உலகை கவனித்தல்
படிப்பறிவில்லாதோர் எண்ணிக்கை உயர்வு
“590 கோடி உலக மக்கள் தொகையில் சுமார் ஆறில் ஒரு பாகத்தினருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது” என த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் குழந்தை நல அமைப்பு (UNICEF) தெரிவிக்கிறது. ஏன்? உலகின் மிக ஏழைநாடுகளில், தற்சமயம் 4 பிள்ளைகளில் 3 பேர் பள்ளிக்குப் போவதில்லை. உலகளாவிய பொருளாதாரப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, இனக்கலவரங்கள் காரணமாக கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. போர்கள் பள்ளிகளையும் விட்டுவைப்பதில்லை. அதுமட்டுமல்ல, பள்ளிக்கு செல்ல வேண்டிய பிள்ளைகளை படைக்கு அனுப்பிவிடுகிறது. படிப்பறிவில்லாமையால் சமூகப் பிரச்சினைகளும் முளைத்துவிடுகின்றன. பிறப்பு எண்ணிக்கைக்கும் படிப்பறிவின்மைக்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறதென உலக பிள்ளைகளின் நிலை 1999 (ஆங்கிலம்) என்ற யூனிசெஃப் அறிக்கை குறிப்பிடுகிறது. உதாரணமாக, தென் அமெரிக்க நாடு ஒன்றில், “படிப்பறிவில்லாத பெண்கள் சராசரியாக 6.5 பிள்ளகைளையும் உயர்நிலைக் கல்வி கற்ற தாய்மார்கள் சராசரியாக 2.5 பிள்ளைகளையும் உடையவர்களாய் இருக்கின்றனர்” என டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
2000-ல் மதவெறியர்களின் மடத்தனம்
இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படப் போகும் வன்முறையை சமாளிக்க “டெம்பிள் மவுண்ட்டில் பாதுகாப்பு பலத்தை அதிகரிக்க 1.2 கோடி டாலரை இஸ்ரேலிய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது” என நான்டோ டைம்ஸ் அறிவிக்கிறது. யூத ஆலயத்தை மறுபடியும் கட்டுவதற்காக, யூத அல்லது “கிறிஸ்தவ” மதவெறியர்கள் டெம்பிள் மவுண்ட்டில் உள்ள மசூதிகளை அழிக்க முயற்சி செய்யலாம் என போலீஸ் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது, உலகத்தின் முடிவையும் இயேசுவின் இரண்டாம் வருகையையும் துரிதப்படுத்தும் என சில “கிறிஸ்தவ” மதப் உட்பிரிவுகள் நம்புகின்றன. அல்-ஹேர்ரம் அல்-ஷெரிஃப் என்று முஸ்லீம்களால் அறியப்பட்ட டெம்பிள் மவுண்ட், “மத்திய கிழக்கு சச்சரவுகளில் மிகவும் சர்ச்சைக்குரிய இடமாக கருதப்படுகிறதென” அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “1967-ன் மத்திய கிழக்குப் போரில், ஜோர்டானிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய பழைய எருசலேம் நகரத்தில்” இந்த இடம் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து, ஒருசில “கிறிஸ்தவர்கள்” ஒலிவ மலையின்மேல் இடங்களை ஏற்கெனவே வாடகைக்கு எடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செடிகளுக்கா ஆஸ்பிரின்?
ஜனங்கள் வலியை உணர்வது போல் செடிகள் உணர்வதில்லை. ஆனாலும், அவை காயமடையும்போது ஜேஸ்மானிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. சில செடிகள் மல்லிகைப்பூ போன்ற வாசனையுடைய ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இவை மற்ற செடிகளை தூண்டிவிடுகின்றன. “செடிகள் ஜேஸ்மானிக் அமிலத்தை உற்பத்தி செய்வதை ஆஸ்பிரின் எப்படியோ தடுத்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக அறிந்திருக்கின்றனர்” என சையன்ஸ் நியூஸ் குறிப்பிடுகிறது. இந்த மர்ம செயலின் ஒரு பகுதியை அரிஸோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்பிரின் மனிதர்களில் எப்படி ஒரு என்ஸைமை செயலிழக்க செய்கிறதோ அதேவிதமான ரசாயன விளைவை செடிகளிலும் ஏற்படுத்துகிறது. இருந்தாலும், செடிகளில் ஆஸ்பிரினின் விளைவுக்கும் மனிதர்களில் அது ஏற்படுத்தும் விளைவுக்கும் உள்ள சம்பந்தம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. ஏனெனில், இந்த இரண்டு என்ஸைம்களுமே முற்றிலும் வித்தியாசமானவை.
