விண்ணைத் தொடும் கனவு
“‘மேலே போவது கீழே வந்துதானே ஆகவேண்டும்’ என்ற முதுமொழியை, ஆகாயத்தில் பறக்கும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும் அருமையாக படம் பிடித்து காட்டுகின்றன.”
1908, மே 25-ம் தேதி, த நியூ யார்க் டைம்ஸ் பதிப்பாசிரியர் பகுதியில் வெளிவந்த செய்தி இப்படித்தான் அவநம்பிக்கையான குறிப்போடு துவங்கியது. அ.ஐ.மா.-ல், வட கரோலினாவில் இருக்கும் கிட்டி ஹாக்கில் ரைட் சகோதரர்கள் வானில் பறந்து சாதனை படைத்து ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை, இச்செய்தி வெளிவரும்போது. வானத்தில் தோன்ற ஆரம்பித்த புதுவிதமான “பறக்கும் இயந்திரங்களின்” வெற்றியை நம்ப மறுத்த அந்த எழுத்தாளர் சொல்லுகிறார்: “நம்மில் சிலருக்கு பூமியை விட்டு அதிக உயரத்தில் மிதக்க வேண்டும் என்கிற ஆசை அறவே இல்லை.” எதிர்கால தலைமுறையினர் ஒருவேளை விமான பயணத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்பதாக ஒத்துக்கொண்டாலும், “பயணிகளை ஏற்றிச் செல்லும் தொலைதூர விமானங்களைப் பற்றிய மனக்கோட்டை . . . வீண்ஜம்பமே, ஒருக்காலும் நிறைவேறாது” என்பதாக அந்தக் கட்டுரையில் அவர் உறுதியாகக் குறிப்பிட்டார்.
அந்த வாக்கு பொய்த்து போனது! இன்று, ஒவ்வொரு வருடமும் 100 கோடிக்கும் அதிகமானவர்கள் “பயணிகளுக்கான தொலைதூர விமானங்களில்” பறக்கின்றனர். ஆம்! மரம், துணி போன்றவற்றால் கட்டப்பட்ட உறுதியற்ற பறக்கும் ஊர்திகள் ஒரே நூற்றாண்டுக்குள், எழில் மிக்க நேர்த்தியான கம்ப்யூட்டரால் இயங்கும் நவீன ஜெட்லைனர்களாக உருமாறின. இவை நூற்றுக்கணக்கான பயணிகளை சுமந்து கொண்டு விர்...ரென்று பூமியில் இருந்து பத்து கிலோமீட்டர் உயரத்தில் பறக்கின்றன. மிதமாக்கப்பட்ட தட்பவெப்பநிலை வசதியுடைய இந்த விமானங்கள் கண்ணுக்கு எட்டாத தொலைவில் இருக்கும் நாடுகளுக்கும் பயணிகளை கொண்டு போய் சேர்க்கின்றன.
20-ம் நூற்றாண்டில் விமானப் போக்குவரத்து தொழில்நுட்பம், அபார வளர்ச்சி கண்டது. இது, நம் உலகையே மாற்றிவிட்டது. ஆகாயத்தையே தன்வசமாக்க வேண்டும் என்கிற மனிதனின் வேட்கை சில பத்தாண்டுகளுக்கும்—ஏன் சில நூற்றாண்டுகளுக்கும் முன்னே நம்மை கொண்டு செல்கிறது. பூர்வ காலங்களில் இருந்தே, ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்ற மனிதனின் பேராவல் அநேகரை ஆட்டிப்படைத்திருக்கிறது.
[பக்கம் 2, 3-ன் படம்]
லாக்ஹீட் SR-71 ப்ளாக்பேர்ட், மணிக்கு சுமார் 2,200 மைல் வேகத்தில் பறக்கும் உலகின் அதிவிரைவு ஜெட்
[பக்கம் 3-ன் படம்]
மணிக்கு 215 மைல் வேகத்தில், 33 பயணிகளை ஏற்றிச் செல்லும் போயிங் ஸ்ட்ரேடோலைனர் 307, சுமார் 1940
[படத்திற்கான நன்றி]
Boeing Company Archives
[பக்கம் 3-ன் படம்]
ரைட் சகோதரர்களின் “ஃப்ளையர்,” 1903
[படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo