இளைஞர் கேட்கின்றனர்
என்னுடைய ஊனத்தை நான் எப்படி சமாளிக்கமுடியும்?
“அவளால் இப்போதும் நடக்கமுடியும். ஆனால் அவளுடைய உடல் பாகங்களில் சில ஒருங்கிணைந்து செயல்படுவதில்லை; மேலும் அவளுடைய பேச்சு குழறுகிறது,” என்று கூறுகிறாள் ஓர் இளம்பெண்ணின் தாய். அவளை நாம் மேகி என்றழைக்கலாம். மேகி தோல், குழாய்கள், நுரையீரல்கள் போன்ற பாகங்கள் கடினமாகும் ஒரு வியாதியை (multiple sclerosis) கொண்டிருக்கிறாள். உலகமுழுவதும் சரீரப்பிரகாரமான வியாதியால் துன்பப்படும் லட்சக்கணக்கான இளைஞரில் இவளும் ஒருத்தி.
ஒருவேளை நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்கலாம். நீங்கள் ஊனத்துடன் பிறந்திருந்தாலோ நோயின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாக ஊனமுற்றிருந்தாலோa உங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற முடிவுக்கு வரவேண்டிய தேவையில்லை. உங்களுடைய பாகத்தில் பொறுமையான முயற்சியோடு, சூழ்நிலையைத் திறம்பட்ட வகையில் சமாளிப்பதற்கான நம்பிக்கையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கலாம்.
விருப்ப எண்ணத்தின் ஆபத்து
சந்தேகமின்றி, மகிழ்ச்சியற்ற உண்மைகளை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாதிருப்பதும் நோய் வெறுமனே போய்விடும் என்ற விருப்ப எண்ணம் கொள்வதும் மனித இயல்பாகும். தெளிவாகவே அப்போஸ்தலன் பவுலும்கூட தன்னுடைய கண்பார்வையைப் பாதித்த ஏதோ ஒருவகை நோயினால் துன்பப்பட்டார். (கலாத்தியர் 6:11-ஐ ஒப்பிடவும்.) கலாத்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களைத் தான் முதல்முறையாக சந்திக்க சென்றதைக்குறித்துப் பேசியபோது பவுல் சொன்னார்: “நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன். அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும் . . . என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.” (கலாத்தியர் 4:13, 14) பவுலின் நோய் அவருடைய கண்களிலிருந்து சீழ் வடியும்படி செய்தது அல்லது அவரது தோற்றத்தை ஏதோவழியில் விகாரமாக்கியது என்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். அப்படியென்றால், அந்த நோய் தன்னைவிட்டு நீங்கும்படி பவுல் ‘மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டதில்,’ ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் அது நீங்கவில்லை. (2 கொரிந்தியர் 12:8, 9) தனக்கிருந்த இந்தக் குறையின் மத்தியிலும், அவர் ஒரு மிஷனரியாக, அறிஞனாக, எழுத்தாளனாகத் தலைசிறந்த ஒரு வாழ்க்கைப்பணியை அனுபவித்துக்களித்தார்.
நீங்களும் உங்களுடைய நிரந்தர குறையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கலாம். ஊனமுற்றோரோடு வாழ்தல் (Living With the Disabled) என்ற தனது புத்தகத்தில், ஆசிரியர் ஜேன் கூம்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “ஊனமுற்றோன் தன்னுடைய ஊனத்திற்குத் தக்கவாறு தன்னை அமைத்துக்கொள்ளவேண்டுமானால் அவன் முதலில் தான் ஊனமுற்றவனென்று ஒப்புக்கொள்ளவேண்டும். அவனுடைய குறை அவனுக்குத் தடையாக இருந்து தொல்லைகளைக் கொடுக்கலாம், ஆனால் ஓர் ஆளாகத் தன்னுடைய மதிப்பைக் குறைப்பதில்லை என்பதைக் கற்றுக்கொள்ளவேண்டும்.” குணமாவதற்கு நியாயமான நம்பிக்கை ஒன்றும் இல்லையென்றால், உங்களுடைய நிலைமையின் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதானது, தன்மீது பழிசுமத்திக்கொள்ளுதல், துயரம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சி சேற்றில் உங்களை மூழ்கடிப்பதில்தான் விளைவடையும். மறுபட்சத்தில், “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு,” என நீதிமொழிகள் 11:2-ல் பைபிள் சொல்கிறது. தாழ்ந்த சிந்தையுள்ள ஓர் ஆள் தன்னுடைய குறைபாடுகளை அறிந்து ஒப்புக்கொள்கிறான். முனிவரைப் போல ஆவதையோ சலிப்போடு, உள்ளதே போதும், என்ற சந்தோஷமற்ற நிலையில் வாழ்ந்திருப்பதையோ இது அர்த்தப்படுத்தாது. அதைவிட, தாழ்ந்த சிந்தை உங்களுடைய நிலைமையை நேர்மையாக சீர்தூக்கிப்பார்த்து நடைமுறையான இலக்குகளை வைத்துக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது.
