பைபிளின் கருத்து
பரிசுத்த ஆவி என்றால் என்ன?
“ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது; பரிசுத்த ஆவி புறாவைப்போல ரூபமெடுத்து அவர்மேல் இறங்கியது. வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: ‘நீர் என்னுடைய குமாரன், எனக்கு மிகவும் பிரியமானவர்; நான் உம்மை அங்கீகரித்திருக்கிறேன்’ என்று உரைத்தது.”—லூக்கா 3:21, 22, NW.
பூர்வீக கிரீஸில் தத்துவ ஞானிகளின் ஒரு குழுவினரிடம் அப்போஸ்தலன் பவுல் பேசினார்; அப்போது, “வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவ[ர்]” என்று கடவுளைப் பற்றி குறிப்பிட்டார். கடவுளே, “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவ[ன்]” என்றும் அவரே, “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற”வர் என்றும் பவுல் கூறினார். (அப்போஸ்தலர் 17:24-28) இவை எல்லாவற்றையும் கடவுளால் எவ்வாறு செய்ய முடிகிறது? அவருடைய பரிசுத்த ஆவியின் அல்லது செயல் நடப்பிக்கும் சக்தியின் மூலமே.
மேலும் அவரிடம், ‘எல்லையற்ற ஆற்றலும் அதிக வல்லமையும்’ இருக்கிறது என்றும் பைபிள் கூறுகிறது. (ஏசாயா 40:26, NW) ஆம், கடவுள்தான் இந்தச் சர்வலோகத்தை சிருஷ்டித்தார்; அவருடைய எல்லையற்ற ஆற்றலையும் வல்லமையையும் இது பறைசாற்றுகிறது அல்லவா?
செயல்படும் வல்லமை
பரிசுத்த ஆவியை வெறுமனே கடவுளுடைய வல்லமை என்று சொல்வது முற்றிலும் சரியல்ல; ஏனென்றால் வல்லமை என்பது ஓர் ஆளுக்குள் அல்லது ஒரு பொருளுக்குள் மறைந்து அல்லது செயலற்று இருக்கக்கூடும். சார்ஜ் செய்த ஆனால் உபயோகிக்கப்படாத ஒரு பேட்டரி இதற்கு நல்ல உதாரணம். ஆனால் கடவுளுடைய ஆவி செயலில் இருப்பதாகவே நாம் பைபிளில் வாசிக்கிறோம். உபயோகத்தில் இருக்கும் பேட்டரியிலிருந்து வெளிவரும் மின்சாரத்திற்கு ஒப்பாக இது இருக்கிறது. (ஆதியாகமம் 1:2) ஆகவே, கடவுளுடைய பரிசுத்த ஆவி என்பது செயல்படும் அவருடைய வல்லமை; அதாவது அவருடைய செயல் நடப்பிக்கும் சக்தி.
பரிசுத்த ஆவி ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடித்ததாக அல்லது கடவுள் இருக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததாக பைபிளில் சில சமயங்களில் வாசிக்கிறோம். (மத்தேயு 28:19, 20; லூக்கா 3:21, 22; அப்போஸ்தலர் 8:39; 13:4; 15:28, 29) ஆகவே இந்த வசனங்களை வாசித்த சிலர், பரிசுத்த ஆவி என்பது தனித்தன்மை வாய்ந்த, கடவுளிடமிருந்து தனியாக பிரிந்திருக்கும் ஒன்று என கற்பனை செய்துகொள்கின்றனர். ஏன் இந்த விதமான மொழிநடையை பைபிள் பயன்படுத்துகிறது? உண்மையில், பரிசுத்த ஆவி என்பது கடவுளிடமிருந்து தனியாக பிரிந்திருக்கும் ஒன்றுதானோ?
