உலகை கவனித்தல்
தாய்ப்பாலுக்கு நிகரேது?
“தாய்ப்பாலே எல்லா மருந்துகளிலும் தலைசிறந்தது. சரியான மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து தாய்ப்பாலை குடிக்கும் பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. அதோடு அலர்ஜி, தொற்றுநோய் முதல் வயிற்றுப்போக்கு, தோல்வியாதி, நிமோனியா வரை எல்லா வகையான நோய்களால் தாக்கப்படும் அபாயத்தையும் குறைக்கிறது” என்பதாக நியூஸ்வீக் பத்திரிகை சொல்லுகிறது. அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ கழகமும் உணவு கூட்டமைப்பும் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்படி தாய்மார்களை வற்புறுத்துகின்றன. “தனிச்சிறப்பு வாய்ந்த இந்த ஊற்றுமூலம் பெருமளவில் கண்டும் காணாமல் விடப்படுகிறது” என்பதாக நியூஸ்வீக் குறிப்பிடுகிறது. காரணம் என்ன? தாய்ப்பால் சம்பந்தமான தவறான தகவல்களே. குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான தாய்ப்பால் தங்களிடம் சுரப்பதில்லை என்று சில தாய்மார்கள் கவலைப்படுகின்றனர். வேறுவகையான உணவு சீக்கிரத்திலேயே தேவை என்பதாக மற்றவர்கள் கருதுகிறார்கள். “குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு நிறைய தாய்மார்களால் தங்கள் குழந்தைக்கு அவசியமான எல்லா ஊட்டச்சத்துக்களையும் தாய்ப்பால் மூலம் தரமுடியும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திட ஆகாரத்தை சேர்த்து கொடுக்கலாம். குழந்தைகள் வேறு வகையான உணவை சாப்பிட்டாலும் இரண்டு வயது வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் கொழுப்பு அமிலங்களையும் (fatty acids) பெறமுடியும்” என்பதாக அக்கட்டுரைக் குறிப்பிடுகிறது. தாய்மார்களுக்கும் இதில் நன்மைகள் இருக்கின்றன: தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்து குறைவாயிருக்கிறது. அதோடு, குழந்தை பிறந்த பிறகு எடை குறைவும் துரிதமாகிறது.
ஏழ்மையே உலக சக்கரவர்த்தி
உலகம் முழுவதும் ஏழ்மையின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது பணக்கார நாடுகளையும் விட்டுவைக்கவில்லை என்பதாக ஐக்கிய நாட்டு சங்கம் அறிக்கை வெளிப்படுத்துவதாக இண்டர்நேஷனல் ஹெரால்டு ட்ரிப்யூன் குறிப்பிடுகிறது. வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவ வசதி போன்ற “மனிதனின் அடிப்படை தேவைக”ளுக்காக, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளிலுள்ள அநேக மக்கள் ஏங்குகிறார்கள். இந்த அறிக்கையின்படி, அமெரிக்க மாகாணத்தின் மக்கள் தொகையில் 16.5 சதவிகிதத்தினர் வறுமையில் வாடுகிறார்கள். பிரிட்டனில் இந்த எண்ணிக்கை 15 சதவிகிதம். தொழில்மயமாக்கப்பட்ட உலகின் பரிதாபகரமான நிலைமை இதோ: 10 கோடி மக்களுக்கு வீடுவாசல் இல்லை, 3.7 கோடி மக்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர், ஏறக்குறைய 20 கோடி மக்களின் “ஆயுள்காலம் 60 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கிறது.”
