உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 7/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அண்டார்டிக் ஓசோன் அடுக்கில் மாபெரும் ஓட்டை
  • 1998​—⁠சூரியன் சுட்டுப் பொசுக்கிய ஆண்டு
  • மர தக்கை Vs பிளாஸ்டிக் தக்கை
  • ஐஸ்கிரீம் பிரியர்கள்
  • துக்க வீடு ​—⁠வெந்த புண்ணில் வேல்
  • புற்றுநோயை எதிர்க்கும் கிரீன் டீ
  • பாப்பாக்களை கடித்துக்குதறும் பப்பிகள்
  • மணங்கமழும் ரயில் நிலையம்
  • முதிர் வயதிலும் உடற்பயிற்சி
  • கல்வியும் கண்மணிகள் காலமாவதும்
  • “சீனாவிலுள்ள எல்லாத் தேயிலைக் கொடுத்தாலும்...!”
    விழித்தெழு!—1991
  • நமது வளிமண்டலம் சேதமடையும்போது
    விழித்தெழு!—1994
  • உங்கள் நாயிடம்—சிறார்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்களா?
    விழித்தெழு!—1997
  • மறைந்துகொண்டிருக்கும் ஓசோன்—நம்முடைய சொந்த கேடயத்தை நாம் நாசமாக்கிக்கொண்டிருக்கிறோமா?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 7/8 பக். 28-29

உலகை கவனித்தல்

அண்டார்டிக் ஓசோன் அடுக்கில் மாபெரும் ஓட்டை

அண்டார்டிக்காவின் மீது ஒவ்வொரு வருடமும் ஓசோன் அடுக்கில் உருவாகிக் கொண்டிருக்கும் ஓட்டையின் அளவு பெரிதாகிக்கொண்டே போகிறது. செப்டம்பர் 1998-⁠ல் இந்த ஓட்டையின் அளவு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பெரிதாக இருந்தது என்பதாக யுனெஸ்கோ கூரியர் அறிவிக்கிறது. ஐரோப்பாவின் பரப்பளவைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டரை மடங்கு பெரிதாக ஓட்டை வளர்ந்திருப்பதை சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் அம்பலப்படுத்தின. வெப்பச்சீரடுக்கு மண்டலத்தில் இருக்கும் ஓசோன் அடுக்கு, இந்த உலகில் வாழும் ஜீவராசிகளையும் சூழழியல் அமைப்பையும் சூரியனின் புற ஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. அதிகரித்துக்கொண்டே இருக்கும் இக்கதிர் வீச்சினால் மக்களுக்கு விபரீதமான ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாயிருக்கிறது. வெயிலினால் ஏற்படும் புண், தோல் புற்றுநோய், கண்புரை நோய் போன்றவை கடும் சூரிய வெப்பத்தால் உண்டாகும் சில ஆபத்துகள் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. குளிரூட்டிகளிலும் ஸ்பிரே பாட்டில்களிலும் பயன்படுத்தப்படும் க்ளோரோஃப்ளூரோகார்பன்கள் (CFC) ஓசோன் அடுக்கை பாழாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதாக சொல்லப்படுகிறது. இவைகளின் உபயோகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிடுவோம் என்பதாக 1987-⁠ல் மான்ட்ரீல் மாநாட்டில் கலந்து கொண்ட 165 நாடுகள் உறுதியளித்தன. இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகள் மத்தியிலும், “வெப்பச்சீரடுக்கு மண்டலத்தில் இருந்து CFC முழுவதுமாக மறைவதற்கு குறைந்தபட்சம் 60 ஆண்டுகள் எடுக்கும்” என யுனெஸ்கோ கூரியர் குறிப்பிடுகிறது.