அறிவோடு நடந்துகொள்ளுங்கள்
உங்களுடைய குறையின் தன்மையைப்பற்றி திருத்தமாக அறிந்துகொள்வதும் உங்களுக்குத் தேவையாக இருக்கிறது. “விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்,” என்று நீதிமொழிகள் 13:16 கூறுகிறது. (நீதிமொழிகள் 10:14-ஐ ஒப்பிடவும்.) சில மருத்துவ புத்தகங்களைப் படிப்பதையும் உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடமும் மற்ற உடல்நல நிபுணர்களிடமும் குறிப்பான கேள்விகளைக் கேட்பதையும் இது அர்த்தப்படுத்தலாம். இந்த விஷயங்களில் அறிவைப் பெற்றுக்கொள்வதானது நீங்கள் உங்கள் முழுத் திறமையையும் அடைவதிலிருந்து தடுக்கக்கூடிய எந்தத் தவறான கருத்துக்களிலிருந்தும் உங்களை விடுதலையாக்கலாம்.
அது உங்களுடைய நிலைமையை மேம்படுத்தக்கூடிய மருத்துவ வளர்ச்சிகளையும் சிகிச்சைகளையும்பற்றி நீங்கள் நன்கு அறிந்திருக்க உதவிசெய்யும். உதாரணமாக, இலகுவான, புதிய பொருட்களை உபயோகித்துச் செயற்கை உறுப்புகள் (prostheses) தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவை வசதியாக, எளிதில் இயங்குவதை அனுமதிக்கின்றன. உண்மையில், ஊனமுற்றிருக்கும் நபர்களுக்கு உதவக்கூடிய கருவிகளின் ஒரு “திடீர் அதிகரிப்பை” டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஒருவேளை அத்தகைய கருவிகள் உள்ளூரிலேயே, உங்கள் குடும்ப வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப கிடைக்கக்கூடியவையாகக்கூட இருக்கலாம்.
மிகவும் பொதுவாகக் கிடைக்கும் செவியுணர்ச் சாதனங்கள் (hearing aids), கைத்தடிகள் (canes), ஊன்றுகோல்கள் (crutches), இடுப்புக் காலுறை தளைப்பட்டைகள் (braces) போன்ற கருவிகளும்கூட மிக உதவியாக இருக்கலாம். இளைஞரில் சிலர் இப்படிப்பட்ட கருவிகளை உபயோகிப்பதற்குத் தன்னுணர்வுடையவர்களாகவும் அதை இடர்ப்பாடாகவும் உணரலாம். ஆனால் சாலொமோன் ராஜா ஞானமாகச் சொன்னார்: “இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்.” (பிரசங்கி 10:10) உங்களுக்கு உதவக்கூடிய கருவிகளை நன்கு உபயோகப்படுத்தத் தவறுவீர்களேயானால்—முற்றும் சோர்வடைந்தவர்களாக—அல்லது மகிழ்ச்சிதரும் செயல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியாதவர்களாக ஆகிவிடுவீர்கள். உங்களுடைய வாழ்க்கையை இருக்கவேண்டியதைவிட அதிகக் கடினமாக்கிக்கொள்வதற்கு உங்களைத் தூண்டுவிக்கும்படி ஏன் உங்களுடைய பெருமையை அனுமதிக்கிறீர்கள்? சாலொமோன், “ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே பிரதானம்,” என்று சொல்லி முடித்தார்.
