சூறையாடும் சூறாவளியில் இருந்து மீட்கப்படுதல்!
கடந்த வருடம் மிச் என்றழைக்கப்பட்ட சூறாவளி ஏற்படுத்திய நாசங்களே உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளின் இடத்தை ஆக்கிரமித்திருந்தன. இந்தக் கொலைகார சூறாவளியால் சூறையாடப்பட்டவர்களுக்கான நிவாரண பணியில் யெகோவாவின் சாட்சிகள் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனால், அவர்களுடைய வீரச்செயல்களுக்கோ சிறிதே கவனம் செலுத்தப்பட்டது. படுமோசமான சூழ்நிலைகளில், உண்மைக்கிறிஸ்தவமும் சகோதரத்துவமும் எப்படி வெற்றி வாகை சூடமுடியும் என்பதைப் பின்வரும் அறிக்கை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டுகிறது.
அக்டோபர் 22, 1998. தென்மேற்கு கரீபியன் கடலில் உருவானது சூறையாடும் சூறாவளி. வெப்பமண்டலப் பகுதியைச் சார்ந்த குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவெடுத்து, 24 மணிநேரத்திற்குள் புயலாக மாறியது. அதன் சீற்றத்தால் பயமும் வேதனையும் நிறைந்த வடுவாக அழியாப் பெயர் பெற்றது. அதுவே மிச். அது வலுப்பெற்று, வடக்கு நோக்கி நகர்ந்தது. அக்டோபர் 26-ம் தேதி, 5-ஆம் பிரிவு என்று வகைப்படுத்தப்படும் கடும்காற்றோடு கூடிய சூறாவளியாக மாறியது. மணிக்கு 290 கிலோமீட்டர் வேக காற்றோடும் மணிக்கு 320 கிலோமீட்டருக்கும் அதிகமான வேக சூறைக்காற்றோடும்கூடிய சூறாவளியாக இன்னும் தீவிரமடைந்தது.
ஜமைகா, கேமன் தீவுகளை முதலில் தாக்குவதற்கு தயாராக இருந்தது போல் தோன்றியது. ஆனால் அதற்கு பதிலாக மேற்கில் மத்திய அமெரிக்காவின் கடலோரப்பகுதியான பெலிஜ் நோக்கி நேராக சென்றது. அங்கே கரையைக் கடக்காமல், ஹாண்டுராஸின் வடக்கு கடற்கரைக்கு அப்பால் வட்டமிட்டு, அச்சுறுத்திக் கொண்டிருந்தது. திடீரென நகர்ந்து, அக்டோபர் 30-ம் தேதி, ஹாண்டுராஸை தாக்கியது. அது சென்ற பகுதியெல்லாம் நாசமாக்கி, மரணக்காடாக்கியது.
ஹாண்டுராஸை மிச் தாக்குதல்
மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் துவங்கியது. இதுவே மிச் வருகையின் ஆரம்பக்குறி. “அக்டோபர் 31, சனிக்கிழமை, நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு, நடுநடுங்க வைக்கும் பேரிடி போன்ற சத்தம் காதைப் பிளந்தது. அருகில் இருந்த சிறு ஓடை இப்பொழுது சீற்றம்மிக்க நதியாய் மாறி பெருக்கெடுத்து ஓடியது! வீட்டிற்குள் வசமாக மாட்டிக்கொண்டவர்கள் கதற கதற இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன” என்று டெகுசிகால்பா என்ற இடத்தில் வசிக்கும் முழுநேர சுவிசேஷகர் பிக்டோர் ஆபெலார் நினைவுகூருகிறார். அந்த நகரத்தின் மற்றொரு பகுதியில், சாட்சிகளோடு பைபிளை படித்துக்கொண்டிருந்த 8 பேர் உட்பட, குறைந்தபட்சம் 32 பேர் நிலச்சரிவால் கொல்லப்பட்டனர். இருந்தாலும், முழுக்காட்டப்பட்ட சாட்சிகள் ஒருவரும் சாகவில்லை.
ஆபத்தான நெருக்கடிக்கு உதவ, ஹாண்டுராஸின் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டனர். புயலுக்கு ஒதுக்கிடங்களை அமைத்தனர். மேலும், ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகளில் இருந்து வந்த சர்வதேச நிவாரண குழு உடனடியாக பணியில் இறங்கியது. அதைப்போலவே, யெகோவாவின் சாட்சிகளும் நிவாரணப் பணியில் முழுமூச்சாய் இறங்கினர். “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” என்ற பைபிளின் வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்து, செயலில் ஈடுபட்டனர். (கலாத்தியர் 6:10) அவசர நிவாரண குழுக்கள் நிறுவப்பட்டன. கடற்கரையோர பட்டணங்களில் தவித்துக்கொண்டிருப்பவர்களின் நிலையை புரிந்து, சாட்சிகளும் நிவாரணப் பணியில் முனைப்பாய் இறங்கினர்.
“அக்டோபர் 31, சனிக்கிழமை, ஒரு சிறிய படகில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றோம். இரண்டு சகோதரர்கள a எங்களால் மீட்க முடிந்தது. இருந்தாலும், வெள்ளத்தால் சூழப்பட்ட இடத்தில் உள்ள எல்லா சகோதரர்களையும் மீட்க பெரிய படகு தேவை என்பதை உணர்ந்தோம். எனவே, ஒரு நீளமான பெரிய படகில் ஞாயிறு அதிகாலை மறுபடியும் சென்றோம். சபையின் எல்லா அங்கத்தினர்களையும் அவர்களுடைய சில அயலகத்தாரையும் சேர்த்து மொத்தமாக 189 பேரை வெள்ளக்காட்டில் இருந்து மீட்டோம்” என்று எட்கார்டோ ஆகோஸ்டா என்ற சாட்சி சொல்லுகிறார்.