இறந்த “சூனியக்காரர்களுக்கா” மன்னிப்பு!
ரோமன் கத்தோலிக்க சர்ச் ‘அதன் சரித்திரப்பூர்வ மனசாட்சியை ஆராயும்படி’ போப், 1994-ல் அழைப்புவிடுத்தார். சூனியக்காரர்கள் என உயிரோடே எரித்துக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை மன்னிப்பதா வேண்டாமா என்பதை ஆராய செக் குடியரசில் ஒரு கத்தோலிக்கக் குழு நிறுவப்பட்டதே இதன் பயன். இவ்விதமாக நிறுவப்பட்ட குழுக்களுள் இதுவே முதலாவது. 12-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில், இப்படிப்பட்ட சூனிய-வேட்டை சர்ச்சின் அனுமதியோடு நடந்தது. இதன் காரணமாக, ஐரோப்பாவில், ஆயிரக்கணக்கானோர் எரிக்கப்பட்டோ அல்லது சித்திரவதை செய்யப்பட்டோ இறந்தனர். 1484-ல், எட்டாம் போப் இன்னொசென்ட், பில்லி சூனியம் பற்றிய சாசனம் ஒன்றைப் பிரசுரித்தார். அதற்குப் பிறகு, இந்த சூனிய வேட்டைகள் பெருமளவில் அதிகரித்தன. சூனியக்காரர்கள் என்று சந்தேகப்படுகிறவர்களை அடையாளம் காண 30-க்கும் அதிகமான சித்திரவதை முறைகள் பயன்படுத்தப்பட்டன. பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகளிடம் இருந்து விஷயங்களைக் கறப்பதற்காக பிள்ளைகளும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். மிக அதிகமான சூனியக்காரர்களை ஜெர்மனி எரித்து குவித்தது. இப்படிப்பட்ட வேட்டைகள் பிரான்ஸிலும் பிரிட்டனிலும் சகஜமாய் நடந்தன. சாவுக்கு இப்போது மன்னிப்பு கேட்க, சர்ச்சுகள் தீவிரமாய் ஆலோசித்து வருவதாக லண்டனின் த ஸண்டே டெலிகிராஃப் அறிவிக்கிறது.
யாங்க்ஸி ஆற்றுக்கா கடிவாளம்!
சீனாவின் யாங்க்ஸி ஆற்றின்மேல் மூன்று மலையருவி அணை கட்டப்பட்டு வருகிறது. இது முடிக்கப்பட்டால், உலகின் மிகப் பெரிய நீர்மின்சக்தி நிலையம் இதுவே. அணைக்கட்டின் உயரம் 185 மீட்டர். நீளம் 2.3 கிலோமீட்டர். உற்பத்தி செய்யும் மின்சக்தி 1.82 கோடி கிலோவாட். இருந்தாலும், இந்த அணையைக் கட்டுவதன் முக்கிய காரணம், நீர்மின்சக்தி உற்பத்தி செய்ய அல்ல. யாங்க்ஸியில் வரும் காட்டாறுபோன்ற வெள்ளத்திற்குக் கடிவாளம் போடவே. 1994-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 2009-ல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக, 14.7 கோடி கனசதுர மீட்டர் மண்ணையும் பாறையையும் அப்புறப்படுத்தி, 2.5 கோடி கனசதுர மீட்டருக்கும் அதிகமான கான்கிரீட்டை கொட்டி, கிட்டத்தட்ட 20 லட்சம் டன் ஸ்டீலை நாட்டுவதை உட்படுத்தும் மாபெரும் திட்டம் இது. “இருந்தாலும், இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வேறொரு இடத்திற்கு குடிபெயரச் செய்வதே, மிக கடினமான வேலை” என்று சைனா டுடே குறிப்பிடுகிறது.
