உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 3/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தாயை அறியும் முன்னே வலியை அறியும் பிஞ்சுகள்
  • சூப்பர் ஐடியா சூப்பர் கண்டுபிடிப்பு
  • இளமையில் முதுமையை ருசிபார்க்க
  • சரித்திரம் புலனாகிறது
  • சுமையைக் குறைக்கத் தெரிந்த பயணி
  • என் தேனுக்கு வேண்டாம் தேன்
  • ஊசிபோலிருக்க ஊதித்தள்ளுதல்
  • ஆரோக்கியத்திற்கு வெடிவைக்குதே வேலை
  • நாயிடம் வாலாட்ட முடியாது
  • எண் குறியீடுகளுள்ள மிகப் பழமையான வரைபடம்
  • 1999-⁠ல் அறுநூறு கோடியை தாண்டுவோம்
  • தேன் காயத்திற்கு இனிய களிம்பு
    விழித்தெழு!—2002
  • தேன் மனிதனுக்கு தேனீ தரும் பரிசு
    விழித்தெழு!—2005
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2000
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 3/8 பக். 28-29

உலகை கவனித்தல்

தாயை அறியும் முன்னே வலியை அறியும் பிஞ்சுகள்

பச்சிளம் குழந்தைகளுக்கு நம்மைவிட அதிகமாய் வலிக்குமாம். வெகு நேரத்திற்கும் வலி இருக்குமாம். லண்டனின் யூனிவர்ஸிட்டி காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். “பத்து வருடங்களாகத்தான் பச்சைக் குழந்தைகளுக்கு வலிக்கும் என்பதே ஒப்புக்கொள்ளப்படுகிறது” என லண்டனின் த சண்டே டெலிகிராஃப் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. முன்பெல்லாம் குறைமாத குழந்தைகளுக்கு, பயங்கர வலியை ஏற்படுத்தும் சிகிச்சைகளையும் ஆபரேஷன்களையும் மயக்க மருந்து கொடுக்காமலேயே செய்துவந்தனர். இப்போதோ, அப்படிப்பட்ட சிகிச்சைகளால் வெகுகாலத்திற்கு பாதிப்பு இருக்கும், சொல்லப்போனால் குழந்தை வளர்ந்து பெரிதான பிறகும்கூட பாதிப்பு இருக்கும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் வலியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி உடலில் இயற்கையாய் உள்ளது, ஆனால் குறைமாதக் குழந்தைகளுக்கோ அது குறைவுபடுகிறது. அக்குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகையில் அந்த இடம் மாத்திரமல்ல சுற்றியுள்ள பகுதிகளும் வலிக்கும். சிறு காயமாக இருந்தாலும் அது ஆறின பிற்பாடும் வெகுகாலத்திற்கு அந்த இடத்தைத் தொட்டாலே வலிக்கும் என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது.

சூப்பர் ஐடியா சூப்பர் கண்டுபிடிப்பு

வான்கோளவியல் படிக்கும் பல்கலைக்கழக மாணவனுக்கு சூப்பர் ஐடியா உதிக்க, வானவியலாளர்களும் அதற்கு உருகொடுக்க, பிறந்தது புதியதொரு கண்டுபிடிப்பு! ஆம், சூரியமண்டத்திலில்லாத மற்ற நட்சத்திரங்களை வலம்வரும் கிரகங்களின் பட்டியலில் இன்னொன்றும் சேர்ந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள சஸெக்ஸ் பல்கலைக்கழக மாணவனான கெவன் ஆப்ஸ், வானவியலாளர்களான டாக்டர் ஜெஃப்ரி டபிள்யூ. மார்ஸிக்கும் டாக்டர் ஆர். பவுல் பட்லருக்கும் ஒரு ஐடியா கொடுத்தார். இதுவரை ஆராயப்படாத சூரியனைப்போன்ற 30 நட்சத்திரங்களை ஏன் துருவி ஆராயக்கூடாது என்றார். ஏற்கெனவே இதுபோன்ற ஒன்பது கிரகங்களைக் கண்டுபிடித்திருந்த இந்த வானவியலாளர்கள் கிடைத்தது ஐடியாவென களத்தில் குதித்தனர். முயற்சி திருவினையானது. வியாழன் கிரகத்தின் அளவேயுள்ள கிரகம் ஒரு நட்சத்திரத்தை வலம்வருவதைக் கண்டுபிடித்தனர். எந்தெந்த நட்சத்திரங்களை ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுப்பது என்பதற்கு ஆப்ஸ், “லேட்டஸ்ட் சாட்டிலைட் விவரங்களைப் பயன்படுத்தி, கிரகங்கள் இருக்குமென அதிகம் அனுமானித்த நட்சத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்தார்” என டாக்டர் மார்ஸி சொல்கிறார். இந்தக் கண்டுபிடிப்பிற்கு பின், சூரிய மண்டலத்திற்கு வெளியே இருப்பதாய் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கிரகங்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது. இவை அனைத்தும் மூன்று வருட காலப்பகுதிக்குள் கண்டுபிடிக்கப்பட்டவை என த நியூ யார்க் டைம்ஸ் அறிக்கையிடுகிறது.

