உங்கள் நகங்கள்—அவற்றைப் பராமரிக்கிறீர்களா?
ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! நிருபர்
உங்களிடம், “எங்கே உங்க நகத்தைக் கொஞ்சம் காட்டுங்க?” என்று கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நன்றாக பராமரிக்கப்பட்டுள்ள உங்கள் நகங்களை மகிழ்ச்சியுடன் காட்டுவீர்களா, அல்லது காட்ட மாட்டேன் என்று உடனே பின்னால் மறைத்துக்கொள்வீர்களா? ஒருவேளை அவற்றைப் பார்க்க சகிக்காமல் இருக்கலாம்; அல்லது நகத்தைக் கடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கலாம்; அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், மறைத்துக்கொள்ளத்தான் தோன்றும். நகங்களின் அருமையான உள்ளமைப்பைப் பற்றி அதிகத்தை அறிந்துகொள்வது, அவற்றிற்கு இன்னும் அதிக கவனம் செலுத்த நமக்கு உதவி செய்யும்; அத்துடன், அவற்றை நன்கு பராமரிப்பதற்கான தூண்டுதலையும் அளிக்கும்.
உங்கள் நகங்களின் பெரும்பகுதி, கடினமான உயிரற்ற செல்களால் ஆனது; இவற்றில் நார்ச்சத்துள்ள கெரட்டின் எனும் புரதம் அடங்கியுள்ளது. நகங்கள் வளரும் வேகமும்கூட விரலுக்கு விரலும், ஆளுக்கு ஆளும் வேறுபடுகிறது. நகங்கள் சராசரியாக மாதத்துக்கு சுமார் மூன்று மில்லிமீட்டர் வரை வளருகின்றன. வெட்டாமல் நகங்களை வளர்த்தால், அவை வெகு நீளமாக வளரலாம். ஓர் இந்தியர், தனது இடது கையின் ஐந்து விரல்களின் நகங்களையும் வெட்டாமல் வளர்த்ததால், அவை மொத்தத்தில் 574 சென்டிமீட்டர் நீளத்துக்கு வளர்ந்தன என்பதாக த கின்னஸ் புக் ஆஃப் உவர்ல்ட் ரெக்கார்ட்ஸ் 1998 சொல்கிறது. அவரது பெருவிரல் நகமோ 132 சென்டிமீட்டர் நீளம் இருந்தது.
சிக்கலான அமைப்பு
நகத்தைப் பார்த்ததும், உங்களுக்குத் தெரிவது நகத் தகடு எனப்படும் ஓர் உறுப்பு மட்டும்தான்; ஆகவே எல்லாம் இதுவே என நீங்கள் நினைக்கலாம். எனவே, கண்ணுக்குத் தெரிகிற முக்கியமான பல உறுப்புகளும் கண்ணுக்குத் தெரியாத சில உறுப்புகளும் சேர்ந்துதான் நகங்களாகின்றன என்பதை அறிகையில் ஆச்சரியப்படுவீர்கள். இப்போது, நக அமைப்பைக் கூர்ந்து கவனிப்போம்.
1. நகத் தகடு. நகம் என பொதுவாக நாம் அழைக்கும் கடினமான அமைப்பே இது. மேல் அடுக்கு என்றும் கீழ் அடுக்கு என்றும் இரண்டு அடுக்குகள் இந்த நகத் தகட்டில் உள்ளன. இவ்விரண்டு பாகங்களில் உள்ள செல்களும் வெவ்வேறாக அமைக்கப்பட்டுள்ளதால் வெவ்வேறு வேகங்களில் இவை வளருகின்றன. மேற்பரப்பு மிருதுவாக இருக்கிறது; ஆனால் உட்பரப்பிலோ நகப்படுகையின் மேலுள்ள மடிப்புகளுக்கு இணையான புடைப்புகள் உள்ளன. இந்த மடிப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி அமைந்துள்ளன; ஆகவே, ஒரு நபரை அடையாளம் காட்ட ஒரு சிறந்த வழியாக இது அமையலாம்.
