ஆரோக்கியமான மனநிலையை காத்துவருவது எப்படி?
நம்முடைய உடல் ஆரோக்கியம், நாம் எதை சாப்பிடுகிறோமோ அதையே பெருமளவு சார்ந்திருக்கிறது. ஒரு நபர் எப்போது பார்த்தாலும் சத்தற்ற உணவு வகைகளையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால், நாளடைவில் அவருடைய ஆரோக்கியம் சீரழிந்துவிடும். நம்முடைய மன ஆரோக்கியத்திற்கும் இதே நியமம்தான்.
உதாரணமாக, நாம் மனதிற்குள் எடுத்துக்கொள்ளும் விஷயங்களை ஒரு வகையான ‘மனதிற்கான உணவு’ என்பதாக ஒப்பிடலாம். என்ன? மனதிற்கான உணவா என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். நாம் சாப்பிடும் உணவு நம் உடலை பாதிக்கிறது. அதே போல புத்தகங்கள், பத்திரிகைகள், டிவி நிகழ்ச்சிகள், வீடியோ, வீடியோ கேம்ஸ், இன்டர்நெட் மற்றும் பாடல்கள் போன்றவற்றிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் தகவல்கள் நம்முடைய சிந்தனைகளையும் ஆள்தன்மையையும் பாதிக்கின்றன. எவ்விதமாக?
முன்னாள் விளம்பர எக்ஸிகியூட்டிவாக இருந்த ஜெரி மான்டர், நம்முடைய வாழ்க்கையில் டிவி ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி இவ்விதமாக எழுதினார்: “மற்ற எந்த விஷயமும் தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட டிவியில் வரும் காட்சிகள் நமது மூளையின் மனத்திரையில் ஆழமாக பதிந்துவிடுகின்றன.” இருப்பினும் மனத்திரையில் ஓடும் இப்படங்கள், நமக்கு வெறுமனே பொழுதுபோக்காக இருப்பதைக் காட்டிலும் அதிகத்தை சாதிக்கின்றன. த பேமிலி தெரபி நெட்வொர்க்கர் பத்திரிகை சொல்கிறது: “செய்தித்தொடர்பு சாதனங்களின் மொழிகள், காட்சிகள், ஒலிகள், சிந்தனைகள், கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், மதிப்பீடுகள், கோட்பாடுகள் போன்றவை நம்முடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கற்பனைகளையும் நிரப்புகின்றன.”
நாம் டிவியிலும் மற்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் பல்வேறான நிகழ்ச்சிகளை கவனிக்கிறோம். இவை நம்முடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் மிகத் தந்திரமாக வெள்ளம்போல அடித்துச் செல்லுகின்றன. இதை நாம் ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ இதுதான் உண்மை. இங்கேதான் ஆபத்து மறைந்திருக்கிறது. “காலப்போக்கில் நம்முடைய மனத்திரையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறதோ அதேமாதிரியானவர்களாக நாம் படிப்படியாக மாறிவிடுகிறோம்” என்கிறார் மான்டர்.
மூளைக்கு விஷம்
பெரும்பாலானவர்கள் தங்களுடைய சொல்லர்த்தமான உணவு கட்டுப்பாட்டு முறைகளில் கவனமாக இருப்பார்கள். ஆனால் மீடியா மூலமாக குவிக்கப்படும் மனதிற்கான உணவு என்று வரும்போது, இவர்கள் பாகுபாடில்லாமல் எல்லாவற்றையும் அப்படியே விழுங்கிவிடுவார்கள். உதாரணமாக, ‘டிவியிலே மெனக்கெட்டு பார்க்குறதுக்கு அப்படி என்ன இருக்கு?” என்பதாக சிலர் சொல்லுவதை கேட்டிருக்கிறீர்களா? சிலர் மெய்மறந்து எப்போது பார்த்தாலும் சேனலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அப்போதாவது ஏதாவது ஒரு நல்ல நிகழ்ச்சியாவது சிக்குமா என்ற நப்பாசைதான் இதற்கு காரணம். ‘சரி, டிவியை ஆஃப் பண்ணிவிடலாம்’ என்ற எண்ணம் அவர்கள் மனதிற்கு ஒருபோதும் வரவே வராது.
