வாழ்க்கை சரிதை
சீஷராக்கும் வேலை என் வாழ்க்கையை உருவமைத்தது
லினெட் பீட்டர்ஸ் சொன்னபடி
அமெரிக்க கப்பற்படையினர் எங்களை வெளியேற்ற வந்திருந்தார்கள். குறிதவறாமல் சுடுகிற ஒருவன் ஒரு கட்டடத்தின்மேல் நின்றுகொண்டிருந்தான். கப்பற்படையினரோ புல்தரையில் படுத்தநிலையில் சுடுவதற்குத் தயாராக இருந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமை காலை எங்களை ஏற்றிச் செல்வதற்காக ஹெலிக்காப்டர் காத்திருந்தது. அதை நோக்கி விரைகையில், நானும் சக மிஷனரிகளும் எங்களை நாங்களே அமைதிபடுத்திக் கொண்டோம். கணநேரத்தில் நாங்கள் வானில் பறந்தோம். பத்து நிமிடங்களுக்குப் பிறகு, கரையோரமாக நங்கூரமிடப்பட்டிருந்த ஒரு ராணுவ கப்பலில் பத்திரமாக ஏறிவிட்டோம்.
முந்தின இரவு நாங்கள் தஞ்சம் புகுந்திருந்த ஹோட்டலை கலகக்காரர்கள் குண்டுவீசி தகர்த்திருந்த விஷயம் அடுத்த நாள் காலை எங்களுக்குத் தெரியவந்தது. சியர்ரா லியோனில் பல வருடங்களாக நிலவிய உள்நாட்டுக் கலவரம் கடைசியில் பெரிய போராக உருவெடுத்திருந்தது. நாங்களும் அங்கிருந்த அயல்நாட்டவர் அனைவருமே உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டளை பெற்றோம். இப்படி ஒரு நிலைமை எனக்கு ஏன் வந்தது என்பதைச் சொல்கிறேன். கேளுங்கள்!
1966 முதல் கயானா என்றறியப்படும் பிரிட்டிஷ் கயானாவில் நான் வளர்ந்து வந்தேன். 1950-களில் என் சிறுபிராயத்தை ஹாயாகவும் சந்தோஷமாகவும் அனுபவித்தேன். அநேக பெற்றோர் கல்வியை உயர்வாக மதித்தார்கள். பிள்ளைகள் பள்ளியில் நன்கு படிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். “பிள்ளைகளின் கல்விக்காக ஏன் பணத்தை வாரி இறைக்கிறீர்கள்” என்று ஒருமுறை வங்கியின் கிளர்க் ஒருவர் என் அப்பாவிடம் கேட்டது நினைவிருக்கிறது. “சிறந்த கல்வி பெற்றால்தான் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்” என்று அப்பா சொன்னார். பிரபலமான பள்ளிகளில் பயின்றால்தான் சிறந்த கல்வியைப் பெற முடியுமென அப்போது அவர் நினைத்தார். சீக்கிரத்தில் அவருடைய கருத்து மாறவிருந்தது.
எனக்கு 11 வயதாக இருந்தபோது அம்மா யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்கத் தொடங்கினார். அம்மாவும் பக்கத்திலிருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து ராஜ்ய மன்றத்திற்குப் போயிருந்தார்கள். அன்று மாலை அங்குக் கேட்ட விஷயங்களை வைத்து, ‘இதுதான் சத்தியம்’ என்று இருவருமே தீர்மானித்தார்கள். பின்னர், அந்த விஷயங்களைப்பற்றி அருகில் வசித்து வந்த வேறு ஒருவரிடமும் அம்மா பேசினார். சீக்கிரத்தில் அவர்கள் மூவரும் டாஃப்னி ஹாரி (பின்னர் டாஃப்னி பார்ட்), ரோஸ் கஃபீ ஆகிய மிஷனரிகளுடன் படித்து வந்தார்கள். ஒரு வருடத்திற்குள்ளாகவே, அம்மாவும் அவருடைய சிநேகிதிகள் இருவரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஐந்து வருடங்கள் கழித்து, அப்பாவும் ஸெவந்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சிலிருந்து விலகி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டுதல் பெற்றார்.