லா ஹுண்டாவிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளில் க்வான் ஆல்பாராடோ என்பவரும் உதவிக்கரம் நீட்டினார். அவர் சொல்கிறார்: ‘காப்பாத்துங்க! காப்பாத்துங்க!’ என்று ஜனங்க அலறத மட்டும்தான் எங்களால கேக்கமுடிஞ்சிது. என்னோட வாழ்க்கையில நான் பாத்த படுபயங்கரமான சம்பவம் இதுதான். சகோதரங்க எல்லாரும் வெள்ளத்துல சிக்கி, தவிச்சிக்கிட்டிருந்தாங்க. நெறைய பேர் வீட்டுமாடியில, கூரைமேல இருந்தாங்க.” மேலும், “எங்களை சுத்தி இருந்த தண்ணி பெரிய சமுத்திரம் மாதிரி இருந்துச்சு. நாங்க எல்லாரும் அழுதுகிட்டிருந்தோம்” என தப்பிப்பிழைத்த மாரியா போனியா சொல்கிறார். ஆனால், மீட்பு பணிகள் வெற்றிகரமாய் முடிந்தன. “எங்கள காப்பாத்தினது மட்டுமில்ல, எங்களுக்கு சாப்பாடு, போட்டுக்க துணிமணிங்க, இருக்க இடமும் பிரதர்ஸ் குடுத்தாங்க” என்று தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவராகிய யூம்பர்டோ ஆல் பாராடோ சொல்கிறார். மேலும், “ ‘என்னோட சர்ச்லேந்து என்னக் காப்பாத்த ஒருத்தர்கூட வரலை. ஆனா, யெகோவாவின் சாட்சிங்க மட்டும்தான் எனக்கு உதவி செஞ்சாங்க’ என்று மீட்குற வேலைங்கள பாத்துக்கிட்டிருந்த ஒருத்தர் சொன்னாரு. யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான மதம்னு அவர் ஆணித்தரமாக இப்போ நம்பறார்!” என்று கூறுகிறார்.
லா லிமா என்ற பட்டணத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு தொகுதி ஒரு வீட்டில் சிக்கிக் கொண்டனர். அவர்களை சுற்றி தண்ணீர் மேலே ஏற ஏற, கூரையில் ஓட்டைப் போட்டு, உத்தரத்திற்கு ஏறினர். “எங்ககிட்ட உணவு ரெண்டு மூணு நாளைக்குமட்டுமே இருந்துச்சு. அது தீந்துப்போனதும், தேங்காய் எடுத்துட்டுவர்றதுக்காக, அவரோட உயிரையும் பொருட்படுத்தாம ஒரு பிரதர் தண்ணில இறங்கினாரு. எங்களோட கவலைய மறக்க, ராஜ்ய பாட்டுகள பாடினோம்” என காபி என்ற பெயருடைய ஒரு சாட்சி சொல்கிறார். “நாங்க பொழைப்போம்ங்கற நம்பிக்கையே எங்களுக்கு இல்ல. நாங்க ஒண்ணா சேந்து இருக்கறது இதுதான் கடைசி தடவன்னு நெனைச்சு எல்லாரும் அழ ஆரம்பிச்சிட்டோம். அதனால, காவற்கோபுரம் என்ற பைபிள் பத்திரிகையை படிக்க தீர்மானிச்சோம்; அதுதான் கடைசியா நாங்க ஒன்னா சேந்து படிக்கிறதுன்னு நெனச்சோம். ஆனா, அந்த படிப்புதான் சகிச்சிக்கறதுக்கு எங்களுக்கு தெம்பு குடுத்துச்சு” என்று ஜ்வான் எனும் உதவி ஊழியர் விவரிக்கிறார். இறுதியாக, மீட்கும் குழுவினர் வந்து காப்பாற்றும்வரை அவ்விதமாக எட்டு நாட்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
உயிரோடு பாதுகாப்பாக இருந்தாலும், வெள்ளத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் கசப்பான சில உண்மைகளை சந்திக்க வேண்டியிருந்தது. “துணிமணிங்க, சாமானுங்க, குடும்ப ஃபோட்டோங்க போன்ற எல்லாத்தையும் இழந்தது ரொம்ப வேதனையா இருக்குது. எங்களோட வீடு முழுசும் சேறும் குப்பையும் ஏன் பாம்புகூட இருந்தது பாக்கவே பயமா இருந்தது!” என லில்யன் எனும் சாட்சி ஒத்துக்கொள்கிறார். இருந்தாலும், மறுபடியும் கிறிஸ்தவ சகோதரத்துவம் நீட்டிய உதவிக்கரம் மதிப்பற்றது. “எங்களுக்கு கைகொடுத்தது கிறிஸ்தவ சகோதரர்களே” என லில்யன் தெரிவிக்கிறார். “சாட்சியாக இல்லாத என்னுடைய கணவர் கேட்டார், ‘அவர்கள் செய்த எல்லா வேலைக்கும் நாம எப்படி பதில் செய்யப்போறோம்?’ சகோதரிகளில் ஒருவர் இவ்விதமாக பதில் கொடுத்தார்: ‘எனக்கு எதுவும் திருப்பிக் குடுக்க வேணாம். நான் உங்களோட சகோதரி!’ ”
மிச்சின் சீற்றத்தில் எல் சால்வடார்
மிச் சூறாவளி மேற்கு திசையில் எல் சால்வடாரை நோக்கி நகர நகர, வலு குன்றியது. ஆனால், அதன் சீற்றம் இன்னும் தணியவில்லை. அந்த சமயத்தில், எல் சால்வடாரில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாட்டிற்காக திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். 40,000-க்கும் அதிகமானோர் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மிச் சூறாவளி எல் சால்வடாரை நெருங்க நெருங்க, எல்லா சகோதரர்களும் மாநாட்டிற்கு வர முடியுமா முடியாதா என்ற கவலை மனதை அரிக்க ஆரம்பித்தது. பயிர்களையும் நெடுஞ்சாலைகளையும் வீடுகளையும் அடித்துக்கொண்டு நதிகள் கரைபுரண்டோடின. காடுகள் அழிக்கப்பட்டதால், மலைகளில் பெரிதளவில் சேற்று வெள்ளங்கள் பெருக்கெடுத்து ஓடின.
