இளைஞர் கேட்கின்றனர்
நான் ஏன் ஊனமுற்றுத் துன்பப்படவேண்டும்?
“நான் ஐந்து வயதுடையவளாய் இருந்தேன்,” பெக்கி நினைத்துப் பார்க்கிறாள். “ஒரு நண்பன் தனது சைக்கிளில் என்னை ஒரு சவாரிக்கு அழைத்துச் சென்றபோது, மூலையிலிருந்து ஒரு கார் வந்து எங்கள்மீது மோதியது.” அதன் விளைவு? “என்னுடைய ஒரு கால் முறிந்து எனது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுத் துன்பப்பட்டேன். நான் உயிர்பிழைப்பேன் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.” எனினும், பெக்கி உயிர்பிழைத்தாள். இன்று அவள் ஒரு மனமகிழ்ச்சியுள்ள, 16 வயதுடைய பெண்ணாக இருக்கிறாள். இருந்தபோதிலும், அந்த விபத்துத் தனது பின்விளைவுகளை விட்டுச் சென்றது. “அது என்னை மிகவும் பலவீனமடையச் செய்தது,” என்கிறாள் அவள்.
க்ரேஃக் என்ற ஓர் இளைஞனும், CP (cerebral palsy) என்றறியப்படும் பெருமூளை உணர்விழந்துபோகும் ஒரு நோயின் விளைவாக, ஊனமாக்கப்பட்டான். “CP என்னுடைய தசை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது,” என்று க்ரேஃக் விவரிக்கிறான். “என் மூளை அனுப்பக்கூடிய செய்திகளுக்கு என் தசைகள் தகுந்த வகையில் பிரதிபலிப்பதில்லை. எனவே, நடப்பதிலும், பேசுவதிலும், என் சமநிலையைக் காத்துக்கொள்வதிலும் எனக்குப் பிரச்னை இருக்கிறது. நான் இவையனைத்தையும் செய்ய முடியும், ஆனால் அவ்வளவு எளிதில் அல்ல.”
உங்களுக்கும் அதேபோல் ஏதாவது சரீர ஊனமிருக்கிறதா? உலகமுழுவதும் 2000 ஆண்டில், ஊனமுற்ற இளைஞரின் எண்ணிக்கை சுமார் 5.9 கோடியைச் சென்றெட்டும் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. (உலக சுகாதாரம், [World Health] ஜனவரி/பிப்ரவரி 1985) எனினும், உங்களுக்கு இருக்கும் அதே பிரச்னையை அநேகர் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மைதானே, மற்ற இளைஞரைப்போல நீங்களும் ஓட, குதிக்க, விளையாட நினைத்து ஆனால் முடியாமற்போகும்போது உங்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கிறது.
ஊனமுற்றோரின் பிரச்னைகள்
சரீர ஊனங்கள் ஒன்றும் புதியவையல்ல. பைபிள் காலங்களிலுங்கூட சிலர் முடத்தோடும் (2 சாமுவேல் 4:4; 9:13), கண்பார்வை இழப்போடும் (மாற்கு 8:22), உடலுறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகளோடும் (மத்தேயு 12:10) போராடவேண்டியிருந்தனர். அத்தகைய ஊனமுற்றோர், வாழ்க்கையின் மிக அடிப்படை வேலைகளைச் செய்வதைக்கூட அடிக்கடி கடினமானதாகக் கண்டிருக்கின்றனர்.—ஒப்பிடவும் உபாகமம் 28:29; நீதிமொழிகள் 26:7.
