“சீனாவிலுள்ள எல்லாத் தேயிலைக் கொடுத்தாலும்...!”
சரித்திரத்தின் போக்கை அது மாற்றியது. அந்தச் சமயத்தில் இருந்த மிகப் பெரிய வர்த்தக கம்பெனி அதன் பேரில்தான் ஸ்தபிக்கப்பட்டது. அதைத் தேடி ஆலந்து கப்பலோட்டிகள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்தனர். தண்ணீருக்கு அடுத்ததாக அதுதான் உலகில் மிகவும் விரும்பப்பட்ட பானம். அது என்ன? தேநீர்!
தேநீர் எப்படி அந்தளவுக்குப் பிரபலமாகிவிட்டது என்பது குறித்து நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? அது எங்கிருந்து வந்தது? எண்ணற்ற மற்ற அநேக கண்டுபிடிப்புகள் போன்று, அது சீனாவில் ஆரம்பம் கண்டது. பொது சகாப்தத்துக்கு முன் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னர், கன்ஃபூசியஸ் தன்னுடைய கவிதைகளில் ஒன்றில் தேநீரைக் குறிப்பிட்டிருக்கிறான். 300 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சீனப் பேரரசன் தேயிலைக்கு வரி விதித்து காலியான கருவூலப் பெட்டியை நிரப்பினான் என்று சரித்திரம் சொல்லுகிறது.
அதன் ஆரம்பத்தை விளக்கிடும் பழங்கதைகளுக்குக் குறைவு இல்லை என்றாலும், தேநீர் உண்மையில் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அநேகமாக நாம் ஒருபோதும் தெரியவர முடியாது. ஒரு கதை அதை பேரரசன் ஷென் நங் என்பவருடன் சம்பந்தப்படுத்துகிறது. அவர் தேசத்தில் பயணம் செய்யும் போதல்லாம் கொதித் தண்ணீர் மட்டுமே குடிப்பார். ஒரு சமயம் எரிந்து கொண்டிருக்கும் புதரிலிருந்து ஒரு கிளை காற்றில் அடித்து ஏற்கெனவே கொதித்துக்கொண்டிருக்கும் தண்ணீரில் விழுந்தது. இந்தப் புதிய பானத்தில் ஓர் அருமையான சுவையையும் மணத்தையும் கண்டு பேரரசன் ஆச்சரியப்பட்டார். அவர் தேநீரைக் கண்டுபிடித்தார்!
இரண்டாவது பழங்கதை ஒன்றின் பிரகாரம், புத்தரின் சீஷரில் ஒருவர், போதிதர்மா என்பவர், இரவும் பகலுமாகத் தொடர்ந்து தியானம் பண்ணுவதன் மூலம் மட்டுமே புனிதமடைய முடியும் என்று நம்பினார். தன்னுடைய நீண்ட தியானத்தின் போது, கடைசியில் தூக்கம் அவரை மேற்கொண்டது. அவர் இரண்டாவது முறையாக ஒரு கீழ்த்தரமான மானிட பலவீனத்திற்கு இடங்கொடுத்துவிடதிருக்க, தன்னுடைய கண் இமைகளை அறுத்துவிட்டார். இவை தரையில் விழுந்து, அதிசயமாக முளைவிட ஆரம்பித்தது. மறுநாள் ஒரு பச்சைப் புதர் தோன்றியது. அவர் அந்த இலைகளை சுவைத்துப் பார்க்க, அவை புத்துணர்ச்சியளிப்பதாய் அருமையாக இருந்தன. ஆம், அதுவே தேயிலைச் செடி.
தேநீர் தூர கிழக்கை மேற்கொள்கிறது
சீக்கிரத்திலேயே தேநீர் ஜப்பானை மேற்கொண்டது. அங்கு சீனாவைச் சேர்ந்த புத்தத் துறவிகளால் எடுத்துச் செல்லப்பட்டது. இவர்கள் ஒன்பதாவது நூற்றாண்டு போல் ‘தங்களுடைய தோள்பையில் தேநீர்க் குவளையுடன்’ அந்த இடத்துக்கு வந்தனர். விரையில் தேநீர் ஜப்பானியர் மத்தியில் அதிகப் பிரியமாகப் பருகப்பட்ட பானமாயிற்று; 400 ஆண்டுகளுக்குப் பின்னர் சானோயு என்றழைக்கப்பட்ட தேநீர் வழங்கும் ஓர் “உயர்ந்த சம்பிரதாய முறை” தேசிய நிறுவனமாயிற்று.