சாதுவான விலங்கல்ல
“ஆப்பிரிக்காவில் சிங்கமும் காட்டெருமையும் மிகவும் ஆபத்தான மிருகங்கள் என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. இவற்றைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது நீர்யானைதான்” என்பதாக த உவால் ஸ்டீர்ட் ஜர்னல் சொல்லுகிறது. கார்ட்டூன்களிலும் சிறுபிள்ளைகளுக்கான கதைகளிலும் வரும் சிநேகமான, மகிழ்ச்சி ததும்பும் விலங்காக நீர்யானை சித்தரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பொம்மையாகவும் இது பிரபலமாகியிருக்கிறது. இருப்பினும் ஆப்பிரிக்காவில் மற்ற மிருகங்களால் கொல்லப்பட்டவர்களை பார்க்கிலும் நீர்யானையால் கொல்லப்பட்டவர்களே எண்ணிக்கையில் அதிகம். இந்தக் கண்டத்தில், சுற்றுலா வழிகாட்டிகள் குறிப்பிடும் மிகவும் ஆபத்தான இடங்கள் என்ன தெரியுமா? “நீர்யானைக்கும் நீர்நிலைக்கும் இடையே உள்ள பகுதி. அடுத்ததாக, ஒருவேளை நீர்யானைக்கும் அதன் குட்டிக்கும் இடையே உள்ள இடம்தான்.” நீர்யானை பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாகவும் தண்ணீரின் நடுவிலே ஒய்யாரமாக நடமாடுவதைப் போலவும்தான் இருக்கும். ஆனால் தன் எல்லைக்குள் மற்றவற்றை அனுமதிக்காது. அது திடீரென்று அதிர்ச்சியூட்டப்பட்டாலோ அல்லது எதிர்க்கப்பட்டாலோ அவ்வளவுதான், கடும் கோபத்துடன் சீறிப்பாய்ந்து தாக்கும். நீர்யானைகளின் பலத்திற்கு நிகர் அவையே. “ஒரு பைத்தியம் பிடித்த நீர்யானை முதலையை ஒரே கடியில் இரண்டாக ஆக்கிவிடும். ஒரு சிறு படகை பீஸ்பீஸாக கடித்து குதறிவிடும்” என்பதாக சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சொல்லுகிறார். இருப்பினும் நீர்யானை இருக்குமிடத்தில் ஏன் படகு சவாரி செய்ய வேண்டும்? “இவ்விதமாக படகு சவாரி செய்யும்போது ஆற்றின் அழகு, கரையோரத்தில் மிருகங்கள் பவனி ஆகியவற்றைப் பார்ப்பது கண்ணைக் கவரும் காட்சியாக இருக்கிறது. விக்டோரியா நீர்வீழ்ச்சி பாலத்திலிருந்து 110 மீட்டர் கீழே குதிப்பது போன்ற ஆபத்தான பன்ஜீ குதித்தலை காட்டிலும் இப்படிப்பட்ட சவாரிகள் ஓரளவுக்கு ஆபத்து குறைந்தவையே” என்பதாக இந்த வழிகாட்டிகள் கூறுகின்றனர்.
மீறப்படும் மனித உரிமைகள்
“1930-களில், அதாவது இருண்ட காலத்தில் நடந்த கோரமான நிகழ்ச்சிகள் மனிதப் படுகொலைகள் நடக்கவிருப்பதை முன்நிழலாக காட்டின. அவ்வாறே இன்று மனித உரிமைகள் மீறப்படுவதும் மறுபடியும் மனிதப் படுகொலைகள் நடக்கும் என்பதை முன்னறிவிக்கின்றன” என்பதாக மெக்கில் யுனிவர்சிட்டியின் சட்டவியல் பேராசிரியரும் கனடியன் ஹெல்சிங்கி உவாட்ச் க்ரூப்பின் துணை சேர்மேனுமான இர்வின் காட்லர் கூறுவதாக த டோரன்டோ ஸ்டார் அறிவிக்கிறது. ஹெல்சிங்கிலுள்ள மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு 41 நாடுகளில் நடத்திய ஆய்வின் முடிவு, சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களும் விரோதங்களும் பரப்பப்படும் அபாய ஒலியைத் தெளிவாக எழுப்பியிருக்கிறது. இத்தகைய கருத்துக்கள் ஒலிபரப்பு மையங்கள், அரசாங்கத்தின் வெளியீடுகள் போன்றவற்றின் வாயிலாக வெளியிடப்படுகின்றன. இதன் விளைவாக சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதாக அவர் சொல்லுகிறார். இந்த பாணியைக் குறித்து காட்லர் சொன்னார்: “இந்தப் பாடத்தை இரண்டாம் உலகப்போர் கற்றுக்கொடுத்தும் நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.” நாம் காற்றில் பறக்க விட்ட மற்றொரு பாடத்தையும் அவர் குறிப்பிட்டார்: “மனித உரிமைகள் மீறப்படுவது சம்பந்தமாக சமுதாயம் அசட்டையாக இருந்து, மௌனம் சாதிக்கிறது.”