அதிகரிக்கிறது ஆஸ்துமா
கடந்த பத்து ஆண்டுகளில், உலகம் முழுவதும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 40 சதவீத அதிகரிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. ஏன் இந்த அதிகரிப்பு? காற்றோட்டமில்லாத, நெருக்கமான குடியிருப்புகளில் வாழும் போக்கும் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் மட மடவென உயர்ந்து கொண்டே போவதுமே இதற்கு காரணம் என இருதய மருத்துவர்களுக்கான அமெரிக்க கல்லூரியின் அங்கத்தினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். “பிராணிகளின் தோல், ரோமம், இறகுகள், தூசிபேன்கள், பூஞ்சக்காளான் வளர்ச்சி, சிகரெட் புகை, மகரந்தத்தூள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்கள், மூக்கைத் துளைக்கும் வாசனை” போன்றவை ஆஸ்துமாவை தூக்கிவிடுகின்றன என்று த டோரன்டோ ஸ்டார் சொல்லுகிறது. பூனை முடியே மிகப் பெரிய சத்துரு; இது அலர்ஜியை ஏற்படுத்த வல்லது. ஆஸ்துமாவிற்கு ஏன் இந்தளவு கவனம் செலுத்தப்படுகிறது என்றால், இதனால் ஏற்படும் இறப்புகள் தவிர்க்க முடிந்தவை என அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது. தற்போது, கனடாவில் சுமார் 15 லட்சம் ஆஸ்துமா நோயாளிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சுமார் 500 பேர் சாகின்றனர்.
நஷ்டங்களில் ரெக்கார்ட் பிரேக்
1998-ன் முதல் 11 மாதங்களில் மட்டுமே மோசமான சீதோஷ்ணநிலையால் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட நஷ்டம் 8,900 கோடி டாலர். இது, “1980-களின் பத்தாண்டுகளில் ஏற்பட்ட 5,500 கோடி டாலர் நஷ்டத்தைவிட மிக மிக அதிகம்” என்று அசோஸியேட்டட் பிரஸ் அறிக்கை குறிப்பிடுகிறது. ‘பணவீக்கத்தால், டாலர் மதிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் 1980-களில் ஏற்பட்ட நஷ்டம் 8,270 கோடி டாலர். இத்தொகை, 1998-ன் முதல் 11 மாதங்களில் ஏற்பட்ட தொகையைவிட குறைவே’ என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. பொருள் நஷ்டங்களோடு, புயல், வெள்ளம், தீப்பிடித்தல், வறட்சி போன்ற இயற்கை நாசங்களால் கொல்லப்பட்டவர்கள் 32,000 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. “இயற்கை நாசங்கள் எல்லாவற்றிலும் மனிதனுடைய கைதான் ஓங்கியிருக்கிறது” என உவார்ல்ட்வாட்ச் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த டென் என்பவர் சொல்கிறார். எப்படி? ‘இயற்கையின் ஸ்பாஞ்சுகளாக’ செயல்படும் ஈரப்பதமுள்ள நிலங்களையும் மரங்கள் நிறைந்த பகுதிகளையும் மொட்டையடிப்பதே இந்தப் பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்துகிறது என டென் தெரிவிக்கிறார்.
பிரச்சினைகளில் தத்தளிக்கும் குடும்பங்கள்
அரை நூற்றாண்டுக்குமுன், போருக்குப்பின் வாழ்ந்த குடும்பங்கள் எதிர்ப்பட்ட பிரச்சினைகளைவிட, இன்று குடும்பங்கள் பெருமளவில் பொருளாதார, உணர்ச்சி ரீதியான பிரச்சினைகளில் அமிழ்ந்து இருக்கின்றன என்று சமீபத்தில் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. பிரச்சினைகளுக்கான காரணத்தின் பட்டியலில் விவாகரத்தும் குடும்பம் சிதறுவதுமே முக்கியமானவை என நேஷனல் போஸ்ட் செய்தித்தாள் சுட்டிக்காட்டுகிறது. “பெற்றோர் நீண்ட நேரத்திற்கு கடினமாக உழைப்பதும், வேலைப் பாதுகாப்பின்மையும், மிகுதியான வரிவிதிப்பும், பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் படும் பாட்டை அசட்டையாக நினைப்பதுமே” குடும்பங்கள் பிரச்சினைகளில் அமிழ்ந்து போவதற்கான மற்ற காரணங்களாகும். ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களில் இந்தப் பிரச்சினைகள் இன்னும் அதிகமாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது.