என்றபோதிலும், தேநீர் பருகுவதில் ஓர் உன்னிப்பான, விசேஷ சம்பிரதாயத்தை ஜப்பானியர் வளர்த்திடுகையில், சீனாவில் தேநீர் சுவைக்க முடியாத வகையில் இருந்தது. தேநீரை சீன கவிஞர்கள் “திரவ யஸ்பி நுரை” என்று போற்றின போதிலும், அது பெரும்பாலும் சூப் மாதிரி இருந்தது. பசும் தேயிலையை உப்புத் தண்ணீரில் கொதிக்க வைத்தனர்; சிலசமயங்களில் அதில் இஞ்சி, இலவங்கம் அல்லது வெங்காயமுங்கூட வாசனைக்குச் சேர்க்கப்பட்டது, மற்ற சமயங்களில் பாலிலும் சாதத்திலுங்கூட காய்ச்சப்பட்டது, இவை அந்தச் சமயத்தில் பொதுவாய்ச் சேர்க்கப்பட்ட பொருட்களாகும்.
என்றாலும், தேநீர் செய்யும் முறை குறித்து முதல் நூலை எழுதியவர் ஒரு சீனர். பொ.ச. 780 போல் லூ யூ சா கிங் (தேநீர் நூல்) என்ற புத்தகத்தை வெளியிட்டார், இது விரைவில் தூர கிழக்கத்திய தேநீர் பிரியருக்குத் தேநீர் பைபிளாக ஆனது. இந்த எழுத்தாளரின் செல்வாக்கினால், சீனா தன்னுடைய தேநீர் பழக்கத்தில் நன்கு பக்குவப்பட ஆரம்பித்தது, அந்தப் பானத்தை தந்திரமான, அதே சமயத்தில் அதிக எளிய முறையில் தயாரித்தது: ஒரு சிட்டிகை உப்பு கலந்த கொதித் தண்ணீர்—நீண்ட காலமாக விரும்பி சேர்க்கப்பட்ட பொருட்களில் ஒரே சலுகை—உலர்ந்த தேயிலையில் ஊற்றப்பட்டது. தேநீர் நன்றாக இருக்கிறதா என்பது அதன் நறுமணத்தைச் சார்ந்தது என்று லூ யூ கூறினார். அதன் மணமும் தரமும் தேயிலைச் செடியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை, ஆனால் திராட்சரசத்தில் தீர்மானிக்கப்படுவதுபோல, பெரும்பாலும் மண் மற்றும் தட்பவெப்ப நிலை போன்ற அம்சங்களாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்பது அவருடைய கருத்து. அது “ஆயிரம் பத்தாயிரம் வகை தேநீர்” இருக்கிறது என்று அவர் சொல்வதற்குக் காரணத்தை விவரிக்கிறது.
விரைவில் சீனர் தேயிலைத் தூளுக்குச் சுவையும் மணமும் ஊட்ட ஆரம்பித்தனர், நூற்றுக்கணக்கான வகை விற்பனைக்கு வந்தது. உலகிற்குத் தேநீரை அளித்த நாடு அதற்கு அந்தச் சர்வதேசப் பெயரையும் அளித்திருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை: அது அமாய் சீன மொழியில் ஒரு சீன எழுத்திலிருந்து தோன்றிய பெயர்.