ஆம், நீங்கள் நடப்பதற்கு, பார்ப்பதற்கு, அல்லது நன்கு கேட்பதற்கு உதவி செய்யக்கூடிய ஏதோவொன்றை உபயோகிப்பது உங்களுடைய நன்மைக்காகவே. ஓர் ஊன்றுகோல், செயற்கை உறுப்பு அல்லது செவியுணர்ச் சாதனம் போன்றவற்றை உபயோகிப்பது கணிசமான பயிற்சியையும், பொறுமையையும் தேவைப்படுத்தலாம் என்பது உண்மையே. மேலும் இந்தக் கருவிகள் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த, அவசியம் அதிகத்தைச் செய்யுமென்றும் கூறுவதிற்கில்லை. ஆனால் அவை பிரச்னைகளிலிருந்து உங்களுக்குக் கொடுக்கக்கூடிய விடுதலையையும், அவை உங்களுக்குத் திறந்துவைக்கக்கூடிய வாய்ப்புகளைப்பற்றியும் யோசித்துப்பாருங்கள்! ஜே என்ற பெயருடைய ஆப்பிரிக்கப் பெண் ஒருத்தி தனித்த வாழ்க்கை நடத்தினாள். தான் வாழ்ந்துவந்த காம்பவுண்டிற்கு வெளியே, தனது 18 வருட வாழ்க்கையில், ஒரேவொரு தடவை மட்டும் சென்றிருக்கிறாள். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தபிறகு, அவள் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகத் தொடங்கினாள். தனது உடலின் முழு எடையையும் தனது கைகளால் தாங்கி தன்னை முன்னோக்கி இழுத்துத் தனது கால்களைத் தனக்குப் பின்னால் இழுத்துக்கொண்டே, இவ்வாறு பல கட்டடத்தொகுதிகளைக் கடந்து “நடப்பதை” இது தேவைப்படுத்தியது. ஐரோப்பாவிலுள்ள ஒரு சாட்சி ஜேவின் நிலைமையை அறிந்தபோது, அவளுக்கு மூன்றுசக்கர சக்கரநாற்காலி ஒன்றை அனுப்பிவைத்தார். அது இணைப்புச் சங்கிலியின் மூலம் ஆற்றல் கொடுக்கும் அமைப்பைக்கொண்டு (chain drive), ஜே தனது கைகளால் இயக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. அவளை இவ்வாறு பார்ப்பது கவர்ச்சிகரமாக இருந்ததா? இல்லவேயில்லை. ஆனால் கவர்ச்சியற்றதாகத் தோன்றிய இந்தப் போக்குவரத்து முறையானது, அவள் கூட்டங்களுக்குச் செல்வதையும், வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் பங்குகொள்வதையும் அனுமதித்தது.
சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள்!
எதிர்மறையான ஒரு மனநிலையை வளர்த்துக் கொள்ளாதிருக்க எச்சரிக்கையாய் இருங்கள். ஞானவானாகிய சாலொமோன் ராஜா சொன்னார்: “காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான்.” (பிரசங்கி 11:4) நீங்கள் செய்யவிரும்பிய அல்லது செய்யவேண்டிய காரியங்களைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்க பயத்தையோ அல்லது அநிச்சயத்தையோ அனுமதிக்கிறீர்களா? மோசேயைப்பற்றி யோசித்துப்பாருங்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்தபோது, தனக்குப் பேசுவதில் குறையிருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி மோசே தட்டிக்கழிக்க முயன்றார். “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்,” என்று மோசே சொன்னார். அவர் ஒருவேளை தான் பேசும்போது தன்னுடைய தொண்டையை அடைத்த ஏதோ ஓர் ஊனத்தைக் குறிப்பிட்டுக்காட்டியிருக்கலாம். (யாத்திராகமம் 6:12) ஆனால் மோசே தன்னைத்தானே குறைவாக மதிப்பிட்டுக்கொண்டார். காலப்போக்கில்—முழு இஸ்ரவேல் ஜனத்தாரிடமும் பேசியதன்மூலம்—தனக்குச் சரளமாகப் பேசமுடிந்தது என்பதை நிரூபித்தார்.—உபாகமம் 1:1.