நெல்சன் ஃப்ளோரஸ், சிலாங்கெரா பட்டணத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் நடத்தும் கண்காணி. அக்டோபர் 31, சனிக்கிழமை காலை, நதியின் அக்கரையில் கம்பீரமாய் வீற்றிருந்த சிலாங்கெரா, இருந்த இடம் தெரியாமல் போனதே அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து கண்ட முதல் காட்சி! அடித்துச்செல்லப்பட்ட வீடுகள் 500! தன்னுடைய ஆன்மீக சகோதரர்களுடைய உயிருக்கு நேர்ந்த ஆபத்தை எண்ணி, தன்னுடைய சொந்த உயிரையும் பெரிதாக எண்ணாமல், பெருக்கெடுத்தோடும் நதியில் நெல்சன் குதித்தார். “நதியின் அக்கரையை சேர்ந்தேன், சுற்றி முற்றி பார்த்தேன், எங்கே இருக்கிறேன் என்றே எனக்கு புரியவில்லை. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, தினமும் அந்தப் பகுதியை கடந்துதான் சென்றிருக்கிறேன். ஆனால் இப்பொழுதோ பழக்கமான எந்த ஒரு அடையாளத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை!” என நெல்சன் குறிப்பிடுகிறார்.
சிலாங்கெராவில் அன்று இரவு சுமார் 150 பேர் இறந்தனர். அவர்களில், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்துவந்த சில ஆட்களும் இருந்தனர். ஆனால், முழுக்காட்டப்பட்ட சாட்சிகள் எவரும் சாகவில்லை.
மீட்கும் பணிகள் உடனடியாக முடக்கிவிடப்பட்டன. இந்தப் பணிகளை ஏற்பாடு செய்வதில் உதவியாய் இருந்த ஆரிஸ்டெடஸ் எஸ்ட்ராடா கூறுகிறார்: “சிலாங்கெராவிற்கு செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்போதும் அங்கே தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே போனது! மீட்கும் பணியில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய உயிரைக் காத்துக்கொள்வதற்கு, உதவிக்காக கூக்குரல் எழுப்பியவர்களையும் விட்டுவிட்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் காட்சி இன்னும் என் மனக்கண்களில் அப்படியே நிற்கிறது.” இருந்தாலும், சரியான நேரத்தில் எல்லா சகோதரர்களும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ராஜ்ய மன்றங்கள், புயலுக்கு ஒதுக்கிடமாயின. மேலும், காயமுற்றோர், வீடுகளை இழந்தோரின் பட்டியலில் சாட்சிகளுடைய பெயர் இருக்கிறதா என பார்க்க ஆஸ்பத்திரிகளிலும் ஸ்கூல்களிலும் மற்ற இடங்களிலும் சாட்சிகள் தயாராக இருந்தனர். தேவையான பொருட்களை உள்ளூர் சபைகள் உடனடியாக கொடுத்தன.
இருந்தாலும், நிவாரண மையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வது சுலபமான காரியமல்ல. காரின்டோ என்ற பட்டணத்தில் இருந்த சகோதரர்கள், தங்களுடைய நிலங்களில் விளைந்த தானியங்களை ஏற்றிக்கொண்டு, இந்த மையங்களை நோக்கி புறப்பட்டனர். ஆனால், நிலச்சரிவால் அவர்கள் செல்ல வேண்டிய சாலை அடைபட்டிருந்தது. இதற்கு தீர்வு? அடைபட்ட சாலையை தோண்ட ஆரம்பித்தே! முதலில், அவர்கள் செய்வதை சந்தேகக்கண்ணோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், கொஞ்ச நேரத்தில் அவர்களும் சேர்ந்து தோண்ட ஆரம்பித்தனர். சேறு படிந்த நிலையில் காரின்டோ சகோதரர்கள் செல்ல வேண்டிய இடத்தை சென்று அடைந்தனர். ஆனால், சந்தோஷமாக பொருளுதவி செய்தனர்.
உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகம், நிவாரண மையமாக செயல்பட்டது. “ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! உதவிப்பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் ஏராளமாக வந்து சேர்ந்ததால், வாகனங்களை நிறுத்தும் இடத்திலும் கிளை அலுவலகத்தின்முன் உள்ள தெருவிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வாலண்டியர்களை நியமிக்க வேண்டியதாயிற்று” என உதவிப்பொருட்களை விநியோகிப்பதில் உதவிய கிளை அலுவலக ஊழியர் ஹில்பர்டோ சொல்லுகிறார். 25 டன் துணிமணிகளும் 10 டன் உணவுப்பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட்டதாக ஒரு கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. அவற்றைப் பிரித்து அனுப்புவதற்கே ஒரு வாரம் பிடித்தது. இதற்காக 15 வாலண்டியர்கள் வேலை செய்தனர்.
மிச் நிகாராகுவாவை கடத்தல்
மிச், நிகாராகுவாவிற்கு மிக அருகில் கடந்தது. அந்த இடத்திலும் பேய்மழையை கொட்டித் தீர்த்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளும் பாழாக்கப்பட்டன. பாஸால்டெகா பட்டணத்திற்கு அருகில் ஏற்பட்ட சேற்று வெள்ளத்தில் சில கிராமங்கள் முழுவதுமாக சேற்றில் புதைத்தன. 2,000-க்கும் அதிகமான மக்கள் உயிரோடே சமாதி ஆயினர்.