ஐரோப்பா தேநீரைக் கண்டுபிடிக்கிறது
ஐரோப்பியர் தேநீரின் சுவையைக் கண்டுபிடிக்க அதிக நாட்கள் எடுத்தனர். ஒரு வெனீசிய வியாபாரியும் துணிச்சலான பயணங்களை மேற்கொண்டவருமான மார்க்கோ போலா (1254–1324) சீனாவில் எங்கும் பயணம் செய்தபோதிலும், தன்னுடைய பயண அறிக்கையில் தேநீரைக் குறித்து ஒரே முறைதான் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சீன நிதி மந்திரி தன் இஷ்டப்படி தேயிலை மீது வரியைக் கூட்டியதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னொரு வெனீசியனாகிய கியோவாணி பேட்டிஸ்டா ராமூசியோ, தேயிலை வளர்ப்பு மற்றும் உற்பத்தியைக் குறித்தும் அதன் உபயோகத்தைக் குறித்தும் விவரமாக விளக்கினார். இப்படியாக, 17-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தப் புதிய பானத்தின் முதல் மாதிரி சரக்கு ஐரோப்பிய மருந்து கடைகளில் விற்கப்பட்டன, ஆரம்பத்தில் அதன் விலை தங்கத்தின் விலையாக இருந்தது. “சீனாவிலுள்ள எல்லாத் தேயிலைக் கொடுத்தாலும் . . .!” என்ற ஆஸ்திரேலியரின் கூற்று “நிச்சயமாகவே இல்லை” என்ற அர்த்தத்தைக் கொடுத்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.
இதற்கிடையில், ஆலந்து மக்கள் தூர கிழக்கு தேசங்களுடன் வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர், தேயிலை அவர்களுடைய இறக்குமதியில் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. ஜோஹன் நியுஹாஃப், ஒரு சிறந்த வியாபாரி, சீன ஆட்சிப் பிரிவினருடன் முறிக்கப்படாத ஓர் ஒப்பந்தத்துக்குள் வந்ததைக் குறித்து அறிக்கை செய்கிறான். இதனை நிறைவுசெய்யும் வகையில் அளிக்கப்பட்ட விருந்தில் பெரும்பாலும் ஒரு பானம் கொடுக்கப்பட்டது. அவன் அந்தப் பானத்தை மதிப்புக் குறைவுபடுத்தி, அதை “பீன் சூப்” என்பதாக அழைத்தான். அது எவ்விதம் தயாரிக்கப்படுகிறது என்பதையும் “நீங்கள் தாங்கக்கூடிய சூட்டில் அது அருந்தப்படுகிறது” என்பதையும் விளக்கிய பின்பு, “இரசவாதிகள் லேப்பிடம் ஃபிலாசஃபாரத்தை . . . அதாவது தத்துவஞானியின் கல்லை எந்தளவுக்குப் பொக்கிஷமாகக் கருதுகிறார்களோ, அதுபோல சீனர் இந்தப் பானத்தைக் கருதுகிறார்கள்” என்று கூட்டினான். என்றபோதிலும் தேநீர் எல்லா விதமான நோய்களுக்கும், அதிக விலையுள்ளதாயிருப்பினும், சிறந்த பரிகாரமாக இருக்கிறது என்று போற்றிப் பேசுகிறான்.
