மதத்தின் கடந்த கால கண்ணோட்டத்தில் அதன் எதிர்காலம்
பகுதி 19: 17-19-வது நூற்றாண்டு வரைகிறிஸ்தவமண்டலம் உலக மாற்றத்துடன் போராடுகிறது
“தத்துவமும் மதமும் ஒப்புரவாகாதவை.”ஜார்ஜ் ஹெர்வக், 19-வது நூற்றாண்டு ஜெர்மானிய கவிஞர்
“தத்துவம்,” “ஞானத்தின்பால் அன்பு” என்ற வேர்ப் பொருள் கொண்ட கிரேக்க சொல்லிலிருந்து வந்தது, இதற்கு விளக்கம் தருவது கடினம். “சர்வலோக மற்றும் எல்லாம் உள்ளிட்ட ஒரு விளக்கம்” அளிக்கப்படலாம் என்பதில் ஐயப்பாடு எழும்புகையில், தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, “இந்தத் திக்கில் முதல் முயற்சியாக, தத்துவம் என்பது ‘மானிடரின் வித்தியாசமான அனுபவத்தின் பேரில் ஒரு பிரதிபலிப்பு’ அல்லது ‘மனிதனுக்கு மிகுந்த அக்கறையாயிருக்கும் பொருள்களின் பேரில் கருத்தூன்றிய, வழிமுறையான, மற்றும் கிரமமான கலந்தாராய்வு’ என்பதாக விளக்கப்படலாம்” என்று சொல்ல முனைகிறது.
உண்மை மதமும் தத்துவமும் ஏன் ஒப்புரவாகாது என்பதை இந்த விளக்கங்கள் தெளிவாகக் காண்பிக்கின்றன. உண்மை மதம் தெய்வீக வெளிப்படுத்துதலின் பேரில் சார்ந்தது, “மானிடரின் வித்தியாசமான அனுபவத்தின் பேரில்” சார்ந்ததல்ல. முதல் பிரதான காரியம் என்னவெனில், அது சிருஷ்டிகரின் அக்கறைகளை மையமாய்க் கொண்டிருக்கிறது, “மனிதனுக்கு மிகுந்த அக்கறையாயிருக்கும் பொருள்களின் பேரில்” அல்ல. மறுபட்சத்தில், பொய் மதம், தத்துவத்தைப் போன்று மனித அனுபவத்தின் அடிப்படையிலானதும் மனித அக்கறைகளையே மேன்மையாகக் கொண்டதாயுமிருக்கிறது. இந்த உண்மை குறிப்பாக கிறிஸ்தவமண்டலம் உலக மாற்றத்துடன் போரடிய 17-வது நூற்றாண்டு முதல் தெளிவானது.
ஒரு முப்பக்க அபாயம்
நவீன விஞ்ஞானம் 17-வது நூற்றாண்டில் பிறந்ததுமே, இதற்கும் மதத்துக்கும் இடையிலான ஒரு மோதல் தவிர்க்க முடியாததானது. கவர்ச்சியான விஞ்ஞான சாதனைகளினால், தவறுசெய்யாமை மற்றும் அதிகாரம் என்ற ஒளிவட்டம் விஞ்ஞானத்தை சூழ்ந்துகொள்ள, விஞ்ஞானத்துவம், தன்னில்தானே ஒரு மதமாக, ஒரு புனித பசுவாக ஏற்படலாயிற்று. விஞ்ஞான ரீதியான “உண்மைகளின்” வெளிச்சத்தில் மத உரிமைப்பாராட்டல்கள் திடீரென நிரூபிக்க முடியாதவையாகக் காணப்பட்டன. விஞ்ஞானம் புதியதாகவும், கிளர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது; மதம் காலம் கடந்ததாகவும் கவர்ச்சியற்றதாகவும் காணப்பட்டது.
மதத்தின்பேரில் இருந்த இந்த மனப்பான்மை அறிவொளியால், 17-வது 18-வது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவை சூழ்ந்த அறிவுத்திறன் இயக்கத்தால் ஊட்டம் பெற்றது. அறிவுத்திறன் மற்றும் பொருள் முன்னேற்றத்தை அறிவுறுத்திய இது, திறனாய்வின் அடிப்படையிலான விவாதத்தின் சார்பாக, அரசியல் மற்றும் மத அதிகாரத்தையும் பாரம்பரியத்தையும் மறுத்தது. இதுவே அறிவு மற்றும் மகிழ்ச்சியின் ஊற்றுமூலமாக கருதப்பட்டது. “இதன் வம்சா வேர்கள் கிரேக்க தத்துவத்தில்” காணப்பட்டன என்று தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது.
