வான்பயண முன்னோடிகள்
“நான் ஒரு பைலட். ‘இயந்திர பறவை’ என்ற தலைப்பைக் கொண்ட மார்ச் 8, 1999 ‘விழித்தெழு!’ இதழை முழுவதுமாக படித்து மகிழ்ந்தேன். ஆனால் எனக்குள் ஒரு கேள்வி. அக்கட்டுரைகளில் ஆல்பர்ட்டூ ஸன்டாஸ்-ட்யூமான்ட்டைப் பற்றி ஏன் எந்த குறிப்பும் இல்லை? ஆரம்ப கால பைலட்களில் அவரும் ஒருவரல்லவா!” —கே.பி., ஐக்கிய மாகாணங்கள்.
“இயந்திர பறவை—சிறகை விரித்தது எப்போது? பத்திரமாக பறக்குமா?” என்ற தலைப்பை தாங்கிவந்த மார்ச் 8, 1999 தமிழ் விழித்தெழு! இதழ், விமான பயணத்தைப் பற்றிய சரித்திர ஏட்டின் சில பக்கங்களை மட்டுமே புரட்டிப் பார்த்தது. அந்தக் கட்டுரை வில்பர் மற்றும் ஆர்வில் ரைட் என்ற அமெரிக்க சகோதரர்களின் சாதனைகளின்மீதே அதிகமான கவனத்தை குவித்தது. என்றாலும், 20-ம் நூற்றாண்டின் விடியலில், பளுவான பறக்கும் இயந்திரங்களில் பறந்து சோதனை நடத்தியவர்கள் இவ்விரு சகோதரர்கள் மட்டுமே அல்லர். வேறுசில வான்பயண முன்னோடிகளைப் பற்றி இப்பொழுது ஆராயலாம்.
• ஆல்பர்ட்டூ ஸன்டாஸ்-ட்யூமான்ட் என்பவர் பிரேஸிலில் மினஸ் ஜெரைஸ் என்ற இடத்தில் ஜூலை 20, 1873-ல் பிறந்தார். அவர் இளம் வயதாக இருந்தபோதே அவருடைய குடும்பம் பாரிஸுக்கு குடிபெயர்ந்தது. அங்கே அவர் இயற்பியல், வேதியியல், இயந்திரங்களின் இயக்கம், மின்சாரம் ஆகியவற்றைப் பற்றி பயின்றார். அவருடைய குறிக்கோளே பறக்க வேண்டும் என்பதுதான். ஆகவே 1898-க்கும் 1905-க்கும் இடைப்பட்ட காலத்தில் 11 வானூர்திகளை அல்லது பலூன்களை உருவாக்கி பறக்கவிட்டார்.
கடைசியாக அக்டோபர் 1906-ல் ஸன்டாஸ்-ட்யூமான்ட், பளுவான ஓர் ஆகாயக் கப்பலில் பறந்து தனது கனவை நனவாக்கினார். ஆரம்பகால விமானங்களை உந்தி ஆகாயத்தில் செலுத்த கேட்டாபுல்ட் (catapult) எனும் விசைப்பொறி தனியே தேவைப்பட்டது. அவற்றை போலல்லாமல், 14-பைஸ் என அழைக்கப்பட்ட ஸன்டாஸ்-ட்யூமான்ட்டின் விமானம் அதன் சொந்த உந்துவிசை அமைப்பை பயன்படுத்தி பறந்தது. ஸன்டாஸ்-ட்யூமான்ட் வடிவமைத்த 60 மீட்டர் நீளமுள்ள 14-பைஸ் என்பதே ஐரோப்பாவில் முதன்முதலில் மோட்டார் சக்தியுடன் வெற்றிகரமாக வானில் பறந்த பளுவான ஆகாயக் கப்பலாக கருதப்படுகிறது.
தொடர்ந்துவந்த வருடங்களில், இந்த விமானம் அழிவுக்கு அழைத்துச் செல்லும் கருவியாக இருந்ததைக் கண்டு ஸன்டாஸ்-ட்யூமான்ட் அதிக கவலையடைந்தார். விமானங்களை போருக்கு பயன்படுத்துவதால் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தம் 1932-ல் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு வழிநடத்தியது என அறிக்கை காட்டுகிறது. எப்படியிருந்தபோதிலும், ஸன்டாஸ்-ட்யூமான்ட் வான ஊர்தியியல் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.
• கஸ்டேவ் வொய்ட்ஹெட் ஜனவரி 1, 1874-ல் ஜெர்மனியிலுள்ள லாய்டர்ஷாவ்ஸன் என்னும் நகரில் பிறந்தார். வானில் பறப்பதில் அவருக்கு இருந்த தீவிரமான ஆர்வத்தின் காரணமாக அவருடைய பள்ளித் தோழர்கள் அவருக்கு ‘ஃபிளையர்’ என்ற பட்டப் பெயரை சூட்டினார்கள். தன் 13-ம் வயதில் கஸ்டேவ் அனாதையானார். தொடர்ந்து வந்த வருடங்களில் ஒவ்வொரு இடமாக மாறிச்செல்ல வேண்டியிருந்தபோதிலும், பறப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் சற்றும் தணியவில்லை. குறுகிய காலத்திற்கு, இளம் கஸ்டேவ் புகழ்பெற்ற ஜெர்மன் விமான ஓட்டியாகிய ஒடோ லிலியென்தால் என்பவரிடம் கற்றார். பின் 1894-ல் அவர் ஐக்கிய மாகாணங்களில் நிரந்தரமாக குடியேறினார்.