நானும் என் இரு தங்கைகளும் பத்து பிள்ளைகளில் மூத்தவர்கள். இளைஞர்களாகிய நாங்கள் டாஃப்னி மற்றும் ரோஸ் தங்கியிருந்த மிஷனரி இல்லத்தில் அதிக நேரத்தை சந்தோஷமாகக் கழித்தோம். அப்படிச் செலவிட்ட இனிய பொழுதுகளில் அவர்கள் சொன்ன வெளி ஊழிய அனுபவங்களைக் கேட்டோம். மற்றவர்களுடைய ஆவிக்குரிய நலனில் தளராமல் அக்கறை செலுத்துவதால் வரும் சந்தோஷம் இந்த மிஷனரிகள் முகத்தில் மின்னியதை எங்களால் காண முடிந்தது. அவர்களுடைய முன்மாதிரியே ஒரு மிஷனரியாக வேண்டும் என்ற ஆசையை என்னில் வளர்த்தது.
அதிக கல்வி கற்று வாழ்க்கையில் வெற்றி பெறும் இலக்கை உடைய உறவினர்களும் பள்ளித் தோழர்களும் சூழ்ந்திருக்கையில், முழுநேர ஊழியத்தையே குறியாக வைத்து செயல்பட எனக்கு எது உதவியது? அதுவும், சட்டக் கல்வி, இசை, மருத்துவம் என்று விரும்பிய துறையில் கால்பதிப்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருந்தன. என்றாலும், என் பெற்றோரின் சிறந்த முன்மாதிரியே எனக்குத் தேவையான வழிநடத்துதலை அளித்தது. கற்றுக்கொண்ட சத்தியத்தை அவர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தார்கள், பைபிளை ஊக்கமாகப் படித்தார்கள், யெகோவாவைப்பற்றிக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள்.a அது மட்டுமல்ல, முழுநேர ஊழியர்களை எப்போதும் எங்கள் வீட்டிற்கு அழைத்தார்கள். இந்தச் சகோதர சகோதரிகளிடம் காணப்பட்ட மகிழ்ச்சியும் திருப்தியும் சீஷராக்கும் வேலை என் வாழ்க்கை பாதையையும் உருவமைக்க வேண்டுமென்ற என் ஆசையைப் பலப்படுத்தியது.
எனக்கு 15 வயதானபோது முழுக்காட்டுதல் பெற்றேன். உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்ததும் முழு நேர பயனியர் ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்தேன். முதல்முதலாக ஃபிலோமினா என்பவர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற உதவினேன்; இவர் நர்ஸுக்கு உதவியாளாகப் பணிபுரிந்தார். யெகோவாவை அவர் நேசிக்கத் தொடங்கியதைப் பார்த்ததில் கிடைத்த ஆனந்தம் முழுநேர ஊழியத்தில் தொடர்ந்திருப்பதற்கான ஆர்வத்தை மேன்மேலும் வலுப்படுத்தியது. அரசாங்க நிர்வாகத் துறையில் செயலராக வேலை செய்துவந்த எனக்கு அதற்கு பின் கொஞ்ச நாளில் அதைவிட நல்ல வேலை கிடைத்தது. நானோ அதை மறுத்துவிட்டு பயனியர் சேவையைத் தொடர்ந்து செய்வதற்குத் தீர்மானித்தேன்.
அப்போதும் நான் எங்கள் வீட்டில்தான் வசித்து வந்தேன்; மிஷனரிகளும் தொடர்ந்து எங்களைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய அனுபவங்களைக் கேட்பது எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் மிஷனரியாவதற்கான சாத்தியம் மிகக் குறைவு என்றே தோன்றினாலும், அவர்களுடைய சந்திப்புகள் என் மிஷனரி ஆர்வத்தைக் கிளறிக்கொண்டே இருந்தன. அப்போது மட்டுமல்லாமல் இப்போதும் மிஷனரிகள் கயானாவுக்கு அனுப்பப்படுகிறார்கள். 1969-ல், நியு யார்க்கிலுள்ள புரூக்ளினில் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்தபோது ஆச்சரியத்தில் திளைத்துப்போனேன்.
