ஊனமாதல்—ஆபத்தைத் தவிர்க்க வழிகள்
ஊனமாதலை அநேக சமயங்களில் தவிர்க்க முடியும்! கடைக்கோடி இரத்தக் குழாய் நோய் (பிவிடி) உள்ளவர்கள் விஷயத்திலும்கூட இது உண்மை. முந்தைய கட்டுரையில் பார்த்தபடி பிவிடி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் டயாபெடிஸ் ஆகும். a பல சந்தர்ப்பங்களில் டயாபெடிஸைக்கூட கட்டுப்படுத்தலாம் என்பது சந்தோஷமான ஒரு செய்தி அல்லவா?
“இன்சுலின் கொடுக்கப்பட்டாலும் கொடுக்கப்படாவிட்டாலும் டயாபெடிஸ் சிகிச்சையில் உணவுத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது” என தி என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. “டயாபெடிஸ் உள்ளவர்கள் தங்கள் நிலையைப் புரிந்துகொண்டு, உணவுத் திட்டம் பற்றி கவனமாக இருந்து, மருத்துவரின் ஆலோசனைக்கு கீழ்ப்படிந்தால் ஒரு காலை இழக்க வேண்டிய ரிஸ்கை நிச்சயம் குறைக்கலாம்” என நியூ யார்க் மாநகரத்திலுள்ள கிங்ஸ் கௌன்டி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் மார்சல் பயோல் விழித்தெழு!-விடம் கூறினார். இரண்டாவது வகை (Type II) டயாபெடிஸ் உள்ளவர்கள் இந்த ஆலோசனைக்கு செவிகொடுத்தால் காலப்போக்கில் அவர்களுடைய நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதை கவனிக்கலாம். b
உடற்பயிற்சி அத்தியாவசியம்
உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இது, இரத்தத்தில் குளுகோஸ் அல்லது சர்க்கரை அளவு இயல்பான மட்டத்திற்குள் இருக்க உதவுகிறது. பிவிடி இருப்பதாக கண்டறியப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகள் தேவையான பலமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் சீரான இரத்த ஓட்டமும் பெற உடற்பயிற்சி உதவுகிறது. பிவிடி உள்ளவர்கள் நடக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது அவர்களுடைய கால் தசைகளில் ஏற்படும் வலியினால் அவர்கள் அவ்வப்போது நொண்டி நடக்கிறார்கள்; உடற்பயிற்சி செய்வது இந்தப் பிரச்சினையையும் குறைக்கிறது. ஆனாலும் கால்களுக்கு அதிக அழுத்தத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கும் உடற்பயிற்சிகளை அவர்கள் தவிர்க்க வேண்டும். நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், படகு ஓட்டுதல், நீந்துதல், நீரில் செய்யும் உடற்பயிற்சி ஆகியவை பொருத்தமான மற்ற உடற்பயிற்சிகளாகும். உணவுத் திட்டம் அல்லது விசேஷ உடற்பயிற்சி திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்பு ஒருவர், டாக்டரின் ஆலோசனையைக் கட்டாயம் பெறவேண்டும்.
நல்ல ஆரோக்கியம் பெற விரும்பும் எவரும் சிகரெட் பக்கம் திரும்பவே கூடாது. புகைபிடிப்பதால் ஆரம்பமாகும் அல்லது அதிகரிக்கும் வியாதிகளின் நீண்ட லிஸ்டில் ஒன்றுதான் பிவிடி. “கை அல்லது கால் துண்டிக்கப்படுவதற்கு புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணியாகும். சிகரெட் பிடிப்பவருக்கு டயாபெடிஸ் அல்லது பிவிடி இருந்தால் கேட்கவே வேண்டாம்” என டாக்டர் பயோல் கூறினார். எந்தளவு முக்கிய காரணி? “புகைபிடிக்காதவர்களைவிட புகைபிடிப்பவர்கள் மத்தியில் கை அல்லது கால் துண்டிக்கப்படுவது 10 மடங்கு அதிகம்” என கை, கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு கையேடு கூறுகிறது.
