பேஷன் பூ பெயர் பிறந்த கதை
பேஷன் என்ற ஆங்கில வார்த்தை இயேசு கிறிஸ்துவின் துன்பத்தையும் மரணத்தையும் குறிக்கிறது. இந்தப் பூவுக்கும் இந்நிகழ்ச்சிகளுக்கும் என்ன சம்பந்தம்?
16-ம் நூற்றாண்டில், ரோமன் கத்தோலிக்க குருமார்கள் இந்தச் செடிக்கு இந்தப் பெயரை சூட்டினர் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பூவின் சில பாகங்கள், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் அவருடைய வேதனையையும் அல்லது பேஷனையும் நினைவுபடுத்தியதாக சொல்கின்றனர். கொடுக்கப்படும் விளக்கத்திற்கு உங்கள் கூர்ந்த கவனத்தை செலுத்துங்கள். அப்போதுதான், இதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அந்தப் பூவின் ஐந்து அல்லிவட்ட இதழ்களும், ஐந்து இதழ்போன்ற புல்லிவட்ட இதழ்களும், இயேசு வேதனைப்பட்டபோது, அவரோடு இருந்த விசுவாசமுள்ள பத்து சீஷர்களைக் குறிப்பதாக அவர்கள் விளக்குகின்றனர். (அவர்களுடைய விளக்கங்களுக்கு பொருத்தமாக, இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸையும் அவரை மூன்று முறை மறுதலித்த பேதுருவையும் நீக்கி விட்டனர்.) இதழ்களுக்கு மேலே இருக்கும் உட்புற இதழ் வட்டம், அவர்களுக்கு இயேசுவின் முட்கிரீடமாக தோன்றியது. இயேசுவுக்கு ஏற்பட்டதாகக் கருதப்பட்ட ஐந்து காயங்களைப் பூவின் ஐந்து மகரந்தத்தாள்கள் (மகரந்தத்தை உற்பத்தி செய்யும் ஆண் உறுப்புகள்) குறிக்கின்றன. பூவின் சூல்பையில் இருந்து மேல் நோக்கி நீண்டிருக்கும் மூன்று சூல் தண்டுகளும் பொத்தான் வடிவ முனைகளை உடையவை. பெரிய ஆணியின் தலைப்பாகம் போன்ற முனைகள் என்றே சொல்லலாம். ஆனால், இயேசுவை சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளை குறிப்பதாக கருதப்பட்டவை இவையே. அந்த குருமார்கள் கற்பனா சக்தியில் சளைத்தவர்களல்ல!
லத்தீன் அமெரிக்கா என இப்போது அழைக்கப்படுகிற பகுதியில்தான், இந்த அழகிய பூவை அவர்கள் கண்டுபிடித்தனர். இன்றோ, பல தாவரப் பூங்காக்கள் உட்பட, உலகின் பல பாகங்களிலும் இவை வளர்க்கப்படுகின்றன. இவை அரை அங்குலம் முதல் ஆறு அங்குலம் வரை குறுக்களவு உடையவை. பல வித்தியாசமான நிறங்களில் இவை பூக்கின்றன.
இந்தப் பூவில் ஏறக்குறைய 400 வகைகள் இருக்கின்றன. இவை, பொதுவாக உலகின் உஷ்ணப் பிரதேசங்களில் வளருகின்றன. சில வகைச் செடிகள், லேசாக புளிப்பான அல்லது திகட்டும் தித்திப்பான பழங்களைத் தருகின்றன. ஜூஸ், பழப்பாகு, ஏன் ஐஸ்கிரீம்கூட இந்தப் பழத்தில் இருந்து தயாரிக்கலாம். சுரைக்காய் போன்ற வடிவத்தில், பெரிய அளவில் இருக்கும் கிரானடில்லா கிட்டத்தட்ட மூன்றரை கிலோ எடை உடையது.
எந்தப் பூவிற்குமே அதன் தோற்றத்தைவிட அதிகம் இருக்கிறது என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கிலாம். ஆஞ்சியோஸ்பெர்ம்களில் அல்லது பூக்கும் செடிகளில் சுமார் 2,50,000 வகைகள் இருக்கின்றன! பூச்செடி வளர்ப்புப் பற்றி பயிலும் மாணவர்களுக்கு ஆர்வத்தோடு கற்றுக் கொள்ள மற்றுமொரு செடி இப்போது கிடைத்திருக்கிறது.
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
புல்லிவட்ட இதழ்கள்
உட்புற இதழ் வட்டம்
அல்லிவட்ட இதழ்கள்
சூல் தண்டுகள்
மகரந்தத்தாள்கள்