உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 3/8 பக். 4-5
  • “தடை ஏதுமில்லா ஆகாயம்”!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “தடை ஏதுமில்லா ஆகாயம்”!
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வெப்பஆவி பலூனும் “எளிதில் தீப்பற்றும் வாயுவும்”
  • காற்றோடு காற்றாக கலந்து
    விழித்தெழு!—2002
  • பலிவாங்கும் ‘இயந்திரப் பறவைகள்’ பிறக்கும்முன்னே அறியப்பட்டன
    விழித்தெழு!—2007
  • விமானத்தின் ஜனனம்
    விழித்தெழு!—1999
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1992
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 3/8 பக். 4-5

“தடை ஏதுமில்லா ஆகாயம்”!

“மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே, ஆகாயத்தில் பறக்கும் ஆசை இருந்ததென” சரித்திர ஆசிரியர் பெர்டோல்ட் லாஃபர், த ப்ரீஹிஸ்டரி ஆஃப் ஏவியேஷன் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பறப்பதற்கான அபூர்வ சக்தியைப் பெற ராஜாக்களும் கடவுட்களும் முயற்சி செய்தனர். இப்படி வீரதீர சாகஸம் புரிந்தவர்களின் கணக்கிலடங்கா கதைகள் பூர்வ கிரேக்க, எகிப்திய, அசீரிய, கிழக்கத்திய நாடுகளின் புராணக்கதைத் தொகுப்புகளில் உள்ளன. பெரும்பாலும் பறவைகளைப் போல மனிதர்களும் பறந்ததாக ஒவ்வொரு கதையிலுமே சொல்லப்படுகிறது.

உதாரணமாக, இயேசு பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக சொல்லப்படும் அஞ்சாநெஞ்சம் கொண்ட ஞானமான பேரரசர் ஷூன் என்பவருடைய சீனக்கதை ஒன்று இருக்கிறது. அந்த கதையின்படி, ஷூன் எரியும் தானிய களஞ்சியத்தின் மேல்கூரையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது, பறவையின் இறகுகளைக் கட்டிக்கொண்டு, தீயிலிருந்து பறந்து தப்பித்துக் கொள்கிறார். கோரைப்புற்களால் ஆகிய இரண்டு பெரிய தொப்பிகளை பாரசூட் போல பயன்படுத்தி உயரமான ஒரு கோபுரத்திலிருந்து அவர் பத்திரமாக தரையில் குதித்ததாக மற்றொரு பதிவு சொல்லுகிறது.

டீடலஸ் என்பவரின் 3,000 ஆண்டு பழங்கதை கிரேக்கர்களுக்கு மத்தியில் பிரபலமான ஒன்று. அவர் சிறந்த ஓவியர், சிறந்த கண்டுபிடிப்பாளரும்கூட. அவரும் அவருடைய மகன் இகாரஸும் சிறைக்கைதிகளாக இருந்த கிரேத்தாவிலிருந்து தப்பித்து செல்வதற்காக சிறகுகள், கெட்டி நூல், மெழுகு போன்றவற்றால் செய்யப்பட்ட இறக்கைகளை கண்டுபிடித்தார். “ஆகாயத்தில் தடை ஏதுமில்லை, அந்த மார்க்கமாய் நாம் செல்வோம்” என்று டீடலஸ் சொன்னார். முதலில், அந்த இறக்கைகள் சரியாகத்தான் வேலை செய்தன. ஆனால், உயர உயர பறக்கும் உற்சாகத்தில் இகாரஸ், வெகு உயர பறந்து சென்றான். அதனால், சூரியனின் சூடு தாங்காமல், அவனுடைய இறக்கைகளை கெட்டியாக இணைத்திருந்த மெழுகு உருகியது. கீழே பரந்து விரிந்திருந்த கடல் அன்னையின் மடியில் தொப்பென்று விழுந்து, அவன் சமாதியானான்.

இப்படிப்பட்ட கதைகள் உண்மையாகவே பறந்து சாதிக்க விரும்பிய தத்துவமேதைகள், கண்டுபிடிப்பாளர்களின் கற்பனாசக்திக்கு வித்திட்டன. பொ.ச. 3-ம் நூற்றாண்டிலேயே, சீனர்கள் காற்றாடிகள் செய்து, சோதனை நடத்தினர். ஐரோப்பாவில் இப்படிப்பட்ட சோதனைகள் செய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே, விமானம் சம்பந்தப்பட்ட சில விதிகளை சீனர்கள் அறிந்திருந்தனர் என்பதை இது காட்டுகிறது. 1420-ல், ஜோவானி டா ஃபான்டானா என்ற வெனிஸைச் சேர்ந்த மருத்துவர், இதேமாதிரி ஒரு சோதனை செய்தார். துப்பாக்கி மருந்தை வெடிக்கச் செய்து, வெறும் மரம், பேப்பரால் செய்த ராக்கெட்டுகளை ஏவினார். சுமார் 1420-ல், ஃபான்டானா எழுதினார்: “மனிதன், செயற்கை இறக்கைகளை கட்டிக்கொண்டு, வானில் பறந்து, மாட மாளிகைகளையும் கூடகோபுரங்களையும், கடல்களையும் கடக்க முடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.”

16-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாழ்ந்த லியானார்டோ டா வின்ஸி ஓவியம் தீட்டுபவர், சிற்பி, திறமைசாலியான இயந்திரப் பொறியாளர். படபடவென அடித்துக்கொள்ளும் இறக்கை நுனிகளைக் கொண்ட கிளைடர்கள், ஹெலிகாப்டர்கள், பாரசூட்டுகள் போன்றவற்றின் அமைப்பை தோராயமாக வரைந்தார். அவர் பறப்பதற்காக திட்டமிட்ட இயந்திரங்கள் சிலவற்றின் மாதிரிகளை அவரே அமைத்தாரென ஆதாரம் சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், டா வின்சியின் எந்த மாதிரியும் நடைமுறைக்கு ஒத்ததாக இல்லை.