பிரிட்டிஷ் மக்களை மகிழ்விக்கும் அந்தக் கோப்பை
இன்று தேநீரை அதிகமாக விரும்பி அருந்துகிறவர்கள் பிரிட்டிஷ் மக்களாயிருப்பினும், ஆலந்து மற்றும் போர்ச்சுகீஸ் மக்கள் தாமே அவர்களை தேனீர் பருகும் பழக்கத்தினிடமாக திருப்ப உதவினர். ஆம்ஸ்டர்டாமில் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆலிவர் க்ராம்வெல்லால் இங்கிலாந்துக்குத் திரும்ப அழைக்கப்பட்ட யூதர்கள் தங்களுடன் தேயிலை கொண்டுவந்தார்கள் என்று நம்பப்படுகிறது. செப்டம்பர் 23, 1658 ஒரு மறக்கமுடியாத தேயிலை நாளாகும். அன்றுதான் ஓர் ஆங்கில தினசரியில் ஒரு தேநீர் விளம்பரம் முதன் முதலாகத் தோன்றியது. ட்சான் என்று சீனர்கள் அழைக்கும், ஆனால் தேநீர் என்று மற்றவர்கள் அழைக்கும் பானம் லண்டன் மாநகரின் ஒரு காபியகமாகிய சுல்டான்ஸ் ஹெட்டில் விற்கப்படும் என்று மெர்குரியஸ் பொலிட்டிகஸ் அறிவித்தது. மூன்று ஆண்டுகள் கழித்து, ஆங்கில அரசன் சார்லஸ் II தேநீர் சுவைத் திற வல்லுநரை, ஒரு போர்ச்சுகல் தேச இளவரசியாகிய பிரகான்ஸாவைச் சேர்ந்த கேத்தரீனை விவாகம் செய்தார். இந்த இளவரசி ஆங்கில அரச அவையில் தேநீர் நேரத்தை அறிமுகப்படுத்தினாள். இது மதுபானங்களின் மீது ஒரு வெற்றிச் சாதனையாக அமைந்தது, மதுபானம் அரச குடும்பத்தின் ஆண்களாலும் பெண்களாலும் காலையிலும், மதியமும், மாலையிலும் சிறிதளவாக அருந்தப்பட்டது. திடீரென, தேநீர் ஒரு நாகரிக பானமாக ஆனது.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உற்பத்தியான போதிலும், தேயிலை லண்டனுக்கு ஏராளமாகக் கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில் சீனாவில் தேயிலை விற்பனை உரிமையை கிழக்கு இந்திய கம்பெனி தனக்குரியதாக்கிக் கொண்டது. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு தூர கிழக்குடன் தனி வர்த்தக ஆதிக்கத்தை செலுத்தியது. பெரும்பாலான ஐரோப்பியர் தேநீர் பருக ஆரம்பித்தனர், என்றபோதிலும் ஃபிரான்சு இந்தப் புதிய பானத்திற்குத் திரும்பவில்லை.
தேயிலையும், வரிகளும், போர்களும்
தேயிலை பொருளாதார நெருக்கடியிலிருந்த அரசாங்கங்களுக்கு ஓர் ஒத்தாசையாக அமைந்தது. முதலில் லண்டன் காபியகங்களில் அருந்தப்படும் தேநீரின் அளவுக்கேற்ப வரி வசூலிக்கப்பட்டது. இந்தக் கடினமான விதிமுறை 1689-ல் விலக்கப்பட்டு, ஒவ்வொரு பவுண்டு உலர்ந்த தேயிலைக்கும் வரி விதிக்கப்பட்டன. 90 சதவீதம் வரையுமாக எட்டிய வரிகளும் தேயிலையின் தேவை அதிகரித்துக்கொண்டிருந்ததும் இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதிகளில் கடத்தல் வியாபாரத்தைப் பெருக்கியது, ஏனென்றால் தேயிலை அந்தக் கண்டத்தில் அவ்வளவு மலிவாக இருந்தது. செயற்கை தேயிலைத் தூளும் உற்பத்திசெய்யப்பட்டது. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட தேயிலை வெல்லத்திலும் களிமண்ணிலும் பக்குவப்படுத்தப்பட்டு—அசல் தேநீரின் நிறத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்பட்டது—பின்பு உலர்த்தப்பட்டு விற்கப்பட்டது. கலப்படம் செய்யும் ஒருவன் “ஸ்மெளச்” என்று அழைக்கப்பட்ட ஒன்றை உற்பத்தி செய்தான், இது நாற்றமடிக்கும் சாம்பல் இலைகள் உலர்த்தப்பட்டு, ஆட்டு சாணத்தில் இடப்பட்டு விற்பனைக்கு முன்பு அசல் தேயிலையுடன் கலக்கப்பட்டது!