எதிர்பாராத நியமிப்பு
கிலியட் பள்ளியின் 48-வது வகுப்பில் 21 நாடுகளைச் சேர்ந்த 54 மாணவ மாணவிகள் இருந்தனர். மணமாகாத சகோதரிகள் பதினேழு பேர் இருந்தோம். 37 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அந்த ஐந்து மாதங்களைப்பற்றிய பசுமையான நினைவுகள் இப்போதும் மனதிலிருந்து மறையவே இல்லை. வேதப்பூர்வ சத்தியங்கள் மட்டுமல்லாமல் வருங்கால மிஷனரி வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள், நடைமுறையான ஆலோசனைகள் என கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருந்தன. உதாரணமாக, அறிவுரைகளைப் பின்பற்றுவது, உலகின் புதுப்புது பாணிகளைப் பின்பற்றுவதில் சமநிலையோடிருப்பது, சாதகமற்ற சூழ்நிலைகளிலும் விடாமுயற்சியோடு செயல்படுவது ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன்.
தவறாமல் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை என் பெற்றோர் எப்போதுமே வலியுறுத்தி இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை சரியில்லை என்று சொல்லி கூட்டத்திற்குப் போகாதவர், அடுத்த நாள் மாலை ஒரு பியானோ இசை நிகழ்ச்சிக்கோ ஏதாவது பாட்டு கச்சேரிக்கோ போவதற்காக திடீரென்று உடல்நிலை சரியாகிவிட்டது என்று சொன்னாலும் போக முடியாது. அப்படியிருந்தும், நான் கிலியட் பள்ளிக்குச் சென்றபோது சில காலத்திற்குச் சரிவர கூட்டங்களுக்குப் போகாமல் இருந்தேன். பெத்தேலில் இருந்த டான் ஆடம்ஸ், டாலோராஸ் ஆடம்ஸ் தம்பதியினருடன் சேர்ந்துதான் வழக்கமாகக் கூட்டங்களுக்குப் பயணிப்பேன். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நான் போகாததைக் குறித்து அவர்களிடம் நியாயப்படுத்தப் பார்த்தேன். எவ்வளவு ஹோம்வர்க், அதோடு அறிக்கைகள் வேறு! எப்படி என்னால் தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கும் ஊழியக் கூட்டத்திற்கும் போக முடியும்? கொஞ்ச நேரம் என்னிடம் நியாயமாகக் காரியங்களை எடுத்துப்பேசிவிட்டு, “உன்னுடைய மனசாட்சியே உனக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்” என்று சகோதரர் ஆடம்ஸ் சொன்னார். அவருடைய புத்திமதியை ஏற்றுக்கொண்டு, அன்று முதல் நான் எந்தக் கூட்டத்தையுமே தவறவிடவில்லை. இத்தனை வருடங்களாக, மிகவும் தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் தவிர எக்காரணத்தைக் கொண்டும் கூட்டங்களுக்குச் செல்லாமல் இருந்ததில்லை.
வகுப்பில் கிட்டத்தட்ட பாதி முடிந்த சமயத்தில், மாணவர்களாகிய நாங்கள் எங்கே செல்வதற்கு நியமிப்பைப் பெறுவோம் என்பதைப்பற்றி கற்பனை செய்துகொண்டிருந்தோம். கயானாவில் பிரசங்க வேலை அதிகமாகச் செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே என்னை அங்குதான் அனுப்புவார்கள் என்ற எண்ணத்திலேயே இருந்தேன். ஆனால் நான் திரும்ப அங்கு அனுப்பப்பட மாட்டேன் என்பதை அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதற்குப் பதிலாக நான் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள சியர்ரா லியோனுக்குச் செல்ல நியமிப்பைப் பெற்றேன். வீட்டிலிருந்து வெகு தூரம் சென்று மிஷனரியாக இருக்க வேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்றியதற்காக நான் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்தேன்!
கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள்
அநேக குன்றுகள், மலைகள், விரிகுடாக்கள், கடற்கரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சியர்ரா லியோனைப் பார்த்ததும், சுருங்கச் சொன்னால், “கொள்ளை அழகு” என்பதே முதலாவது என் மனதில் பதிந்த உணர்வு. எனினும், இந்த மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் குடியிருந்தவர்களிடமே அதன் நிஜ அழகு குடிகொண்டிருக்கிறது. அவர்களது அன்பும் தயவும் அயல் நாட்டினரைக்கூட சௌகரியமாக உணர வைக்கிறது. புதிய மிஷனரிகள் தங்கள் வீட்டு ஞாபகத்தின் ஏக்கங்களைத் தணிப்பதற்கு இது பேரளவில் உதவியாக உள்ளது. சியர்ரா லியோனில் உள்ளவர்களுக்குத் தங்களுடைய பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் பற்றி பேசுவதென்றால் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, அந்நாட்டின் முக்கிய மொழியாகிய க்ரியோ மொழியை புதிதாக அங்கு வருபவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்புவார்கள்.
க்ரியோ பேசுகிற மக்கள் மத்தியில் கருத்தாழமான பழமொழிகள் பல உண்டு. உதாரணமாக, குரங்கு உழைக்கிறது, பாபூன் உண்ணுகிறது என்பது ஒரு பழமொழி. விதைக்கிறவரே எப்போதும் அறுவடை செய்வதில்லை என்பதே இதன் அர்த்தம். அநியாயம் பரவியிருக்கும் இன்றைய உலகின் நிலைமையை இது எவ்வளவு சரியாக விளக்குகிறது!—ஏசாயா 65:22.
அங்கு பிரசங்க வேலையும் சீஷராக்கும் வேலையும் இன்பம் தந்தன. பைபிளில் ஆர்வம் காட்டாத ஒருவரைக் காண்பதே அரிது. கடந்து சென்றிருக்கும் பல வருடங்களில், மிஷனரிகளும் நெடுநாளாய் யெகோவாவுக்குச் சேவை செய்பவர்களும், வித்தியாசமான சமுதாய அந்தஸ்தை உடைய, பல்வேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளையோர், முதியோர் அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு உதவியிருக்கிறார்கள்.
மிஷனரி ஊழியத்தில் எனக்கு முதல் கூட்டாளியாக இருந்த அர்லா செயின்ட் ஹில், தளராத உழைப்பாளி. அவர் ஊழியத்தில் ஆர்வமாக செயல்படுவார்; அதே ஆர்வத்தை மிஷனரி இல்லத்தின் வேலைகளைக் கவனித்துக் கொள்வதிலும் காட்டுவார். அக்கம்பக்கத்தாரிடம் பழகுவது, உடல்நிலை சரியில்லாத சாட்சிகளையும் சத்தியத்தில் ஆர்வம் காட்டுவோரையும் போய் பார்ப்பது, முடிந்தபோதெல்லாம் சவ அடக்க ஏற்பாடுகளில் கலந்துகொள்வது போன்ற காரியங்கள் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள எனக்கு உதவினார். வெளி ஊழியத்திற்குப் பிறகு அப்பகுதியில் வசிக்கும் சகோதர சகோதரிகளை சந்தித்துவிட்டுதான் வரவேண்டும்; கொஞ்ச நேரம் மட்டுமே செலவிட முடிந்தாலும் பரவாயில்லை என்பதையும் என் மனதில் பதிய வைத்தார். இவற்றையெல்லாம் செய்ததால், சீக்கிரத்தில் அநேக தாய்களையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் நண்பர்களையும் சம்பாதித்தேன். நான் நியமிப்பைப் பெற்ற இந்த இடமே என் வீடானது.—மாற்கு 10:29, 30.