உங்களையே குறைத்து மதிப்பிடும் அதே தவறைச் செய்யாதீர்கள். சவாலாக எடுத்துக்கொண்டு உங்களுக்கே ஊக்கமளித்துக்கொள்ளுங்கள்! உதாரணமாக, பெக்கி என்ற ஓர் இளம்பெண்ணுக்கு, தனது ஐந்து வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் பெற்ற காயத்தின் காரணமாகப் பேசுவதில் ஏதோ பிரச்னை இருந்தது. ஆனால் அவளுடைய பெற்றோர் அவளை நம்பிக்கையிழக்கும்படி விட்டுவிடவில்லை. மாறாக, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அவள் சேர்ந்துகொள்ளும்படி செய்தனர். ஏழு வயதானபோது, பெக்கி கூடிவந்திருப்போரின் முன்னிலையில் சுருக்கமான பேச்சுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தாள். பெக்கி நினைவுபடுத்திப் பார்க்கிறாள்: “பேச்சுகளைக் கொடுத்தல் உதவிற்று. நான் பேசுவதன்பேரில் கடினமாக உழைக்க அது என்னைத் தூண்டுவித்தது.” வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் முழுப் பங்கு கொள்வதற்கும் பெக்கி உற்சாகப்படுத்தப்பட்டாள். “நான் பேசுவதைக் கேட்க மக்கள் வெறுப்படைவார்கள் என்று நான் சிலசமயங்களில் நினைக்கிறேன்; அவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப்பற்றி நான் கவலைகொள்கிறேன். ஆனாலும், ‘நான் யெகோவாவுக்காகவே இதைச் செய்கிறேன்,’ என்று நான் எனக்கே சொல்லிக்கொண்டு, நல்ல முறையில் பேசுவதற்கு உதவி செய்யும்படி நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.” பெக்கி, இன்று ஒரு முழுநேரம் பிரசங்கிப்பவளாகச் சேவைசெய்துவருகிறாள்.
இப்போது வயதுவந்தவனாக இருக்கும் கிரேக், மூளை உணர்விழப்பு நோயினால் (cerebral palsy) துன்பப்படுகிறான். கிறிஸ்தவ சபையின் மதிக்கப்படும் ஓர் அங்கத்தினனாக தான் இருப்பதிலிருந்து தன்னைத் தடுக்கும்படி தன்னுடைய ஊனத்தை அவன் அனுமதிக்கவில்லை. அவன் சொல்கிறான்: “நான் யெகோவாவின் மீது சார்ந்திருக்கிறேன்; தம்முடைய ஆசீர்வாதங்களில் அநேகத்தை நான் அனுபவிக்கும்படி அவர் அனுமதித்திருக்கிறார். நான் ஐந்து முறை ஒரு துணைப் பயனியராக [பிரசங்கிப்பவராக] சேவை செய்ய முடிந்திருக்கிறது. நான் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பைபிள் பேச்சுகளைக் கொடுக்கிறேன். மேலும் சபையின் கணக்குகளை என்னால் கவனிக்கமுடிகிறது.”
“நகைக்க ஒரு காலமுண்டு,” மற்றும் ஓரளவு பயிற்சியுடன், மற்ற இளைஞர் அனுபவிக்கும் சில கேளிக்கை நிகழ்ச்சிகளை நீங்கள் மகிழ்ந்தனுபவிக்கவுங்கூட முடியும். (பிரசங்கி 3:4) “நான் கைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாட முடியாது. ஏனென்றால் என்னுடைய அனிச்சை செயல்கள் மந்தமாகிவிட்டன. ஆனால் என்னால் ஓடமுடியும். அந்த விபத்துக்குச் சற்றுப் பிறகு, மோட்டார் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும்படி என் தாயார் உற்சாகப்படுத்தினார். எப்பொழுதுமே நான் புது புது காரியங்களைக் கற்றுக்கொள்ள என்னை உற்சாகப்படுத்தினார்,” என்று பெக்கி ஒப்புக்கொள்கிறாள்.
