சூரியப் பிரியர்களே—உங்கள் சருமத்தைக் காத்திடுங்கள்!
பிரேஸிலில் இருந்து விழித்தெழு! நிருபர்
உங்கள் விடுமுறையை கடற்கரையில் செலவழிக்க விரும்புகிறீர்களா? மலையேறுவதைப் பற்றி என்ன? அப்படியென்றால், வெளி இடங்களுக்கு சென்று விடுமுறையை சந்தோஷமாக கழிக்க விரும்பும் கோடிக்கணக்கானோரில் நீங்களும் ஒருவர். இருந்தாலும், உங்களுக்கு ஓர் எச்சரிக்கை: வெயிலில் அதிக நேரம் இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இதில் ஆபத்து ஏதும் இருக்கிறதா? இருக்கிறதென்றால், உங்களை நீங்கள் எப்படிக் காத்துக் கொள்ளலாம்?
“உங்கள் உடலில் பளிச்சென்று கண்ணில் படும் அங்கம் தோல்தான்” என டாக்டர் W. மிட்ஷெல் சாம்ஸ், ஜூனியர் எழுதுகிறார். உடல் உஷ்ணத்தைக் காப்பதற்கும் உடலில் நீர் குறைவதைத் தடுப்பதற்கும் உங்கள் சருமம் உதவுகிறது. குளிரையும் உஷ்ணத்தையும் வலியையும் அதிர்வையும் வழவழப்பான அல்லது சொரசொரப்பான மேற்பரப்பையும் உணர்ந்து கொள்ள இது உதவுகிறது. வைட்டமின் D சத்தினை உற்பத்தி செய்வதிலும் உங்கள் தோல் பெரும்பங்கு வகிக்கிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு மிக அவசியம். இந்த வைட்டமின் சத்து, சூரிய ஒளியின் உதவியால் பெறப்படுகிறது.
இருந்தாலும், சூரிய ஒளியில் வெகு நேரம் இருப்பது அதிக அபாயத்திற்குரியது. சூரியனில் இருந்து பூமிக்கு வரும் கதிர்களில், அகச்சிவப்பு ஒளியும், கண்ணுக்கு புலப்படும் ஒளியும், ஏ, பி வகை புற ஊதாக்கதிர்களும் (UVA, UVB) இருக்கின்றன. நல்லவேளை, சூரிய ஒளியில் இருக்கும் மின்காந்த நுண்ணலைகளையும், காமாக் கதிர்களையும், எக்ஸ் கதிர்களையும் வளிமண்டலம் ஈர்த்துக் கொள்கிறது. வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலம், புற ஊதாக்கதிர் சி-யின் கதிரியக்கத்தை மிக அருமையாக தடுத்து விடுகிறது. ஏ, பி வகை புற ஊதாக்கதிர்கள் பெரும்பாலானவற்றை சுத்தமாக வடிகட்டி விடுகிறது. ஆனால், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், நிறைய இடங்களில் இந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது. குளிர்சாதன முறைகளில் பயன்படுத்தப்படும் சில வஸ்துக்களும் ஏரோசால் வஸ்துக்களுமே இதற்கு முக்கிய காரணம் என அநேக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். எது எப்படியிருந்தாலும்சரி, சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை வருவிக்கிறது.
சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதால் உடல் கன்றி சிவந்துவிடும். அதுமட்டுமல்ல, புற ஊதாக்கதிர்கள் உங்கள் தோலில் கரும்புள்ளிகளை உண்டாக்கும். மேலும், உங்கள் தோல் படிப்படியாக தடித்து, வறண்டு போகும். உங்கள் தோலில் இருக்கும் நெகிழும் தன்மையுடைய இழைகளை வலுவிழக்கச் செய்யும். அனைவரும் வெறுக்கிற சுருக்கங்களையும், மூப்படைவதையும் இது துரிதப்படுத்தும். இதைவிட மோசமான அபாயம் என்னவென்றால், அளவுக்கதிகமான புற ஊதாக்கதிர்கள், உங்கள் உடலின் நோய் தடுப்பு அமைப்பையே பாதித்துவிடும். இதனால், சருமச் சிதைவு, தோல் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கக்கூடும். அதுமட்டுமா, பாதிக்கப்பட்ட அல்லது நோயால் தாக்கப்பட்ட தோல் உங்கள் அழகையே கெடுத்துவிடும். சில சமயங்களில், இது பாதுகாப்பற்ற உணர்வையும் ஏன் மன உளைச்சலையும்கூட ஏற்படுத்தும்.