தேயிலை சரித்திரத்தின் போக்கையும் மாற்றியது. ஒரு பவுண்டு தேயிலைக்கு மூன்று பென்ஸ் வரி விதிப்பு, அமெரிக்க சுதந்திரப் போரயே ஏற்படுத்திவிட்டது. மூர்க்கமடைந்த பாஸ்டன் மக்கள் இந்த “அற்பமான ஆனால் கொடூர வரியை” கண்டனம் செய்தனர். சிலர் தங்களை நாட்டு அமெரிக்கராக (இந்தியராக) மாறுவேடம் தரித்துக்கொண்டு, மூன்று கிழக்கத்திய இந்திய கப்பல் தளங்களில் சீறியெழுந்து, தேயிலைப் பெட்டிகளை உடைத்து, எல்லாச் சரக்கையும் கடலில் எறிந்தனர். இதிலிருந்துதான் “பாஸ்டன் தேநீர் விருந்து” என்ற வழக்கத் தொடர் உண்டானது. மற்றவையனைத்தும் சரித்திரம்.
தேயிலையின் பெயரில் மற்றொரு போர் மூண்டது, அதுதான் அபினிப் போர். தான் ஏற்றுமதி செய்த தேயிலைக்குச் சீனா வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டது, ஏனென்றால் ஐரோப்பியரின் பொருட்களுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. என்றபோதிலும், அபினி—தடைசெய்யப்பட்ட போதிலும்—அதிகமாக இச்சிக்கப்பட்ட பொருளாய் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனி அந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய விரைந்தது, தேயிலைக்கு மாற்றாக அபினி அளித்தது. பெரும் சீன வர்த்தகத்தின் அந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காகப் பழிபாவங்களுக்கு அஞ்சாத அந்தக் கம்பெனி கிழக்கத்திய இந்தியாவில் அபினி தயாரிக்க பாப்பி செடிகளைப் பயிர் செய்தனர். ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக சட்டத்துக்கு முரணான இந்த வியாபாரம் தொடர்ந்தது. அபினி விடுதிகளின் தேவைகளை நன்கு பூர்த்திசெய்தது. இது கடைசியில் சீன அரசு தடை செய்யும்வரையில் தொடர்ந்தது. இந்த விவாதத்தின் பேரில் சீனருக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் தொடர, போர் மூண்டது, இது 1842-ல் சீனருக்கு படு தோல்வியில் முடிவடைந்தது. தேயிலை மீண்டும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, சீனா அபினி இறக்குமதியை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
ஏன் ஒரு கோப்பை தேநீர் அருந்தக்கூடாது?
தேயிலையின் ஆரம்ப சரித்திரத்தில், தேநீருக்கு ஓர் ஊக்கச் சத்து இருக்கிறது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது, இதற்குக் காரணம் அதில் காஃபீன் இருப்பதுதான். தேயீலை முதலில் மருந்து கடைகளில் விற்கப்பட்டது, நீர்க்கோவை மற்றும் ஊட்டச்சத்து நோய்களுக்கு முழு பரிகாரம் அளிப்பவையாகக் கருதப்பட்டது. பசியின்மைக்கும் அளவுக்கு மிஞ்சி உணவருந்துவதற்குங்கூட பயனுள்ள பரிகாரமாகப் பயன்படுத்தப்பட்டது. இன்று தேயிலையில் அநேக B–காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், காஃபீன் அதிகமாக உட்கொள்ளப்படும் வாய்ப்பையும் கூட்டுகிறது. மேலும், கலோரியளவில் அதிக கவனம் செலுத்தும் மேற்கத்திய சமுதாயத்தில், பாலும் சர்க்கரையும் இன்றி உட்கொள்ளப்படும் ஒரு கோப்பை தேநீரில் நான்கு கலோரிகள் மட்டுமே இருக்கிறது என்பதை நினைவிற் கொள்வது நல்லது.
தேயிலை மிக எளிதில் கெட்டுப்போகக்கூடியது. ஒரு சில மாதங்களுக்கு மேல் அதை சேமித்துவைக்க முடியாது. அதற்கு மேலாக அது சரியான விதத்தில் காக்கப்படவேண்டும். மற்ற மூலிகைகளுடன் அல்லது அதைவிட மோசம், நறுமணப் பொருட்களுடன் வைக்கப்படக்கூடது. அதற்குப் பக்கத்தில் இருக்கும் எந்த ஒரு பொருளின் சுவையையும் தேயிலை ஈர்த்துக்கொள்ளும். எனவேதான், கடந்த நூற்றாண்டின் பிரிட்டிஷ் தேயிலைத் தோட்ட முதலாளிகள், தேயிலைப் பறிக்கச் செல்லும் பணியாட்கள் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் குளித்துவிட்டுச் செல்லுவதை வற்புறுத்தினர்.