சர்வ வல்லமையுள்ள கடவுள் தம்முடைய சிருஷ்டிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர். அவர் ஓர் ஆவி ஆள்; ஆகவே குறைவான திறமையுள்ள நம் புலன்களுக்கு தென்படமாட்டார். (யோவான் 4:24) யெகோவா தேவன் பரலோகத்தில் வாசம் பண்ணுகிறார் என்றும் அங்கிருந்து மனிதர்களை கூர்ந்து கவனிக்கிறார் என்றும் பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 33:13, 14) இதைப் புரிந்துகொள்வது சுலபம்தானே? தாம் உண்டாக்கிய பொருட்களைவிட சிருஷ்டிகர் மேம்பட்டவராகத்தான் இருக்கவேண்டும் அல்லவா? அவரே அவற்றை உருவாக்கி, திறமையாக கையாண்டு, வழிநடத்தி, கட்டுப்படுத்துகிறார்.—ஆதியாகமம் 1:1.
கடவுள், காணக்கூடாத தம்முடைய வாசஸ்தலத்தில் இருந்துகொண்டே எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யமுடியும். ஆகவே அவருடைய பரிசுத்த ஆவி எங்கு செயல்படுகிறதோ அங்கு அவர்தாமே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேலையை செய்துமுடிக்க அவர் தம்முடைய ஆவியை அனுப்பினாலே போதும். (சங்கீதம் 104:30) வயர்லெஸ் ரிமோட் கன்ட்ரோல் மூலம் வீட்டிலுள்ள சாதனங்களை இயக்கும் நவீனகால மக்களுக்கு இதைப் புரிந்துகொள்வது கஷ்டமா என்ன? மின்சாரம் அல்லது இன்ஃப்ரா ரெட் கதிர்கள் போன்ற கண்ணுக்கு புலப்படாத சக்திகளின் வல்லமையை இன்று நாம் அறிந்திருக்கிறோம். அதைப் போலவே, அவருடைய காணக்கூடாத பரிசுத்த சக்தி அல்லது ஆவி மூலம் தாம் செய்ய நினைக்கும் அனைத்தையும் கடவுள் செய்து முடிப்பார். அதற்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவர் பயணப்பட வேண்டிய அவசியமில்லை.—ஏசாயா 55:11.
இந்த விஷயத்தைப் புரிந்துகொள்வது பைபிள் காலங்களில் கடினமாக இருந்திருக்கலாம்; ஆகவேதான், பரிசுத்த ஆவியை தனியாக இயங்கும் சக்தி என்று பைபிள் கூறுகிறது. இதை வாசிக்கும்போது, கடவுள் தம்முடைய வல்லமையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதையும் அந்த ஆவி செயல்படும் இடத்திற்கு அவர்தாமே போகவேண்டிய அவசியம் இல்லை என்பதையும் வாசகர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. பரிசுத்த ஆவி ஒரு காரியத்தை செய்து முடித்திருப்பதாக பைபிள் குறிப்பிட்டால், கடவுள்தாமே தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆட்கள் மீது அல்லது பொருட்கள் மீது தம்முடைய வல்லமையை செலுத்தினார் அல்லது செயல்படுத்தினார் என்று அர்த்தம்.
பரிசுத்த ஆவி செயல்படும் விதங்கள்
பரிசுத்த ஆவியை பயன்படுத்தியே உயிருள்ள, உயிரற்ற யாவற்றையும் யெகோவா படைத்தார். (சங்கீதம் 33:6) வன்முறை நிறைந்த, மனந்திரும்பாத ஒரு சந்ததியை ஜலப்பிரளயத்தால் அழிப்பதற்கும் கடவுள் அந்தப் பரிசுத்த ஆவியையே பயன்படுத்தினார். (ஆதியாகமம் 6:1-22) தம்முடைய அருமையான குமாரனின் உயிரை யூத கன்னியான மரியாளின் கருப்பைக்கு மாற்றுவதற்கும் இதே பரிசுத்த ஆவியை கடவுள் பயன்படுத்தினார்.—லூக்கா 1:35.
