ஆஸ்திரேலியாவின் மையத்துக்கு ஒரு பேருந்து பயணம்
ஆஸ்திரேலியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
முதலைகள் நிரம்பியுள்ள ஓர் ஆற்றுக்கு நீங்கள் எப்போதாவது சுற்றுப்பயணம் போனதுண்டா? நகரத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் நீங்கள் எப்போதாவது நிலவொளியில் ஓர் இன்னிசை நிகழ்ச்சியை அனுபவித்துக் களித்ததுண்டா? எப்போதாவது நெடுஞ்சாலை ஒன்றில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ஊர்தியில் சென்றுகொண்டே கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொண்டதுண்டா? அப்படிப்பட்ட அனுபவங்களெல்லாம் ஆஸ்திரேலியாவின் வெப்பமிகுந்த மையத்திலுள்ள ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டுக்கு, வெவ்வேறு பாகங்களிலிருந்து ஒரு பேருந்து வண்டியில் பிரயாணம் செய்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகளால் அனுபவித்துக் களிக்கப்பட்ட மாதிரிகளேயாகும்.
“‘பயணம்’ என்னும் வார்த்தை பொருத்தமாகவே இருந்தது. ஏனென்றால் நாங்கள் திறந்தவெளிகளில் இரண்டு நபர்கள் தங்கக்கூடிய கூடாரங்களில் உறங்கினோம். ஆலிஸ் ஸ்பிரிங்ஸுக்குச் சென்றடைந்தபோது, எங்களுடைய கூடாரங்களை மூன்று நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்திலேயே அமைக்கமுடிந்தது! அது அநேகமாக வேகமாய் ஓடவிட்ட வீடியோவைப் பார்ப்பதுபோல் இருந்தது. பேருந்துகள் நிற்கும், வெட்டாந்தரையாய்க் கிடந்த பூங்கா திடீரென டஜன் கணக்கான சிறிய கூடாரங்களைக்கொண்டிருக்கும்,” என்று ஒரு பிரதிநிதி கூறினார்.
“ஆலிஸுக்கு” வருவோர்க்கு நல்வரவு
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (உள்ளூர் ஆட்களால் “தி ஆலிஸ்” என்றழைக்கப்படுவது) என்பது ஒரு சிவந்த பாலைவனத்தால் சூழப்பட்ட செழித்திருக்கும் ஒரு பாலைவனச் சோலையாகும். இது 23,000 மக்கள்தொகையைக் கொண்டிருந்து, ஆஸ்திரேலிய கண்டத்தின் பூகோள மையத்திற்குத் தென்பாகத்தில் அமைந்துள்ளது. இது இப்போது சுற்றுப்பயண மையமாகத் திகழ்ந்து, ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொன்முதுவரையும் அவர்களின் தனித்தன்மைவாய்ந்த கலையையும் சிறப்புவாய்ந்த அதன் பொருளாகப் பயன்படுத்துகிறது.
எனினும், யெகோவாவின் சாட்சிகளுக்கு, மூன்று நாள் மாநாடே அந்த முழு பயணத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. அவர்களில் சிலருக்கு, சந்தோஷம் நிறைந்ததும் அநேகர் திரும்ப ஒன்றுகூடுவதற்கான ஒரு வாய்ப்பாக நிரூபித்தது. ஆவிபறக்கும் ஒரு கப் தேநீர், ஆஸ்திரேலியாவில் கிராமப்புற உபசரிப்பின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மாநாடு தனது தனிச்சிறப்பு மிகுந்த பில்லி-தேநீர்-மற்றும்-டேம்பர் சிற்றுண்டிகள் கூடாரத்தை அமைத்து இந்த உபசரிப்புப் பழக்கத்தை உயிரூட்டமுள்ளதாக வைத்திருந்தது. பில்லி தேநீர் என்பது வெறுமனே புகையினால் கரிப்பிடித்த பில்லி என்றறியப்படும் பாத்திரத்தில் திறந்தவெளி நெருப்பில் வடித்தெடுக்கப்பட்ட தேநீராகும். சிலசமயங்களில் பில்லியில் உள்ள கொதிக்கும் நீரில் தேயிலையைக் கொட்டியதும் யூகலிப்டஸ் அல்லது தைல மரக் குச்சியினால் கலக்கிவிடப்படுகிறது. பில்லியின் மேலே குறுக்காக வைக்கப்படும் யூகலிப்டஸ் குச்சி புகை தேநீருக்குள் சென்று கலந்துவிடாதபடி தடுக்கிறது.
டேம்பர் ஒரு சாதாரண வகை அப்பமாகும். முன்தயாரிக்கப்பட்ட மாவு, தண்ணீர், உப்பு போன்றவையே இதன் ஆக்கப் பொருட்களாகும். அது சூடாக இருக்கும்போதே, தடித்தத் துண்டுகளாக வெட்டியெடுக்கப்பட்டு, வெண்ணெயும் தங்கநிற பாகும் தாராளமாகத் தடவப்பட்டதாகும். பில்லி-தேநீர்-மற்றும் டேம்பர் கூடாரம், மாநாட்டு மைதானங்களில் ஆட்கள் அதிக எண்ணிக்கையில் கூடிவரும் பிரபலமான இடங்களில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டது.