என்னுடன் சேவை செய்துவந்த சிறந்த மிஷனரிகளுடனும் பலமான நட்பின் பிணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டேன். சியர்ரா லியோனில் 1978-க்கும் 1981-க்கும் இடையில் சேவை செய்த ஆட்னா பெர்டும் நானும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். அதன்பிறகு, கடந்த 24 வருடங்களாக ஷெரல் ஃபர்கஸனும் நானும் ஒன்றாகத் தங்கியிருக்கிறோம். எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர்களில் இவர்கள் இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
உள்நாட்டுப் போரால் வந்த சோதனைகள்
1997-ல், சியர்ரா லியோனில் புதிய கிளை அலுவலக வளாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பின், ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, நாங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளானோம். ஆறு வருடங்களுக்கு முன்னர்தான், லைபீரியாவில் நடந்த போரின் காரணமாக அங்கிருந்த சாட்சிகள் சியர்ரா லியோனுக்குத் தப்பியோடி வந்திருந்தார்கள்; அவர்களுடைய விசுவாசத்தை நாங்கள் மிகவும் மெச்சினோம். சிலர் வெறுங்கையோடு வந்திருந்தார்கள். அவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தினமும் ஊழியத்தில் ஈடுபட்டார்கள். யெகோவாவுக்கும் மக்களுக்கும் அவர்கள் காண்பித்த அன்பு எங்களை மிகவும் நெகிழ வைத்தது.
இப்போது நாங்களே கினி நாட்டில் அகதிகளாக இருந்ததால், லைபீரிய சகோதரர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி தொடர்ந்து யெகோவாவிடம் நம்பிக்கை வைத்தோம், ராஜ்யம் சம்பந்தமான காரியங்களுக்கு முதலிடம் கொடுத்தோம். ஒரு வருடம் கழித்து, சியர்ரா லியோனுக்குத் திரும்பிப்போக முடிந்தது; ஆனாலும் ஏழே மாதங்களில் போர் மூண்டதால் மீண்டும் அங்கிருந்து வெளியேறி கினிக்கு வரவேண்டியதாயிற்று.
போரிடும் உட்கட்சி பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் கிஸியிலிருந்த எங்கள் மிஷனரி இல்லத்தில் குடியிருப்பதாகவும் எங்கள் சாமான்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன அல்லது நாசமாக்கப்பட்டன என்பதாகவும் கேள்விப்பட்டோம். நாங்களோ சோர்ந்துவிடவில்லை; மாறாக, உயிர் பிழைத்ததற்காக நன்றியுடன் இருந்தோம். எங்களிடம் ஒருசில உடமைகளே மீந்திருந்தன, ஆனாலும் அந்த நிலைமையைச் சமாளித்தோம்.
இரண்டாவது முறை நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, என் தோழியான ஷெரலும் நானும் கினியிலேயே இருந்தோம். இதனால் நாங்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சக மிஷனரிகள் சிலர், தவறுகளைப் பொருட்படுத்தாமல் கற்றுக்கொண்ட பிரெஞ்சு வார்த்தைகளை வைத்து உடனடியாகப் பேச ஆரம்பித்தார்கள். தவறுகளுடன் பேசுவது என்பது எனக்குப் பிடிக்காத விஷயம்; எனவே, பேசியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் மட்டுமே நான் பிரெஞ்சு பேசினேன். எனக்கு இதெல்லாம் ரொம்பவே வருத்தமாக இருந்தது. யெகோவாவைத் தெரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நான் கினியில் இருக்கிறேன் என்பதைத் தினமும் எனக்கு நானே ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
படிப்பது, அந்த மொழியைச் சரளமாகப் பேசுகிறவர்கள் பேசுகையில் கவனித்துக் கேட்பது ஆகியவை மெதுமெதுவாக முன்னேற எனக்கு உதவின. அதுமட்டுமின்றி, சபையில் இருக்கும் பிள்ளைகளும் உதவினார்கள்; ஒளிவுமறைவின்றி நேரடியாக பேசும் இயல்புடைய இப்பிள்ளைகளிடம் பேசுவதும் இவ்விஷயத்தில் முன்னேற எனக்கு உதவியது. பிறகு, எதிர்பாராத விதமாக, யெகோவாவின் அமைப்பிலிருந்து காலத்திற்கேற்ற உதவி கிடைத்தது. வெவ்வேறு மத நம்பிக்கைகளை உடையவர்களிடம் புத்தகங்களையும் சிற்றேடுகளையும் அளிப்பதற்கு ஆலோசனைகள் வழங்குவது மட்டுமல்லாமல், பத்திரிகைகளைக் கொடுப்பதற்கும் செப்டம்பர் 2001-ல் துவங்கி நம் ராஜ்ய ஊழியத்தில் ஆலோசனைகள் தரப்பட்டன. என் தாய்மொழியில் பேசும் அளவுக்கு காரியங்களைத் துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாவிட்டாலும் இப்போது என்னால் ஊழியத்தில் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் பேச முடிகிறது.