சில சமயங்களில், எதிரிகளுக்கு முன்பாக சத்தியத்தை தைரியத்தோடும் மன துணிச்சலோடும் பேச பரிசுத்த ஆவி சிலருக்கு வல்லமை அளித்தது. அவர்கள் உயிரே ஆபத்தில் இருக்கையிலும்கூட அவ்வாறு செய்ய உதவியது. (மீகா 3:8) முக்கியமாக தீர்க்கதரிசனங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்தச் சக்தியினால் அநேக ஆண்களும் பெண்களும் விசேஷமான உட்பார்வையை அல்லது புரிந்துகொள்ளுதலை பெற்றனர்; இதைப் பற்றிய பைபிள் பதிவுகளும் அநேகம். எதிர்காலத்தைப் பற்றி எந்த மனிதனாலும் துல்லியமாக அறிவிக்க முடியாது அல்லவா? ஆகவே இது பரிசுத்த ஆவியின் செயல்களில் மிகவும் விசேஷித்த ஒன்றாகும்.—2 பேதுரு 1:20, 21.
இந்த ஆவி தனிப்பட்ட ஆட்களுக்கும் அற்புதமான வல்லமைகளை கொடுக்க முடியும். உதாரணமாக, இந்த வல்லமையின் உதவியால் இயேசு இயற்கையின் சக்திகளை கட்டுப்படுத்தினார், வியாதிகளை குணப்படுத்தினார், மரித்தோரையும்கூட மறுபடியும் உயிருக்கு கொண்டுவந்தார். (லூக்கா 4:18-21; 8:22-26, 49-56; 9:11) பூமி முழுவதும் கடவுளுடைய சாட்சிகளாக இருக்க பூர்வ கிறிஸ்தவர்களை ஒழுங்கமைப்பதிலும் அவர்களுக்கு வல்லமை அளிப்பதிலும் இந்த ஆவியே அதிகம் உதவியது.—அப்போஸ்தலர் 1:8; 2:1-47; ரோமர் 15:18, 19; 1 கொரிந்தியர் 12:4-11.
கடவுளுடைய வல்லமை நம் சார்பில்
இன்று கடவுளுடைய ஊழியர்கள் இந்த எல்லையற்ற சக்தியின் உதவியைப் பெற முடியுமா? நிச்சயமாகவே முடியும்! கடவுளுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் உதவ அவர் பரிசுத்த ஆவியைத் தம் மக்களுக்கு கொடுக்கிறார். சரியான உள்நோக்கத்தோடு, அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் செய்து, ஜெபத்தில் உண்மை மனதோடு கெஞ்சுகிறவர்களுக்கு அவர் தம் ஆவியைத் தருகிறார். (1 கொரிந்தியர் 2:10-16) தடைகள் மத்தியிலும் கடவுளை உண்மையுடன் சேவிக்க அந்த ஆவி அபூரண மனிதர்களுக்கு, “இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை” கொடுத்து உதவ முடியும். ஆகவே கடவுளுடைய ஆவியைப் பெற்று அதைத் தக்கவைத்துக் கொள்வதே கடவுள் பயமுள்ள எல்லாருடைய விருப்பமாகவும் இருக்கவேண்டும் அல்லவா?—2 கொரிந்தியர் 4:7, NW; லூக்கா 11:13; அப்போஸ்தலர் 15:8; எபேசியர் 4:30.
இந்தத் துன்மார்க்கமான உலகத்தில் காணப்படும் அநீதியையும் துன்பத்தையும் முடிவுக்கு கொண்டுவர கடவுள் தம்முடைய செயல்படும் வல்லமையை சீக்கிரத்தில் உபயோகிப்பார். அதன் மூலம், அவப்பெயர் ஏற்படுத்தப்பட்ட தம்முடைய மகா உன்னதமான பெயரை மீண்டும் பரிசுத்தப்படுத்துவார். அப்போது, அதன் பலன்கள் அனைவரும் காணும்படி வெளிப்படையாக இருக்கும்; ஆகவே இந்தப் பரிசுத்த ஆவியால் நித்திய காலத்திற்கும் முழு உலகமும் பயன்பெறும். இவ்வாறு அதன் ஊற்றுமூலருக்கு மகிமையைக் கொண்டுவரும்.—கலாத்தியர் 5:22, 23; வெளிப்படுத்துதல் 21:3, 4.