அதற்கடுத்து வந்த இரு நூற்றாண்டுகளில், அஞ்சா நெஞ்சம் கொண்ட அநேகர் விண்ணில் பறக்க முயன்றனர். செயற்கை இறக்கைகளை தங்கள் உடம்போடு சேர்த்து கட்டிக்கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் இருந்தும் உயரமான கோபுரங்களில் இருந்தும் ஜிங்கென்று குதித்து ஜிவ்வென்று பறக்க முயன்றனர். இந்த ஆரம்ப கால ‘சோதனை பைலட்டுகள்’ வீரதீர சாகஸம் புரிய விரும்பிய தைரியசாலிகள். ஆனால், அவர்களுடைய இந்தெல்லா முயற்சிகளுமே முற்றிலும் தோல்வியடைந்தன.

வெப்பஆவி பலூனும் “எளிதில் தீப்பற்றும் வாயுவும்”

1783-ல், பறக்கும் விஷயத்தில் ஏற்பட்ட திக்குமுக்காட வைக்கும் அதிசயிக்கத்தக்க சாதனைகள், பாரீஸ், பிரான்ஸின் பல மாவட்டங்களில் பரவின. ஜோஸஃப்-மிஷல், ஸாக்-அட்யென் என்ற சகோதரர்கள் வெப்பக் காற்றின் உதவியினால் தடங்கல்கள் ஏதுமின்றி விண்ணில் விரைவாக பறக்கும் பேப்பரால் செய்யப்பட்ட சிறு பலூன்களை கண்டுபிடித்தனர். வெப்ப ஆவிக்கூண்டுகள் என்றழைக்கப்பட்ட, இந்த பெரிய பலூன்கள், முதலில் பேப்பர் மற்றும் துணியால் ஆனவை. தீயிலிருந்து கிளம்பும் துர்நாற்றம் உடைய புகையால் இவை உப்பின. ஆளில்லாத இந்த பலூன் அதன் துவக்க சோதனையின்போதே 1,800 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சென்றது. 1783, நவம்பர் 21-ம் நாள், பொதுமக்களால் விமான ஓட்டி என்று பெயர் சூட்டப்பட்ட, இரண்டு பயணிகளைக் கொண்ட பலூன் பாரீஸ் மீது 25 நிமிடங்கள் பறந்தது. அதே ஆண்டில், ஸாக் சார்ல் என்னும் மற்றொருவர், முதன்முதலாக வாயு அடைக்கப்பட்ட பலூனை கண்டுபிடித்தார். இதில், “எளிதில் தீப்பற்றும் வாயு” என்று அப்போது அழைக்கப்பட்ட ஹைட்ரஜன் அடைக்கப்பட்டது.

இந்த பலூன் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல வளர்ச்சியடைய, வீரதீர சாகஸம் புரிய விரும்பும் விமான ஓட்டிகளுக்கு ஆகாயம் தடை ஏதுமின்றி பரந்து விரிந்து இருந்தது. 1784-ல், 3,400 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அப்படிப்பட்ட பலூன்கள் பறந்தன. இதற்கு ஒரு வருடத்திற்கு பின், ஸான்-ப்யர்-ஃப்ரான்ஸ்வா ப்ளான்ஷார், ஹைட்ரஜன் பலூன் ஒன்றில் இங்கிலீஷ் கால்வாயை வெற்றிகரமாக கடந்தார். அவர் ஏற்றிச் சென்ற கடிதங்களே ஆகாய மார்க்கமாய் பறந்த முதல் கடிதங்கள். 1862-ல், வானவூர்தி ஓட்டுனர்கள் ஐக்கிய மாகாணங்கள் முழுவதும், மற்றும் ஐரோப்பாவிலும் பயணம் மேற்கொண்டனர். ஐந்து மைலுக்கும் அதிகமான உயரத்தில்.

ஆனால், ஆரம்ப கால விமான ஓட்டிகள் காற்றின் தயவில்தான் பறந்தனர். பலூனின் திசையையும் வேகத்தையும் கட்டுப்படுத்த ஒரு வழியும் இல்லை. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கேசோலின், மின்சக்தியால் இயங்கிய வான ஊர்திகள் (dirigibles) ஆகாயப் போக்குவரத்தை அதிகரித்தன. இவற்றில் காற்றை விட எடை குறைந்த வாயு நிரப்பப்பட்டது. இவை நீளவாக்கில் அமைந்த வான ஊர்திகள் குறைந்த வேகத்தில்—மணிக்கு பத்து முதல் முப்பது கிலோமீட்டர்—வேகத்தில் பறந்தன. மனிதன் “ஆகாயத்திற்கு உயர்ந்து, பல இடங்களை கடக்க” புதிய அணுகுமுறை தேவை என்று டா ஃபான்டானா முன்னறிவித்தார்.

[பக்கம் 4-ன் படம்]

புராணக்கதையில் வரும் டீடலஸ், இகாரஸ்

[பக்கம் 4-ன் படம்]

லியானார்டோ டா வின்ஸி

[படத்திற்கான நன்றி]

From the book Leonardo da Vinci, 1898

[பக்கம் 4-ன் படம்]

மாண்ட்கால்ஃபையர் சகோதரர்கள் முதன்முதலாக வடிவமைத்த, பயணிகளை ஏற்றிச் செல்லும் வெப்ப-ஆவி பலூன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்