஜா எழுதினார்: “என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்.”—சங்கீதம் 27:10, 14, பொ.மொ.
இருப்பினும், பெற்றோரில்லாத இளைஞர்கள் அனுதின வாழ்க்கையில் எக்கச்சக்கமான பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். நீங்கள் எங்கே வசிப்பீர்கள்? உங்களுடைய அன்றாட செலவுகளை எப்படி சமாளிப்பீர்கள்? இந்த சவால்களை எப்படி வெற்றிகரமாக மேற்கொள்ளலாம் என்பவை எதிர்கால கட்டுரை ஒன்றில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a இயேசு இறப்பதற்குமுன், அவருடைய தாயை கவனிக்கும் பொறுப்பை சீஷனாகிய யோவானிடம் ஒப்படைத்தார். அவருடைய வளர்ப்பு தந்தை உயிரோடு இருந்திருந்தால் இதற்கு அவசியமே இருந்திருக்காது.—யோவான் 19:25-27.
b பெற்றோரில் ஒருவர் இறந்த வேதனையை சமாளிப்பதின்பேரில் கூடுதல் தகவல்களுக்கு ஆகஸ்ட் 22, மற்றும் செப்டம்பர் 8, 1994, விழித்தெழு! பிரதிகளில் வந்திருக்கும் “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளைப் பாருங்கள்.
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
சிலசமயங்களில் நீங்கள் தன்னந்தனியாக விடப்பட்டதாக உணரலாம்
[பக்கம் 24-ன் படம்]
“யெகோவாமேல இருந்த அன்பும் உயிர்த்தெழுதல் நம்பிக்கையுந்தான் எனக்கு பக்கபலமா இருந்தது”
[பக்கம் 25-ன் படம்]
உங்களுக்கு உதவவும் உற்சாகப்படுத்தவும் சபையில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்