அந்த அறிவொளி முக்கியமாக ஒரு ஃபிரஞ்சு கருத்து. ஃபிரான்சின் பிரபலத் தலைவர்களின் பட்டியல் வால்டேர் மற்றும் டெனிஸ் டிடெராட் என்பவர்களும் உட்படுகின்றனர். கிரேட் பிரிட்டனில் ஜான் லாக் மற்றும் டேவிட் ஹும் இதற்கு ஆதரவாக இருந்தனர். ஐ.மா.-வின் தந்தைகளில் தாமஸ் பேய்ன், பென்ஜமின் ஃப்ராங்க்ளின், மற்றும் தாமஸ் ஜெஃபர்சன் உட்பட ஆதரவாளர்கள் காணப்பட்டார்கள். உண்மை என்னவெனில், சர்ச் அரசிலிருந்து பிரிந்திருக்க வேண்டும் என்று ஐ.மா. சட்டம் வற்புறுத்திய காரியம் அறிவொளிக் கருத்துகளின் பிரதிபலிப்பு. கிறிஸ்டியன் உல்ஃப், இம்மானுவேல் கேன்ட், மற்றும் ஃபெலிக்ஸ் மெண்டல்சானின் தாத்தா மோசஸ் மெண்டல்சான் ஜெர்மனியிலிருந்த குறிப்பிடத்தக்க உறுப்பினர்களாவர்.
கேன்ட், மதத்தை சந்தேகித்தவனாய், “அறிவொளியை” “சுயமாய்ப் பாதுகாப்புக்குட்படுத்திக்கொண்ட நிலையிலிருந்து மனிதனின் விடுதலை” என்று விளக்கியதாகச் சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்லுவதன் மூலம் கேன்ட் “தனிப்பட்ட மனிதர் ஒழுக்கம், மதம், மற்றும் அரசியல் குறித்த தங்களுடைய எண்ணங்கள் அரசியல், மதம், அல்லது வேத அதிகாரங்களால் உச்சரிக்கப்படுவதற்குப் பதில் தங்களுக்குத் தாங்களே சிந்திப்பதற்கான தைரியத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு வழிமுறையை” அர்த்தப்படுத்தினார் என்று கார்நீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலன் W. உட் விளக்குகிறார்.
பதினெட்டாவது நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில், தொழில் புரட்சி முதலாவது கிரேட் பிரிட்டனில் துவங்கியது. முக்கியத்துவம் விவசாயத்திலிருந்து இயந்திரங்கள் மற்றும் இரசாயன முறை கொண்டு பொருட்களை உற்பத்தி செய்தல் என்பதற்குத் திரும்பியது. இது விவசாயம் மற்றும் கிராமப்புற சமுதாயங்களைப் பெரும்பாலும் பாதித்தது, ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கென பட்டணங்களுக்கு அனுப்பியது. இது வேலையில்லாமை, வீடு பற்றாக்குறை, வறுமை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட மற்ற கேடுகளில் விளைவடைந்தது.
விஞ்ஞானம், அறிவொளி, மற்றும் தொழில் நிறுவனம் ஆகிய இந்த முப்பக்க அபாயத்தைக் கிறிஸ்தவமண்டலம் மேற்கொள்ளக்கூடுமா?
கடவுளைப் புறக்கணித்தல், மெதுவாக
அறிவொளி சிந்தையால் உந்தப்பட்ட மக்கள் சமுதாயத்தின் பல கேடுகளுக்கு மதத்தைக் குற்றப்படுத்தினர். “சமுதாயம் முன்தீர்மானிக்கப்பட்ட தெய்வீக மற்றும் இயற்கைச் சட்டங்களின் செயல்திட்டத்தின்படி கட்டப்படவேண்டும்” என்ற கருத்து, “சமுதாயம் மனிதனின் சொந்த ‘திறனால்’ அல்லது ‘செயற்பாட்டால்’ கட்டப்படமுடியும் என்ற எண்ணத்தால் மாற்றப்பட்டது. இப்படியாக மதம் சாராத ஒரு சமூக மனிதத்துவம் தோன்றியது, இது நவீன உலகின் பெரும்பாலான தத்துவத்தையும் சமுதாய கொள்கைகளையும் பிறப்பிக்கும்,” என்று மத என்சைக்ளோபீடியா சொல்கிறது.