பாதிக்கப்பட்ட கை, கால்களை பேணுதல்
பிவிடியால் கால்களுக்கு இரத்த ஓட்டம் குறையலாம், அதனால் நரம்புகள் உணர்ச்சியிழந்து அல்லது மரத்துப்போய் நியுரோபதி என்ற நிலை ஏற்படலாம். இதன் காரணமாக, வெறுமனே படுக்கையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தால்கூட ஒருவருக்கு காயம் ஏற்படலாம். உதாரணமாக, அவர் உபயோகிக்கும் மின் கம்பளம் அல்லது சூடாக்கும் உறை அதிக சூடாகிவிடலாம், அவருக்கு வலி தெரியாதாகையால் பயங்கரமான தீக்காயம்கூட ஏற்படலாம்! இதன் காரணமாக, டயாபெடிஸ் உள்ளவர்கள் இந்தப் பொருட்களை உபயோகிக்கையில் கவனமாய் இருக்க வேண்டுமென தயாரிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட கை, கால்களில் மிக சுலபமாக தொற்றும் ஏற்பட்டுவிடலாம். சிறிய கீறல்கூட, சீழ்ப்புண் அல்லது தசை அழுகுதலில் விளைவடையலாம். ஆகவே கால்களைக் கவனமாய் பாதுகாக்க வேண்டும். சௌகரியமான, கச்சிதமான ஷூக்களை அணிவதும், கால்களையும் பாதங்களையும் சுத்தமாகவும் ஈரமில்லாமல் வைத்திருப்பதும் அவசியம். அநேக மருத்துவமனைகளில், கால்களைப் பாதுகாப்பது பற்றி நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கும் கால் கவனிப்பு மையங்கள் இயங்குகின்றன.
அறுவை சிகிச்சை தேவை என்ற நிலைக்கு பிவிடி முற்றிவிட்டாலும் கை அல்லது கால் துண்டிக்கப்படுவதை தவிர்க்கவே மருத்துவர்கள் முயல்வர். பலூன் ஆன்ஜியோபிலாஸ்டி அதற்கு ஒரு மாற்று வழி ஆகும். இரத்தக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர், பலூன் நுனியுடைய ஒரு குழாயை உள்ளே நுழைப்பார். பிறகு பலூனுக்குள் காற்று செலுத்தும்போது, அது குறுகிய தமனியை விரிவடைய செய்யும். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது மற்றொரு வழியாகும். அது, மோசமடைந்த இரத்தக் குழாய்களை உடலின் மற்ற பகுதிகளிலுள்ள நல்ல குழாய்களால் மாற்றீடு செய்வதாகும்.
ஐம்பத்து நான்கு வயதான பார்பரா, நான்கு வயதிலிருந்தே முதலாவது வகை டயாபெடிஸால் பாதிக்கப்பட்டிருந்தார். முதல் பிரசவத்திற்கு பிறகு அவருடைய கால்களை பிவிடி பாதித்தது. கால்களைத் துண்டித்துவிடும்படி சில மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் பார்பரா, திறமையான ஓர் இரத்தக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணரை தேடி கண்டுபிடித்தார். அவருடைய கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க ஆன்ஜியோபிலாஸ்டி முறையை அந்த மருத்துவர் உபயோகித்தார். ஆன்ஜியோபிலாஸ்டியால் கொஞ்ச நாட்களுக்குத்தான் பயன் இருந்தது. கடைசியில் பார்பரா பைபாஸ் செய்யவேண்டி வந்தது, அதனால் நல்ல பயனும் விளைந்திருக்கிறது. இப்போது அவர் தன் கால்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்கிறார்.
காயங்களைத் தவிருங்கள்
கை அல்லது கால் இழப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணம் காயங்களாகும். நம் உடலில் எந்தப் பகுதியிலும் காயம் ஏற்படமுடியும் ஆதலால் எந்த உடலுறுப்பும் பாதிக்கப்படலாம். இருந்தாலும், உயிரைக் கடவுள் நோக்கும் விதமாக நாமும் நோக்கினால் காயங்கள் ஏற்படும் ரிஸ்கைத் தவிர்க்கலாம். வேலை செய்கையில், வாகனம் ஓட்டுகையில் அல்லது பொழுதுபோக்கும் சமயத்தில் என எந்த நேரமானாலும் சரி கிறிஸ்தவர்கள் தங்கள் உடல்களை கடவுளிடமிருந்து பெற்ற பரிசாகவே கருதவேண்டும். அப்போது, பாதுகாப்பிற்கான எல்லா ஏற்பாடுகளையும் மதிக்க விரும்புவார்கள், முட்டாள்தனமான ரிஸ்க் எதையும் எடுக்கமாட்டார்கள்.—ரோமர் 12:1; 2 கொரிந்தியர் 7:1.
