மேற்கு ஆப்பிரிக்காவின் அபூர்வமான பென்னி
சியர்ரா லியோனிலிருந்து விழித்தெழு! நிருபர்
இதைப் போன்று தோற்றமளிக்கும் நாணயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இது ஒரு கிஸ்ஸி பென்னி. சியர்ரா லியோனின் ஃபிரீடவுன் தேசிய அருங்காட்சியகத்தில் இந்த நாணயங்களில் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் தகவல் பலகை கூறுகிறது: “ஆர்வத்தைத் தூண்டும் இந்த நாணயமானது சியர்ரா லியோன் மற்றும் லைபீரியாவை தாயகமாக கொண்டிருந்தது. 1945-க்கும் முன்பு இது புழக்கத்தில் இருந்து வந்தது. இது தலையையும் (வளைவானது) காலையும் (கூர்மையானது) அடையாளமாக குறித்தது. ஆகவே இந்த நாணயம் ஒரு ஆவியைக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. ஒரு தலைவர் இறந்துபோனால், நிறைய நாணயங்களை உடைத்து, கல்லறை முழுவதும் ஒட்டித்தீர்த்து விடுவார்கள். இதன் நாணய மாற்று மதிப்பு கடைசியாக 50 கிஸ்ஸி பென்னிக்கு ஒரு மேற்கு ஆப்பிரிக்க ஷில்லிங் என்பதாக இருந்தது.”
முற்காலத்தில் “நீண்ட இரும்புத் துண்டுக”ளைக் கொடுத்து அடிமைகள் வாங்கப்பட்டதாக பாசில் டேவிட்சன் எழுதிய ஆப்பிரிக்கர்களின் அடிமை வியாபாரம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. இதற்கு கிஸ்ஸி பென்னி பயன்படுத்தப்பட்டதா? சில வல்லுநர்கள் ஆம் என்பதாக ஆமோதிக்கிறார்கள். மற்றவர்களோ மறுக்கிறார்கள். அடிமைகளை வாங்குவதற்கு இது பயன்பட்டதோ இல்லையோ சந்தேகமில்லாமல் மனைவிகளை வாங்குவதற்கு பயன்பட்டது.
ஏற்கெனவே குறிப்பிட்டபடி சில சமயங்களில் இந்நாணயங்கள் மதரீதியிலும் பயன்படுத்தப்பட்டன. விசேஷமாக ஆத்துமா அழியாது என்ற வேதப்பூர்வமற்ற நம்பிக்கையின் சம்பந்தமாக. ஒரு நபர் இறக்கும்போது சடலத்தை அவருடைய சொந்த கிராமத்தில் அடக்கம் செய்வதுதான் சரியென கருதப்பட்டது. ஒருவேளை தனது கிராமத்திலிருந்து வெகு தொலைவில் இறந்து விட்டால், சடலத்தை வீட்டிற்கு எடுத்துவருவது அவ்வளவு சுலபம் அல்ல. இப்போது இருப்பதெல்லாம் ஒரே வழிதான். ஒரு கிஸ்ஸி பென்னி கொடுத்து ஆத்துமாவை பயணம் செய்ய வைப்பதுதான்.
இறந்தவரின் உறவினர் மரணம் ஏற்பட்ட கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் மந்திரவாதியை அணுகி, ஒரு பென்னியை பெற்றுக்கொள்கிறார். அம்மந்திரவாதி தனது மந்திர சக்தியின் மூலமாக, இறந்தவருடைய ஆத்துமாவை அந்த நாணயத்தில் ஒட்டவைப்பதாக சொல்லப்படுகிறது. இப்பொழுது உறவினர் ஆத்துமாவை (பென்னியை) வீட்டிற்கு எடுத்துச் செல்லுகிறார். பிறகு தன்னுடைய மூதாதையர்களுக்குச் சொந்தமான கல்லறையில் அதை அடக்கம் செய்கிறார்.
உறவினர் சுத்தமான துணியில் அந்த பென்னியை சுற்றி கட்டிய பின்பு அவருடைய பயணம் ஆரம்பிக்கிறது. இப்பயணம் முழுவதுமாக அவர் மௌன விரதம் இருக்கிறார். வழியில் யாரிடமாவது அவர் பேசினால், மரணம் ஏற்பட்ட அதே கிராமத்திற்கு ஆத்துமா சிட்டுப்போல் பறந்துவிடும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். பிறகு வேறு வழியில்லாமல் உறவினர் மீண்டுமாக ஆத்துமாவை கூட்டிக்கொண்டு வருவதற்காக கிராமத்திற்கு செல்லவேண்டும். சந்தேகமில்லாமல் மந்திரவாதிக்கு இரண்டாவது தடவையாக கட்டணமும் செலுத்தவேண்டும்!
ஆனால் கட்டாயமாக பேசியே ஆகவேண்டுமென்றால், பேசுவதற்கு முன்பாக அந்த பென்னியை பத்திரமாக கீழே வைத்துவிட வேண்டும். ஆனால் தரையில் அல்ல. அந்த பென்னியை மீண்டுமாக கையில் எடுத்துவிட்டால் பழையபடி மெளன விரதம்தான்.
கிஸ்ஸி பென்னியின் நீளம் 33-லிருந்து 36 சென்டிமீட்டர். ஆகவே இதை பாக்கெட்டில் அல்லது பர்ஸில் வைக்குமளவுக்கு வசதியில்லை. பென்னியை பொட்டணமாக கட்டி, தலையிலே தூக்கிக்கொண்டு போவதற்கு எளிதாக, அந்த காலத்து மக்களுக்கு அதனளவு வசதியாக இருந்தது. பணக்காரர்கள் தங்களுடைய மேல்தளங்களில் பென்னிகளை சேர்த்து வைத்தனர். குறிப்பிட்ட சீதோஷணநிலையில் அந்நாணயங்களில் நீர்த்துளிகள் உருவாகி கீழே சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டும். நீங்கள் உட்கார்ந்திருக்கும் செல்வந்தர் வீட்டில் எவ்வளவு அதிகமாக அந்த “மழைப்பொழிவு” இருக்கிறதோ, அந்தளவுக்கு அங்கு செல்வம் கொழிக்கிறது என்று அர்த்தமாம்.