இந்த கோர சம்பவத்தை கேள்விப்பட்ட, நிகாராகுவா சாட்சிகள் உடனடியாக மாபெரும் நிவாரண பணிகளை ஒழுங்கமைத்தனர். தங்களுடைய சகோதரர்களை கண்டுபிடிப்பதற்காகவே கடினமான, ஆபத்தான இந்த இரக்கப்பணிக்கு வாலண்டியர்கள் அனுப்பப்பட்டனர்! இரண்டு குழுக்களாக சாட்சிகள் சென்றனர். லேயோனில் (பாஸால்டெகாவிற்கு தெற்கில் இருக்கும் பட்டணம்) இருந்து ஒரு குழுவும் சிசிகால்பாவில் (வடக்கிலுள்ள பட்டணம்) இருந்து ஒரு குழுவும் பாஸால்டெகாவிற்கு சென்றது. உணவுப் பொருட்கள் அடங்கிய பெரிய மூட்டையை ஒவ்வொருவரும் தூக்கிச் சென்றனர். சாலைகள் எல்லாம் கடந்து செல்ல முடியாதபடி அடைபட்டு கிடக்கின்றனவென மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆட்கள் எச்சரித்தனர். ஆனால், சகோதரர்களோ அதற்கெல்லாம் கொஞ்சமும் தயங்கவில்லை.
நவம்பர் 2, திங்கள் அதிகாலை, லேயோன் பட்டணத்து சகோதரர்கள் ஒரு ட்ரக்கில் உதவிப் பொருட்களை ஏற்றி, வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஒரு பாலம் வரைக்கும் சென்றனர். பிறகு, ட்ரக்கில் இருந்து பொருட்களை இறக்கி, சைக்கிளில் கொண்டு செல்ல தீர்மானித்தனர். சகோதரர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒரு குழு பாஸால்டெகாவிற்கும் மற்றொரு குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெலிகா பட்டணத்திற்கும் செல்ல தீர்மானித்தது. அவர்களுடைய பணியை ஆரம்பிக்குமுன் ஜெபம் செய்தனர். “ஜெபத்திற்கு பிறகு, எங்களுக்கு புதுப்பெலன் கிடைத்ததுபோல் உணர்ந்தோம்” என அவர்களில் ஒருவர் சொல்லுகிறார். அது நிச்சயம் அவர்களுக்கு தேவையே. ஏனெனில், அவர்கள் பெரிய பெரிய பள்ளங்களை தாண்ட வேண்டியிருந்தது. சில சமயங்களில், மேட்டிலிருந்து சேற்றில் கீழ்நோக்கி சரிவில் இறங்கவேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, மற்ற சமயங்களில் சைக்கிளை தோளில் சுமந்துகொண்டு நடக்கவேண்டியிருந்தது. முறிந்து விழுந்த மரங்கள் பாதையை அடைத்துக்கொண்டிருந்தன. சடலங்கள் தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும் கொடூரமான காட்சியையும் அவர்கள் சகிக்கவேண்டி இருந்தது.
ஆச்சரியத்துக்குரிய விஷயம் என்னவென்றால், லேயோன் மற்றும் சிசிகால்பா பட்டணங்களில் இருந்து புறப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பாஸால்டெகாவை அடைந்தனர்! “என்னோட சைக்கிள் டயர் தேஞ்சிபோய் இருந்துச்சு. ஒண்ணு இல்லாட்டி ரெண்டு கிலோமீட்டருக்குத்தான் தாங்கும்னு நான் நெனைச்சேன்” என்று மீட்புக் குழுவில் இருந்த நெர்யோ லோபஸ் சொல்கிறார். ஆனால், எப்படியோ சைக்கிள் தாக்குப்பிடித்தது. திரும்பி வரும்போது இரண்டு டயர்களுமே வெடித்துவிட்டன. எது எப்படி இருந்தாலும் சரி, முதன்முதலில் சென்றடைந்த மீட்புப் பணியாட்கள் சகோதரர்களே. உள்ளூர் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளைப் பார்த்தபோது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! “நாங்கள் பெற்ற ஆதரவுக்கும் உதவிக்கும் நான் யெகோவாவுக்கும் நம்முடைய சகோதரர்களுக்கும் ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். உதவி செய்ய இவ்வளவு சீக்கிரம் நம் சகோதரர்கள் வருவார்கள் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை” என ஒரு சகோதரி சொன்னார்.
வெள்ளத்தால் சூழப்பட்ட பட்டணங்களுக்கு செல்ல மேற்கொள்ளப்பட்ட சைக்கிள் பிரயாணங்களுள் இதுவே முதலாவது. பெரும்பாலான சமயங்களில், முதன்முதலில் சென்றடைந்த மீட்பு பணியாட்கள் நம் சகோதரர்களே. லாரனாகா பட்டணத்தை 16 சகோதரர்கள் சைக்கிளில் சென்றடைந்தது, ஆ எப்பேர்ப்பட்ட காட்சி! இதைப் பார்த்த உள்ளூர் சகோதரர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சில சமயங்களில், 20 கிலோவுக்கும் அதிகமான உதவிப்பொருட்களை தங்கள் முதுகில் சுமந்துகொண்டு சென்றனர். எல் க்வாயாபோ பட்டணத்திற்கு இரு சகோதரர்கள் சுமந்து சென்ற உதவிப்பொருட்களின் எடை, 100 கிலோவுக்கும் அதிகம்! அவருடைய சைக்கிளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒருவர், “சோர்ந்து போகிறவனுக்கு அவர் [“யெகோவா,” NW] பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்” என்ற பைபிள் வசனமாகிய ஏசாயா 40:29-ஐ மனதில் அசைபோட்டுக்கொண்டே போனதால் ஆறுதலைப் பெற்றார்.
