இயேசு கிறிஸ்து யார்?
உலகமுழுவதிலும் அநேக நாடுகளில் இப்போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஜரூராக நடந்துகொண்டிருக்கும். சுமார் 2,000 வருடங்களுக்கு முன் டிசம்பர் 25-ம் தேதிதான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்றனர். அநேக சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்திருக்கும் பச்சிளங்குழந்தையாக காட்சியளிக்கிறார். ஆனால், அவர் பெரியவராக வளர்ந்து இந்தப் பூமியில் 33 1/2 வருடம் வாழ்ந்தார் என்பதும் உண்மையே.
நீங்கள் எப்போதாவது இப்படியெல்லாம் யோசித்ததுண்டா: இயேசு வளர்ந்தபின் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? அவர் என்ன நிறத்தில் இருந்தார்? பார்ப்பதற்கு திடகாத்திரமாகவும் அழகாகவும் இருந்தாரா? அல்லது பல நூற்றாண்டுகளாக அநேக ஓவியர்கள் அவரை சித்தரித்திருக்கும் வண்ணம் மெலிந்தவராகவும் நோஞ்சானாகவும் இருந்தாரா? அவருக்கு தாடி இருந்ததா இல்லையா? அவருடைய தலைமுடி நீளமாக இருந்ததா?
அதுமட்டுமல்ல, இயேசுவை சில ஓவியர்கள் வரைந்திருக்கும் வண்ணம் அவருடைய தலைக்குமேல் பரிசுத்த ஒளிவட்டம் பிரகாசித்ததா? அல்லது உண்மையில் அவர் மிகவும் வித்தியாசமாக இருந்தாரா? அவருக்கென்று வித்தியாசமான எந்தத் தோற்றமும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துவிடும் சாதாரண ஆளாக இருந்தாரா?
கால ஓட்டத்தில், இயேசுவின் தோற்றத்தைப் பற்றி சரித்திர ஆசிரியர்களும் ஓவியர்களும் முரண்படும் கருத்துகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அவரோடு நன்கு பழக்கப்பட்டிருந்த பைபிள் எழுத்தாளர்களின் கண்கண்ட சாட்சியங்களும் இருக்கின்றன; அவர்களின் எழுத்துக்கள் நம்பத்தகுந்த அத்தாட்சிகளைக் கொடுக்கின்றன.
ஆனால், அவருடைய தோற்றம் எப்படி இருந்தது என்பதைவிட அதிக முக்கியமான கேள்விகளும் இருக்கின்றன. அவை யாவன: இயேசு கிறிஸ்து உண்மையில் யார்? கடவுளுடைய நோக்கத்தில் அவர் என்ன பங்கு வகிக்கிறார்? அந்தப் பங்கை நிறைவேற்றி முடித்துவிட்டாரா? இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? மனிதவர்க்கம் முழுவதையும் பாதிக்கும் அளவுக்கு அவருடைய தற்போதைய நிலை அவ்வளவு முக்கியமானதா? மரித்திருக்கும் அநேக ஆட்களையும்கூட அது பாதிக்குமா என்ன?
இருந்தாலும், முதலில் இயேசுவின் தோற்றத்தைப் பற்றிய அத்தாட்சிகளை ஆராய்வோம். அவர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?