இந்தக் கோட்பாடுகள் செல்வாக்கு மிகுந்த ஃபிரஞ்சு அறிவொளி தத்துவஞானி ஜீன்-ஜாக்விஸ் ரூஸோ பிரகடனப்படுத்திய “சமுதாய மதம்” என்பதையும் உட்படுத்தின. அது ஒரு தெய்வத்தை அல்லது அவரை வணங்குவதை மையமாகக் கொண்டிருப்பதற்கு பதிலாக சமுதாயத்தின் பேரிலும் அதன் அக்கறைகளில் மனிதர் உட்படுவதிலுமே மையம் கொண்டிருந்தது. ஃபிரஞ்சு வரலாற்றுச் சிறப்பாய்வாளர் க்ளாடு-ஹென்ரி டி ரூவ்ராய் ஒரு “புதிய கிறிஸ்தவத்தை” பரிந்துரைத்தார், அவருடைய இளம் மாணாக்கர் அகஸ்தே காம்தே “மனிதவர்க்க மதம்” குறித்துப் பேசினான்.
பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சமூக சுவிசேஷம் என்று அறியப்பட்ட அமெரிக்க இயக்கம் புராட்டஸ்டன்ட்டினர் மத்தியில் வளர்ந்தது; இது ஐரோப்பிய கோட்பாட்டுக்கு நெருங்கியதாயிருந்தது. ஒரு கிறிஸ்தவனின் முக்கிய கடமை சமூகக் காரியங்களில் உட்படுதல் என்ற காரியத்தையே அந்த இறைமையியல் சார்ந்த கருத்து தெரிவித்தது. இது புராட்டஸ்டன்டினர் மத்தியில் இன்றுவரை பெரும் ஆதரவைக் கண்டிருக்கிறது. கத்தோலிக்கரின் கருத்து விடுதலையின் இறைமையியலைக் கற்பிக்கும் ஃபிரான்சின் பணி-குருக்களிடையிலும், லத்தீன் அமெரிக்க குருவர்க்கத்தினர் மத்தியிலும் காணப்படுகின்றது.
கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் இந்தப் போக்கையும்கூட பிரதிபலிக்கின்றனர் என்று 1982 டைம் பத்திரிகையின் அறிக்கை குறிப்பிடுகிறது: “புராட்டஸ்டன்ட்டினர் மத்தியில், மக்களுடைய அடிப்படையான மற்றும் சமூக பிரச்னைகளில் பேரளவான ஈடுபாடு சம்பந்தமாக ஒரு மாற்றம் இருந்திருக்கிறது . . . அதிகமதிகமான கத்தோலிக்க மிஷனரிகளுக்கு, ஏழைகளின் தேவைகளுடன் தங்களை அடையாளங்காட்டுவது, அரசியல் மற்றும் பொருளாதார முறைகளில் அடிப்படை மாற்றங்களை பரிந்துரை செய்வதைக் குறிக்கிறது—அந்த மாற்றங்கள் மார்க்சிய புரட்சி இயக்கங்களால் தலைமைத்தாங்கப்பட்டாலும் . . . உண்மைதான், தங்களுடைய உண்மையான பணிக்கு மதம் மாற்றுதல் என்பது அடிப்படையில் சம்பந்தப்படாததாயிருக்கிறது என்பதை நம்பும் மிஷனரிகளும் உண்டு.” அப்படிப்பட்ட மிஷனரிகள் ஃபிரஞ்சு மனித சமுதாய வளர்ச்சி ஆய்வாளர் எமிலி டர்க்ஹீம் ஒருமுறை தெரிவித்த கருத்தை ஒப்புக்கொள்கின்றனர்: ‘மத வணக்கத்தின் உண்மையான நோக்கம் சமுதாயமே, கடவுள் அல்ல.’
தெளிவாகவே, கிறிஸ்தவமண்டலம் மெல்ல மெல்ல கடவுளை மதத்திலிருந்து அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்தது. இதற்கிடையில் மற்ற சக்திகளும்கூட செயல்பட்டுக்கொண்டிருந்தன.