2. லுனுலா. இது, நகத் தகட்டின் அடிப்பகுதியில், பிறை நிலா வடிவத்தில் அமைந்துள்ள வெண்ணிற பாகம். எல்லா விரல்களிலும் லுனுலாவைப் பார்க்க முடியாது. நகத் தகட்டின் அடிப்பகுதியிலுள்ள, மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ஒரு சிறு பகுதியான உயிருள்ள திசுவிலிருந்தே நகம் வளருகிறது. மொத்த நகத்திலும் இதுவே மிக முக்கிய பாகமாகும். லுனுலா, நக மேட்ரிக்ஸின் நுனிப்பகுதியாகும்; இது மட்டுமே, உயிருள்ள நகத்தின் காணக்கூடிய பகுதியாகும். நகத் தகட்டின் மீதமுள்ள பாகம் உயிரற்ற செல்களால் ஆனது.
3. மையத்திலும் பக்கவாட்டிலும் உள்ள நக மடிப்புகள். இவை, நகத் தகட்டைச் சுற்றியுள்ள தோலைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இத்தோல், நக மடிப்பு என அழைக்கப்படுவதற்கு காரணம் என்னவெனில், இது நகத் தகட்டின் விளிம்பாய் இராமல், அடியில் மடிந்து, வெளியில் தெரியும் நகத் தகட்டை மூடுகிறது. இத் தோல் மடிப்புகள் நகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாப்பதுடன் அவற்றுக்குப் பக்கபலமாயும் உள்ளன.
4. எப்பநிக்கியம். இது தோல் மடிப்பின் மெல்லிய பரப்பாகும்; இது நகத் தகட்டின் அடிப்பகுதியில் முடிவுறுவதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில், இது புறத்தோல் எனவும் அழைக்கப்படுகிறது.
5. புறத்தோல். உண்மையான புறத்தோல், எப்பநிக்கியமுக்கு அடியில் சிறிதளவு நீட்டிக் கொண்டிருக்கும் பாகமாகும். இது, தோல் உரிந்த, நிறமற்ற ஓர் அடுக்காகும்; இது நகத் தகட்டின் பின்புற பரப்புடன் ஒட்டிக்கொள்கிறது.
6. சார்பற்ற முனை. விரல் நுனிக்கும் மேலாக வளரும், நகத் தகட்டின் பகுதி.
7. ஹைப்போநிக்கியம். இது, நகத்தின் சார்பற்ற முனைக்கு அடியில் காணப்படுகிறது; இதுவே நகப்படுகை புண்ணாகிவிடாமல் தடுப்பதோடு, தண்ணீர் உட்புகாதவாறு காக்கும் மூடியாகவும் செயல்படுகிறது.
அவற்றின் பயன்கள்
சொறிவதற்குப் பயன்படுவதைப்போல, பல வழிகளில் நகங்கள் பயன்படுகின்றன. ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதற்கும், முடிச்சு விழுந்துவிட்டால் அதை அவிழ்ப்பதற்கும் அல்லது சிறிய பொருள்களைத் திறமையுடன் உபயோகிப்பதற்கும் அவை உதவுகின்றன. அத்துடன், உணர்ச்சி மிகுந்த, மென்மையான விரல் நுனிப்பகுதிகளுக்கு வலிமையளித்து, அவற்றைப் பாதுகாக்கின்றன.
நகங்கள் அழகுக்கு அழகூட்டுவதையும் மறந்துவிட முடியாது. நம்முடைய நகங்களை வைத்தே, சுத்தமாயிருப்பதில் நமக்குள்ள நல்ல அல்லது மோசமான பழக்கங்களைக் கண்டுபிடித்துவிடலாம். அன்றாட செயல்களில் அவை முக்கிய பாகத்தை வகிக்கின்றன; நன்றாக பராமரித்தால், அவை நம் கைகளுக்கு அழகூட்டலாம். அவை இல்லாவிட்டால், நம் அன்றாட வாழ்க்கைக்கு இடைஞ்சலாயும், நம் கைகள் பார்ப்பதற்கு மொட்டையாகவும் இருக்கும்.