ஐஸ் தேநீருங்கூட அருமையாக இருக்கும். 1904-ல் நடைபெற்ற புனித லூயி உலகப் பொருட்காட்சியின்போது, ஓர் ஆங்கிலேயன், ஏற்கெனவே வியர்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு சூடான தேநீரை விற்பதற்கு முடியவில்லை. எனவே அவன் ஐஸ் கலந்தான், அப்பொழுதுதானே அமெரிக்காவின் புத்துயிரளிக்கும் கோடக்கால பானம் பிறந்தது.
பிரிட்டிஷ் மக்கள் பால் கலந்த தேநீரைத்தான் பருகுவர். மேற்கு ஜெர்மனியிலுள்ள ஃபிரீஷியர் வெள்ளை கற்கண்டுடனும் மேலே ஐஸ்கிரீமுடனும் அருந்துவதில் மகிழ்கின்றனர். மொரக்கியர்கள் புதினாவுடனும், திபெத்தியர் அதில் உப்பும் யாக் வெண்ணையும் கலந்து அருந்துகின்றனர். என்றபோதிலும், அநேக தேநீர் பிரியர் பழங்காலத்திய லூ யூவின் ஆலோசனைப்படி, கிடைக்கும் இடங்களில் கொதிக்கும் தெளிந்த மலைத் தண்ணீரில் தேநீர் தயாரிக்கின்றனர்.
தேநீரைப் பற்றி இவ்வளவு வாசித்த பின்னர், உங்களுக்கு தாகமாயிருக்கிறதா? ஏன் இப்பொழுதே அருமையான ஒரு கப் தேநீர் அருந்தக்கூடாது? (g89 9/8)
[பக்கம் 15-ன் பெட்டி]
“கடவுளே, தேநீருக்கு நன்றி! தேநீர் இல்லாமல் உலகம் என்ன செய்யும்?—அது எப்படி இருந்தது? தேநீர் பிறப்பதற்கு முன் நான் பிறக்கவில்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” சிட்னி ஸ்மித் (1771–1845), ஆங்கில எழுத்தாளர்.
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
தேயிலைத் தோட்டத்திலிருந்து தேநீர்க் கெண்டி வரை
இன்று நூற்றுக்கணக்கான தேயிலைச் செடிகள் இருக்கின்றன, அவை அனைத்துமே இனக்கலப்பு மூலம் பெற்ற மூன்று முக்கிய வகைகளைச் சேர்ந்தவை. தேயிலைத் தோட்டங்கள் முக்கியமாக மழைத்தண்ணீர் வழிந்துவிடக்கூடிய மலைப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. இன்று மிக அதிக தேயிலை வளர்ப்புப் பிரதேசம் அஸாம். இது இந்தியாவின் அதே பெயர் கொண்ட வடக்கு மாநிலத்தில் இருக்கிறது. என்றபோதிலும், தேநீர் வகைகளின் “ஷாம்பேன்” இமய மலைகளின் அடிவாரத்தில் அமைந்த டார்ஜீலிங்கிலிருந்து வருகிறது. மழையும் அமில மண்ணும் மிகச் சிறந்த தேயிலைகளை உற்பத்தி செய்கின்றன, இது டார்ஜீலிங்கை ‘வாக்குப்பண்ணப்பட்ட தேநீர்த் தேசமாக’ மாற்றியிருக்கிறது.