கணக்கிலடங்கா நேரத்தை டிவி திருட்டுத்தனமாக விழுங்குவது மட்டுமல்ல, பெரும்பாலான நிகழ்ச்சிகளும் கிறிஸ்தவர்கள் பார்ப்பதற்கு லாயக்கற்றவை. கலையுலக எழுத்தாளர் காரி கோல்டுக்யான் சொல்கிறார்: “புனிதத் தன்மைகளை கெடுக்கும் காட்சிகளோடு, சர்ச்சைக்குரிய மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளே இன்று திரைகளில் அதிகமாக ஜொலிக்கின்றன. முன்பு இந்த நிலைமை இல்லை.” ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா? டிவி நிகழ்ச்சிகளை எல்லாரும் விரும்பிப் பார்க்கும் நேரத்தில், ஒரு மணிக்கு 27 தடவைகள் செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் திரையில் தோன்றுகிறதாம்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், மக்களின் மனதில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க இது ஒருவரை தூண்டுகிறதல்லவா? பிரபலமான ஒரு டிவி நாடகம், ஜப்பான் நாட்டு மக்களை காந்தம்போல கவர்ந்திழுத்தது. ஆனால் அந்நிகழ்ச்சி ‘வேசித்தன அதிகரிப்பை’ தூண்டிவிட்டதாக அந்நாட்டின் மீடியா குறிப்பிட்டது. மேலுமாக, வாட்ச்சிங் அமெரிக்கா என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் பின்வருமாறு சொன்னார்கள்: “செக்ஸ் நடவடிக்கைகளின் பெரும்பாலான அம்சங்கள் . . . ஒரு ஆளின் சொந்த வாழ்க்கை-பாணியின் குற்றமற்ற தெரிவுகளாக கருதப்படுகிறது.”
இருந்தபோதிலும் செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை எப்போதும் ஒளிபரப்புவது பிரச்சினையின் ஒரு பாகமே. மகா கோரமான வன்முறைக் காட்சிகளும் சின்னத்திரையை ஆக்கிரமித்திருப்பது சாதாரண நிகழ்ச்சியாகி விட்டன. மற்றவர்களுடைய கருத்தை மிக எளிதாக ஏற்றுக்கொள்ளும் இளசுகளின் மனங்களில் வன்முறையான டிவி நிகழ்ச்சிகளும் படங்களும் எப்பேர்ப்பட்ட பாதிப்பை கொண்டுவரும் என்பது கவலைக்கிடமாக இருக்கிறது. “டிவி-யில் ஒருவர் சுடுவதையும் கத்தியால் குத்துவதையும் கற்பழிப்பதையும் கொடூரமாக நடத்துவதையும் அல்லது கொலை செய்வதையும் வாலிப பிள்ளைகள் பார்க்கும்போது அவைகள் வெறும் கற்பனைக் காட்சியாக அல்ல, மாறாக அவை உண்மையிலேயே நடப்பதாகவே நினைக்கின்றனர்” என்கிறார் டேவிட் கிராஸ்மேன். இவர் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியும் கொலைகளைப் பற்றி ஆய்வு செய்யும் மனோவியல் நிபுணருமாவார். இதே பிரச்சினையை பற்றி கருத்துரைப்பதாக த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அஷோஸியேஸன் சொன்னது: “மூன்றிலிருந்து நான்கு வயதுக்கு கீழுள்ள அநேக பிள்ளைகளுக்கு டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தோன்றும் கற்பனைக்கும் உண்மை சம்பவங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுணர முடிவதில்லை. பெரியவர்களுடைய வழிநடத்துதல் இருந்தபோதிலும் இது அவர்களுக்கு முடியாத காரியம்.” பெற்றோர்கள் பிள்ளையின் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டு, ‘அவுங்க செத்துட்டதா நினைக்காத, அவுங்க நெசமாவே சாகல. சும்மா செத்தமாதிரி நடிக்கிறாங்க. அவ்வளோதான்’ என்று சொன்னாலும் குழந்தைகளால் வித்தியாசத்தை உண்மையில் உணரவே முடியாது. அந்த சின்னஞ் சிறுசுகளுக்கு டிவி வன்முறை தத்ரூபமாக கண்முன்னாலேயே நடக்கும் உண்மை நிகழ்ச்சியாகவே இருக்கும்.