உறுதியாய் இருக்க, முறையான பராமரிப்பு
அற்புதமான நம் உடலின் பாகமாயிருக்கும் நகங்களை சரியாக பராமரிக்க வேண்டும். உங்கள் நகம் ஏதாவது விதத்தில் மோசமாக பாதிக்கப்பட்டால், உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். உண்மையில், உங்கள் உடலில் ஏதாவது குறைபாடு இருந்தால், அதை உங்கள் விரல்களின் நுனியில் இருக்கும் அறிகுறிகளை வைத்தே தெரிந்துகொள்ளலாம். ஆம், நகங்களைப் பார்த்தே, உங்கள் உடலில் குறைபாடுகள் ஏதாவது இருப்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என கூறப்படுகிறது.
நகங்கள் உறுதியாய் இருக்க அதிகப்படியான கால்சியமும் விட்டமின்களும் தேவையா? இந்தக் கேள்விக்கு விடையளிப்பவராய், ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரைச் சேர்ந்த காரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்டில் நகங்களைப் பற்றி ஆய்வு செய்யும் பேராசிரியர் போ ஃபார்ஸ்லிண்ட் விழித்தெழு!-விடம் சொன்னதாவது: “அந்தக் கருத்தை ஆதரிக்கும் அத்தாட்சி எதுவும் இல்லை. சாதாரண நகங்களிலுள்ள கால்சியத்தின் அளவை ஆய்வு செய்தபோது, அவை வெகு குறைவே என காட்டின.”
ஆனாலும், உங்கள் நகங்களை உறுதியாகவும் நெகிழும் தன்மை உடையதாகவும் ஆக்க உதவுவது நீர். முன்பு குறிப்பிட்டதைப் போல, நகங்களில் கெரட்டின் என்ற புரதச்சத்து உள்ளது. இந்தக் கெரட்டின் இழைகள் நெகிழும் தன்மையுடன் இருக்க, அவற்றிற்கு நீர் தேவை. பேராசிரியர் ஃபார்ஸ்லிண்ட் ஓர் உதாரணம் தருகிறார்: “உங்கள் நகத்தை முதன்முதலில் வெட்டும்போது, அவற்றின் ஒரு துண்டு நெகிழும் தன்மையுடையதாய் இருக்கலாம்; அதே துண்டு காய்ந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே, ஒடியும் தன்மையுடையதாய் ஆகிவிடும்.” ஈரம் உங்கள் நகங்களை நெகிழும் தன்மையுடனும் உறுதியுடனும் வைக்கும். ஆனால் எங்கிருந்து நகத்திற்கு இந்த ஈரம் கிடைக்கிறது? நகத் தகடு பார்ப்பதற்கு திடப்பொருளாகத் தெரிகிறது. ஆனால் அதன்மூலம் நீர் கடத்தப்படுகிறது. நகப்படுகையிலிருந்து ஈரம் மேல்நோக்கி நகத் தகட்டின் வழியாக அதன் மேற்பரப்புக்கு வந்து ஆவியாகிறது. நகங்கள் காய்ந்துவிடாமலும், உறுதியாகவும் இருக்க என்ன செய்வது? பேராசிரியர் ஃபார்ஸ்லிண்ட் கூறுவதாவது: “தினந்தோறும் அவற்றிற்கு எண்ணெய் இடுவது பயன் தரும்.”
வளர்ச்சியையும் அழகையும் பராமரிப்பது
மேட்ரிக்ஸிலிருந்து நகம் வளருவதால், நகத்தின் இந்தப் பகுதிக்கு முறையான பராமரிப்பு அவசியம். க்ரீம் அல்லது எண்ணெய் தடவி மேட்ரிக்ஸை தவறாமல் மசாஜ் செய்வதன் மூலம் அதைத் தூண்டுவிப்பது நகத் தகட்டுக்கு பலன் தரலாம். அத்துடன், நகக் கண்களுக்குள் ஒரு துளி எண்ணெய் விடுவதும்கூட பயன் தரலாம்; ஏனெனில் இது நகம் காய்ந்துவிடாமல் காக்கிறது.