டோனாலா பட்டணத்தில் இருக்கும் சாட்சிகள், தங்களுடைய உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்துபோகும் நிலையில் இருப்பதை பொறுப்புள்ள சகோதர்களுக்கு தெரிவிக்க ஒருவரை அனுப்பினார்கள். ஆனால், அவர் அங்கு சென்றபோது ஏற்கெனவே நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுவிட்டன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்! அவர் திரும்ப வீடு வந்து சேர்ந்தபோது, அவருடைய வீட்டில் அவருக்காக உணவு காத்துக்கொண்டிருந்தது. “ஒரு பட்டணத்தில் சாட்சிகளின் குடும்பங்கள் 44 இருந்தன. இருந்தாலும், சகோதரர்கள் தங்களுடைய சாப்பாட்டை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டதால் 80 குடும்பங்களின் பசி தீர்ந்தது” என நிவாரணப் பொருட்களை, சினான்டகா சுற்றியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்வதில் உதவிசெய்த மார்லன் சாவாரியா சொல்கிறார்.
இந்த நிவாரண முயற்சிகள் எல்லாம் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தன. “உங்களிடமிருந்து சில உதவிகளைப் பெறும் நம்பிக்கையில் நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம். . . . வாம்ப்லானில் இருக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் எந்தளவு உதவிசெய்து வருகிறீர்கள் என்று நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கும் ஏதாவது உதவிசெய்ய முடியுமா என்று நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்று வாம்ப்லான் பட்டணத்தின் மேயர் சாட்சிகளுக்கு எழுதினார். யெகோவாவின் சாட்சிகள் உணவு, மருந்து, துணிமணிகள் போன்றவற்றை உடனடியாக அனுப்பிவைத்தனர்.
குவாதமாலாவில் சூறாவளியின் கைவரிசை
ஹாண்டுராஸையும் எல் சால்வடாரையும் விட்டு நகர்ந்த மிச், குவாதமாலாவை சூறையாடியது. குவாதமாலா நகரத்திற்கு தெற்கில் வசிக்கும் சாட்சி, சாரா அகஸ்டீன். சீறிப்பாயும் தண்ணீரின் சப்தம் அவர் தூக்கத்தை கலைத்தது. அவர் வசித்து வந்த குறுகிய பள்ளத்தாக்கு ஆக்ரோஷத்தோடு பாயும் காட்டாறாக மாறியிருந்தது. பைபிள் சத்தியங்களை அயலகத்தாரோடு பேசுவதற்காக அவர் அநேக தடவை அவர்களுடைய வீட்டுக்கதவுகளை தட்டியிருக்கிறார். ஆனால், இப்பொழுது அவள் ஒவ்வொரு கதவாக தட்டியதோ, அவர்கள் எல்லாரையும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்காக! சிறிது நேரத்திற்கு பிறகு சீறி வந்த சேற்று வெள்ளத்தில் அவளுடைய அயலகத்தார் அநேகருடைய வீடுகள் புதையுண்டு போயின. உயிர் தப்பியவர்களுக்கு உதவுவதற்காக, சாரா மண்வெட்டியால் சேற்றை தோண்டி ஏழு சிறு பிள்ளைகளை வெளியே எடுத்தார். சாரா, ஒரு மருத்துவச்சி. அவர் பேறுகாலம் பார்த்த பிள்ளைகளில் ஒன்றும் அதில் அடங்கும். வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இறந்தவர்களுள் ஒருத்தி வில்மா என்ற டீனேஜ் பெண். கொஞ்ச நாட்களுக்கு முன்புதான், சாரா அவளுக்கு பைபிள் புத்தகங்கள் சிலவற்றை கொடுத்திருந்தார்.
மிச் சூறாவளி, வேகம் குறைந்து வலுவின்றிப் போனாலும் தொடர்ந்து பெய்த அடைமழை, பயிர்களையும் பாலங்களையும் வீடுகளையும் பெருமளவில் சேதப்படுத்தியது. யெகோவாவின் சாட்சிகளுடைய குவாதமாலா கிளை அலுவலகத்திற்கு உதவிப்பொருட்கள் அவ்வளவு அதிகமாக வந்து குவிந்ததால், அவற்றில் சிலவற்றை ஹாண்டுராஸில் இருக்கும் சாட்சிகளுக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. நிறைய பாலங்கள் உடைந்திருந்ததாலும் ஏர்போர்ட் வெள்ளக்காடாய் மாறியிருந்ததாலும், உதவிப்பொருட்களை கடல் வழியாய் அனுப்ப வேண்டியதாயிற்று. கிளை அலுவலகத்தில் இருந்து வந்த ஃப்ரேதா ப்ரூன் விவரிக்கிறார்: “27 அடி நீளமுடைய ஃபைபர்க்ளாஸ் படகை வாடகைக்கு வாங்கி, அதில் சுமார் ஒரு டன் உணவுப்பொருட்களையும் மருந்துபொருட்களையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். கொந்தளிக்கும் கடலில் செய்த திகிலூட்டும் பிரயாணத்திற்கு பிறகு, தொப்பலாக நனைந்த நிலையில் ஓமோவா துறைமுகத்தை அடைந்தோம்.”
மிச்—சூறாவளிக்குப்பின்
தென்கிழக்கு மெக்ஸிகோவுக்கு அருகில் மிச் வலுக்குறைய தயாராய் இருந்ததுபோல் தோன்றியது. கடைசி முயற்சியாக வடகிழக்கில் நகர்ந்து, அ.ஐ.மா.-வின் தென் ஃப்ளோரிடாவை தாக்கியது. ஆனால், விரைவில் அது வலுகுன்றியது. அட்லாண்டிக் கடலுக்கே பின்னோக்கி நகர்ந்து, சீக்கிரத்தில் மறைந்தது. நவம்பர் 5-ம் தேதி, புயல் எச்சரிக்கைகள் எல்லாம் முடிவுற்றன.