“மீடியாவினுடைய வன்முறையின்” பாதிப்பை சாராம்சப்படுத்தி டைம் பத்திரிக்கை சொன்னது: “டிவி நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் காட்டப்படும் இரத்தக்களரியான காட்சிகளை பார்க்கும் சிறுபிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள். இதைப்பற்றி சர்ச்சைசெய்ய பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இனிமேலும் விரும்புவதில்லை.” எப்படிப்பட்ட விளைவுகளை இது ஏற்படுத்தும்? “வன்முறையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பல பத்தாண்டுகளாக பொதுமக்களுடைய புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீட்டையும் மாற்றுவதில் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கின்றன” என்கிறார் திரைப்பட விமர்சகர் மைக்கேல் மெட்வெட். “ஒரு சமுதாயம் அதிர்ச்சியடைய முடியாதபடி மறத்துப் போகிறதென்றால் அதை நல்ல முன்னேற்றம் என்றா சொல்ல முடியும்?” என்பதாக இவர் மேலுமாக சொல்கிறார். நான்கு வயதான குழந்தையை வன்முறை காட்சிகள் நிறைந்த படத்திற்கு அழைத்துச் செல்வது “அதனுடைய மூளைக்கு விஷத்தை ஊட்டுவது” போன்றது என்பதாக ஒரு எழுத்தாளர் சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை.
இவைகளை எல்லாம் பார்க்கும்போது எல்லா டெலிவிஷன் நிகழ்ச்சிகளுமே கெட்டது என சொல்வதற்கில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள், வீடியோக்கள், கம்யூட்டர் கேம்ஸ் மற்றும் இன்னும் அநேக பொழுதுபோக்கு அம்சங்களிலும் இது உண்மையாக இருக்கிறது. ஆனால் பொழுதுபோக்கு என்பதாக கருதப்படுபவற்றில் பெரும்பாலானவை, ஆரோக்கியமான மனநிலையை கொண்டிருக்க விரும்புகிறவர்களுக்கு பொருத்தமில்லாதவை என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது.
பொழுதுபோக்கை ஞானமாக தெரிந்தெடுங்கள்
கண்கள் நமது மனதிற்கு கடத்தும் காட்சிகள், நம்முடைய எண்ணங்களையும் செயல்களையும் மிகவும் பலமாக பாதிக்கின்றன. உதாரணமாக ஒழுக்கயீனமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளால் நம்முடைய மனதை தொடர்ந்து பாலூட்டி வளர்த்து வந்தால் விளைவு என்னவாக இருக்கும்? “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்ற பைபிளின் கட்டளைக்கு கீழ்படிவதற்கான நம்முடைய திடத்தீர்மானம் வலுவிழந்துவிடும். (1 கொரிந்தியர் 6:18) அதேவிதமாக ‘அக்கிரமஞ் செய்கிற மனுஷரை’ சிறப்பித்துக்காட்டும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நாம் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தால், ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருப்பது’ நமக்கு கடினமாக இருக்கும். (சங்கீதம் 141:4; ரோமர் 12:18) இதை தவிர்ப்பதற்கு, நம்முடைய கண்களை ‘தீங்கான காரியத்திலிருந்து’ விலக்க வேண்டும்—சங்கீதம் 101:3; நீதிமொழிகள் 4:25, 27.
பாவம் நம்மோடு ஒட்டிப்பிறந்திருக்கிறது. அதனால் சரியானதை செய்வதற்கு நாம் எல்லாருமே கடினமாக போராட வேண்டியிருக்கிறது என்பது என்னவோ உண்மைதான். அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது.” (ரோமர் 7:22, 23) தன்னுடைய சரீர பலவீனத்தின் வற்புறுத்தலுக்கு பவுல் இணங்கிச் சென்றதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை! பவுல் சொன்னார்: “நான். . . ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”—1 கொரிந்தியர் 9:27.