தனிமையில் உண்மையுடன் சேவித்தல்
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் சபை 72 சாட்சிகளைக் கொண்டு, சுமார் 2,00,000 சதுர கிலோமீட்டர் பிராந்தியத்தைக் கவனித்துக்கொள்கிறது. டார்வின் வடக்கில் சுமார் 1,800 கிலோமீட்டர் தொலைவிலும், அடிலெய்ட் தெற்கில் கிட்டத்தட்ட 1,600 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. வெகு தொலைவு, இடைவிடா உஷ்ணம், தூசு, தனிமைப்பட்டிருத்தல் போன்றவற்றைப் பார்க்கும்போது, இந்தக் கிராமப் புறத்தில் வாழ்வது என்ன ஒரு சவாலைக் கொடுக்கிறது என்பதை இங்கு வரும் பிரதிநிதிகள் தாங்களாகவே நேர்முகமாக அறிந்து வியந்தனர்.
யுரேனியம் தோண்டியெடுக்கும் நகரமாகிய ஜேபிரு தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும். ஒரே ஒரு சாட்சிதான் இங்கு வசிக்கிறார். அவருக்கு அருகாமையில் உள்ள சபை 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆவிக்குரியவகையில் அவரைப் பலவீனப்படுத்திவிடவில்லை. மாநாட்டில் அவர் ஆஜராகியிருந்தது மற்றநேகருக்கு உற்சாகமளிப்பதாக நிரூபித்தது. மேலும், இந்த மாநாட்டில் முழுக்காட்டப்பட்ட 26 பேர் மத்தியில் தாங்களும் இருக்கும்படியாக, வட மாநிலத்தின் அர்னம் லேண்டின் முனையில், ஜில்க்மிங்கன் என்ற தொன்முதுவர் சமுதாயத்திலிருந்து, நான்கு பைபிள் மாணாக்கர்கள் பயணம் செய்தனர்.
பிரதிநிதிகள் தங்கள் ஒளியைப் பிரகாசிக்கச்செய்கின்றனர்
மாநாடு முடிவுற்றது, அனைத்துப் பேருந்துகளும் வடக்கே ஆஸ்திரேலிய கண்டத்தின் மேல்முனையை நோக்கிச் சென்றன. நன்கு அறியப்பட்ட கேகேடு நேஷனல் பூங்காவிற்குச் செல்லும்வழியில், கேதரின் ஜார்ஜின் தெளிந்த, புதிய தண்ணீரில் ஒரு படகு பயணம் மேற்கொள்வதே பயணத்தின் இந்தப் பகுதியின் முக்கிய அம்சமாக இருந்தது. இது முதன்முதலாக காட்டில் முதலைகளைக் காண பிரயாணிகளுக்கு நல்ல ஒரு வாய்ப்பைத் தந்தது. கண்ணைக் கவருவதாக இருந்தாலும், சிறிது அச்சந்தருவதாக இருந்தது! பின்னர், வட மாநிலத்தின் தலை நகரமான டார்வினில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் இரவுக்குப் பிறகு, பயணத்தில் அடுத்த நிறுத்தம் மதேரெங்கா நிலையமாகும். இது தனது தெளிந்த வெந்நீர் ஊற்றுகளும் குளங்களும் பனைமரங்களின் வரிசைகளால் சூழப்பட்டிருப்பதற்குப் புகழ்பெற்றதாகும்.
எனினும், இடங்களைச் சுற்றிப் பார்ப்பது ஆவிக்குரிய செயல்களை நெருக்கிப்போடவில்லை. பேருந்துகள் இயங்கும் ராஜ்ய மன்றங்களாயின. ஒரு வேதாகமப் பகுதியும் அச்சடிக்கப்பட்ட குறிப்புகளும் அனுதினமும் கலந்தாலோசிக்கப்பட்டன. செல்லும் வழியில் வழக்கமான வாராந்தர கூட்டங்கள் நடத்தப்பட்டன. யெகோவாவின் சாட்சியல்லாத, பேருந்தின் ஓட்டுநர்களில் ஒருவர் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டார். ஆகவே, இக்கலந்தாலோசிப்புகளின்போது குறிப்புச் சொல்பவர்கள் இன்னும் மிகத் தெளிவாய்க் கேட்கப்படுவதற்கு வசதியாக பேருந்தின் ஒலிபெருக்கி அமைப்பை இணைப்பதற்கான ஒரு நீட்டிப்புக் கம்பி (extension cord), ஒலிபெருக்கி, ஒரு செருகி (plug), போன்றவற்றைத் தானாகவே வாங்கினார்.