கடவுளுக்குப் பதிலாகப் போலி மதங்கள்
தொழில் புரட்சியால் ஏற்பட்ட பிரச்னைகளுக்குச் சர்ச்சுகள் பரிகாரம் காணவில்லை. ஆனால் போலி மதங்கள், மனித தத்துவத்தின் உற்பத்திகள், தங்களிடம் பரிகாரம் இருப்பதாக உரிமைப்பாராட்டின, மற்றும் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வேகமாகச் செயல்பட்டன.
உதாரணமாக, சில ஆட்கள் செல்வத்தையும் உடைமைகளையும் நாடிச்செல்வதில் தங்களுடைய வாழ்க்கை நோக்கத்தைக் கண்டனர், தன்னல மனச்சாய்வுக்கு தொழில் புரட்சி துணைநின்றது. பண ஆசை ஒரு மதமாயிற்று. சர்வவல்லவரின் இடத்தைச் ‘சர்வ வல்ல டாலர்’ எடுத்தது. ஜார்ஜ் பெர்னார்டு ஷா எழுதிய ஒரு நாடகத்தில் இது ஒரு பாத்திரத்தால் குறிப்பிடப்படுகிறது: “நான் ஒரு லட்சாதிபதி. இதுவே என்னுடைய மதம்.”
மற்றவர்கள் அரசியல் இயக்கங்களுக்குத் திரும்பினார்கள். சமுதாய வளர்ச்சி தத்துவஞானி ஃபிரீட்ரிச் என்ஜல்ஸ், கார்ல் மார்க்சுடன் சேர்ந்தவர், சோஷியலிசம் கடைசியில் மதத்தின் இடத்தை எடுத்துவிடும், அதுதானே மதத்திற்குரிய தன்மைகளை ஏற்றுக்கொள்ளும் என்று முன்னறிவித்தார். இப்படியாக, சோஷியலிசம் ஐரோப்பா முழுவதும் பலம் பெற்றிடுகையில், “யூத அல்லது கிறிஸ்தவ மதக் கொள்கைகளைக் கைவிட்டு ஒரு மாற்றுக்கொள்கையாகிய சோஷியலிஸத்தினிடமாக திரும்பினது ஒரு முக்கிய கூறு ஆகும்,” என்பதாக ஓய்வுபெற்ற பேராசிரியர் ராபர்ட் நிஸ்பெட் குறிப்பிடுகிறார்.
உலக மாற்றத்தைச் சமாளிக்கும் விஷயத்தில் கிறிஸ்தவமண்டலம் தோல்வியடைந்ததுதானே சில சக்திகள் வளருவதற்கு இடமளித்தது. இவற்றை உலக கிறிஸ்தவ என்சைக்ளோபீடியா “மதச்சார்பின்மைக் கோட்பாடு, விஞ்ஞான பொருளாசை, நாத்திக கம்யூனிசம், தேசியம், நாசியம், பாசிசம், மாவோயிசம், சுயாதீன மானிட இயக்கம் மற்றும் கட்டப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட போலி மதங்கள்,” என்று குறிப்பிடுகிறது.
இந்தத் தத்துவஞானம் சார்ந்த போலி மதங்கள் விளைவித்திருக்கும் கனிகளை நோக்குமிடத்து, பிரிட்டிஷ் கவிஞர் ஜான் மில்டனின் வார்த்தைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும்: “அனைத்து ஞானமும், பொய்த் தத்துவமும் வீண்.”
ஒத்துப்போக நாடுதல்
ஒரு பக்கத்தில் பயனற்ற மதப் போதனைமுறைகளும் மறுபக்கத்தில் வஞ்சிக்கும் போலி மதங்களும் இருக்க, அவற்றிற்கு இடையில் சிக்கிக்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் மேலான ஒன்றை நாடிக்கொண்டிருந்தனர். அதை “இயற்கை மதம்” என்றும் அறிப்பட்டிருந்த தெயிசம் என்ற ஒரு முறையில் கண்டுபிடித்திருப்பதாக எண்ணினர். குறிப்பாக இங்கிலாந்தில் 17-வது நுற்றாண்டில் பிரபலமடைந்த தெயிசம் கடவுளை விட்டுவிடாமல் விஞ்ஞானத்தைத் தழுவி இணங்கிச் சென்ற ஒன்றாய் விளக்கப்படுகிறது. எனவே தெயிச கொள்கையினர் ஓர் இடைப் போக்கை மேற்கொண்ட சுயசிந்தனைக்காரராக இருந்தனர்.