பிள்ளைகள்—யுத்தத்தில் சிக்கிய மொட்டுகள்
“ஐநா-வின் விசேஷ பிரதிநிதி ஓலரா உட்டுன்னுவின் பிரகாரம் யுத்தங்களும் சண்டைச் சச்சரவுகளும் கடந்த பத்தாண்டுகளில் 20 லட்சம் பிள்ளைகளின் உயிரை சூறையாடி, 10 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகளை அநாதைகளாக ஆக்கியிருக்கின்றன. மேலும் 60 லட்சம் பிள்ளைகளை படுமோசமாக காயப்படுத்தி அல்லது உடலை ஊனமாக்கி உள்ளன” என்பதாக ஜெர்மன் தினசரி க்ரிவெனிர் ஷூட்டங் அறிவிக்கிறது. பிஞ்சு மனங்களில் யுத்த வெறியைத் தூண்டும் எல்லா நடவடிக்கைகளையும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் செய்தது. உலகம் முழுவதும் போர்வீரர்களாக பயன்படுத்தப்படுகிற 3,00,000-க்கும் அதிகமான பிஞ்சுகளை பற்றிய கவலை விசேஷமான அக்கறைக்குரியதாக இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கினர் பெண் பிள்ளைகள். அடிக்கடி குழந்தைப் போர்வீரர்கள்தான் தற்கொலைப் படைப்பிரிவில் சேர்ந்து, கடைசியில் தங்களையும் மாய்த்துக்கொள்கின்றனர். புதிதாக நிறுவப்பட்ட அரசுசாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு, இராணுவத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயதை 18-ஆக உயர்த்த சர்வதேச சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறது.
வெப்சைட்டில் வந்த வத்திகன்
இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட்டை திறப்பதற்கு வத்திகன் 1994-ல் ஒப்பந்தம் செய்தது. நேரடியாக பாவ மன்னிப்பை பெறவேண்டுமா? மதம் சம்பந்தமாக பாதிரியாரோடு “ஏதாவது சந்தேகம்” கேட்க வேண்டுமா? கவலையை விட்டுத்தள்ளுங்கள். மதம் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும் இனிமேல் இன்டர்நெட்டிலேயே கிடைக்கும் என்பதாக எல் பைனான்சியிரோ செய்தித்தாள் அறிவிக்கிறது. “சைபர்காத்தலிக்” என்ற சைட்டில் தங்களுக்காக ஜெபம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளலாம். போப் ஞாயிறு பூஜையில் ஆசீர்வாதம் செய்வதையும் நேரடியாக ஒளிபரப்பப்படுவதை பார்க்கலாம். “மதம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவது, விற்பது போன்றவற்றை உட்படுத்தும் விளம்பரங்களும் இருக்கின்றன. ஆனால் சில கத்தோலிக்க வெப்சைட்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. வத்திகனின் வெப்சைட்டை தினமும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 25-க்கும் குறைவே. அதிலும் பெரும்பாலானவை கத்தோலிக்க செய்தி நிறுவனங்களே” என்பதாக எல் பைனான்சியிரோ சொல்லுகிறது.
ருசிகண்ட பூனைகள்
“உலகின் நம்பர் ஒன் கொலையாளி காசநோய்தான்” என்பதாக கேப் டைம்ஸ் செய்தித்தாள் அறிவிக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஏழைகளின் மத்தியில் இந்நோய் காட்டுத்தீயைப் போல படுவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 13,000-க்கும் அதிகமான உயிர்களை இந்நோய் சூறையாடுவதோடு மட்டுமல்லாமல், அநேகரை வேலை செய்ய முடியாமல் வாட்டிவதைக்கிறது. ஆகவே காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவியையும் அளித்து, சிகிச்சைக்கான ஏற்பாட்டையும் செய்துள்ளது அரசாங்கம். ஆனால் வேலை கிடைப்பது படுதிண்டாட்டமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் கட்டுபடியாவதில்லை. எனவே அரசாங்கம் அளிக்கும் உதவித்தொகையை பெறுவதற்காகவே ஒருசில காசநோயாளிகள் சிகிச்சையையே கைவிடுகிறார்கள். இம்மக்கள் “செய்யும் எடுபிடி வேலையால் கிடைக்கும் சம்பளத்தைவிட சுமார் 10 மடங்கு அதிகமான பணத்தை அரசாங்கம் உதவித்தொகையாக வழங்குகிறது. இவ்வளவு பணம் கிடைப்பதை ருசி பார்த்த பிற்பாடு, பேசாமல் நோயாளியாகவே இருப்பதுதான் மிகவும் சிறந்தது என்று அவர்கள் நினைக்கின்றனர்” என்கிறார் தென் ஆப்பிரிக்காவின் காசநோய் சிகிச்சை மையத்தின் இயக்குநர் ரியோ கிரான்ட்.