பயணத்தின்போது, வயதான பிரயாணி ஒருவர் ஓர் உள்ளூர் மருத்துவமனைக்கு விரைவில் எடுத்துச் செல்லப்படவேண்டிய அளவுக்கு வியாதிப்பட்டார். ஒரு தோழி அவரோடு தங்கிக்கொண்டார். ஆனால் பேருந்துகளோ பயணத்தைத் தொடரவேண்டியிருந்தன. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் சுகமடைந்தபின், அவரும் அவருடைய தோழியும் பயணத்தின் எஞ்சிய பகுதியைத் தவறவிட்டதற்காக மிகவும் ஏமாற்றமடைந்து, வாட்டமுற்றனர். ஆனால் கிறிஸ்தவ அன்பு அவர்களின் துக்கத்தைத் தணித்தது.
விமான ஓட்டிகளாக இருந்த உள்ளூர் சாட்சிகள் இருவர் இந்நிலைமையை அறிந்தனர். பிறகு காரியங்கள் விரைவில் நடந்தேறின. விரைவில் நான்கு பேரும் பேருந்துகளைச் சென்றடைவதற்காக அகஸ்டா துறைமுக நகரத்திற்கு, எடைகுறைந்த ஒரு விமானத்தில் பறந்து சென்றுகொண்டிருந்தனர். உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பயணிகளில் ஒருவர் வியந்து கூறினார்: “நாங்கள் பாகமாய் இருக்கிற ஆச்சரியகரமான சகோதரத்துவத்திற்கு அன்பும் போற்றுதலும் நிறைந்தவர்களாய் இருந்தோம்!” ஆனால் இதோடு நின்றுவிடவில்லை. விமானம் வந்து சேர்ந்ததும், விமான ஓட்டிகளின் செலவுகளைச் சமாளிப்பதற்காக பணவகையில் அளித்துதவிசெய்ய உடன் பிரதிநிதிகள் பலர் முன்வந்தனர்! இதைப்போன்று இதற்குமுன் தான் ஒருபோதும் கண்டதில்லை என்று சொல்லி, சகோதர அன்பின் இந்த வெளிக்காட்டுதல்களால் அந்தப் பேருந்து ஓட்டுநர் காணக்கூடிய விதத்தில் அசைவிக்கப்பட்டிருக்கிறார்.
“ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பயணத்தில் செலவழித்த மூன்று வாரங்களைப் பற்றி பிரதிபலிக்கையில், எனக்கு இதுவரை கிடைத்த அனுபவங்களிலேயே, இதை மிகச் சிறந்த உற்சாகமூட்டும், விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஒன்றாகக் கண்டேன். எல்லாவற்றிற்கும் மேலோங்கி நிற்பது என்னவென்றால் நாங்கள் அனுபவித்த அந்த ஒன்று சேர்ந்திருக்கும் ஆவியே. பூகோளரீதியில் எங்குப் போனோமோ அது ஒரு பொருட்டாக இருந்திருக்காது—எங்களின் மனம் மற்றும் ஆவியின் ஐக்கியமே எங்களுடைய உண்மையான புதையலாக இருந்தது!” (g93 6/8)
[பக்கம் 22-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் மாநாட்டுக்கும் மாநாட்டிலிருந்தும் மேற்கொண்ட பேருந்து பிரயாணத்தின் தடங்கள்
மேற்கு ஆஸ்திரேலியா
வட மாநிலம்
க்வீன்ஸ்லாந்து
நியூ செளத் வேல்ஸ்
தென் ஆஸ்திரேலியா
விக்டோரியா
டாஸ்மேனியா
டார்வின்
பெர்த்
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ்
பிரிஸ்பேன்
சிட்னி
அடிலெய்ட்
மெல்போர்ன்
ஹோபர்ட்
யூளுரு (ஆயர்ஸ் பாறை)
அகஸ்டா துறைமுகம்
கேகேடு நேஷனல் பூங்கா
[பக்கம் 20, 21-ன் படம்]
ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டப்படுவதற்காக காத்திருந்தவர்கள் மத்தியில் தொன்முதுவர்
[பக்கம் 21-ன் படம்]
கேகேடு நேஷனல் பூங்காவில் முதலை சூரிய ஒளியில் சுகம் காண்கிறது
[பக்கம் 21-ன் படம்]
பில்லி தேநீர் மற்றும் டேம்பரோடு கூடார நெருப்பு
[பக்கம் 22-ன் படம்]
வட மாநிலத்தின் கேகேடு ▸ நேஷனல் பூங்காவில் குறிப்பிடத்தக்கக் காட்சி
[பக்கம் 22-ன் படம்]
▲ஆலிஸ் ஸ்பிரிங்ஸின் தென்மேற்கே 470 கிலோமீட்டர் தொலைவிலுள்ள யூளுரு (ஆயர்ஸ் பாறை)