ஆசிரியர் உட் விளக்கமளிக்கிறார்: “அதன் அடிப்படை பொருள் பிரகாரம் தெயிசம் ஒரு தனி கடவுளிலும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட வெளிப்பாட்டிலும் ஆதாரமிடப்பட்டிருப்பதற்கு மாறாக இயல்பான காரண காரியங்களில் ஆதாரமிடப்பட்ட மத பழக்க முறைகளிலும் நம்பிக்கையைக் குறிப்பிடுகிறது.” ஆனால் “மனித சக்திக்கு அப்பாற்பட்ட வெளிப்பாட்டை” அனுமதியாததன் மூலம், சில தெயிசர் பைபிளை முழுமையாக மறுதலிக்குமளவுக்குச் சென்றிருக்கின்றனர். இந்நாட்களில் இப்பதம் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது, என்றாலும் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் தனிப்பட்ட அபிப்பிராயத்துக்கு அல்லது அதற்குப் பதிலாக அமையும் தத்துவங்களுக்கு ஆதரவாக மத அல்லது வேதாகம அதிகாரத்தை மறுதலிக்கிறார்கள், உண்மையில் அவற்றின் நியமங்களைப் பின்பற்றுகிறார்கள்.
இணையான பரிணாமக் கோட்பாடுகள்
மதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையிலான மிக முக்கியமான மோதல் 1859-ல் டார்வின் உயிரினங்களின் மூலத் தோற்றம் என்ற நூலைப் பிரசுரித்த பின்னரே ஏற்பட்டது, இதில்தானே தன்னுடைய பரிணாமக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். மதத் தலைவர்கள், விசேஷமாக இங்கிலாந்திலும் ஐக்கிய மாகாணங்களிலுமுள்ளவர்கள் இந்தக் கோட்பாட்டை வன்மையாகக் கண்டனம் செய்தனர். ஆனால் எதிர்ப்பு வேகமாக மறைந்துவிட்டது. டார்வின் மரிப்பதற்கு முன்பாகவே, “மிகுந்த சிந்தனையாளரும் பேச்சுவன்மையுடையோருமான குருவர்க்கத்தினர் வேதவசனங்களின் தெளிவான புரிந்துகொள்ளுதலுக்குப் பரிணாமம் முழுமையாக ஒத்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தனர்,” என்று மத என்சைக்ளோபீடியா கூறுகிறது.
தடை செய்யப்பட்ட நூல்கள் பட்டியலில் வத்திக்கன் ஏன் டார்வினின் புத்தகங்களை உட்படுத்தவில்லை என்பதை இது விளக்கக்கூடும். உலக மதங்களின் பாராளுமன்றத்தின் 1893-ல் நடைபெற்ற சிக்காகோ மாநாட்டில் காணப்பட்ட சபையாரின் பிரதிபலிப்பையும் இது விளக்கக்கூடும். புத்தரும் இந்துக்களும் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருக்க, ஒரு “கிறிஸ்தவ” பேச்சாளர் பின்வருமாறு சொன்னார்: “பரிணாமக் கோட்பாடு நம்முடைய மதத்தின் ஆரம்ப வெற்றிடத்தை நிரப்புகிறது, மற்றும் பரிணாமம் படைப்பின் ஒரு வழியாக இருப்பதில் விஞ்ஞானம் பொதுவாக திருப்தி காண்கிறது என்றால், கடவுளுடைய வழிகளை அறிந்து அதை நேசிப்பதைத் தங்கள் பணியாகக் கொண்டிருப்பவர்கள் இணக்கம் என்ற குளிர்ந்த வார்த்தையால் அதை வரவேற்க வேண்டும்.” அந்தக் கூற்று பலத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டதாய் அறிக்கை செய்யப்படுகிறது.
19-வது நூற்றாண்டில் பிரபலமாயிருந்ததும் ஒப்பீடு மதமாக அறியப்பட்டிருந்ததுமான ஒன்றைப் பார்க்கும்போது, இந்த மனப்பான்மை ஆச்சரியமான ஒன்றல்ல. இது உலக மதங்களின் பேரில் ஓர் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியாயிருந்தது; பல்வேறு மதங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையதாயிருக்கிறது, அவை எவ்விதம் தோன்றின என்பதைத் தீர்மானிக்க திட்டமிடப்பட்டது. உதாரணமாக மனித இன ஆங்கில ஆராய்ச்சியாளர் ஜான் லப்பாக் என்பவர், மனிதர் நாத்திகராக ஆரம்பித்து, பின்பு ஒரே கடவுள் வணக்கத்திற்கு வருவதற்கு முன்பு உயிரற்ற போலி வழிபாடு, இயற்கை வழிபாடு, மந்திர சூனிய வழிபாட்டுமுறை என்ற வகையில் படிப்படியாக வளர்ந்தனர் என்ற கோட்பாட்டை விளக்கினார்.