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் தேசங்களில் காயம் ஏற்படும் ரிஸ்க்கைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? அரசாங்கம் ஏற்பாடு செய்யும் கண்ணிவெடி விழிப்புணர்வு திட்டங்கள் அநேக தேசங்களில் அமலில் இருக்கின்றன. “ரிஸ்க் ஏற்படும் நிலையிலுள்ள மக்களுக்கு . . . கண்ணிவெடிகள் நிறைந்த இடத்தில் வாழ்ந்தாலோ வேலைசெய்தாலோ அவற்றிற்கு பலியாகாமல் இருப்பது எப்படி” என இந்தத் திட்டங்கள் போதிக்கின்றன என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் அறிக்கை செய்கிறார்.
“கண்ணிவெடிகள் இருப்பதற்கு மக்கள் பழகிவிட்டால் அஜாக்கிரதையாக இருந்துவிடுகின்றனர். சில சமயங்களில், அப்படிப்பட்ட ஆபத்துகள் விதியின் விளைவே என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள மத நம்பிக்கைகள் [மக்களை] வழிநடத்துகின்றன” என ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால், விதியின் காரணமாகவே விபத்துகள் ஏற்படுகின்றன என்ற எண்ணத்தை கடவுளுடைய வார்த்தை அங்கீகரிப்பதில்லை. அதற்கு மாறாக, எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றே பைபிள் கூறுகிறது.—உபாகமம் 22:8; பிரசங்கி 10:9.
ஆகவே, கவனமாக இருந்து உங்கள் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள நியாயமான படிகளை எடுத்தீர்கள் என்றால் உங்கள் கையை அல்லது காலை இழப்பதை பெருமளவில் குறைக்கலாம். ஆனால் கையை அல்லது காலை ஏற்கெனவே இழந்தவர்களைப் பற்றியென்ன? அவர்களும்கூட உற்சாகமான வாழ்க்கையை வாழ முடியுமா?
[அடிக்குறிப்புகள்]
a இடுப்பிற்கு கீழே மிகவும் இறுக்கமான உடையணிதல், பொருத்தமற்ற ஷூக்கள் அல்லது நீண்ட நேரம் நின்றுகொண்டோ (முக்கியமாய் கால்களை மடக்கி) உட்கார்ந்துகொண்டோ இருந்தால் கால்களில் ஏற்படும் இரத்தக் குழாய் பிரச்சினைகள் ஆரம்பமாகலாம் அல்லது அதிகரிக்கலாம்.
b முதலாவது வகை டயாபெடிஸ் உள்ளவர்கள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டாவது வகை டயாபெடிஸ் (இன்சுலின் இன்ஜெக்ஷ்னை சார்ந்திராத டயாபெடிஸ்) உள்ளவர்கள், உணவுத் திட்டம் மற்றும் உடற்பயிற்சி மூலமாக தங்கள் நிலைமையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அமெரிக்காவிலுள்ள டயாபெடிஸ் நோயாளிகளில் 95 சதவிகிதத்தினருக்கு இரண்டாவது வகை டயாபெடிஸ்தான் உள்ளது.
[பக்கம் 4-ன் படம்]
புகைபிடிப்பது, முக்கியமாய் இரத்தக் குழாய் வியாதி இருப்பவர்களுக்கு ஓர் உறுப்பை இழந்துபோவதற்கான ரிஸ்கை பெருமளவு அதிகரிக்கிறது
[பக்கம் 5-ன் படம்]
இரத்தக் குழாய்கள் ஆரோக்கியமாய் இருக்க பொருத்தமான உடற்பயிற்சியும் நல்ல உணவுத் திட்டமும் உதவுகின்றன