அதேவிதமாக நாமும் பாவம் செய்வதற்கு நம்முடைய அபூரணத்தன்மையை சாக்குபோக்காக ஒருபோதும் சொல்லக்கூடாது. பைபிள் எழுத்தாளரான யூதா சொன்னார்: ‘பிரியமானவர்களே, . . . பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.’ (யூதா 3, 4) ஆம், நாம் ‘தைரியமாக போராட வேண்டும்.’ தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நம்மை தூண்டும் பொழுதுபோக்கு அம்சங்களை நாம் அறவே ஒதுக்கித்தள்ள வேண்டும். a
தெய்வீக வழிநடத்துதலை தேடுங்கள்
ஆரோக்கியமான மனநிலையை காத்துக்கொள்வது இன்றைய உலகத்தில் ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. இருப்பினும் நாம் மன ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சுத்தமுள்ளவர்களாக இருக்க முடியும் என்பதாக பைபிள் நம்பிக்கையூட்டுகிறது. எவ்விதமாக? “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்” என்பதாக சங்கீதம் 119:11-ல் நாம் வாசிக்கிறோம்.
கடவுளுடைய வார்த்தையை நாம் பெருமதிப்பு வாய்ந்ததாக கருதினால் அதை பொக்கிஷமாக கருதுவோம் அல்லது அவற்றை உயர்வாக மதிப்போம். ஆனால் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதே நமக்கு தெரியவில்லை என்றால் அதை நாம் எப்படி உயர்மதிப்பு வாய்ந்ததாக கருதமுடியும்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவை நாம் கற்றுக்கொள்வதன் மூலமாக கடவுளுடைய எண்ணங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். (ஏசாயா 55:8, 9; யோவான் 17:3) நாம் இவ்வாறு செய்யும்போது ஆன்மிகத்தில் செழித்தோங்குவோம்; மேலும் நம்முடைய எண்ணங்களும் சிறந்ததாக மேம்பட்டு விளங்கும்.
நாம் ஆன்மிகத்திலும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை அளந்து பார்ப்பதற்கு ஏதாவது நம்பகமான அளவுகோல் இருக்கிறதா? ஆம், கட்டாயம் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக ஆலோசனை கொடுத்தார்: “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”—பிலிப்பியர் 4:8.
ஆனால் நாம் உண்மையிலேயே நற்பலனை அறுக்க விரும்பினால், வெறுமனே கடவுளைப் பற்றிய ‘ஏட்டறிவு’ மாத்திரம் போதாது. தெய்வீக ஏவுதலின் காரணமாக தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு எழுதினார்: ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] நானே.’ (ஏசாயா 48:17) சந்தேகமில்லாமல் நாம் வெறுமனே தெய்வீக வழிநடத்துதலை தேடுவது மாத்திரம் போதாது; மாறாக நாம் எதை கற்றிருக்கிறோமோ அதன்படி நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்மிகத்திலும் ஒழுக்கத்திலும் நாம் பயனடைவதற்காக இன்னுமொரு வழி இருக்கிறது. ‘ஜெபத்தைக் கேட்கிறவராகிய’ யெகோவாவை நோக்கி கூப்பிடுவதே அது. (சங்கீதம் 65:2; 66:19) கடவுளை நாம் உண்மையோடும் மனத்தாழ்மையோடும் அணுகுவோமாகில் நம்முடைய வேண்டுகோளை அவர் நிச்சயமாக செவிகொடுத்துக் கேட்பார். “நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்.”—2 நாளாகமம் 15:2
வன்முறையும் ஒழுக்கயீனமும் தறிகெட்டு இருக்கும் இவ்வுலகத்தில், நாம் மன ரீதியில் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியமா? ஆம், சாத்தியம்தான். இவ்வுலகத்தின் பொழுதுபோக்கு அம்சங்களினால் நமது மனசாட்சியின் கூர் உணர்ச்சி மழுங்கிப்போக அனுமதிக்கக்கூடாது, நம்முடைய சிந்தனாத் திறமைகளை கடவுளுடைய வார்த்தையை படிப்பதன் வாயிலாக இன்னும் பலப்படுத்த வேண்டும், ஆரோக்கியமான மனநிலையை காத்துக்கொள்வதற்காக தெய்வீக வழிநடத்துதலை தேட வேண்டும். இவ்வாறு செய்யும்போது நாம் ஆரோக்கியமான மன நிலையை காத்துக்கொள்ள முடியும்!
