இளைஞர் கேட்கின்றனர். . .
அப்பா அம்மா இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன்?
“எங்க அப்பா அம்மா விவாகரத்து செஞ்சுகிட்டப்போ எனக்கு மூணுவயசு; என் அக்காவுக்கு நாலு வயசு. எங்க ரெண்டுபேரையும் யார் வச்சுக் காப்பாத்தறதுங்கற சண்டைய தீத்துக்கறதுக்கு அவுங்க கோர்ட்டுக்கு போனாங்க. கடைசில நாங்க அம்மாகிட்ட வளந்தோம். ஆனா, எனக்கு ஏழு வயசாகும்போது, நானும் என் அக்காவும் அப்பாகிட்ட போயிட்டோம்.”—ஒராஸ்யோ.
சில வருடங்களுக்கு பிறகு, ஒராஸ்யோவின் அப்பாவும் அவரோடு வாழ்ந்து கொண்டிருந்த பெண்ணும் பிரிந்தனர். ஒராஸ்யோவும் அவருடைய அக்காவும் நிர்க்கதியாய் நின்றனர். அவர்களுடைய பரிதாப நிலையைப் பற்றி ஒராஸ்யோ விளக்குகிறார்: “என்னோட 18 வயசுல குடும்ப பாரத்தை சுமக்க ஆரம்பிச்சப்போ இருந்த நிலை இதுதான். என் குடும்பத்துல 19 வயசு அக்காவும் 12 வயசு ஒன்னுவிட்ட தங்கச்சியும் இருந்தாங்க. அவளும் எங்களோடவே இருந்துட்டா.”
முந்தின கட்டுரையில் விவரித்ததுபோல், அப்பா அம்மா இல்லாத இளைஞர்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்.a சில இளைஞர்கள், ஒராஸ்யோவைப் போல், பெற்றோரால் கைவிடப்பட்டு இருக்கின்றனர். இன்னும் பலர், தங்களுடைய பெற்றோரை சாகக் கொடுத்திருக்கின்றனர்; அல்லது இயற்கை சீற்றங்களோ போரோ அவர்களை அனாதைகளாக்கி இருக்கின்றன. காரணம் எதுவாயிருந்தாலும், அப்பா அம்மா இல்லாமல் இருப்பது வேதனையும் துக்கமும் நிறைந்தது. இது தாங்க முடியாத பாரத்தை உங்கள் மேல் சுமத்தும்.
‘யார் என் புகலிடம்?’
எந்தளவுக்கு உங்களால் சமாளிக்க முடியும் என்பது உங்களுடைய வயதையும் சூழ்நிலையையும் பொருத்ததே. நீங்கள் சிறாராகவோ அல்லது டீனேஜை நெருங்குகிறவராகவோ இருந்தால், உங்கள் நிலைமை கடினமானதுதான். இதை மறுப்பதற்கில்லை. அப்படியே இருந்தாலும், நீங்கள் தன்னந்தனியாக தவிக்க வேண்டியதில்லை. ஒருவேளை, உங்களுடைய மாமாவோ, அத்தையோ, அல்லது அக்காவோ, அண்ணனோ உங்களுக்கு புகலிடம் தந்து பராமரிக்க முன்வரலாம்.