டார்ஜீலிங்கில் அறுவடை பருவகாலத்தைச் சார்ந்தது. தேயிலைக் கொழுந்து பறிப்பவர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முதல் பறிப்பைச் செய்வார்கள், இது மிகவும் உயர்ந்த ரகமாக மதிக்கப்படும் நறுமணம் கொண்ட தேயிலையாக இருக்கும். இரண்டாவது கட்ட கோடைக்கால இலையெடுப்பு முழு அளவான செம்மஞ்சள் வண்ண தேநீரைத் தந்திடும். ரொட்டி–வெண்ணை தேநீருக்கான இலை பின்னர் இலையுதிர் காலத்தில் பறிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் கொழுந்து பறித்தல் ஆண்டு முழுவதும் ஒரு சில நாட்கள் முதல் வாரங்கள் இடைவெளியில் நடைபெறுகின்றன. கொழுந்து எந்தளவுக்கு இளமையும் மென்மையுமாய் இருக்கிறதோ, அந்தளவுக்கு தேநீர் நன்றாக இருக்கும். கொழுந்து பறிப்பது அதிக திறமையையும் கவனத்தையும் கேட்கிறது. ஏறக்குறைய 30,000 துளிர்கள் 13 பவுண்டு டார்ஜீலிங் தேயிலைதான் கொடுக்கிறது, இதுதானே ஒரு திறமையான வேலையாளின் ஒரு நாள் வேலையாக இருக்கிறது. ஆனால் பறிக்கப்பட்டிருப்பது இன்னும் தேயிலைத் தூள் அல்ல.
இப்பொழுது ஒரு நான்கு கட்ட உற்பத்தி முறை ஆரம்பமாகிறது. முதலாவதாக, இளம் பச்சைத் துளிர்கள் 30 சதவீத ஈரப்பதத்தை இழக்கவும் தோல் போன்று மென்மையாவதற்கும் அவை உலரவேண்டியதாயிருக்கிறது. அடுத்தக் கட்டமாக அவை சுருள்வதற்குத் தயாராக இருக்கின்றன. சுருள்வதன் மூலம் இலைகளின் பாசணுச்சுவர்கள் திறக்கப்பட்டு, தேநீருக்குரிய மணத்தைத் தரும் இயல்பான ரசத்தை வெளிவிடுகிறது. மூன்றாவது கட்டத்தில், இலைகள் பச்சை-மஞ்சள் நிறத்திலிருந்து அவற்றின் தன்மையாகிய பழுப்பு நிறத்திற்கு மாறுகின்றன. இந்த முறைக்குத்தான் புளித்தல் என்று பெயர். துண்டுகளாக்கப்பட்ட இலைகள் மேசைகளில் ஈரப்பதம் கொண்ட ஒரு நிலையில் பரப்பப்பட்டு, புளிக்க விடப்படுகிறது. இப்பொழுது அந்த இலைகள் உலர்த்தப்பட அல்லது வறுக்கப்பட வேண்டும். இச்செயல்முறை இலைகளைக் கருப்பாக்குகின்றது. அவற்றின் மீது தண்ணீர் ஊற்றப்படும்போது மட்டுமே அவை மீண்டும் செம்பழுப்பு நிறமாக ஆகும்.
கடைசியாக, உலர்த்தப்பட்ட தேயிலைத் தூள் தரத்துக்கேற்ப பிரிக்கப்பட்டு மெல்லிய அலுமினியம் காகிதம் வைக்கப்பட்ட மரப் பலகைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு உலகமுழுவதுமுள்ள வியாபாரிகளுக்கு அனுப்பப்படுவதற்குத் தயாராக இருக்கிறது. பின்னர் இன்கலவை சேர்க்கப்பட்ட பிறகு, உங்கள் தேநீர்க் கெண்டியில் தேனீரைத் தயாரிக்க ஆயத்தமாக இருக்கிறது.
[பக்கம் 14-ன் படம்]
சீனர் தேயிலையை எடைபோடுகின்றனர்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
தேயிலைத் தொழிற்சாலை, சீக்கீம், இந்தியா—வலது பக்கம்
இந்தியாவில் தேயிலைப் பறித்தல்—வலது பக்கம், கடைசி
ஸ்ரீ லங்காவில் தேயிலைத் தோட்டம்—வலது பக்கம், கீழே
தேயிலைச் செடி இலைகளும் பூக்களும்—நடுவில்
தேயிலைப் பறிக்கும் ஜப்பானியர்—இடது பக்கம், கீழே