தூங்கி வழியும் டிரைவர்கள்
“குடிகார டிரைவர்களைப்போல தூங்கி வழியும் டிரைவர்களும் ஆபத்தானவர்கள் என்பதாக சில நிபுணர்கள் கூறுவதாக” அறிக்கையிடுகிறது த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன். “தூங்கி வழியும் டிரைவர்களால் ஏற்படும் விபத்துகளை பற்றி யாருமே கொஞ்சம்கூட கண்டுகொள்வதே இல்லை. இந்த டிரைவர்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக இருக்கின்றனர்.” தங்களுக்கு எப்பொழுது தூக்கம் வரும் என்பதையோ அல்லது தூக்க மயக்கத்தைப் பற்றியோ மக்களால் முன்கூட்டியே சொல்லமுடியவில்லை என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாக த டோரன்டோ ஸ்டார் குறிப்பிடுகிறது. “பசித்தலும் சுவாசித்தலும் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு தூக்கமும் அவசியம்” என்பதாக அமெரிக்காவின் மோட்டார் வாகன போக்குவரத்து பாதுகாப்பின் கூட்டமைப்பினுடைய செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனி ஃபால் கூறுகிறார். “உங்கள் உடம்புக்கு தூக்கம் தேவையெனில் அடுத்த கணமே நீங்கள் தூங்கிவிடுகிறீர்கள்.” ஆகவே டிரைவர்களே! மீண்டும் மீண்டுமாக கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்கிறீர்களா? தூக்கக் கலக்கத்தில் உங்கள் கண்கள் சொக்குகின்றனவா? காரை தாறுமாறாக ஓட்டுகிறீர்களா? “ஜன்னல் கண்ணாடியை மேலும் கீழும் ஏற்றி இறக்குவது அல்லது ரேடியோவின் சப்தத்தைக் கூட்டுவது போன்றவை தூக்கத்தை கலைக்க செய்யப்படும் பொதுவான செயல்கள். ஆனால் அவற்றால் பிரயோஜனமில்லை. கேஃபின் உள்ள பானத்தை குடித்தால் கொஞ்ச நேரத்திற்கு வேண்டுமென்றால் தூக்கம் கலையும். ஆனால் ஒருவருடைய தூக்கத்தின் அவசியத்தை இது எந்தவிதத்திலும் குறைத்திடாது” என்கிறது த டோரன்டோ ஸ்டார். தூங்கி வழியும் டிரைவர்களே! இதோ ஒரு ஆலோசனை: பாதுகாப்பான இடத்தில் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள்.
நாங்கள் இல்லாத இடமில்லை
பூமியில் சாதாரணமாக வாழும் உயிரினம் பாக்டீரியா. அவை எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆழ்கடல்களின் ஆழத்திலும் 60 கிலோமீட்டர் உயர ஆகாயத்திலும் வாழ்கின்றன. உலகிலுள்ள எந்த உயிரினங்களைப் பார்க்கிலும் இவற்றின் மொத்த எண்ணிக்கை அதிகம். அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா யுனிவர்சிட்டியின் விஞ்ஞானிகள் முதன்முறையாக முயற்சி எடுத்து வெளியிட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஐந்தை அடுத்து 30 பூஜ்யங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். லண்டனின் த டைம்ஸ் குறிப்பிடுகிறது: “பாக்டீரியாக்கள் நோய்களை உண்டாக்குகின்றன என்பதாக அநேக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களே நோய்களை உண்டாக்கக்கூடியவை. பூமியில் வாழும் எல்லா மிருகங்களிடம் இருக்கும் பாக்டீரியாக்கள், மொத்த பாக்டீரியாக்களில் வெறும் ஒரு சதவிகிதம்தான். இவற்றில் அநேகம் தீங்கிழைப்பதில்லை. ஆனால் செரிமானம் போன்ற நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியமானவை.” ஆச்சரியகரமாக, கடலுக்கு அடியில் படிந்திருக்கும் மண்டியில் 10 சென்டிமீட்டர் உயரம் வரையிலும், தரைக்குக் கீழே 9 மீட்டர் ஆழத்திலும் 92 முதல் 94 சதவிகித பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. முன்பெல்லாம் இவ்விடங்களில் உயிரினங்கள் இல்லை என கருதப்பட்டது. உலர்ந்த பாக்டீரியாக்களில் பாதி, உயிருக்கு தேவையான தனிமமாகிய கார்பனை கொண்டிருக்கின்றன. “இவை சேகரித்து வைத்திருக்கும் கார்பனின் அளவு, உலகிலுள்ள எல்லா தாவரங்களிலும் உள்ள கார்பன் அளவிற்கு சமமாக இருக்கிறது” என்கிறது த டைம்ஸ்.