அனாதைகளையும் விதவைகளையும் ஆதரிப்பதை யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வணக்கத்தின் பாகமாக கருதுகின்றனர். (யாக்கோபு 1:27; 2:15-17) பெரும்பாலும், அந்தந்த சபையில் உள்ளவர்களே உதவ முன்வருகின்றனர். உதாரணமாக, ஒராஸ்யோவும் அவருடைய சகோதரிகளும், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்தனர்; அவர்களுடைய சபைக் கூட்டங்களிலும் கலந்துகொண்டனர். அங்கே அவர்கள் சந்தித்த ஒரு கிறிஸ்தவ குடும்பத்தினர் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். ஒராஸ்யோ சொல்லுகிறார்: “ஒவ்வொரு நாளும் யெகோவா என்னை அவரோட கண்ணின் கருமணிபோல அன்பா போஷித்து, வழிநடத்தியதற்கு நான் அவருக்கு ரொம்ப கடன்பட்டிருக்கேன்! எங்கள ஏத்துக்கிட்ட குடும்பத்தார் கடவுளுடைய காரியங்களை ஃபர்ஸ்ட் வைக்கிறவங்க. அவங்களுக்கும் எங்க வயசுல பிள்ளைங்க இருந்தாங்க. இந்த குடும்பத்தோட ஆதரவு எங்களுக்கு கெடைச்சதே நாங்க செய்த பாக்கியம். அவங்களோட தத்து பிள்ளங்க மாதிரி எங்கள கவனிச்சிக்கிட்டாங்க. அது நாங்களும் அந்த குடும்பத்தில ஒருத்தருங்கற நெனப்ப தந்துச்சி. எப்பவுமே இல்லாத நிம்மதி கெடச்சிது. எந்த உதவின்னாலும்சரி தயங்காம அவங்ககிட்ட கேக்கலாம்ங்கற ஆறுதல் வாழ்க்கைல ஒரு பிடிப்பையும் தந்துச்சி.”
ஆனால், எல்லா இளைஞர்களுக்கும் தஞ்சம் புக இப்படியொரு குடும்பம் கிடைக்காது. “சில சமயங்களில், நிர்க்கதியாய் நிற்கும் பிள்ளைகளை சில குடும்பங்கள் கூட்டிச் சென்று கொடுமைப்படுத்துகின்றன; சம்பளம் எதுவும் கொடுக்காமல் வேலை செய்ய சொல்லி சக்கையாய் பிழிந்தெடுக்கின்றன; அவர்களை வாழ்க்கையில் முன்னேறவிடாமல் நசுக்கிவிடுகின்றன; இன்னும் கொடுமை என்னவென்றால், அவர்களை விபசாரத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துகின்றன; இன்னும் சிலரை கொத்தடிமைகளாக நடத்துகின்றன” என ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிதியின் ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே, உங்கள்மேல் ஒருவர் ஆதரவுகாட்டி பராமரித்து வருகிறாரென்றால் அவரிடம் நன்றியோடு இருங்கள்.
எது எப்படியிருந்தாலும், அப்பா அம்மா இல்லாமல் வளர்வதென்பது ஈடுசெய்ய முடியாத மிகப் பெரிய இழப்பாகும். உங்களை அன்பாக அரவணைத்து வளர்க்க அவர்களில்லாதது கசப்பையும் வெறுப்புணர்ச்சியையும் அதிகரிக்கும். உறவினரோ, அக்காவோ, அண்ணனோ இதை செய், அதை செய் என்று கட்டளையிடும்போது சொல்லவே வேண்டாம்; எரிச்சலும் கோபமும் தலைக்கேறிவிடும். ஆனால், உங்களுடைய கோபத்தையும் எரிச்சலையும் உங்களுக்கு ஆதரவு காட்டுகிறவர்கள்மீது காட்டாதீர்கள். பைபிள் சொல்லுகிறது: “கோபத்தின் உக்கிரம் குரோதச் [செயல்களுக்கு] கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் . . . அக்கிரமத்துக்குத் திரும்பாதபடி கவனமாயிருங்கள்.” (யோபு 36:18, 21, NW) பைபிளில் சொல்லப்பட்டுள்ள எஸ்தர் என்னும் இளம்பெண்ணின் உதாரணத்தை சற்று நினைத்துப் பாருங்கள். அம்மாவும் அப்பாவும் இல்லாத அனாதை அவள். அவளுடைய பெரியப்பா மகன் மொர்தெகாயால் வளர்க்கப்பட்டாள். மொர்தெகாய் அவளுடைய தகப்பனாக இல்லாதபோதிலும், அவர் ‘கற்பித்திருந்தபடி’ கீழ்ப்படிந்து நடந்தாள். பெரியவளானபோதும் அவர் சொற்கேட்டே நடந்தாள்! (எஸ்தர் 2:7, 15, 20) அதுபோலவே, நீங்களும் கீழ்ப்படியவும் மற்றவர்களோடு ஒத்துழைக்கவும் முயற்சி செய்யுங்கள். ஒருவருக்கொருவர் இடையே இருக்கும் மனக்குறைகளை குறைக்கவும் எல்லாருமே சமாதானமாய் போகவும் உதவும்.