அநேகருடன் சேர்ந்து வாழும்போது அனுசரித்துப் போவதற்குப் பெரிய குடும்பத்தில் வளர்ந்த அனுபவம் கைகொடுத்தது. ஒருமுறை மிஷனரி இல்லத்தில் 17 பேர் இருந்தோம். என்னுடைய 37 வருட மிஷனரி ஊழியத்தில் 100-க்கும் அதிகமான மிஷனரிகளுடன் தங்கியிருக்கிறேன். வித்தியாசமான சுபாவமுள்ளவர்கள் என்றாலும் ஒரே நோக்கத்திற்காகவே உழைக்கிற பலரைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! கடவுளின் உடன் வேலையாளாக இருப்பதிலும் பைபிள் சத்தியத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதைக் காண்பதில் பங்கு வகிப்பதிலும்தான் எத்தனை மகிழ்ச்சி!—1 கொரிந்தியர் 3:9.
நான் மிஷனரியாகச் சேவை செய்துவந்திருக்கும் சமயத்தில், என் தம்பி தங்கைகள் பெரும்பாலோரின் திருமணங்கள் போன்ற என் சொந்த குடும்பத்தில் நடந்த முக்கியமான அநேக வைபவங்களில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. என் உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளை நான் விரும்பிய அளவுக்கு என்னால் சந்திக்கவும் முடியவில்லை. என் பங்கிலும் என்னை மிஷனரி ஊழியத்தில் தொடருவதற்குச் சுயநலமின்றி உற்சாகப்படுத்திய என் குடும்பத்தினர் தரப்பிலும் அதிக தியாகம் உட்பட்டிருக்கிறது.
என்றாலும், சொந்த வீட்டில் இழந்ததை மிஷனரி ஊழியத்தில் அவ்வப்போது பெற்று வந்திருக்கிறேன். மணமாகாமல் இருக்க தெரிவு செய்தபோதிலும், என்னிடம் பைபிள் படித்தவர்கள் மட்டுமல்லாமல் நெருங்கிப் பழகிய நண்பர்களும்கூட என்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகளாக ஆகியிருக்கிறார்கள். இதோடுகூட, அவர்களுடையப் பிள்ளைகள் வளர்ந்து, மணம் முடித்து, தங்கள் பிள்ளைகளைச் சத்திய பாதையில் வளர்ப்பதையும் கண்டிருக்கிறேன். சீஷராக்கும் வேலை என் வாழ்க்கையை உருவமைத்ததைப் போலவே அவர்களில் சிலருடைய வாழ்க்கையையும் உருவமைத்தது.
[அடிக்குறிப்பு]
a 25 வருடங்களுக்கும் மேலாக அம்மா பயனியர் ஊழியம் செய்தார்கள். அப்பா ஓய்வுபெற்ற பிறகு துணைப் பயனியர் செய்தார்.
[பக்கம் 15-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மேற்கு ஆப்பிரிக்காவின் சியர்ரா லியோனுக்கு அனுப்பப்பட்டேன்
கினி
சியர்ரா லியோன்
[பக்கம் 13-ன் படம்]
1950-களில் என்னுடன் சேர்ந்து மிஷனரிகளுடன் இனிய பொழுதுகளைக் கழித்த என் இரு தங்கைகள்
[பக்கம் 14-ன் படம்]
கிலியட்டின் 48-வது வகுப்பில் சக மாணவர்களுடன்
[பக்கம் 16-ன் படம்]
சியர்ரா லியோனில் கிளை அலுவலகப் பிரதிஷ்டை