ஊனம்—ஆயினும் பலன் தரலாம்
1 ஊனமுற்ற அநேக யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நீங்கள் இருந்தால், உங்களாலும் பலன் தரும் ஊழியம் செய்ய முடியும். சொல்லப்போனால், உங்கள் சூழ்நிலை காரணமாக சாட்சி கொடுக்கவும் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் உங்களுக்கு விசேஷ வாய்ப்புகள் கிடைக்கலாம்.
2 சாட்சி கொடுத்தல்: உடல் ஊனத்தோடு போராடும் அநேகர் ஊழியத்தில் முழுமையாக பங்கு பெறுகின்றனர். உதாரணமாக, ஒரு சகோதரிக்கு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடும் பாதிப்பு ஏற்பட்டது; அவரால் சரியாக நடக்க முடியவில்லை, சரியாக பேசுவதற்கு வாய் வரவில்லை. ஆனாலும், ஆள்நடமாட்டம் அதிகமுள்ள நடைபாதைக்கு அருகில் தன் கணவர் காரை நிறுத்தும்போது பத்திரிகை ஊழியத்தில் பங்கெடுத்து வெற்றி கண்டார். ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டே மணிநேரத்தில் 80 பத்திரிகைகளை அளித்தாரென்றால் பாருங்கள்! உங்களுக்கே உரிய விசேஷ சூழ்நிலைகளை பயன்படுத்தி ஜனங்களில் சிலரை தொடர்பு கொள்ளலாம்; வேறு சந்தர்ப்பங்களில் அவர்களை மற்றவர்களால் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். ஆகவே, அப்படிப்பட்டவர்களை உங்கள் விசேஷ பிராந்தியமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
3 உங்கள் பிரசங்கம் வெகு திறம்பட்ட ஒன்றாக அமையலாம்! எப்படியெனில் உங்கள் உறுதியையும் பைபிள் சத்தியம் உங்கள் வாழ்க்கையில் செலுத்தியுள்ள நல்ல செல்வாக்கையும் மற்றவர்கள் காண்பர்; அப்போது அவர்களும் ராஜ்ய செய்தியிடம் கவர்ந்திழுக்கப்படுவர். மேலும், துன்புற்று தவிக்கும் ஜனங்களை சந்திக்கும்போது கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வாழ்க்கையில் நீங்கள் பெற்ற அனுபவம் உங்களுக்கு கைகொடுக்கும்.—2 கொ. 1:4.
4 மற்றவர்களுக்கு தெம்பூட்டலாம்: லாரல் நிஸ்பட் என்ற சகோதரியின் வாழ்க்கை சரிதை உங்கள் நெஞ்சைத் தொடவில்லையா? அவர் 37 வருடங்கள் செயற்கை நுரையீரலோடு வாழ்ந்தபோதிலும் பைபிள் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெற 17 பேருக்கு உதவியிருக்கிறார். அவ்வாறே, உங்கள் உதாரணமும் யெகோவாவின் சேவையில் மும்முரமாக பங்கு பெற உடன் விசுவாசிகளை ஊக்குவிக்கலாம்.—g93 1/22 பக். 18-21.
5 நீங்கள் விரும்புமளவுக்கு வெளியே சென்று ஊழியம் செய்வதை உங்கள் சூழ்நிலை தடுத்தாலும்கூட மற்றவர்களை உங்களால் பலப்படுத்த முடியும். ஒரு சகோதரர் சொன்னார்: “மிகவும் மோசமாக ஊனமுற்றிருக்கும் ஒரு நபரும்கூட மற்றவர்களுக்கு பெரும் உதவியாக இருக்க முடியும் என்பதை கற்றுக்கொண்டேன். சபையிலுள்ள பலருக்கு நானும் என்னுடைய மனைவியும் ஒருவித நங்கூரம் போன்று இருந்திருக்கிறோம். எங்களுடைய சூழ்நிலைமை காரணமாக நாங்கள் எப்பொழுதும் இங்கேயே இருக்கிறோம். எங்களை எந்த சமயத்திலும் வந்து பார்க்கலாம்.” என்றாலும், உங்கள் உடல் ஊனத்தின் காரணமாக நீங்கள் செய்ய ஆசைப்படும் அளவுக்கு எப்போதுமே செய்ய முடியாமல் போகலாம். ஆனால் யாராவது கொஞ்சம் உதவி செய்தால் ஊழியத்தில் நீங்கள் நன்றாக பங்கெடுக்கலாம். ஆகவே, உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் சபையிலுள்ள மூப்பர்களிடமோ உங்களுக்கு உதவ முடிந்த மற்றவர்களிடமோ அதை தெரிவிக்க தயங்காதீர்கள்.
6 தமக்கு ஊழியம் செய்வதற்காக நீங்கள் படும் பிரயாசங்களை யெகோவா கண்ணோக்கி பார்க்கிறார்; முழு ஆத்துமாவோடு நீங்கள் செய்யும் சேவையைக் கண்டு அவர் அகமகிழ்கிறார். (சங். 139:1-4) நீங்கள் அவரை சார்ந்திருந்தால், பலன் தரும் அர்த்தமுள்ள ஊழியம் செய்ய அவர் உங்களுக்கு சக்தியளிப்பார்.—2 கொ. 12:7-10.