இளமையில் முதுமையை ருசிபார்க்க

இளமையோடும் துடிப்போடும் இருக்கவே அநேகர் விரும்பினாலும், தள்ளாத வயதின் தள்ளாடும் உணர்வைக் கொடுக்க ஒரு “உடை” தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதாக ஜெர்மன் செய்தித்தாளான டி ஸைட் குறிப்பிடுகிறது. ஆடை தயாரிப்பு ஆலோசனை நிர்வாகத்தினரும் மருத்துவர்களும் ஒன்றுசேர்ந்து படைத்ததுதான் இது. “வயதானவர்களுக்குள் புகுந்து அவர்களின் தள்ளாமையை” புரிந்துகொள்ள நர்ஸுகளுக்கும் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கும் உதவுவதே இந்த உடையின் குறிக்கோள். இதோ உடையின் பாட்டர்ன்: கைகால்களை இஷ்டம்போல் ஆட்டவிடாத பேன்டேஜ்களும் தையல்களும்; தசைகளைத் தொளதொளவென உணரவைக்கும் 14 கிலோ ஈயம்; விரல்களை விறைப்பூட்ட கையுறைகளுள் கெட்டியான குமிழ்கள்; சப்தத்தைக் குறைக்கும் ஹெட்ஃபோன்கள்; கண்பார்வையை 50% மங்கலாக்கும் ஒரு ஸ்கிரீன். “60 வயதாகாத ஒவ்வொருவரும் சில மணிநேரம் இதை அணிந்துகொண்டு நடமாட வேண்டும். அப்போதுதான் வயதான தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே புரிந்துகொள்ளுதல் அதிகரிக்கும்” என டி ஸைட் ஆலோசனை வழங்குகிறது.

சரித்திரம் புலனாகிறது

“பிரிட்டிஷ் வல்லரசை வீழ்த்த வேண்டுமென்ற நெப்போலியனின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நடந்துமுடிந்து இரண்டு நூற்றாண்டுகள் ஓடிவிட்டன; இப்போது இந்த பிரெஞ்சு அரசரின் கப்பற்படை மத்தியதரை விரிகுடாவின் ஆழமற்ற தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” என த டோரன்டோ ஸ்டார் குறிப்பிடுகிறது. 1798-⁠ல் நடந்த நைல் நதிப் போரில் லார்யான் கொடிக் கப்பலையும் லா செர்யூஸ், லா ஆர்டேமிஸ் என்ற கப்பல்களையும் ஹரேஷோ நெல்சன் தலைமையிலான பிரிட்டிஷ் கப்பற்படை மூழ்கடித்தது. பிரெஞ்சு நாட்டு கடல்துறை தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஃப்ராங்க் காடியோ, எகிப்திலுள்ள அலெக்ஸாந்திரியாவின் கரையிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் 11 மீட்டர் ஆழத்தில் இந்தக் கப்பற்படையை கண்டுபிடித்தார். “இங்குதான் ஐரோப்பாவின் தலையெழுத்து எழுதப்பட்டது” என காடியோ சொன்னார்.

சுமையைக் குறைக்கத் தெரிந்த பயணி

நீண்டகாலம் இடம் பெயரும் சில பறவைகளின் சிறுநீரகங்களும், ஈரலும், மற்ற உள்ளுறுப்புகளும் இடப்பெயர்ப்புக்கு முன் சுருங்குகின்றன என நியூ ஸைன்டிஸ்ட் அறிக்கையிடுகிறது. அலாஸ்காவுக்கும் நியூ ஜீலாந்துக்கும் இடையே இடம்பெயரும் விசிறி-வால் காட்விட் (Bar-tailed godwits) பறவைகள் கல் (gull) நீர்ப் பறவைகளின் அளவுக்கு ஒத்தவை. 11,000 கிலோமீட்டர் தூரத்தை ஒரே மூச்சாக நிறுத்தாமல் கடக்கும் இவை, இப்பிரயாணத்தை ஆரம்பிக்கையில் எக்கச்சக்கமாக சாப்பிட்டுவிடுகின்றன. சாப்பிடுவதால் கூடும் எடையை சமாளிக்க, பறவைகள் அவற்றின் ஜீரண உறுப்புகளின் அளவை சுமார் 25 சதவீதம் குறைத்துக்கொள்கின்றன என நெதர்லாந்திலுள்ள க்ரானின்ஜன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான தோனஸ் பிர்ஸ்மாவும் ஐ.மா. ஜியோலாஜிகல் சர்வேயின் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்லும் கண்டுபிடித்துள்ளனர். கில் குறிப்பிடுகிறார்: “உறுப்புகளை போதுமான அளவிற்கு சுருக்கிக்கொள்கின்றன; பிரயாணத்தை முடித்தவுடன் அவை பழைய நிலைக்குத் திரும்ப தேவையான உணவருந்துகின்றன.”