சில நிபுணர்கள், மிச்சை “கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், மேற்கு அரைக்கோளத்தை தாக்கிய மிகக் கொடிய சூறாவளி!” என அழைத்தனர். அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,000. ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போய்விட்டனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துவிட்டனர் அல்லது அவர்களுடைய வீடுகள் மிக மோசமாக நாசமடைந்துள்ளன. “50 வருடங்களாக, சிறுக சிறுக நாங்கள் கட்டிய எல்லாமே நாசமாய் போய்விட்டன” என ஹாண்டுராஸின் ஜனாதிபதி கார்லோஸ் ஃப்ளோரஸ் ஃபாகூஸா வருந்துகிறார்.
மிச் சூறாவளியால் யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் தங்கள் வீடுகளை இழந்துவிட்டனர். வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோய்விட்டன! இருந்தபோதிலும், அநேகருடைய வீடுகளை பழுதுபார்ப்பதிலும் அல்லது மறுபடியும் கட்டுவதிலும் யெகோவாவின் சாட்சிகள் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
‘கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம் என்பதற்கு சூறாவளி மிச் போன்ற துயர சம்பவங்கள் அச்சந்தரும் நினைப்பூட்டுதல்கள். (2 தீமோத்தேயு 3:1-5) இந்தக் கோளம் முழுவதன் நிர்வாகத்தையும் கடவுளுடைய ராஜ்யம் ஏற்றுக்கொள்ளும்போதுதான், இப்படிப்பட்ட நாசங்களில் இருந்து உண்மையான பாதுகாப்பு வரும். (மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:3, 4) இருந்தபோதிலும், மிச் b சூறாவளியின் நேரடி தாக்குதலால் தங்களில் ஒருவருமே உயிர் இழக்கவில்லை என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் நன்றியுடையவர்களாய் இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறுவதற்கான உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்ததாலும், உள்ளூர் சபைகள் நிவாரணப்பணிகளை நல்லமுறையில் ஒழுங்கமைத்ததாலும் நிறைய பேர் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
கடந்த சில மாதங்களாக, பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த யெகோவாவின் சாட்சிகள், தங்களுடைய ஆன்மீக செயல்களில் வழக்கம் போல் மறுபடியும் ஒழுங்காக ஈடுபடுவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். உதாரணமாக, எல் சால்வடாரில், மிச் சூறாவளி அடித்த ஒருசில நாட்களிலேயே மாவட்ட மாநாடு நடக்கவிருந்தது. சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் மாநாட்டிற்கு செல்ல, ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாட்டிற்கு போய் வருவதற்காக பஸ்களும் தங்குவதற்காக லாட்ஜ்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. வியாதிப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியும் அளிக்கப்பட்டது. அவர்களும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக! அந்த மாநாடு மாபெரும் வெற்றி எனலாம். எதிர்பார்த்ததற்கும் மிக அதிகமான எண்ணிக்கையினர்—46,855 பேர்—ஆஜராயினர். “எங்களுடைய அனுபவத்தால் நாங்கள் கதிகலங்கிப் போனோம். ஆனால், அஸெம்ளி முடிந்து, சகோதரர்களுடைய அன்பை ருசிபார்த்து திரும்பும்போது, முற்றிலும் மாறான மனநிலையோடு வந்தோம்” என மிச் சூறாவளியில் தன்னுடைய வீடு, தொழில் எல்லாவற்றையும் இழந்த சால்வடாரைச் சேர்ந்த சகோதரர் ஹோசே ரிவேரா ஒத்துக்கொள்கிறார். இந்த இடங்களில் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் கூட்டங்களுக்கு வருபவர்களுடைய எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. வெளி ஆட்கள் நம்முடைய நிவாரணப் பணிகளை கவனித்ததன் விளைவே இது.
இந்த அனுபவம், யெகோவாவின் சாட்சிகளைத்தான் பிரமாண்டமான அளவில் பாதித்தது. “இதுமாதிரி எதையும் நான் இதுவரை என் வாழ்க்கையில் அனுபவித்ததே இல்லை. என்னுடைய சகோதரர்களுடைய அன்பையும் பாசத்தையும் உள்ளப்பூர்வமாக உணர்ந்தேன்” என ஹாண்டுராஸில், வெள்ளத்தில் இருந்து தப்பிப்பிழைத்த கார்லஸ் சொல்லுகிறார். ஆம், மிச் சூறாவளி ஏற்படுத்திய நாசங்கள் அனைத்தும் ஒரு நாள் கடந்தகால நிகழ்ச்சிகளாய்விடும். ஆனால், தங்களுடைய சகோதரர்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் கைகளையும் கால்களையும் ஏன் உயிரையும்கூட பணயம் வைத்து, யெகோவாவின் சாட்சிகள் காண்பித்த அன்போ என்றுமே நிலைத்திருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள் பொதுவாக ஒருவரை ஒருவர் “சகோதரர்” மற்றும் “சகோதரி” என்று குறிப்பிடுவர்.
b சூறாவளிக்குப் பின், தொற்றுநோய்கள் அதிகம் பரவின. அதன் விளைவாக, நிகாராகுவாவில் ஒரு சாட்சி இறந்துவிட்டார்.
[பக்கம் 19-ன் பெட்டி/படம்]
அண்டை நாட்டு சாட்சிகள் நீட்டிய உதவிக்கரங்கள்
பெலிஜ் நகரத்தை மிச் சூறாவளி தாக்கும் என வானிலை முன்னறிவிப்பை கேட்ட உடனேயே, அந்நாடே அதன் தாக்குதலை எதிர்ப்பட முஸ்தீபாய் இருந்தது. கடலோரப் பகுதிகளையும் தாழ்வான பகுதிகளையும் விட்டு உடனே வெளியேறும்படி அரசாங்கம் உத்தரவிட்டது. எனவே, யெகோவாவின் சாட்சிகள் தலைநகரமாகிய பெல்மோபானுக்கு சென்றனர். கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் உள்நாடு இது.