உங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளோடு நீங்கள் அதைப்போன்ற ஒரு போராட்டத்தைக் கொண்டிருக்கலாம். உடை அணிவது, உணவு உண்பது, அல்லது பள்ளிக்குச் செல்வது போன்றவை பேரளவு முயற்சியையும்—மற்றவர்களிடமிருந்து கணிசமான உதவியையும் தேவைப்படுத்தலாம். “என்னுடைய வலது பக்கத்தில் எந்த இயக்குத்தசை அசைவுகளையும் சரிவர செய்யமுடியாது,” என்கிறாள் பெக்கி. “எனவே என் இடது கையினால் எழுத பழகிக்கொள்ளவேண்டியிருந்தது. நடப்பதும் கடினமாக இருந்திருக்கிறது. இப்போது நான் மிகவும் சாதாரணமாக நடக்கிறேன். ஆனால் சில நாட்களில் நான் அதிகம் நொண்டுகிறேன்.” அல்லது குன்றிய வளர்ச்சியினால் (dwarfism) பாதிக்கப்பட்ட ஓர் இளைஞன் எதிர்ப்படும் பிரச்னைகளை யோசித்துப் பாருங்கள். அவன், நகைச்சுவை நயத்துடன், இவ்வாறு சொல்கிறான், “சுவற்றில் உள்ள விளக்கின் சுவிட்சுகளை எட்டிப் பிடிப்பது மற்றொரு உண்மையான எரிச்சலூட்டும் காரியமாகும். . . . வீடுகள் உயரமானவர்களுக்கே வடிவமைக்கப்பட்டவையாகும்.”—ஒரு சரீரப்பிரகாரமான ஊனத்துடன் வாழ்வது எப்படியிருக்கும், (How It Feels to Live With a Physical Disability) ஜில் க்ரெமென்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்டது.
உங்களுக்குக் கடுந்துயரளிக்கும் பிரச்னைகள் ஒருவேளை சரீரப்பிரகாரமானவையாக இல்லாமலிருப்பதை நீங்கள் காணலாம். பெற்றோர் (Parents) பத்திரிகை இவ்வாறு விளக்குகிறது: “விசேஷ தேவைகளையுடைய இளைஞரின் வாழ்க்கையை, முக்கியமாக கடினமாக்கும் மற்றவர்களுடைய பிரதிபலிப்புகளுக்கு, பருவ வயதினர் மிகவும் கூருணர்வுடையவர்களாக இருக்கின்றனர். . . . தங்களுடைய தோற்றத்தைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்கிறார்கள். மேலும் அடிக்கடி தோழமையின் வெளிக்காட்டுதல்களைச் சந்தேகித்து, நல்லெண்ணத்தோடுகூடிய இவ்வடையாளங்களை, வரவேற்கப்படாத இரக்கத்தின் வெளிக்காட்டுதல்களாக திரித்துப் பொருள்படுத்துகின்றனர்.” மற்றவர்களால் விரும்பப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று உணருவது இயற்கையே. எனினும், நீங்கள் விரும்பப்படத் தகாதவராக உணரலாம். இளம் மிஷேல் சொல்லுகிறபடி: “என் வாழ்நாள் முழுவதும் நான் ஒவ்வொருவரையும்விட வித்தியாசமானவனாகவே இருந்திருக்கிறேன். காரணம் நான் என் இடது கையில்லாமல் இருப்பதுதான்.”
வித்தியாசப்பட்டவராய் இருப்பதுகூட உங்களை முடிவில்லா கேலிக்கு ஆளாக்கலாம். “நான் ஊனமுற்றோர் குழந்தைகள் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை பயிற்சி மேற்கொண்டேன்,” என்று ஞாபகப்படுத்திப் பார்க்கிறான் க்ரேஃக். “ஆனால் ஐந்தாம் வகுப்பில், நான் ஓர் ஒழுங்கான பள்ளிக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு நாள் சில பையன்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கும்வரை எனக்கு உண்மையிலேயே அதிக பிரச்னைகள் இருந்ததில்லை. நான் நடந்த விதமே இதற்குக் காரணம்.” பெக்கியும் தனது பள்ளிமாணவிகளின் கொடூரமான நடத்தைகளைப்பற்றிய வேதனைதரும் நினைவுகளைக் கொண்டிருக்கிறாள். முன்பு செய்த அறுவை சிகிச்சை அவளுடைய குரல்வளையைப் பாதித்துவிட்டதால், அவளுடைய குரல் சிறிது முரட்டு ஓசையைக் கொண்டிருக்கிறது. “பள்ளியில் உள்ள குழந்தைகள் என்னை ராட்சத குரல் என்று அழைப்பதுண்டு,” என்று அவள் கூறுகிறாள்.