1998​—⁠சூரியன் சுட்டுப் பொசுக்கிய ஆண்டு

சயின்ஸ் நியூஸ்-⁠ன் பிரகாரம், 1860-லிருந்து கணக்கிட்டுப்பார்த்தால் 1998-⁠ம் ஆண்டுதான் சூரியனுடைய கோபத்தின் சீற்றத்தை மிகமோசமாக அனுபவித்த ஆண்டாகும். பூமியினுடைய தரைமட்டத்தின் சராசரி வெப்பநிலையானது, 1961-லிருந்து 1990 வரை பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையின் சராசரியைவிட 1.04°F அதிகம் என்பதாக கணிக்கப்பட்டது. “உலகின் சீதோஷணநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருப்பதால் வானிலை ஆய்வாளர்கள் கவலையில் மூழ்கியிருக்கிறார்கள். கடந்த வருடத்தின் வெப்பநிலை ஒப்பிட முடியாத அளவுக்கு மிகவும் உச்ச நிலையில் இருந்தது” என்கிறது அப்பத்திரிகை. பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக வெப்பமான வருடங்களுள் ஏழு 1990-⁠க்கு பிறகுதான் ஏற்பட்டன; மேலும் வெயில் படுமோசமாக இருந்ததாக பதிவு செய்யப்பட்ட பத்து வருடங்களும் 1983-லிருந்துதான் வந்தன என்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. முடிந்துபோன 1,200 ஆண்டுகளில் கடந்த இருபது ஆண்டுகளே மிகக்கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டன என்பதாக ஐ.மா. தேசீய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தைச் சேர்ந்த ஜோனத்தான் ஓவர்பெக் சொன்னார். ஐரோப்பா மற்றும் ஆசியாவின் வடக்குப் பகுதிகள் மாத்திரமே இந்த சுட்டுப் பொசுக்கும் வெயிலிலிருந்து தப்பின என்பதாக உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் தெற்கு பகுதியில் மண்டை காயும் அளவுக்கு கோடை வெயில் அடித்தது. மேலும் ஜூன் மாதத்தில் மத்திய ரஷ்யாவில் வெப்பத்தின் கடுமை அவ்வளவு அதிகமாக இருந்ததால் 100-⁠க்கும் அதிகமானோர் பலியானதோடு பேரளவில் தீ விபத்தும் ஏற்பட்டது.

மர தக்கை Vs பிளாஸ்டிக் தக்கை

உலகில் அடைப்பான்களாக பயன்படுத்தப்படும் மரத் தக்கைகளில் 80 சதவிகிதம் ஸ்பெய்னின் தெற்கு பகுதியிலும் போர்ச்சுகலிலும் பரவியுள்ள கார்க்-ஓக் மரப்பட்டைகளிலிருந்துதான் கிடைக்கிறது. விண்ணை எட்டிப் பார்க்கும் இந்த மரங்களின் பட்டைகளை, ஒன்பது வருடத்திற்கு ஒரு முறை விவசாயிகள் உரித்தெடுக்கின்றனர். இந்த கார்க்-ஓக் மரம் மட்டுமே இழந்துபோன தன்னுடைய பட்டைகளை மீண்டுமாக வளர வைக்கும் திறமை வாய்ந்து. பல நூற்றாண்டுகள் பழமையான இத்தொழிலுக்கு சமீபத்தில் ஆபத்து வந்திருக்கிறது. மரத் தக்கைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் தக்கைகள் பெருமளவு பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணம் என்பதாக இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள கார்டியன் வீக்லி அறிவிக்கிறது. இயற்கையான முறையில் மரத் தக்கை தயாரிக்கும் இத்தொழில் நசிந்து போகுமேயானால் இம்மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு, அதிக பணம் கொழிக்கும் தானியங்கள் அந்த இடத்திலே பயிரிடப்படும். பறவைகள் தொடர்ந்து வாழ்வதற்காக காடுகளையே சார்ந்திருக்கின்றன. ஆகவே இப்பறவைகள் தங்களது குடியிருப்பாகிய காடுகளை இழந்து தவிக்கும் என்பதாக இயற்கையின் காதலர்கள் அஞ்சுகிறார்கள். 42 வகையான பறவையினங்கள் ஓக் மரத்தையே கதியாக நம்பி இருக்கின்றன. “தங்களுடைய கூடுகளை இம்மரங்களில் கட்டியிருக்கும் ஸ்பானிஷின் பகட்டழகுடைய கழுகு இவற்றில் அடங்கும். இப்பறவையினம் தற்போது அழியும் தருவாயில் இருக்கிறது. ஏனெனில் இவற்றின் மொத்த எண்ணிக்கையே 130 ஜோடிகள்தான்.”