நல்ல வேளை, மிச் சூறாவளியின் சீற்றத்தில் இருந்து பெலிஜ் தப்பித்தது. ஆனால், ஹாண்டுராஸ், நிகாராகுவா, குவாதமாலா ஆகிய இடங்களில் இருக்கும் சகோதரர்களுடைய நெருக்கடியான நிலையை கேள்விப்பட்டதும், பெலிஜில் இருக்கும் சகோதரர்கள் உணவு, உடை, சுத்தப்படுத்தப்பட்ட குடி தண்ணீர், பணம் முதலியவற்றை நன்கொடையாக அளித்தனர்.
அருகிலுள்ள நாடுகளில் வாழும் சகோதரர்களும் உடனடியாக உதவிக்கரம் நீட்டியது உண்மையிலேயே முன்மாதிரியாகும். நான்கு பெரிய பெரிய கன்டெய்னர்களில் உணவு, துணிமணிகள், மருந்து போன்றவற்றை கோஸ்டா ரிகாவில் உள்ள சாட்சிகள் அனுப்பினர். பனாமாவில் உள்ள சகோதரர்கள் இந்த உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் பிரிப்பதற்கும் மறுபடி பேக் பண்ணுவதற்கும் நான்கு மையங்களை அமைத்தனர். ஒருசில நாட்களுக்குள், 20,000 கிலோவுக்கும் அதிகமான நிவாரணப்பொருட்கள் வந்து குவிந்தன. “மீட்புப் பணிகள ஒழுங்கமைக்கிறதுல ராணுவந்தான் நம்பர் ஒன் என்று நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆனா, இப்பவோ யெகோவாவின் சாட்சிகள் அந்த இடத்தை பிடித்துவிட்டதை என் கண்கூடா பாக்கறேன்” என்று ஒருவர் குறிப்பிடுகிறார். அவர் ஒரு சாட்சியல்ல. பைபிள் சத்தியங்களை போதிப்பதற்கு சாட்சிகள் இந்த நபரை இப்பொழுது தவறாமல் சென்று சந்திக்கின்றனர்.
நிகாராகுவாவிற்கு உதவிப் பொருட்களை எடுத்து செல்ல ஒரு ட்ரக்கையும் ஒரு டிரைவரையும் (சாட்சியல்ல) வாகன வசதியளிப்பதை தொழிலாக செய்யும் சகோதரர் ஒருவர் ஏற்பாடு செய்தார். பனாமாவிலும் கோஸ்டா ரிகாவிலும் உள்ள அதிகாரிகள் சுங்கவரி ஏதுமின்றி தங்கள் எல்லையைக் கடக்க அனுமதித்தனர். பெட்ரோல் பங்க் ஒன்றில் ட்ரக்கின் இரண்டு டாங்குகளிலும் எண்ணெய் இலவசமாக நிரப்பினர். இது போவதற்கும் வருவதற்கும் போதுமானதாகும்! நிகாராகுவாவிலும் பார்சல்களை சோதனையிடாமல் கடந்து செல்ல சுங்க அதிகாரிகள் அனுமதித்தனர். “இது யெகோவாவின் சாட்சிகளுடையது என்றால், நாங்கள் சோதனையிட வேண்டிய அவசியமே இல்லை” என அவர்கள் சொன்னார்கள். அதோடு “அவர்களோடு எங்களுக்கு எப்போதும் எந்தவிதப் பிரச்சினையுமே இருந்ததில்லை” என்றனர்.
இருந்தாலும், நில வழியாக ஹாண்டுராஸிற்கு செல்வது சாத்தியமல்ல. அதனால், ஹாண்டுராஸ் தூதரகத்தில் வேலை செய்யும் ஒரு கிறிஸ்தவ சகோதரி, உதவிப் பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்தார். அதுவும் இலவசமாக! 10,000 கிலோவுக்கும் அதிகமான பொருட்கள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.
சாட்சிகள் அல்லாத சிலர், சாட்சிகளுடைய நிவாரணப் பணிகளால் மனம் நெகிழ்ந்தனர். சில கம்பெனிகள் அட்டைப் பெட்டிகள், ஸெல்லோ டேப்புகள், பிளாஸ்டிக் பெட்டிகள் போன்றவற்றை நன்கொடையாக வாரி வழங்கின. மற்றவர்கள் பணமும், வாங்கும் பொருட்களுக்கு தள்ளுபடியும் கொடுத்தனர். ஹாண்டுராஸிற்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களை இறக்க, 20-க்கும் அதிகமான சாட்சிகளாக இருக்கும் வாலண்டியர்கள் செய்த உதவியை பனாமா ஏர்போர்ட் சிப்பந்திகள் பார்த்து புல்லரித்து போயினர். அதன் விளைவு அடுத்த நாளே இந்த ஏர்போர்ட் சிப்பந்திகளில் சிலர், அவர்களுக்குள்ளே பணம் திரட்டி, அதைக் நன்கொடையாக கொடுத்தனர்.
[பக்கம் 20-ன் பெட்டி]
வெள்ளத்தால் உருக்குலைந்த மெக்ஸிகோ
மிச் சூறாவளியால் மெக்ஸிகோவிற்கு ஏற்பட்ட நாசம் குறைவே. ஆனால், மத்திய அமெரிக்காவை இந்த சூறையாடும் சூறாவளி தாக்குவதற்கு சில வாரங்களுக்கு முன், சியாபாஸ் மாநிலத்தை வெள்ளம் தாக்கியது. சுமார் 350 சமுதாயங்கள் பாதிக்கப்பட்டன. ஒருசில பட்டணங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.