வயது வந்தவர்களும் இதேபோல் நியாயமற்ற தப்பெண்ணங்களைக் காட்டலாம். சிலர் உங்களை ஏறெடுத்துப் பார்ப்பதையும்கூட தவிர்க்கலாம். மற்றவர்கள் உங்களிடத்தில் பேசுவதைக்கூட தவிர்த்து—ஏதோ நீங்கள் காணக்கூடாதவர் அல்லது மனச்சம்பந்தமாக குறையுள்ளவர் போல—அவர்களுடைய குறிப்புகளை உங்களுடைய பெற்றோரிடமோ நண்பர்களிடமோ திருப்பிவிடலாம். எல்லாவற்றையும்விட அதிகம் எரிச்சலூட்டுவது என்னவென்றால், உங்கள் நலத்தில் அக்கறை கொள்பவர்கள்கூட, அளவுக்கதிகமான இரக்கம் காட்டி, நீங்கள் சிதைக்கப்பட்ட பொருட்கள் என்ற உணர்ச்சியை வலுப்படுத்துவதாகும்.
இக்காரியத்தின்பேரில் கடவுளின் நோக்குநிலை
இருப்பினும், கடவுள் உங்களைப்பற்றி எவ்வாறு உணருகிறார்? உங்களுடைய ஊனம் அவர் உங்களைத் தள்ளிவிட்டதற்கான ஏதோ ஒரு வகை அறிகுறியா? “பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக்” கண்டபோது இயேசு என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள். “இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ,” என்று அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல.” (யோவான் 9:1-3) இல்லை, குருடு குருடனின் பாகத்திலோ அவனைப் பெற்றோரின் பாகத்திலோ செய்யப்பட்ட ஏதோ ஒரு குறிப்பிட்ட பாவத்தின் விளைவாக இருக்கவில்லை. அதைவிட, நாம் எல்லாரும் ஆதாமிடமிருந்து சுதந்தரித்துக்கொண்ட அபூரணத்தின் விளைவாகவே இருந்தது. அப்போஸ்தலன் பவுல் விவரிக்கிறார்: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”—ரோமர் 5:12.
ஆகவே, சரீரப்பிரகாரமான ஊனங்கள், தெய்வீக தலையிடுதலின் தண்டித்தலின் விளைவு அல்ல. சில ஊனங்கள் கவனக்குறைவின் காரணமாக ஏற்படுகின்றன. இன்னும் மற்றவை வெறுமனே ‘சமயத்தின் மற்றும் எதிர்பாராத சம்பவத்தின்’ காரணத்தினாலே ஏற்படுகின்றன. (பிரசங்கி 9:11, NW) மேலும் தங்களுடைய பெற்றோரின் பாகத்தில் செய்யப்பட்ட அசட்டையின் மற்றும் துர்ப்பிரயோகத்தின் காரணத்தால் சரீரப்பிரகாரமாக துன்பப்படுகிற இளைஞரும் உண்டு.