என்றபோதிலும், மத என்சைக்ளோபீடியா விளக்குகிறது: “அப்படிப்பட்ட நோக்குநிலையில் அமையும் மதம் தெய்வத்தால் வெளிப்படுத்தப்பட்ட முழு சத்தியம் அல்ல, ஆனால் கடவுளைக் குறித்தும் அழிவுள்ள நிலைமைக் குறித்ததிலும் மனித எண்ணங்களின் வளர்ச்சிப் பற்றிய பதிவாகும்.” எனவே இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களுக்கு தெயிசத்தை, “சமுதாய மதத்தை” அல்லது ஒரு “மனிதவர்க்க மதத்தை” மத பரிணாம ஏணியில் மேலே செல்லுவதாய் ஏற்றுக்கொள்வது கடினமாயிருக்கவில்லை.
ஆராய்ச்சியின் முடிவாக, அப்படிப்பட்ட நோக்கு எங்கே வழிநடத்துகிறது? சமுதாயம் மதத்துக்கு ஒத்திசைவாயிராத ஒரு முன்னேற்ற சட்டத்துக்குள் செல்கிறது என்பதாக ஏற்கெனவே 19-வது நூற்றாண்டில் ஆங்கில தத்துவஞானி ஹெர்பர்ட் ஸ்பன்சர் கூறினார். 20-வது நூற்றாண்டைக் குறித்து பேராசிரியர் நிஸ்பெட் கூறியதாவது, மதம் “மனிதரின் சில மனோதத்துவ தேவைகளுக்கு விடையளிக்கிறது, இந்தத் தேவைகள் மானிட இனத்தின் உயிரியல் பரிணாமத்திற்கு பலியாகிவிடும் வரை மதம் ஏதாவது ஒரு விதத்தில் மனித கலாச்சாரத்தின் தொடரும் ஒரு மெய்மையாக இருந்துவரும்.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) இதன்படி, “பரிணாம முன்னேற்றம்” ஒரு நாள் மதமே இல்லாத நிலைக்கு வழிநடத்தும் சாத்தியத்தை சமூக ஆய்வாளர் மறுதலிப்பதில்லை!
உண்மை வணக்கத்துக்காகத் தேடும் முயற்சி வலுவடைகிறது
19-வது நூற்றாண்டின் மத்தியில், ஏறக்குறைய 200 ஆண்டுகளாக, கிறிஸ்தவமண்டலம் உலக மாற்றத்துக்கு எதிராக தோல்வியுறும் ஒரு போரட்டத்தைச் செய்துவந்திருக்கிறது. அதன் மதம் உலக தத்துவத்திற்கும் சற்று கூடுதலாகவே சீரழிந்துவிட்டிருக்கிறது. உண்மை மனதுள்ள இலட்சக்கணக்கான மக்கள் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். உண்மை வணக்கத்துக்காகத் தேடும் முயற்சி வலுவடைந்திருக்கிறது. கிறிஸ்தவமண்டலம் மறுமலர்ச்சியடைவது கூடாத காரியம் என்பதை நிச்சயமாக சொல்லலாம். தேவைப்படுவதாயிருந்தது, உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதுதான். எமது நவம்பர் 8 வெளியீட்டில் கூடுதலாக அறிந்துகொள்ளுங்கள். (g89 10/8)
[பக்கம் 22-ன் பெட்டி]
உலக மாற்றத்தால் அழுத்தப்படுகிறது, கிறிஸ்தவமண்டலம் இணங்கிச்செல்கிறது
நவீன விஞ்ஞானத்தின் தோற்றம் காணக்கூடாதவற்றில் விசுவாசத்தைப் பலவீனப்படுத்தியதோடு, விஞ்ஞானம் “நிரூபிக்க” முடியாத காரியங்களில் சந்தேகத்தை உண்டாக்கியது. கிறிஸ்தவமண்டலம் பரிணாமம் போன்ற நிரூபிக்கப்படாத விஞ்ஞான கோட்பாடுகளாகக் கருதப்படுகின்றவற்றிற்கு இணங்கிவிடுவதுடன் உலகப் பிரச்னைகள் அனைத்துக்கும் முழு பரிகாரமான கடவுளுடைய ராஜ்யத்திற்குப் பதிலாக விஞ்ஞான விளக்கங்களைப் பார்ப்பதன் மூலமும் பைபிள் சத்தியத்தை விட்டுக்கொடுத்துவிட்டது.