நகத்தை தேய்க்கும் அல்லது வெட்டும் விதமும்கூட அவற்றை உறுதியானவையாகவோ பலவீனமானவையாகவோ ஆக்கிவிடலாம். நகங்களை பக்கவாட்டிலிருந்து மையப்பகுதியை நோக்கி தேய்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது. முனைகளைத் தேய்ப்பது நகத்தை பலவீனமடையச் செய்யும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இது, கூரான நகத்தை உருவாக்கும்; இது வடிவங்களிலேயே மிகவும் பலவீனமான வடிவமாகும்; ஏனெனில் இந்த வடிவத்திற்கு பக்கவாட்டில் ஆதரவு இல்லை. உறுதியான குட்டை நகங்களுக்கு, அவற்றை, பக்கவாட்டில் நேராக சுமார் 1.5 மில்லிமீட்டர் நீளம் வரை வளரவிடுங்கள்; விரல்நுனியின் தோற்றத்தையே கொடுக்குமாறு, அதை வட்ட வடிவில் தேய்த்துவிடுங்கள்.
சில பெண்கள் தங்கள் நகங்களை நீளமாக வளர்க்க விரும்பலாம். ஆனால் எச்சரிக்கை தேவை. ரொம்ப நீளமான நகங்கள், எப்பொழுதும் அவற்றிற்கே கவனத்தை இழுக்கும்; வழக்கமான வேலைகளைச் செய்யவிடாமலும் உங்களைத் தடுக்கும். ஆகவே உங்கள் நகங்களை எவ்வளவு நீளம் வளர்ப்பது என்ற விஷயத்தில் சமநிலையோடிருங்கள். அவ்வாறு சமநிலையுடன் வளர்த்தால், உங்கள் நகங்கள் மதிப்புமிக்க ஒன்றாகவும் இருக்கும்; மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தையும் கொடுக்கும்.
கூரான பொருட்களால் உங்கள் நகங்களை ஒருபோதும் குடையாதீர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். நகத்தின் சார்பற்ற முனைக்கு அடியிலுள்ள திசுவான ஹைப்போநிக்கியம் பகுதியை இது சேதப்படுத்தலாம். இந்தத் திசுவே நகத்திற்கு அடியில் இறுகலான ஒரு மூடியாக அமைகிறது. இந்தப் பகுதியை சேதப்படுத்தினால், நகப்படுகையை விட்டு நகம் தனியே வந்துவிடலாம்; சிலசமயம் புண்ணாகியும் விடலாம். நகங்களுக்கு அடியில் சுத்தம் செய்வதற்கு, மிக மிருதுவான பிரஷைப் பயன்படுத்துங்கள்.
உறுதியான, ஆரோக்கியமான நகங்களோ, பரம்பரை அம்சங்களைப் பொறுத்ததே. ஆகவேதான் சிலருடைய நகத் தகடுகள் உறுதியாகவும், நெகிழும் தன்மையுடனும் உள்ளன; அதே சமயத்தில் மற்றவர்களுடைய நகங்கள் காய்ந்தும், எளிதில் முறியும் தன்மையுடனும் உள்ளன. உங்கள் நகங்கள் எப்படி இருந்தாலும் சரி, மிதமாகவும், தவறாமலும் பராமரிப்பதன் மூலம் அவற்றின் தோற்றத்தை நீங்கள் முன்னேற்றுவிக்க முடியும். ஆம், நகங்கள் முழுவதன் அமைப்பையும் அவை வேலை செய்யும் விதத்தையும் புரிந்துகொள்வதும், அவற்றை முறையாக பராமரிப்பதும் அனுபவம் பெற உங்களுக்கு உதவும். இப்படிப்பட்ட விஷயங்களை ஞானமாக பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும்.
விரல் நகங்கள் உண்மையில் மனித உடலின் ஓர் அற்புதமான பாகமாகும். அவற்றின் அமைப்பும் அவை வேலை செய்யும் விதமும், அவற்றின் பொறுப்பாளருடைய புத்திநுட்பத்திற்கு சான்று பகர்கின்றன. பண்டைய காலத்தில் வாழ்ந்த தாவீது ராஜா, தனது படைப்பாளரின் பேரில் தனக்கிருந்த வியப்பை தாழ்மையுடன் தெரிவித்தார்; அது சங்கீதம் 139:14-ல் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”
[பக்கம் 23-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
1. நகத் தகடு;
2. லுனுலா;
3. மையத்திலும் பக்கவாட்டிலும் உள்ள நக மடிப்புகள்;
4. எப்பநிக்கியம்;
5. புறத்தோல்;
6. சார்பற்ற முனை;
7. ஹைப்போநிக்கியம்;
8. மேட்ரிக்ஸ்;
9. நகப்படுகை