ஐஸ்கட்டிகள் அறுவடை!
“பனிப்பாறையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் படுசுத்தமாய் இருக்கும் என்பது நியூபௌண்ட்லாந்து மக்கள் நீண்ட நாட்களாய் அறிந்ததே. அவர்களுடைய கடல்களில் மிதந்து செல்லும் இந்த அமுத சுரபியில் இருந்து” இப்பொழுது தண்ணீரை அறுவடை செய்கின்றனர் என லண்டனின் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை சொல்லுகிறது. மிதக்கும் பனிப்பாறையை முதலில் வலைகளால் சுற்றி அலையேற்றம் (ஓதம்) வரும்போது, இழுவைப் படகு அதை கரைக்கு இழுத்துவரும். படகு, முழு வேகத்தில் பனிபாறையை இழுக்கும். படகு கரையை நெருங்கும்போது வட்டமடித்து திரும்பி, வலைகளை நீக்கிவிட, அந்த வேகத்தில் பனிப்பாறை கரையை நோக்கி எறியப்படுகின்றது. அலையேற்றம் குறையும்போது, பனிப்பாறை நீர் வற்றிய தரையில் தன்னந்தனியாய் விடப்படுகின்றது. பெரிய கிரேன் அதைத் தூளாக்கி, தட்டையான அடிப்பாகம் உடைய படகில் போடுகின்றது. “அங்கே அது பொடியாக்கப்பட்டு, உருக்கி, வடிகட்டி, புற ஊதாக் கதிர்களால்” சுத்தம் செய்யப்படுகின்றது.
நசுக்கப்படும் நங்கையர்
“பிரேஸிலில், பெண்களை அடிப்பது, ஒடுக்குவது போன்ற பெண்களுக்கு எதிராக செய்யப்படும் வன்முறைச் செயல்களில் 63 சதவீதம் வீடுகளில்தான் நடக்கின்றன. இவர்களில் மூன்றில் ஒரு பாகத்தினரே அதை புகார் செய்கின்றனரென” யூ க்ளோபோ செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “வீடுகளில் நடக்கும் வன்முறைச்செயல்களுக்கு ஆளாபவர்கள் முக்கால்வாசி ஏழைப் பெண்களே. ஆனால், இவர்கள்தான் பெரும்பாலும் போலீஸில் புகார் கொடுக்கின்றனர். பணக்காரப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படுவதே இல்லை” என அந்தச் செய்தித்தாள் சுட்டிக்காட்டுகிறது. மற்ற நாடுகளும் இதேவிதமான புள்ளிவிவரங்களையே தருகின்றன. உதாரணமாக, “ஐக்கிய மாகாணங்களில் இருக்கும் பெண்களில் பாதிக்கும் அதிகமானவர்கள், எப்போதாவது ஒரு தடவையாவது அடி, உதை வாங்கியிருப்பதாகவும், ஏறக்குறைய 5 பேரில் ஒருவர் கற்பழிக்கும் நோக்கத்தோடு தாக்கப்பட்டோ அல்லது கற்பழிக்கப்பட்டோ இருக்கின்றனர்” என ஐ.மா. நீதித் துறையால் பிரசுரிக்கப்பட்ட ராய்டர்ஸ் செய்தித்துறை ஆய்வு குறிப்பிடுகிறது. “இந்த ஆய்வில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு எண்ணும் எங்களுடைய மகள்கள், அம்மாக்கள், அண்டை வீட்டார் போன்றோரை பிரதிநிதித்துவம் செய்கின்றது” என்று ஐ.மா. சுகாதார மற்றும் மனிதப் பணிகள் செயலாளர் டான்னா ஷலாலா சொல்லுகிறார்.