என் தேனுக்கு வேண்டாம் தேன்

தேனில் விட்டமின்களும் கனிமங்களும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் உள்ளன என ஸைன்ஸ் நியூஸ் அறிக்கையிடுகிறது. தேனின் நிறம் எந்தளவு அடர்த்தியாக இருக்கிறதோ அந்தளவு அதிக ஆன்டிஆக்ஸிடன்டுகளும் அதில் உள்ளன. இருந்தாலும் “ஒரு வயதாகாத குழந்தைகளுக்கு தேனை கண்ணில் காட்டவே கூடாது” என யூஸி பெர்க்லி வெல்னஸ் லெட்டர் எச்சரிக்கிறது. கிட்டத்தட்ட 10 சதவீத தேனில் செயலற்ற க்ளோஸ்ட்ரிடியம் பாக்டீரியாக்கள் (Clostridium botulinum) உள்ளன. அவற்றால் குழந்தைகளுக்கு உணவு நஞ்சு (botulism) ஏற்படலாம். “இதனால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சமும் இருக்கலாம் கைமீறியும் போகலாம். சிகிச்சையளிக்கப்படாதபோது படுமோசமான பக்கவாதம் தாக்கலாம், திடீர் மரணமும்கூட ஏற்படலாம்” என வெல்னஸ் லெட்டர் குறிப்பிடுகிறது. வளரும் பிள்ளைகளுக்கோ தேன் ஒன்றும் பண்ணுவதில்லை.

ஊசிபோலிருக்க ஊதித்தள்ளுதல்

“ஒல்லியாயிருக்க வேண்டுமென்ற வெறியால்” டீனேஜ் பெண்கள் புகைபிடிக்கின்றனர் என கனடா நாட்டு செய்தித்தாளான த க்ளோப் அண்ட் மெயில் அறிக்கை செய்கிறது. 10-லிருந்து 17 வயதுக்குட்பட்ட 832 கனடா நாட்டு பெண்களையும் 1,936 பிரிட்டன் நாட்டு பெண்களையும் பேட்டி கண்டபோது, அவர்களில் அநேகர் “சாப்பிடுவதற்கு பதிலாக புகைபிடிப்பதாகவும்” அது பசியைக் குறைப்பதாகவும் கூறினர். “சிகரெட்டை நிறுத்திவிட்டால் எக்கச்சக்கமாக சாப்பிட ஆரம்பித்துவிடுவோம், அப்புறம் பூசணிக்காய்போல் பெருத்துப்போக வேண்டியதுதான்” என அநேக டீனேஜ் பெண்கள் சொன்னார்கள். “மொத்தத்தில் டீனேஜரிடையே புகைத்தல் மிகப் பிரபலமாகியிருப்பதற்குக் காரணம் டீனேஜ் பெண்கள்தான். அதிகமதிகமான பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் தாக்கப்படுவது ஏன் என இது புரியவைக்கிறது” என்பதாய் க்ளோப் குறிப்பிடுகிறது.

ஆரோக்கியத்திற்கு வெடிவைக்குதே வேலை

வேலை பறிபோய்விடுமோ என்ற பயம் உங்கள் உடல்நலத்திற்குக் கேடுண்டாக்கும் என ஸைன்ஸ் நியூஸ் அறிக்கையிடுகிறது. பிரிட்டிஷ் நாட்டில், படைத்துறை சாரா அரசு ஊழியர்கள் 10,000 பேரைக்கொண்டு உடல்நல சுற்றாய்வு ஒன்று நீண்டகாலம் நடத்தப்பட்டது. அவர்களில் 600-⁠க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் தங்கள் இலாகா தனியார் நிறுவனத்திடம் கைமாறப்போகிறது என்ற வதந்திகளை சுமார் 4 வருடங்களாக கேட்டுவந்தனர். நிரந்தர வேலையுள்ள மற்றவர்களோடு ஒப்பிடுகையில், இவ்வகுப்பினரின் ஆரோக்கியம் சராசரியாக குறைந்தது. இவர்களது இரத்த கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தது, இதய ரத்த ஊட்டக்குறை நோய் (ischemic heart disease) ஏற்படும் அபாயம் 40-லிருந்து 60 சதவீதம் உயர்ந்தது. “உடற்பயிற்சி செய்வதை விட்டுவிடுவது, குண்டாவது, 9 மணிநேரங்களுக்கும் அதிகமாய் தூங்குவது, துணையைவிட்டு பிரிவது அல்லது விவாகரத்து செய்வது போன்றவை இவர்களிடையே மளமளவென உயர்ந்தது” என்றும் ஸைன்ஸ் நியூஸ் குறிப்பிடுகிறது.