ஐஸ்கிரீம் பிரியர்கள்

“மார்க்கெட்டில் கிடைக்கும் வகை வகையான மற்றும் சுவையான ஐஸ்கிரீம்களை சுவைக்க ஸ்லோவினியர்கள் விரும்புவதால் கடைக்காரர்கள் தங்களது ஃப்ரிட்ஜ்களில் அவற்றை வாங்கி குவிக்கின்றனர்” என்பதாக லியுப்லியானாவின் செய்தித்தாளாகிய டேலோ தெரிவிக்கிறது. இச்செய்தித்தாளின் பிரகாரம் ஐஸ்கிரீமுக்கான ஸ்லோவினியர்களின் தீராத மோகம் இன்னும் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. இதன் விளைவாக இங்கிருக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் தங்களுடைய வருடாந்திர விற்பனையில் 22 சதவிகித அதிகரிப்பினால் சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சி விகிதத்தினால் நாடு முழுவதும் வருடத்திற்கு ஒரு நபர் 4.3 லிட்டர் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார். வருடத்திற்கு சராசரியாக 5.5 லிட்டர் ஐஸ்கிரீமை விழுங்கும் மேற்கத்திய ஐரோப்பியர்களையும் இந்த நாடு சீக்கிரத்தில் முந்திவிடும். இருந்தபோதிலும் ஐஸ்கிரீமை சாப்பிடுவதில் போட்டிப்போடும் ஐரோப்பியர்களில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர்களே முன்னணியில் இருக்கிறார்கள். மார்க்கெட் இண்டெலிஜென்ட் க்ரூப் யூரோமானிடர்-⁠ன் பிரகாரம் ஸ்வீடன் நாட்டில் ஒவ்வொருவரும் வருடத்திற்கு சராசரியாக 16 லிட்டர் ஐஸ்கிரீமை தின்றுதீர்த்து விடுகிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் உலகம் முழுவதும் தங்களுக்கு நிகர் தாங்களே என்பதாக அமெரிக்கர்கள் சவால் விடுகிறார்கள். ஆம், இங்கு வருடத்திற்கு ஒவ்வொரு நபரும் 20 லிட்டர் ஐஸ்கிரீமை காலி செய்துவிடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

துக்க வீடு ​—⁠வெந்த புண்ணில் வேல்

“வாழ்க்கையை நடத்துவதற்கு ஆகும் செலவு அதிகமாகிக்கொண்டே வருகிறது; ஆனால் இறந்தவர்களுக்கான செலவோ அதைவிட இன்னும் அதிகமாகிக்கொண்டே போகிறது” என்கிறது டைம்ஸ் ஆஃப் ஜாம்பியா. ஜாம்பியா உட்பட ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்வது அடிக்கடி தாமதப்படுத்தப்படுகிறது. சவ அடக்க நிகழ்ச்சிகளில் தொலைதூரத்திலிருக்கும் உறவினர்களும் நண்பர்களும் வந்து கலந்துகொள்வதற்கு வசதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. இவர்கள் ஒரு வாரம் அல்லது அதற்கும் மேலாக தொடரும் சவ அடக்க சடங்குகளில் கலந்துகொள்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் இவ்விதமாக வருபவர்களுக்கு தங்கும்வசதி மற்றும் உணவு வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே துயரத்தால் வாடிக்கொண்டிருக்கும் குடும்பத்திற்கு இன்னுமொரு பாரமும் இருக்கிறது. தேவையிலிருப்பவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி செல்வதற்கு போதுமான பணத்தையும் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சவ அடக்க நிகழ்ச்சிகள் துயரப்படும் குடும்பத்தை ஏழ்மையென்னும் பாதாளத்திலே தள்ளி, துக்க வீட்டிற்கு மேலும் துக்கத்தை சேர்க்கின்றன. “நவீன காலத்து சவ அடக்க நிகழ்ச்சிகள் அதிக செலவு பிடித்ததாக இருக்கின்றன. ஏனென்றால் துக்க வீட்டிற்கு வரும் திரளானவர்கள் துயரத்திலிருப்பவர்களுக்கு எவ்விதத்திலும் உதவியாக இருப்பதில்லை” என்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆகவே மரணம் ஏற்பட்டுவிட்டால் சீக்கிரமாகவே சவத்தை அடக்கம் செய்துவிடுங்கள்; இவ்வாறு செய்யும்போது துக்க வீட்டின் பாரம் குறையும் என்பதாக இச்செய்தித்தாள் ஆலோசனை கூறுகிறது.

புற்றுநோயை எதிர்க்கும் கிரீன் டீ

கிரீன் டீ அருந்துபவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது மிகக் குறைவே; விலங்குகளுக்கு கிரீன் டீ கொடுக்கப்பட்டு சோதனை செய்ததில் இதே உண்மை கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வுகள் காண்பிக்கின்றன. அ.ஐ.மா. இண்டியானாவில் உள்ள பர்டுவ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இதற்கான ஒரு காரணமாக இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக சயின்ஸ் நியூஸ் அறிவிக்கிறது. கிரீன் டீ-யில் இருக்கும் எபிகல்லோகடேசின் கால்லாட் [Epigallocatechin gallate (EGCg)] என்ற பொருள் புற்றுநோய் செல்கள் பிரிவதற்கு தேவைப்படும் என்சைமை தடுக்கிறது. சாதாரணமான மற்ற செல்களை இந்த EGCg தாக்குவதில்லை என்பதாக தெரிகிறது. உலகமெங்குமுள்ள 80 சதவிகித தேநீர் பிரியர்கள், பிளாக் டீ-யை விரும்பி அருந்துகிறார்கள். இதில் EGCg-யின் அடர்த்தி குறைந்தளவே இருக்கிறது. சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்ட புற்றுநோய் செல்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிரீன் டீ-யில் என்சைம் ஏற்படுத்தும் விளைவு தடை செய்வதை ஒப்பிடும்போது, பிளாக் டீ-யில் பத்தில் ஒரு பங்கு முதல் நூறில் ஒரு பங்கு மாத்திரமே ஆற்றல் வாய்ந்தது. இந்த உண்மையே ஆய்வாளர்கள் கொடுக்கும் விளக்கமாகும்.