அந்த இடத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு பல கஷ்டங்களை கொண்டுவந்தது என்பது தெரிந்ததே. இருந்தாலும், உள்ளூர் சபை மூப்பர்கள் உடனடியாக செயல்களில் இறங்கியது சூறாவளி தாக்குதலின் கொடுமையை குறைக்க உதவியது. உதாரணமாக, ஒரு சிறு சமுதாயத்தில், சபை அங்கத்தினர்கள் எல்லாரையும் மூப்பர்கள் சென்று பார்த்தனர். மழை தொடர்ந்து பெய்தால், ராஜ்ய மன்றத்தில் ஒதுங்கிக் கொள்ளும்படி எச்சரித்தனர். அந்த சமுதாயத்தில் இருந்த மிக உறுதியான கட்டிடம் ராஜ்ய மன்றம் ஒன்றே என்று நினைத்தனர். விடியும் நேரம், கரைபுரண்டோடும் இரண்டு நதிகளின் பயங்கரமான வெள்ளத்தால் அந்த பட்டணம் தாக்கப்பட்டது! சாட்சிகளும்—அவர்களுடைய அயலகத்தார் பலரும்—ராஜ்ய மன்றத்திற்கு ஓடி அதன் கூரைமேல் ஏறி, வெள்ளத்தின் சீற்றத்தில் இருந்து தப்பினர். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரும் சாகவில்லை.
அப்படியும், மெக்ஸிகோவில் உள்ள சுமார் 1,000 சாட்சிகள் அரசாங்க புயல் ஒதுக்கிடங்களில் தஞ்சம்புக வேண்டியதாயிற்று. சுமார் 156 சாட்சிகளின் வீடுகள் முழுவதுமாக அழிந்துபோயின. 24 வீடுகள் சேதமடைந்தன. மேலும், ஏழு ராஜ்ய மன்றங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
எனவே, யெகோவாவின் சாட்சிகளுக்கும் அவர்களுடைய அயலகத்தாருக்கும் உதவ ஆறு நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டன. உணவு, துணிமணிகள், கம்பளங்கள், மற்றப் பொருட்கள் விரைவாக விநியோகம் செய்யப்பட்டன. மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளைப் பற்றி உள்ளூர் அதிகாரிகளிடம் எடுத்து சொன்னபோது, அவர்கள் இவ்வாறு பதிலளித்தனர்: “ராணுவத்தால்கூட இந்தளவு விரைவாக பணிகளை செய்ய முடியவில்லை.”
யெகோவாவின் சாட்சிகள் நீண்ட காலமாக நேர்மைக்கு பெயர்பெற்றவர்கள். இது, அவர்களுக்கு நன்மையில் முடிவடைந்திருக்கிறது. உதாரணமாக, ஒரு தொகுதியினர், உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து உதவி கேட்டபோது, அவர்களுடைய சமுதாயத்தில் யெகோவாவின் சாட்சிகள் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அவர்கள் ஆம் என்று பதில் சொன்னபோது, “அவுங்கள்ல யாராவது ஒருத்தரை கூட்டிக்கிட்டு வாங்க, அப்பதான் உதவிப்பொருளயெல்லாம் அவர்கிட்ட குடுக்கமுடியும்!” என்று அதிகாரிகள் சொன்னார்கள்.
“பேரழிவு ஏற்பட்ட போதிலும் சகோதரர்கள் சாதகமான மனப்பான்மையை காட்டினார்கள். பக்கத்து சமுதாயத்திலுள்ள சகோதரர்கள் பலர் எங்களை பலப்படுத்துவதற்காக, அவர்களுடைய உயிரையும் பணயம் வைத்து, உணவு மற்றும் பைபிள் பிரசுரங்களோடு எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். ஆகவே ஏராளமான விஷயங்களுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்ல நாங்கள் கடன்பட்டிருக்கிறோம்” என்று, நடந்த சம்பவங்களை எல்லாம் உள்ளூர் சபை மூப்பர் ஒருவர் சுருக்கமாக எழுதினார்.
[பக்கம் 14-ன் வரைப்படம்/படம்]
மெக்ஸிகோ
குவாதமாலா
எல் சால்வடார்
பெலிஜ்
ஹாண்டுராஸ்
நிகாராகுவா
கோஸ்டா ரிகா
[பக்கம் 15-ன் படம்]
ஹாண்டுராஸ்
◼ க்வாசெரீக் நதி
[பக்கம் 16-ன் படம்]
எல் சால்வடார்
◼ சிலாங்கராவில் முக்கிய தெரு
◼ வெள்ளத்துக்கு தப்பித்த ராஜ்யமன்றமும் ஜோஸ் லேமூஸூம் அவருடைய மகள்களும்
◼ சூறாவளியால் அழிந்த தன்னுடைய வீட்டின்முன் ஜோஸ் சான்டோஸ் எர்னாஸ்டஸ்
[பக்கம் 17-ன் படம்]
நிகாராகுவா
◼ டெலிகாவிற்கு சைக்கிளில் சென்ற முதல் குழு
◼ சாட்சிகள் உணவுப்பொட்டலங்களை சந்தோஷமாக பெற்றுக்கொள்ளுதல், எல் க்வாயாபோவில்
[பக்கம் 18-ன் படம்]
நிகாராகுவா
◼ வாலண்டியர்கள் புதுப்பித்துக் கட்டிய பல வீடுகளில் முதலாவது
◼ உள்ளூர் சபைகளைச் சேர்ந்த சாட்சிகள் உணவுப்பொட்டலங்களை பேக் பண்ணுவதில் உதவுதல்
[பக்கம் 18-ன் படம்]
குவாதமாலா
◼ சேற்றில் புதையுண்ட ஏழு பிள்ளைகளை சாரா காப்பாற்றினார்