உங்கள் குறைகளுக்குக் காரணம் என்னவாக இருப்பினும், கடவுள் உங்களைச் சிதைக்கப்பட்ட நபராக கருதுகிறார் என்று நீங்கள் உணரவேண்டிய தேவையில்லை. அதற்கு மாறாக, உங்களை, முக்கியமாக நீங்கள் கடவுள் பயமுள்ளவராய் இருப்பீர்களேயானால், அரிய, விலைமதிக்கத்தக்க ஒருவராய் அவர் கருதுகிறார். (லூக்கா 12:7) அவர் மிகவும் தனிப்பட்ட ஒரு வகையில் ‘உங்கள்மீது அக்கறைகொண்டு,’ உங்களை அவருடைய சேவையில் உபயோகிக்க அவர் மகிழ்ச்சியுள்ளவராக இருக்கிறார். (1 பேதுரு 5:7, NW) ஏன், எல்லாக் காலத்திலும் வாழ்ந்த, மிகவும் தனிச்சிறப்புள்ள கடவுளின் ஊழியக்காரர்களில் ஒருவராகிய, அப்போஸ்தலனாகிய பவுலும்கூட, தெளிவாகவே சரீரப்பிரகாரமான ஊனத்தால்—‘மாம்சத்திலே உள்ள ஒரு முள்ளால்’—துன்பப்பட்டார். (2 கொரிந்தியர் 12:7) ‘மனுஷனோ புறத்தோற்றத்தைப் பார்க்கிறான்; ஆனால் யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்’ என்றறிவது எவ்வளவு ஆறுதல் தருவதாக இருக்கிறது. (1 சாமுவேல் 16:7) உங்களுடைய திறமைகளை முழுவதும் அறிந்திருந்து, அவருடைய புதிய உலகில் பரிபூரணத்திற்குத் திரும்ப கொண்டுவரும்போது உங்களால் என்ன செய்ய இயலும் என்பதையும் அறிந்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
மற்றவர்களைச் சமாளித்தல்
வருந்தத்தக்கவகையில், உங்கள் பள்ளிதோழர்களும் மற்றவர்களும் கடவுளின் உயர்ந்த நோக்குநிலையைக் கொண்டில்லாமல் இருக்கலாம். உண்மையிலேயே, சிலவேளைகளில் மக்கள் உணர்ச்சியற்றுக் கொடூரமாக நடந்துகொள்கின்றனர். ஆகவே, உங்களுடைய சகநண்பர்கள் அதைப்போலவே உங்களுடைய துன்பத்தைப்பற்றியதில் இரக்கமற்றவர்களாக நடந்துகொண்டாலும் ஆச்சரியப்படாதீர்கள். வழக்கமாக, மக்கள் புண்படுத்த அல்லது தர்மசங்கடமான நிலையில் வைக்க நினைப்பதில்லையென்றாலும்; சிலசமயங்களில் அவர்கள் வெறுமனே மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுகிறவர்களாக இருக்கின்றனர். உங்களுடைய குறையைப்பற்றி அசெளகரியமாக உணர்வதாலோ ஒருவேளை வெறுமனே உணர்ச்சியற்றவர்களாக இருப்பதாலோ, அவர்கள் மடத்தனமாக அல்லது புண்படுத்தும் எதையாவது சொல்லலாம்.
நீங்கள் என்ன செய்யக்கூடும்? சிலவேளைகளில் குழப்பம் விளைவிக்கும் சூழ்நிலைகளை நீங்கள் தவிர்க்கலாம். உதாரணமாக, மற்றவர்கள் பதட்ட நிலையிலோ என்ன சொல்வதென்று தெரியாத நிலையிலோ இருப்பதாகத் தோன்றுவதை நீங்கள் உணருவீர்களானால், அவர்களைச் செளகரியமாக உணரச் செய்ய நீங்கள் முயற்சி செய்யலாம். நமக்குப் புரியாததைப்பற்றி பயப்படும் சுபாவம் நம்மனைவருக்கும் உண்டு என உணருங்கள். மற்றவர்கள் உண்மையான உங்களை அறிந்துகொள்ளும்படி உங்களுடைய ஊனத்திற்கப்பால் பார்ப்பதற்கு அவர்களுக்குதவுங்கள். சூழ்நிலைமை தேவைப்படுத்துவதாக தோன்றினால், இதைப்போல எதையாவது சொல்ல நீங்கள் முயற்சிக்கலாம்: “நான் ஏன் ஒரு சக்கர நாற்காலியை உபயோகிக்க வேண்டியிருக்கிறது என்று யோசிக்கிறீர்களா?” பெற்றோர் பத்திரிகையின்படி, உறுப்பு நீக்கப்பட்ட ஓர் ஆசிரியை “என்ன நடந்தது என சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?” என்று உரையாடலைத் தொடங்குவதன் மூலம் தனது மாணாக்கரின் ஆர்வத்தைத் தணித்தார்.