ஒண்டியாகவே சமாளிக்க முயலாதிருங்கள்
சரீரப்பிரகாரமான ஓர் ஊனத்தைச் சமாளிப்பது எளிதல்ல. அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய குறையை “மாம்சத்திலே ஒரு முள்,” என்பதாக அழைத்தார். (2 கொரிந்தியர் 12:7) சந்தோஷகரமாகவே, உங்களுடைய பிரச்னைகளை நீங்கள் ஒண்டியாகச் சமாளிக்க வேண்டிய தேவையில்லை. வளர்ச்சி குன்றிய இடுப்பையுடைய சர்னி என்ற ஓர் இளம்பெண் கூறுகிறாள்: “தகுந்த கிறிஸ்தவ கூட்டுறவையும் குடும்ப அங்கத்தினர்களின் மற்றும் நண்பர்களின் அன்பான ஆதரவையும் கொண்டிருந்தது எனக்கு மிகவும் மதிப்புள்ளதாக இருந்துவந்திருப்பதை நான் காண்கிறேன்.” ஆம், உங்களையே தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். (நீதிமொழிகள் 18:1) முடிந்தளவு, “கர்த்தருடைய வேலையிலே செய்வதற்கு அதிகத்தைக் கொண்டிருங்கள்.” (1 கொரிந்தியர் 15:58, NW) சர்னி பலனை விவரிக்கிறாள்: “ராஜ்ய வேலையில் மும்முரமாக இருப்பது என்னுடைய பிரச்னைகளைப்பற்றி சரியான மனநிலையைக் கொண்டிருக்க எனக்கு உதவுகிறது.” பெக்கி குறிப்பிடுகிறாள்: “உங்களைவிட உண்மையிலேயே மோசமான பிரச்னைகளில் இருக்கும் மக்களிடத்தில் பேச வேண்டியிருக்கிறீர்கள்; ஏனென்றால் அவர்கள் எதிர்காலத்தைப்பற்றிய ஒரு நம்பிக்கையில்லாதிருக்கிறார்கள். இது என்னுடைய பிரச்னைகளை மறக்க உதவி செய்கிறது.”
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதரவுக்காக யெகோவா தேவனை நோக்கியிருங்கள். உங்களுடைய தேவைகளையும், உணர்ச்சிகளையும் அவர் அறிந்திருக்கிறார். மேலும் உங்களுக்குச் சமாளிக்க உதவுவதில் “இணையற்ற வல்லமையை”கூட அவர் தரக்கூடும். (2 கொரிந்தியர் 4:7, கத்தோலிக்க பைபிள்) ஒருவேளை நீங்கள் காலப்போக்கில், டரன்ஸ் என்ற பெயருடைய ஊனமுற்ற இளைஞனின் நம்பிக்கையான நோக்குநிலையைக் கொள்ளலாம். ஒன்பது வயதில், டரன்ஸ் தனது பார்வையை இழந்தான். ஆனால் அது தன்னை மேற்கொள்ள அவன் அனுமதித்துவிடவில்லை. அவன் சொல்கிறான்: “என்னுடைய பார்வையிழப்பு ஓர் ஊனமல்ல; அது வெறுமனே ஓர் அசெளகரியமாகும்.” (g93 6/8)
[அடிக்குறிப்புகள்]
a உங்களுடைய ஊனம் அண்மையில் ஏற்பட்டிருந்தால், புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நீங்கள் கசந்த, கோப, மற்றும் கவலை உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருக்கலாம். உண்மையிலேயே, நீங்கள் ஒரு பெரு நஷ்டத்தை எதிர்ப்பட்டிருக்கும்போது துக்கமான ஒரு காலக்கட்டத்தைக் கடந்து போவது இயல்பானதே, மற்றும் ஆரோக்கியமானதே. (ஒப்பிடவும்: நியாயாதிபதிகள் 11:37; பிரசங்கி 7:1-3) காலப்போக்கில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பாதரவால் புண்பட்ட உணர்ச்சிகளின் புயல் இறுதியில் தணிந்துவிடும் என்பதைப்பற்றி நிச்சயமாய் இருங்கள்.
[பக்கம் 17-ன் படம்]
உங்களுடைய ஊனத்தைப் பற்றி உங்களால் முடிந்ததெல்லாம் அறிந்துகொள்ளுங்கள்