எமது வாசகரிடமிருந்து
சுய வைத்தியம் “சுய வைத்தியம்—நன்மையா அல்லது தீமையா?” (ஜூலை 8, 1998) இதழில் தோன்றிய தொடர் கட்டுரைகளால் என் மனம் மகிழ்ச்சியால் பூரித்துப்போனது. மிகவும் அருமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள், கலந்தாலோசிக்கப்படும் பொருளைக் குறித்து சமநிலையான எல்லா கருத்துக்களையும் கொடுத்தன. உலகிலுள்ள அநேக நாடுகளில் நடைமுறையில் பின்பற்றத்தக்க விதமாகவும் இருந்தது. ‘எல்லா சுகவீனங்களுக்கும் மருந்து மாத்திரையே கதி’ என்றில்லாமல் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை பாணியை கொண்டிருக்க வேண்டும்; நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றியதில் நமக்கு தனிப்பட்ட கடமை இருப்பதை வலியுறுத்தி கூறியது மிகச்சிறப்பாக இருந்தது.
ஜே. எம். ஜே., இங்கிலாந்து
சரசமாடுவது “பைபிளின் கருத்து: சரசமாடுவதில் என்ன தவறு?” (ஜூலை 8, 1998) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. மற்ற பெண்களோடு சரசமாடியதால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து, இப்போதுதான் என் குடும்பம் மீண்டு வருகிறது. என்னுடைய குடும்பத்திற்கு விசேஷமாக எனது அன்பான மனைவிக்கு, எவ்வளவு வேதனையை ஏற்படுத்தினேன் என்பதை நான் கண்டுகொள்ளவே இல்லை. எனது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் இதுதான்: “தயவு செய்து நம்முடைய தந்தை யெகோவாவுக்கு செவிகொடுங்கள். பிற பெண்களோடு உறவாடுவதை நிறுத்துங்கள். உதவியை பெற்றுக்கொள்ளுங்கள், யெகோவாவிடம் ஜெபியுங்கள், கெட்ட நடத்தையை விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் தூரமாக ஓடிவிடுங்கள்.”
டி. பி., ஐக்கிய மாகாணங்கள்
சரசமாடுவது சாதாரணமான விஷயம் அல்ல என்பதை இந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது. இதை சாதாரண ஜோக்காக எடுத்துக்கொள்ள முடியாது. எங்களுடைய குடும்பத்தில் இதுவே பெரும் பிரச்சினையாகி, விவாகரத்தில் கொண்டுபோய் விட்டது. குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டது. ஒருசிலருக்கு தங்களுடைய நடத்தையும் பேச்சும் சைகையும் எதிர்பாலினத்தவரை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது புரிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இக்கட்டுரையின் ஆலோசனை உதவும் என்பதாக நான் நம்புகிறேன்.
ஓ. எம்., செக் குடியரசு
இதய வேதனையில் துடித்துக்கொண்டிருக்கும் அநேக சகோதரிகளுக்கு ஆறுதலளிக்கும் தைலமாக இக்கட்டுரை இருந்தது. யெகோவா உள் உணர்ச்சிகளை கண்ணோக்கிப் பார்த்து, நமக்கு ஆறுதலளிக்கிறார் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துகொண்டோம்.
ஏ. எம். பி., ஸ்பெய்ன்
“மனதளவில் உறவு கொள்ளுதல்” என்ற தலைப்பின் கீழ் உள்ள தகவல்கள் எனக்கு புதியதாக இருந்தன. ஒரே பின்னணியை கொண்டிருந்ததன் காரணமாக, என்னுடைய கணவர், சபையிலுள்ள ஒரு சகோதரியோடு மனதளவிலான தொடர்பை வளர்த்துக் கொண்டிருந்தார். எங்களுடைய 17 வருட குடும்ப வாழ்க்கையில் சந்தேகப்படுவதற்கான சிறு துரும்பும் அவரிடத்தில் இல்லை. ஆனால் இப்போது எனக்கு சந்தேகமாக இருந்தது. இதை என் கணவனிடத்தில் எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்தேன். விஷயத்தை அவரிடத்தில் சொன்னபோது ஆரம்பத்தில் சற்று அதிர்ச்சியடைந்தார். பிற்பாடு என் மனதை புரிந்துகொள்ள முயற்சித்தார். என்னையும் எங்களது மூன்று குழந்தைச் செல்வங்களையும் வருத்தமடைய செய்ய விரும்பவில்லை என்று கூறினர். அந்த சகோதரியோடு எல்லா தொடர்புகளையும் உடனடியாக துண்டித்துவிட்டார். இப்போதுதான் என் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.
டி. டி., கனடா
நாஸி கொடுமை “யெகோவாவின் சாட்சிகள்—நாஸி கொடுமையை அஞ்சா நெஞ்சோடு எதிர்கொண்டனர்” (ஜூலை 8, 1998) என்ற கட்டுரையை அதிக ஆர்வத்துடன் வாசித்தேன். நாஸி அரசாங்கத்தோடு யெகோவாவின் சாட்சிகள் ஒத்திணங்கிச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டை நம்புகிறவர்களையும் நம்பாதவர்களையும் நான் கிறிஸ்தவ ஊழியத்தில் சந்தித்திருக்கிறேன். பொய் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் வரலாற்று உண்மைகள் மறைந்திருக்கின்றன. இந்த உண்மைகளை நேர்மையானவர்களுக்கு புரியவைக்க எனக்கு இத்தகவல்கள் உதவி செய்யும்.
ஏ. எஃப்., ஸ்லோவினியா
உங்களுடைய கட்டுரைக்காக நன்றிகள் பல. எனது கணவர் சத்தியத்தில் இல்லை. சில மாதங்களுக்கு முன்பாக விசுவாச துரோகிகளால் பிரசுரிக்கப்பட்ட சில பொய்யான செய்திகளை அவர் கவனித்தார். அப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரத்திற்கு சரியான பதிலடியை இக்கட்டுரைகள் கொடுத்ததற்காக உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
சி. ஜி., ஜெர்மனி
பறவைகளைப் பார்வையிடுதல் எனக்கு ஏழு வயசு ஆகுது. “பறவைகளைப் பார்வையிடுதல்—எல்லாருக்குமே இனியதோர் விருப்ப வேலையா?” (ஜூலை 8, 1998) என்ற கட்டுரை எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. அதுல இருந்த போட்டோ, விளக்கங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. யெகோவா கடவுள் இந்த உலகத்த படு சூப்பரா படைச்சு இருக்கார்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்புக் கொண்டை கொக்குதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அத பாக்றத்துக்கே வினோதமா இருக்கும். நீங்க செஞ்ச ஆராய்ச்சிக்கு நன்றி.
எஃப். சி., இத்தாலி