அரசியல் எண்ணங்களின் எழுச்சி (முதலாளித்துவம், மக்களாட்சி, சோஷியலிசம், கம்யூனிசம் போன்றவை) தேசிய போராட்டங்களையும் கருத்து வாதங்களையும் உண்டாக்கி, இப்படியாக மனிதன் அல்ல, கடவுள் தாமே அரசாள உரிமைப்படைத்தவர் என்னும் பைபிள் சத்தியத்தைக் கிறிஸ்தவமண்டலம் விட்டுக்கொடுத்துவிட்டது. கிறிஸ்தவ நடுநிலைமையை முறிப்பதன் மூலமும், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்ற போர்களில் உட்படுவதன் மூலமும் கிறிஸ்தவமண்டலம் பைபிள் நியமங்களை விட்டுக்கொடுத்துவிட்டது. கிறிஸ்தவமண்டலம் அரசியல் போலி மதங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தது.
உயர்ந்த வாழ்க்கை தராதரம் தொழில் மற்றும் விஞ்ஞான புரட்சியினால் கூடிய காரியமாயிற்று, இது, தான் என்ற தன்னல அக்கறையை வளர்த்தது, மற்றும் சமூக அநீதியையும் சமத்துவமின்மையையும் முன்னிலைக்குக் கொண்டுவந்தது. மனித அக்கறைகளாகிய சமுதாய, பொருளாதார, சுற்றுச்சூழல், அல்லது அரசியல் காரியங்களில் உட்படுத்திக்கொள்ளுதலுக்குச் சாதகமாக தெய்வீக அக்கறைகளை அசட்டை செய்வதன் மூலம் கிறிஸ்தவமண்டலம் உலக அழுத்தத்திற்கு இணங்கிவிட்டது.
[பக்கம் 24-ன் பெட்டி]
ஆதரவாகவா அல்லது எதிராகவா?
பைபிள் சொல்லுகிறது: மனிதர் பரிபூரணமாக படைக்கப்பட்டனர் மற்றும் தங்களுடைய சிருஷ்டிகர் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரை எவ்விதம் வணங்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டனர்; ஆனால் அவர்கள் கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்தனர், ஏறக்குறைய 6,000 ஆண்டுகளாக அவர்கள் சரீரப்பிரகாரமாகவும், ஒழுக்கப்பிரகாரமாகவும் சீர்கெட்டு, அவர்கள் ஆரம்பத்தில் கடைப்பிடித்த உண்மை மதத்தை விட்டு வெகு தூரம் சென்றுகொண்டிருக்கின்றனர்.
உயிரியல் மற்றும் மத பரிணாமம் சொல்லுகிறது: மனிதர் நாகரிகமற்ற ஆரம்பத்தைக் கொண்டிருந்து அதிலிருந்து படிப்படியான வளர்ச்சி அடைந்தனர் மற்றும் மதம் இல்லாத நாத்திகராக இருந்தனர்; எடுத்துரைக்கப்படாத லட்சக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் சரீரப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் வளர்ந்து, நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு மத, சமூக மற்றும் ஒழுக்க வளர்ச்சியின் நிலைக்கு அண்மையில் வந்திருக்கின்றனர்.
மனித நடத்தை, மனிதவர்க்கத்தின் தற்போதைய நிலை, மற்றும் இன்றைய உலகில் மதத்தின் அந்தஸ்து ஆகியவற்றின் பேரில் உங்களுக்கு இருக்கும் அறிவின் அடிப்படையில் எந்தக் கருத்து உண்மைகளுக்கு அதிக பொருத்தமாகக் காணப்படுகிறது?
[பக்கம் 23-ன் படம்]
உயிரினங்களின் மூலத் தோற்றம் என்ற நூலில் நிரூபிக்கப்படாத டார்வினின் ஊகிப்புகள் காரியங்களை வெளிப்படுத்தும் ஒரு கடவுளில் நம்பிக்கையைக் கைவிடுவதற்குச் சாக்குப்போக்காயிற்று