நீங்கள் எவ்வளவு சிறந்த முயற்சிகளை எடுத்தாலும், இன்னும் அவ்வப்போது புண்பட்டவர்களாக உணரலாம். இளம் பெக்கி கூறுகிறாள்: “நான் சிறுமியாய் இருந்தபோது, மற்றவர்கள் என்னைக் கேலி செய்தபோது நான் மனக்கலக்கமடைந்தேன்; என் வாழ்நாள் முழுவதும் கூருணர்வுடையவளாய் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போதோ அது என்னை மனக்கலக்கமடையச் செய்யும்படி அனுமதிப்பதில்லை. சிலசமயங்களில் சூழ்நிலையைக் கண்டு சிரிக்கவும்கூட எனக்கு முடிந்திருக்கிறது.” ஆம், புண்படுத்தும் குறிப்புகளைத் திருப்பிவிடுவதில் நகைச்சுவைத் திறன் அதிகத்தைச் செய்யக்கூடும். “நகைக்க ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:4) சாலொமோன் மேலுமாக இந்த அறிவுரையைக் கொடுக்கிறார்: “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே.” (பிரசங்கி 7:21) சிலசமயங்களில் முட்டாள்தனமான பேச்சுகளைக் கையாளுவதற்கான சிறந்த வழி அதை அசட்டை செய்வதாகும். “மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள்,” என்கிறாள் பெக்கி.
சமாளிப்பதற்கு நம்பிக்கை உங்களுக்கு உதவுகிறது
உண்மையில், முழு மனித இனமும் குறையுள்ளதுதான். “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது,” என்று பைபிள் சொல்லுகிறது. (ரோமர் 8:22) ஆனால் எதிர்காலத்தைப்பற்றிய ஒரு நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கலாம். உதாரணமாக, ஓர் இளம் பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் அவளைக் கேரல் என்றழைக்கலாம். அவள் பிறவியிலேயே முழு செவிடாக பிறந்தாள். பின்னர் மோட்டார்சைக்கிள் விபத்து ஒன்று அவளுடைய ஒரு கால் நீக்கப்படுவதில் விளைவடைந்தது. கேரல் சாக விரும்பினாள். ஆனால் அவள் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்கத் தொடங்கினாள். ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத,’ வரவிருக்கும் நீதியான ஒரு புதிய உலகத்தைப்பற்றி கற்றுக்கொண்டாள். (ஏசாயா 33:24) உண்மையில், ஒரு நாள் தன்னுடைய ஊனம்—அதிசயமாக—குணமாக்கப்படும் என்ற நம்பிக்கையைப் பெற்றாள்!—ஏசாயா 35:5, 6.
கடவுளைப்பற்றி கற்றுக்கொண்டது கேரலின் மனநிலைமீது என்ன பாதிப்பைக் கொண்டிருந்தது? சில நெருங்கிய கிறிஸ்தவ நண்பர்கள் அவளைப்பற்றி கூறுகின்றனர்: “அவள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள், அவளுடைய ஊனத்தைப் பற்றி அவள் ஒருபோதும் ஆழ்ந்து சிந்திப்பது கிடையாது.” இருந்தாலும், ஆர்வமூட்டும் வகையில், “அவளுடைய தோழிகளில் அநேகர் அவள் ஒரு செயற்கை கால் வைத்திருக்கிறாள் என்றும் வெகுவாய்ச் செவியிழந்தவளாய் இருக்கிறாள் என்றும் உணர்வதுகூட கிடையாது,” என்றும்கூட அவர்கள் சொல்கிறார்கள். ஏன்? “அவள் உதட்டசைவினால் பொருள் உணர்தல், செவியுணர்ச் சாதனங்கள் (hearing aids) போன்றவற்றைச் சார்ந்திருக்கிறாள்.” சந்தேகமின்றி கேரல் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வைத்திருப்பதைவிட அதிகத்தைச் செய்தாள். அவள் இப்போது தன்னுடைய முழு திறமையை அடைவதில் முயற்சித்திருக்கிறாள். நீங்களும் எவ்வாறு அதையே செய்யலாம் என்பதுதான் இந்தத் தொடர்கட்டுரையில் எங்களது அடுத்த கட்டுரையின் தலைப்பு. (g93 5/22)
[பக்கம் 24-ன் படம்]
ஆவலுள்ளவர்களாய்த் தோன்றுபவர்களுக்குத் தங்கள் சூழ்நிலைமையை விவரிப்பது உதவுவதாய் சிலர் காண்கின்றனர்