குடும்பச் சுமை
உங்களுக்கு ஒரு அண்ணனோ, அக்காவோ இருக்கலாம்; அல்லது நீங்களே பொறுப்புகளை ஏற்கும் வயதுடையவராக இருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில் ஒருவேளை நீங்களும், உங்கள் அண்ணன், அக்காமார்களுமே நிலைமைகளை சமாளிக்க முடியும். இப்படிப்பட்ட சமயங்களில், நீங்கள் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிவரும். சுமக்க மாளா பளுதான்! இருப்பினும், இதே சூழ்நிலையில் அநேக இளைஞர்கள் தங்களுடைய தங்கை தம்பிகளையும் வளர்த்து அரிய சாதனை நிகழ்த்தியிருக்கின்றனர்.
ஆனாலும், மனக்கசப்பையும் வெறுப்புணர்ச்சியையும் எதிர்த்து நீங்கள் எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆகவேண்டும். மூன்றாம் மனுஷருக்கல்ல, உங்களுடைய உடன்பிறப்புகளுக்குத்தான் இப்படி பாடுபடுகிறீர்கள் என்பதை நிதானமாக மனதில் அசை போடுங்கள். அது, இந்நிலைமையை சமாளிப்பதற்கு நம்பிக்கையான மனநிலையை கொடுக்கும். அவர்களை கவனித்துக்கொள்வது கடவுளால் கொடுக்கப்பட்ட கடமையாக கருத உதவும். கிறிஸ்தவர்கள் தங்கள் வீட்டாரை பராமரிக்க வேண்டுமென கட்டளையிடப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. (1 தீமோத்தேயு 5:8) ஆனால், நீங்கள் எவ்வளவுதான் உயிரைக்கொடுத்து விழுந்துவிழுந்து கவனித்தாலும் சொந்த தாய்க்கோ, தகப்பனுக்கோ ஈடாகுமா? நிச்சயமாக ஆகாது, ஆகவும் முடியாது.
உங்கள் பெற்றோரிடம் அவர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அதேமாதிரி உங்களிடமும் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள். அது, நியாயமானதுமல்ல. ஆனால், அவர்கள் உங்களுடைய தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படிய கணிசமான காலம் எடுக்கும். வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர்மாற்றங்களின் பாதிப்பை ஜீரணிக்கவும் நிலைமைகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு காலத்தை அனுமதியுங்கள். இது இயல்பானதே. இதற்கிடையே, நீங்கள் எரிச்சலடைந்து சோர்ந்துபோய் விடாதீர்கள். “சகலவிதமான கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம்” ஆகிய அனைத்தையும் தவிர்த்திடுங்கள். ‘தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, ஒருவருக்கொருவர் மன்னிப்பவர்களாயும்’ இருங்கள். இதை உங்களுடைய சிறந்த நடத்தையின்மூலம், உங்களுடைய தம்பி, தங்கைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.—எபேசியர் 4:31, 32.
என்றபோதிலும், தவறுகள் நேர்வது சகஜமே. தானும் பிழைகள் செய்ததாக ஒராஸ்யோ ஒத்துக்கொள்கிறார். “சில சமயங்கள்ல, என் கூடப்பிறந்தவங்ககிட்ட நான் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்திருக்கேன். அது ஓரளவுக்கு கவசம்போல பாதுகாப்பு தந்திருக்குது. யெகோவாவோட பார்வைல சரியா நடக்கறதுக்கு அது எங்களுக்கு உதவியது.”