[அடிக்குறிப்புகள்]
a தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுப்பது சம்பந்தமாக கூடுதலான தகவலுக்கு விழித்தெழு! மே 22, 1997, பக்கங்கள் 8-10-ஐக் காண்க.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“அநேக பிள்ளைகளுக்கு டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தோன்றும் கற்பனைக்கும் உண்மை சம்பவங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுணர முடிவதில்லை”
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“வன்முறையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பல பத்தாண்டுகளாக பொதுமக்களுடைய புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீட்டையும் மாற்றுவதில் பெரும் வெற்றியை ஈட்டியிருக்கின்றன”
[பக்கம் 11-ன் பெட்டி]
இருதய நோய், ஆபத்தை தவிர்த்தல்
நீங்கள் இருதய நோயால் தாக்கப்படும் ஆபத்தை குறைக்க நியூட்ரிடியோன் ஆக்ஷன் ஹெல்த் லெட்டர் சிபாரிசு செய்யும் ஆலோசனைகள் இதோ:
• புகை பிடிக்காதீர்கள். இன்றே நீங்கள் சிகெரெட்டுக்கு ‘டாட்டா’ சொல்லி விடுங்கள். இப்படி செய்வதால், நீங்கள் சற்று வெயிட் போட்டாலும் ஒரு வருடத்திற்குள் இருதய நோய்களுக்கு பலியாகும் ஆபத்தை குறைக்கலாம்.
• எடையை குறையுங்கள். நீங்கள் ஓவர் வெயிட்டாக இருக்கிறீர்களா? அப்படியென்றால் ஐந்து முதல் பத்து பவுண்ட் வெயிட் கம்மி பண்ணுங்கள். இதுகூட நல்ல வித்தியாசத்தை காட்டும்.
• உடற்பயிற்சி செய்யுங்கள். (குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று தடவை) ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது கெட்ட கொழுப்புச்சத்தை (LDL) குறைப்பதற்கு உதவி செய்யும். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய இரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் நீங்கள் ரொம்ப குண்டாகிவிடாமல் இருப்பதற்கும் உதவி செய்யும்.
• கொழுப்புச்சத்து குறைவாக உள்ள பொருட்களை சாப்பிடுங்கள். உங்களுக்கு LDL அதிகமாக இருந்தால் மாமிசம் சாப்பிடுவதைக் குறையுங்கள். 2 சதவிகித பாலை அருந்துவதற்கு பதிலாக (குறைந்த கொழுப்புச் சத்துள்ள) 1 சதவிகித பாலை அல்லது (கொழுப்புச் சத்தில்லாத) பாலாடை நீக்கப்பட்ட பாலை அருந்தவும்.
• மது அருந்துவதை குறையுங்கள். சிகப்பு ஒயினை அளவோடு அருந்துபவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக தெரிகிறது.
• நிறைய பழங்களையும் காய்கறிகளையும் கரையும் நார்சத்து மிகுந்த மற்ற உணவு வகைகளையும் சாப்பிடுங்கள்
[பக்கம் 8-ன் படம்]
டிவி வன்முறை காட்சிகள் குழந்தையின் மனதிற்கு விஷத்தை ஊட்டுவதுபோல இருக்கின்றன
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
டிவியில் பார்க்கும் வன்முறைக் காட்சிகளை பிள்ளைகள் சிலநேரங்களில் ‘ஈ அடிச்சான் காப்பிபோல’ பின்பற்றுகின்றனர்
[[பக்கம் 10-ன் படம்]
பிள்ளைகளுக்கு வித்தியாசப்பட்ட ஆனால் படிப்பதற்கு தரமான புத்தகங்களை பெற்றோர் கொடுத்து உதவலாம்