உங்கள் தோல்—பட்டணத்து மதில் போன்றது
பண்டைய கால பட்டணத்தார் பகைவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மதில்களைக் கட்டினார்கள். படையெடுத்து வரும் பகைவர்களை தடுத்து நிறுத்தும் கோட்டையாகவும், பட்டணத்துப் படைவீரர்களை பாதுகாக்கும் அரணாகவும் அந்த மதில்கள் செயல்பட்டன. அதேபோல உங்கள் உடலிலும் பாதுகாப்பு ‘மதில்’ அமைக்கப்பட்டுள்ளது. அப்படி மதில்போல் செயல்படுவது உங்கள் தோல்தான். படையெடுத்து வரும் பகைவர்களிடமிருந்து தோல் உங்களை எப்படி பாதுகாக்கிறது?
உங்கள் தோலின் மேற்பரப்பில் பாக்டீரியாக்களும் வேறு பல நுண்ணுயிரிகளும் நிறைந்திருக்கின்றன, அவற்றில் சில தொற்று வியாதி வரவும் காரணமாகலாம். உங்கள் தோல் ஏதோ பெயருக்கு ஒரு மதிலாக மட்டுமே இருப்பதில்லை. நுண்ணுயிர் எதிர்ப்பு புரோட்டீன்களை அல்லது பெப்டைடுகளை உற்பத்தி செய்வதன் மூலம் பாதுகாவலர்களாக இருந்து பகைவர்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் தோன்றுகிறது. இவற்றில் சில ஓய்வொழிச்சலின்றி எப்போதும் பணிபுரிகின்றன. மற்றவை தோல் பாதிக்கப்படுகையில் பணிபுரிய தயார் நிலையில் நிற்கின்றன.
டிஃபென்சின்ஸ், கேதலிசைடன்ஸ் என்ற இரண்டு தொகுதிகளான நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடுகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன; தேவை ஏற்படும்போது பாதுகாப்பளிப்பதற்கு ஓடோடிவர இவை தயாராக உள்ளன. காயமோ அழற்சியோ ஏற்படுகையில் இந்த இரண்டு தொகுதிகளும் மேற்தோலிலுள்ள செல்களிலிருந்து சுரக்கின்றன. இவை பகைவர்களின் செல் சவ்வுகளில் ஓட்டை போட்டு அவற்றைக் கொன்றுவிடுகின்றன.
2001-ல் ஜெர்மனியில் டூபின்ஜன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்று டர்மசைடன் என்ற மற்றொரு வகை நுண்ணுயிர் எதிர்ப்பு புரோட்டீனைக் கண்டுபிடித்தது; இது எந்நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற இரண்டு தொகுதிகளைப் போல் அல்லாமல், ஆரோக்கியமான தோலின் வியர்வை சுரப்பிகள் டர்மசைடனை உற்பத்தி செய்கின்றன. இந்தப் புரோட்டீன் எப்படி செயல்படுகிறது என்பது இன்னும் புரியா புதிராகவே உள்ளது. ஆனால் வியாதியை எதிர்ப்பதில் வியர்வை கைகொடுக்கிறது என்ற உண்மை, அடிக்கடி குளித்துக் கொண்டே இருப்பவர்களுக்கு ஏன் தோல் தொற்றுகளும் தோல் அழற்சியும் ஏற்படுகிறது என்பதை விளக்கலாம்.
பண்டைய கால பட்டணத்து மதில் போல, படையெடுத்து வரும் பகைவர்களுக்கு எதிராக தடுப்புச் சுவராக நம் தோல் விளங்குகிறது. “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்” என சங்கீதக்காரன் சொன்னதை நீங்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வீர்கள்.—சங்கீதம் 104:24. (g04 01/08)