மார்ச் 8, 1999 விழித்தெழு! இதழில் குறிப்பிட்டிருந்தபடி, 1901-ல் உலகிலேயே முதன்முதல் தயாரிக்கப்பட்ட கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட பளுவான பறக்கும் இயந்திரத்தில் சிறிது நேரம் பறந்து வொய்ட்ஹெட் சாதனை படைத்தார். இருந்தாலும் இந்தச் சாதனையை மெய்ப்பித்துக் காட்ட எந்த புகைப்படங்களும் இல்லை. ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், விமான பயணத்தின் ஆரம்பகால முன்னேற்றங்களுக்கு பத்திரிகை துறை முக்கியத்துவம் அளிக்கவில்லை. ரைட் சகோதரர்கள் ஆகாயத்தில் பறந்து சாதனை புரிந்தபோதும் இதுவே உண்மையாக இருந்தது. ஏர் என்தூஸியாஸ்ட் என்ற பத்திரிகையின்படி, உண்மையிலேயே “1910-ல்தான், இந்தப் ‘புதிய தொழில் நுட்ப’த்தில் பொது மக்களின் ஆர்வம் கொடுமுடியை எட்டியது. மேலும், மனிதன் பறப்பதன் சாத்தியத்தையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.”
• சாம்யல் பீர்பான்ட் லாங்லி, இவர் வான்கணிப்பாளரும் இயற்பியலாளருமாயிருந்தவர், வாஷிங்டன் டி.சி.-ல் உள்ள ஸ்மித்ஸோனியன் நிறுவனத்தின் செகரட்டரி. 1896-ல் நீராவி சக்தியில் இயங்கும் விமானத்தை உருவாக்கினார். அது பயணிகள் யாருமின்றி எரிபொருள் தீர்ந்துபோகும் முன் 1.2 கிலோமீட்டர் பறந்தது.
சொல்லப்போனால், நீராவி என்ஜின்கள் மிகவும் பளுவானது, இவை பறப்பதற்கு நடைமுறையானதாக இல்லை. ஆகவே லாங்லியின் உதவியாளர் சார்லஸ் எம். மேன்லி, 57 கிலோகிராம் எடையும் 53 ஹார்ஸ்பவரும் கொண்ட ஒரு பொருத்தமான என்ஜினை உருவாக்கினார். பலன்? அதிக பயன்தரும் ஒரு விமானம் உருவானது! லாங்லி அதை ஏரோட்ரோம் என அழைத்தார். அக்டோபர் 7, 1903-ல் லாங்லியின் விமானம், தட்டையான அடிப்பாகத்தைக் கொண்ட ஒரு படகிலிருந்து கேட்டாபுல்ட் மூலம் பறக்கவிடப்பட்டது. அதன் இயக்குமிடத்தில் மேன்லி அமர்ந்திருந்தார். ஆனால் அந்த விமானம் போட்டோமாக் ஆற்றில் மூழ்கிவிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்னால் அவர்கள் எடுத்த மற்றொரு முயற்சியும் அதே போன்ற தோல்வியே கண்டது. ஏமாற்றமடைந்தவராய் லாங்லி தன்னுடைய திட்டத்திற்கும் அத்தோடு முழுக்குப் போட்டுவிட்டார்.
ஆனால், தன்னுடைய தோல்வியின் மத்தியிலும் விமான போக்குவரத்துத் துறையில் மேலும் முன்னேறுவதற்கான முக்கிய படிகளை எடுத்தார் லாங்லி. அவர் இறந்து எட்டு வருடங்களுக்குப்பின், 1914-ல் ஏரோட்ரோமில் அநேக மாற்றங்கள் செய்யப்பட்டு க்ளென் எச். கர்டிஸ் என்பவரால் ஹேமன்ட்ஸ்போர்ட் என்ற கிராமத்தில் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டது.
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விமானங்களை வடிவமைத்து, கட்டும் துறையில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்களில் இவர்கள் வெகு சிலரே. இன்று பெரியவை சிறியவை என பல அளவுகளில் லட்சக்கணக்கான விமானங்கள் ஆகாயத்தை அலங்கரிக்கின்றன. இன்று இந்த விமானங்கள் பவனி வருவதற்கும் அவற்றின் வெற்றிக்கும் காரணம் ஆரம்பகால வான்பயண முன்னோடிகளே!
[பக்கம் 19-ன் படம்]
ஆல்பர்ட்டூ ஸன்டாஸ்-ட்யூமான்டும் அவர் உருவாக்கிய விமானம் “14-பிஸ்”
[படத்திற்கான நன்றி]
Culver Pictures
North Wind Picture Archives
[பக்கம் 20-ன் படம்]
கஸ்டேவ் வொய்ட்ஹெட்டும் பளுவான பறக்கும் இயந்திரத்தின் மாதிரியும்
[படத்திற்கான நன்றி]
Flughistorische Forschungsgemeinschaft Gustav Weisskopf
[பக்கம் 20-ன் படம்]
சாம்வல் பி. லாங்லியும் அவருடைய “ஏரோட்ரோமும்”
[படத்திற்கான நன்றி]
Dictionary of American Portraits/Dover
U.S. National Archives photo