பாப்பாக்களை கடித்துக்குதறும் பப்பிகள்

ஐக்கிய மாகாணங்களில் சிறு பிள்ளைகளே பெரும்பாலும் நாய் கடிக்கு பலியாகின்றனர் என்பதாக UC பெர்கெலே வெல்னல் லெட்டர் அறிக்கையிடுகிறது. அநேக சமயங்களில் நாயிடம் கடி வாங்குவதைத் தவிர்க்க முடியும் என இந்த அறிக்கை தொடர்ந்து சொல்லுகிறது. இந்த ஆபத்தை குறைப்பதற்காக, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைச் செல்வங்களுக்காக, நல்ல ‘மூட்’ உள்ள பப்பிகளை வாங்கும்படியாக வெல்னல் லெட்டர் சிபாரிசு செய்கிறது. அடுத்ததாக அதற்கு விதையகற்றப்பட வேண்டும்; அதை தயவோடும் அதேசமயத்தில் கண்டிப்புடன் கீழ்படிய பயிற்றுவிக்க வேண்டும். ஜனங்களோடு விசேஷமாக சிறுபிள்ளைகளுடன் சிநேகத்துடன் பழகுவதற்கும் பயிற்றுவிக்க வேண்டும். வெல்னல் லெட்டர் சொல்லுகிறது: “மிகவும் அமைதியான நாயாக இருப்பதால் அது குடும்பத்தில் புதிய குழந்தையை வரவேற்கும் என்றோ பெரியவர்களிடம் நடந்துகொள்வதைப் போல பச்சிளம் குழந்தையிடமும் நடந்துகொள்ளும் என்றோ தவறாக எடைபோட்டு விடாதீர்கள். சரியான மேற்பார்வையை கொடுக்க வேண்டும்.” பிள்ளைகள் தாங்களாகவே நாய்களோடு கொஞ்சி குலாவக்கூடாது என்பதாக சொல்லி வையுங்கள். நாயினுடைய சொந்தக்காரர் அதை அறிமுகப்படுத்தட்டும். நாயிடம் பேசுங்கள்; மேலும் உங்களுடைய கைமுட்டியை நாய் நுகர்ந்து பார்ப்பதற்கு அனுமதியுங்கள். நாய் உறுமினாலோ கோபத்தோடு வந்தாலோ அமைதியாக இருங்கள்; திரும்பிப் பார்க்காதீர்கள்; ‘திபுதிபு’ என ஓடாதீர்கள். “ஓநாய்களைப் போலவே நாய்களும் தப்பியோடும் இலக்குகளை விரட்டிச் சென்று தாக்கும் உள்ளுணர்வை கொண்டிருக்கின்றன” என்பதாக வெல்னல் லெட்டர் குறிப்பிடுகிறது.

மணங்கமழும் ரயில் நிலையம்

பாரீசின் நிலத்தடி இருப்புப் பாதை அமைப்பினுடைய நறுமணத்தை அதிகரிப்பதற்காக பிரான்சு நாட்டின் போக்குவரத்து நிர்வாகிகள் ஒரு புதிய சென்டை அறிமுகப்படுத்தினர். ஒரு பாதாள ரயில் நிலையத்தின் நினைவாக, மெடிலென் என்பதாக இந்த சென்டிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பினால் சுத்தப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் இதுவும் சேர்க்கப்படுகிறது என்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகால ஆராய்ச்சிகளையும் முன்னேற்றங்களையும் இந்த முயற்சிகள் தேவைப்படுத்தியதாக, இந்த பாதாள ரயில் திட்டத்தின் இயக்குநர் ஷாக் ராப்பர்ட் விளக்கமளித்தார். “குமட்டிக்கொண்டு வருவதாக இல்லாமல், இனிய மனம் கமழும் நறுமணத்தை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது. இது இரண்டு வாரங்களுக்கு அங்கேயே வலம்வந்து கொண்டிருக்கும்போது சுத்தமாகவும் நலமுடன் இருப்பது போன்ற எண்ணத்தையும் கொடுக்கும்” என்கிறார் இவர். நாட்டுப்புறச் சூழல், மரங்கள், பூக்கள் மற்றும் கனிகள் போன்றவற்றின் நறுமணத்தை இந்த மெடிலென் அளிக்க வேண்டும் என்பதாக பாதாள ரயில் திட்டத்தின் நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர்.