நாயிடம் வாலாட்ட முடியாது

போதைப்பொருட்களை சாமர்த்தியமாய் கண்டுபிடித்துவிடுவதற்கு ஒரு நாய்க்கு எது தேவை? எல்லாவற்றோடும்கூட, மிஞ்ச முடியாத மோப்ப சக்தியும், “கவனக்கூர்மையும்” தேவை என நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை விவரிக்கிறது. “ஏர்போர்ட்டிலோ துறைமுகத்திலோ உள்ள ஆரவாரத்தால் கொஞ்சமும் கவனத்தை இழந்துவிடாமல் போதைப்பொருட்களை தேடுவதிலேயே குறியாக இருப்பதுதான் நல்ல துப்பறிவாளனுக்கு அழகு” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பொதுவாய் தபால்கள் மணிக்கணக்காய் சோதனையிடப்பட்டாலும், “நாய்கள், வைத்த கண் வாங்காமல் அவ்வளவு கூர்மையாய் கவனிப்பதால், ஒரு பெரிய லெட்டர் மூட்டையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் . . . அரை கிராம் ஹெரோயின்கூட . . . அவற்றின் மூக்கிலிருந்து தப்புவதில்லை.” 1993-⁠ல் ஆரம்பிக்கப்பட்ட நாய்-இனப்பெருக்க திட்டம் அமோக வெற்றி கண்டது. 50 சதவீதத்திற்கும் அதிகமான நாய்கள், ஆஸ்திரேலிய சுங்கவரி இலாகாவில் போதைப்பொருட்களைத் துப்பறியும் சாம்பியன்களாக பணிபுரிய தகுதிபெற்றுள்ளன. இந்நாய்களுக்கு கவனக்கூர்மையோடு பாராட்டு பெற ஆசை, வேட்டை ஆர்வம், பலம், துணிவு ஆகிய குணங்களும் தேவையென கண்டனர், பல காலம் நாய்களை இனப்பெருக்கம் செய்தவர்கள்.

எண் குறியீடுகளுள்ள மிகப் பழமையான வரைபடம்

சீன தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், 2,300 வருடங்கள் பழமையான, பொறிக்கப்பட்ட செம்பு தகடு ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர். எண்களில் தூரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள இது ஒரு வரைபடம் என்பதாய் ஆஸான்ஸ் ப்ரான்ஸ் ப்ரெஸ் அறிக்கையிடுகிறது. இன்றைய வட சீனாவிலுள்ள ஹோபே மாகாணத்தின் ஒரு சிறிய பகுதியைக் காட்டும் இந்த வரைபடம், 1:500 என்ற தோராயமான அளவைப் பயன்படுத்துகிறது. அதில், பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த வாங் ஸ்வா ராஜாவுக்கு சொந்தமான அரச கட்டடங்களும் வரையப்பட்டுள்ளன. சைனாஸ் ஃபொர்பிடன் சிட்டியின் ஆராய்ச்சியாளரான டூ நைஸோங் இப்படிக் குறிப்பிட்டார்: “அது சீனாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான வரைபடம் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பழமையான எண் குறியீடுகளுள்ள வரைபடமும்தான்.”

1999-⁠ல் அறுநூறு கோடியை தாண்டுவோம்

உலக ஜனத்தொகை இவ்வருடத்திற்குள் 600 கோடியைத் தாண்டும் என பிரெஞ்சு செய்தித்தாளான ல மாண்ட் அறிக்கையிடுகிறது. இருந்தாலும் ஜனத்தொகை அதிகரிப்பின் வேகம் குறைந்துவருகிறது. வருடாந்தர அதிகரிப்பு, 1960-களில் இருந்ததைவிட 30 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு ஒரு காரணம், கருத்தடை மாத்திரைகள் அதிகமாய் உபயோகிக்கப்படுவதும் பெண்களுக்கு அதிக கல்வி புகட்டப்படுவதுமே. அந்த அறிக்கையின்படி 15-⁠க்கும் 24-⁠க்கும் இடைப்பட்ட இளைஞர் இப்போது 100 கோடிக்கும் அதிகமாய் உள்ளனர். அதேசமயம் 60 வயதைத் தாண்டியவர்கள் 57.8 கோடிக்கும் அதிகமாய் இருக்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்