பணத் தேவைகள்
பெற்றோரில்லாவிட்டால், பணத் தேவைகளையும் நீங்கள்தான் கவனிக்க வேண்டும். இது சாமான்யமான காரியமா? இல்லவே இல்லை. இதற்குமுன் நீங்கள் செய்யாத சில வீட்டுவேலைகளும்கூட இப்பொழுது அத்தியாவசியமான காரியங்களே. இவற்றை, கிறிஸ்தவ சபையிலுள்ள பெரியவர்கள் சிலர் உங்களுக்கும், உங்களுடைய உடன்பிறப்புகள் இருந்தால், அவர்களுக்கும் கற்றுக் கொடுக்கமுடியும். சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டுவேலைகளையும்கூட சொல்லிக் கொடுக்க முன்வருவார்கள். ஆனால், பணத்திற்கு நீங்கள் எங்கே போவீர்கள்? நீங்கள், ஏதாவது வேலை கிடைக்குமாவென முயற்சி செய்வதைத்தவிர வேறு வழியில்லை.
வேலை கிடைப்பதென்ன கிள்ளுக்கீரையா? படித்தவர்களே ததிங்கிணத்தோம்போடும் இந்த காலத்தில், கல்வி, அனுபவம், அல்லது வேலைத்திறமை இல்லாதவர்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே, எப்பாடுபட்டாவது அடிப்படை கல்வியை முடிக்க முயற்சி செய்யுங்கள்; அல்லது தொழிற்கல்வி ஏதாவது பயிலுங்கள். ஒராஸ்யோ கூறுகிறார்: “அக்காவும் நானும் வேலைக்கு போனதுனால நானும் படிச்சிகிட்டு என் தங்கச்சியையும் படிக்க வைக்க முடிஞ்சிது.” வளரும் நாடுகளில் இருப்பவர்கள், தங்களுடைய புத்திசாலித்தனத்தையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தி வேலை தேடவேண்டும்.—விழித்தெழு! அக்டோபர் 22, 1994, இதழில், “வளரும் நாடுகளில் வேலைகளை ஏற்படுத்துதல்” என்ற கட்டுரையைக் காண்க.
பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளில், அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி பெறுவது சாத்தியமாகும். பெரும்பாலும், அரசாங்க அல்லது தனியார் நிறுவனங்கள் இது சம்பந்தப்பட்ட உதவியை அளிக்கின்றன. இவை, கைவிடப்பட்ட அல்லது அனாதை பிள்ளைகளுக்கு உதவ எப்போதும் தயார். உதாரணமாக, சில நிறுவனங்கள், உணவு அல்லது இருப்பிடத்திற்கு வசதி செய்து தருகின்றன. இவ்வாறு கிடைக்கும் நிதியுதவிகளை சரியான முறையில் புத்திசாலித்தனமாக பயன்படுத்தவேண்டும். “திரவியமும் கேடகம்” என பைபிள் சொல்லுகிறது. (பிரசங்கி 7:12) வரவு செலவை திட்டம் போட்டு கவனமாக செலவு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், பணம் ‘சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு . . . பறந்துபோம்.’—நீதிமொழிகள் 23:4, 5.
யாராவது பெரியவர்கள் உங்களை பொருளாதார ரீதியில் பராமரிக்க முன்வந்தால், இப்போதைக்கு உங்களுக்கு வீண்கவலை வேண்டாம். ஆனால், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நீங்களே இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. படி, படி என்று சொல்லி உங்களை உற்சாகப்படுத்த அப்பா அம்மா இல்லாததால், படிக்காமல் இருந்துவிடாதீர்கள். படிப்பில் முழுகவனம் செலுத்துங்கள். ஆவிக்குரிய வளர்ச்சி குறித்து கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த ஆலோசனை உங்களுடைய பள்ளி படிப்பிற்கும் பொருந்தும்: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.” (1 தீமோத்தேயு 4:15) இப்படி செய்தீர்களென்றால், அது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி. அதுமட்டுமல்ல, நீங்களும் நன்மை பெறுவீர்கள்.