நீங்கள் செய்ய வேண்டியது
சூரிய ஒளியில் வெகு நேரம் இருக்கும்போது மட்டுமல்ல, தினந்தோறும் உங்கள் சருமத்திற்கு பாதுகாப்பு தேவை. என்ன செய்யலாம்? வெயிலில் இருக்க வேண்டிய நேரத்தை குறைத்துக் கொள்வதும், பாதுகாப்பான உடைகளை அணிவதோடுகூட, சருமத்தைப் பாதுகாக்கும் கிரீம்களை உபயோகிக்கும்படி பரிந்துரைக்கும் நிபுணர்களின் ஆலோசனையையும் நீங்கள் பின்பற்றலாம். நல்ல, தரமான கிரீமை நீங்கள் எப்படி தேர்ந்தெடுக்கலாம்? தயாரிப்பாளர் கொடுத்திருக்கும் வெயில் பாதுகாப்பு அம்சத்தை (SPF) கவனியுங்கள். அதிக அளவு எஸ்பிஎஃப், சருமத்திற்கு அதிக பாதுகாப்பைத் தரும். சிவந்த மற்றும் வெள்ளைமேனி கொண்டவர்களுக்கு அதிக அளவு எஸ்பிஎஃப் உள்ள கிரீம்களே சிறந்தது. கருப்பாக இருப்பவர்களுக்கு அந்தளவு அதிக எஸ்பிஎஃப் தேவையில்லை. ஓர் எச்சரிக்கைக் குறிப்பு: பி வகை புற ஊதாக்கதிர்களின் (UVB) கதிரியக்கத்திற்கு எதிராக மாத்திரமே பாதுகாப்பளிப்பதை எஸ்பிஎஃப் குறிக்கிறது. எனவே, ஏ வகை புற ஊதாக்கதிர்களுக்கு (UVA) எதிராக ஓரளவு பாதுகாப்பையும், பல வகையான கதிர்களின் கதிரியக்கத்திற்கு எதிராகவும் பாதுகாப்பை அளிக்கும் கிரீம்களையே உபயோகியுங்கள்.
பிள்ளைகள், குறிப்பாக சிவந்த நிறமுடையவர்கள்தான் வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், பெரியவர்களைவிட பிள்ளைகளே அதிகம் வெயிலில் இருக்கின்றனர் என ஃபோடூப்புரொடெஸாவுன் (ஃபோட்டோப்ரொடக்ஷன்) என்ற பிரசுரம் சுட்டிக்காட்டுகிறது. முதல் பதினெட்டு வருடங்கள் உங்கள் பிள்ளைகளுடைய சருமத்தை சூரிய ஒளியில் இருந்து காத்திட தேவையான முயற்சிகளை எடுங்கள். அவ்விதம் செய்வதால் பிற்காலத்தில், தோல் புற்றுநோய் ஏற்படுவது அதிக அளவில் தடுக்கப்படும் என ஃபோடூப்புரொடெஸாவுன் குறிப்பிடுகிறது.
பூமியில் உயிரினங்கள் தழைத்தோங்க சூரிய ஒளி மிக அவசியம். கதகதப்பான தட்பவெப்ப நிலையை அநேகர் விரும்புகின்றனர். ஆனால், ஆரோக்கியமான, இளமை ததும்பும் ஆட்கள் சுகமாக வெயில் காய்ந்துகொண்டிருப்பது போல காட்டப்படும் பிரபலங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதில் இருந்து உங்கள் சருமத்தைக் காத்து, உங்கள் ஆரோக்கியத்தையும் பேணிக் காத்திடுங்கள்.
[பக்கம் 23-ன் பெட்டி]
உங்கள் சருமத்தைக் காத்திடுங்கள்
1. சூரியக் கதிர்களின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நேரங்களில், அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, வெயிலில் அதிகம் செல்லாமல் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
2. மந்தாரமாக இருக்கும் நாட்களிலும், 15 அல்லது அதற்கும் மேற்பட்ட எஸ்பிஎஃப்களை உடையதும், ஏ, பி போன்ற பலவகை புற ஊதாக்கதிர்களின் கதிரியக்கத்தில் இருந்தும் பாதுகாக்கும் கிரீம்களை உபயோகியுங்கள்.
3. வெயிலில் இருக்கும்போது, குறிப்பாக நீங்கள் நீச்சல் அடிக்கும்போது அல்லது வியர்த்து விறுவிறுக்கும்போது, இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை கிரீம் பூசுங்கள்.
4. இறுக்கமாக நெய்யப்பட்ட, சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாப்பளிக்கும் ஆடைகளை அணியுங்கள். அடர்நிறத்தில் உடை அணிவது அதிக பாதுகாப்பை அளிக்கும்.
5. குறைந்தபட்சம் 10 செ.மீ. அகலம் விளிம்புடைய தொப்பியையும் புற ஊதாக்கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் கூலிங்கிளாஸ்களையும் உபயோகியுங்கள்.
6. முடிந்தபோதெல்லாம் நிழலில் ஒதுங்குங்கள்.
7. நீர், மணல், பனி போன்ற சூரிய ஒளியை பிரதிபலிக்கும் இடங்களைத் தவிர்த்திடுங்கள். இவை, பெரும்பாலும் சூரியனில் இருந்து வரும் கேடு விளைவிக்கும் கதிர்களை பிரதிபலிக்கின்றன.
[படத்திற்கான நன்றி]
(அமெரிக்கன் தோலியல் கல்விச் சாலையால் பிரசுரிக்கப்பட்ட, ஸ்கின் சாவி பத்திரிகையில் இருந்து எடுக்கப்பட்டது)
[பக்கம் 23-ன் படம்]
உங்கள் ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாத்திடுங்கள்—உங்கள் பட்டுமேனியைப் பேணிக் காத்திடுங்கள்
சூரியனின் கதிர்கள் நேரடியாக விழும் இடங்களில் கூடுதல் கவனம் தேவை