முதிர் வயதிலும் உடற்பயிற்சி

“65 வயதிற்கும் மேற்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வருடத்தில் குறைந்தது ஒரு தடவையாவது, கீழே விழுகிறார்கள்; இதனால் பலசமயங்களில் சீக்கிரத்தில் குணப்படுத்த முடியாத இடுப்பு உடைந்துபோவது போன்ற காயங்கள் ஏற்படுகின்றன,” என த நியூயார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. வயது ஆக ஆக, நம்முடைய உடல் தனது நிலையையே உணர்ந்து கொள்ளும் புலனுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து விடுகிறது. இதன் காரணமாக நாம் நடக்கும்போது பேலன்ஸாக இருப்பது கடினமாக இருக்கிறது. இது சம்பந்தமாக சமீபத்தில் யுனிவர்சிட்டி ஆஃப் கன்னக்டிகட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஒரு காலில் நிற்பது, குறைந்த உயரத்தில் இருக்கும் நீண்ட மரக்கட்டையின்மீது நடப்பது உட்பட பேலன்ஸாக நடப்பதற்கு உடற்பயிற்சிகள் செய்வது வயதானவர்கள் தள்ளாடி கீழே விழுந்து விடாமல் நடப்பதற்கு உதவி செய்யும் என்பதாக இவ்வாராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. சுல்லிவன் & க்ரோம்வெல் கார்பரேட் ஃபிட்னஸ் சென்டரைச் சேர்ந்த கினா ஆல்சின், இவ்விதமாக உடற்பயிற்சி செய்வதை படிப்படியாக ஆரம்பிக்க வேண்டும்; வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள், சுமார் பத்து நிமிடங்களுக்கும் குறைவாக இந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதாக ஆலோசனை கூறுகிறார். “இப்படிப்பட்ட பயிற்சிகள் பெரும் ஏமாற்றந்தரும் சவால்களாக இருக்கின்றன. மேலும் இவைகளை நீங்கள் அளவுக்கதிகமாக செய்வீர்களானால் நீங்கள் களைப்படைந்து வேதனையில் ஆழ்ந்துவிடுவீர்கள்.”

கல்வியும் கண்மணிகள் காலமாவதும்

“வருடம் 2010-⁠ல் உலகம் முழுவதும் உள்ள [பிள்ளைகளுக்கு] துவக்கப்பள்ளிகளில் பாடம் சொல்லித்தர வேண்டுமானால், இதற்கென அடுத்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 கோடி டாலருக்கும் அதிகமாக செலவிட வேண்டும்,” என்பதாக ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் அறிக்கையான உலகளாவிய பிள்ளைகளின் நிலைமை 1999—கல்வி சொல்லுகிறது. மலைக்க வைக்கும் “இம்மாபெரும் தொகை, ஒவ்வொரு வருடமும் ஐரோப்பியர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதிலும் அல்லது அமெரிக்கர்கள் சீவிமுடித்து சிங்காரிப்பதற்கு செலவிடும் தொகையைக் காட்டிலும் குறைவே.” த டைம்ஸ் ஆஃப் இண்டியா-வின் பிரகாரம் இந்தியாவில் வயதுவந்தவர்களில் 66 சதவிகித ஆண்கள் மற்றும் 38 சதவிகித பெண்கள் மாத்திரமே கல்வியறிவுடையவர்கள். எந்த பகுதிகளில் அதிகப்படியான பெண்கள் ஆரம்பப் பள்ளிகளில் படிக்கிறார்களோ, அங்கே பச்சிளம் குழந்தைகளின் அகால மரணம் குறைவாக இருக்கிறது. இப்படிப்பட்ட அடிப்படைக் கல்வியின் விளைவு தென்னிந்திய மாநிலமாகிய கேரளாவில் தெள்ளந்தெளிவாக இருக்கிறது. இம்மாநிலத்தில் கல்வியறிவு 90 சதவிகிதமாகும். “உலகமெங்கிலுமுள்ள வளரும் நாடுகளில் இங்குதான் குழந்தைகளின் மரணம் குறைவாக இருக்கிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்