இவை எல்லாவற்றிலும் அதிமுக்கியமானது ஆன்மீக வளர்ச்சியே. ஆன்மீக காரியங்களுக்காக ஒழுங்கான ஒரு திட்டத்தை வைத்திருங்கள். அதை தவறாமல் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். (பிலிப்பியர் 3:16) உதாரணமாக, ஒவ்வொரு நாளும் ஒரு பைபிள் வசனத்தை குடும்பமாக சிந்திப்பது யெகோவாவின் சாட்சிகளின் வழக்கம். இதை நீங்களும் செய்யலாமல்லவா? இதை உங்களுடைய வாழ்க்கையின் பாகமாக ஆக்கிக்கொள்ளுங்கள். முறையான பைபிள் படிப்பை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் செல்லுங்கள். இது உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக இருக்கும்.—எபிரெயர் 10:24, 25.
துணிச்சலோடு போடுங்கள் எதிர்நீச்சல்
அப்பா அம்மா இல்லாமல் வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். என்றாலும், வாழ்க்கையே அத்தோடு அஸ்தமித்துவிட்டது என அர்த்தமாகாது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 20 வயது பவோலா. அவள் ஆறு வயதாக இருக்கும்போதே அவளுடைய அம்மா இறந்துவிட்டார். அவள் பத்து வயதாய் இருக்கும்போதோ அப்பாவும் இறந்துவிட்டார். பரிதாபப்பட்டு, அவளுக்கும் அவளுடைய அக்கா, தங்கை நால்வருக்கும் ஓர் அம்மாள் அடைக்கலம் கொடுத்தாள். அவளுடைய வாழ்க்கையே அத்தோடு அஸ்தமித்துவிட்டதா? நிச்சயமாக இல்லை. பவோலா சொல்லுகிறாள்: “நல்ல ஒரு எடுத்துக்காட்டான குடும்பமா நாங்க இல்லாவிட்டாலும், நார்மல் வாழ்க்கையதான் நடத்திட்டிருக்குறோம். பாக்கப்போனா, மற்ற குடும்பங்களைவிட நாங்க ரொம்ப ஒத்துமையா இருக்கோம். எங்களுக்குள்ள நெருக்கமான பந்தம் இருக்கு.”
பவோலாவின் அக்கா ஐரின் கூறுகிறாள்: “எங்களுக்கு அம்மாப்பா இல்லேன்னாக்கூட, எங்களுக்கென்ன குறைச்சல். நாங்களும் மத்த இளைஞர்களைப் போலத்தான் இருக்கிறோம்.” இதேமாதிரி சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு அவள் கொடுக்கும் அட்வைஸ்? “மீளா சுழல்ல மாட்டிக்கிட்ட மாதிரி நெனைக்காதீங்க.” ஒராஸ்யோவும் இதே கருத்தைத்தான் தெரிவிக்கிறார்: “நிலைமைகளை ஜோரா சமாளிக்கறதுக்கான மனப்பக்குவத்தை இந்த சூழ்நில எனக்கு கத்துக்குடுத்தது.”
பெற்றோரை இழப்பது, தாங்க முடியாத துக்கத்தையும் வேதனையையும் கொடுக்கிற துயர நிகழ்ச்சிகளில் ஒன்று. இருப்பினும், யெகோவா உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்; உறுதுணையாக இருப்பார். அவருடைய உதவியோடு நிலைமைகளை சமாளித்து வெற்றிகாண முடியும்; அவருடைய ஆசீர்வாதமும் கிடைக்கும்; இதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு! நவம்பர் 22, 1998, பிரதியில் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் அப்பா அம்மா இல்லாமல் வாழணும்?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 26-ன் படம்]
கிறிஸ்தவ மூப்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்