‘உழையுங்கள், அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல’
டேவிட் லென்ஸ்ட்ரெம் சொன்னபடி
என் தம்பி எல்வுட்டும் நானும் ஆகாயத்தில் ஒன்பது மீட்டருக்கு மேற்பட்ட உயரத்தில் நின்று, உவாட்ச்டவர் தொழிற்சாலை கட்டிடத்தின்மேல் ஒரு புதிய அறிவிப்புக்குறி ஒன்றிற்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தோம். 40-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னான இப்போதும், அது இன்னும் அங்கிருந்து, “கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினந்தோறும் வாசியுங்கள்” என்று தூண்டி ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான ஜனங்கள், பிரசித்திபெற்ற புருக்லின் பாலத்தைக் கடந்து செல்கையில் இந்த அறிவிப்புக்குறியைக் காண்கின்றனர்.
கு டும்ப துணி துவைப்பு நாள், என் மிகச் சிறு வயது நினைவுகளில் ஒன்றாக உள்ளது. விடியற்காலை 5:00 மணிக்குள் அம்மா விழித்தெழுந்து, எங்கள் பெரிய குடும்பத்துக்காக துணிகளைத் துவைத்துக் கொண்டிருப்பார்கள், அப்பா வேலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருப்பார். அவர்களுக்கிடையே மும்முரமான விவாதப் பேச்சுகள் நடக்கும். கோடிக்கணக்கான ஆண்டுகளினூடே மனிதன் எவ்வாறோ படிப்படியாகத் தோன்றினான் என்று அப்பா விவாதிப்பார். மனிதர் கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்டனர் என்பதை நிரூபிக்க, அம்மா, பைபிளிலிருந்து வசனங்களை எடுத்துக் குறிப்பிடுவார்கள்.
நான் ஏழு வயதானவனாக இருந்தபோதே, அம்மாவிடம் சத்தியம் இருந்தது என்பதை உணர்ந்தேன். அப்பாவை நான் மிக அதிகமாய் நேசித்தபோதிலும், அவருடைய விசுவாசம் எதிர்காலத்துக்கான எந்த நம்பிக்கையும் அளிப்பதில்லை என்பதை என்னால் காண முடிந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் தன் மகன்களில் இருவர், அவர்கள் மிக அதிகமாய் நேசித்த புத்தகமாகிய பைபிளை ஜனங்கள் வாசிக்கும்படி ஊக்குவித்த ஓர் அறிவிப்புக்குறியை வண்ணமிட்டனரென்று அம்மா அறிந்தால் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்!
ஆனால் நான் வரிசையாகத் தொடர்ந்து சொல்வதைவிட்டு தூர சென்றுவிட்டேன். அத்தகைய சிலாக்கியமுள்ள வேலை எவ்வாறு எனக்குக் கிடைத்தது? நான் பிறந்ததற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னான, 1906-ம் ஆண்டுக்குப் பின்னிருந்து நான் தொடங்க வேண்டும்.
அம்மாவின் உண்மையுள்ள முன்மாதிரி
அந்தச் சமயத்தில் அம்மாவும் அப்பாவும் புதிதாக மணம் செய்தவர்களாக அரிஜோனாவில் ஒரு கூடாரத்தில் வாழ்ந்தனர். யெகோவாவின் சாட்சிகள் அப்போது அறியப்பட்டபடி, பைபிள் மாணாக்கர் ஒருவர் அங்கு வந்து, சார்ல்ஸ் டேஸ் ரஸல் எழுதின, வேதாகமத்தில் படிப்புகள் என்ற பெயருடைய புத்தகத் தொகுதிகளை அம்மாவுக்கு அளித்தார். இரவுமுழுவதும் அம்மா விழித்திருந்து அவற்றை வாசித்து, தான் தேடிக்கொண்டிருந்த சத்தியம் அதுவே என்று சீக்கிரத்தில் தெரிந்துகொண்டார்கள். வேலைக்காகத் தேடி சென்ற அப்பா திரும்பிவருவதற்கும் காத்திருக்க முடியாமல் இருந்தார்கள்.
சர்ச்சுகள் போதிப்பவற்றில் அப்பாவும் திருப்தியற்றவராக இருந்தார், ஆகவே பைபிள் சத்தியங்களைச் சிறிது காலம் ஏற்றார். எனினும், பிற்பாடு, மத சம்பந்தமாய்த் தன் சொந்த போக்கில் சென்று, சத்தியத்தைப் பின்பற்றுவதை அம்மாவுக்கும் கடினமாக்கினார். எனினும், தன் பிள்ளைகளின் மாம்சப்பிரகாரமான தேவைகளோடுகூட ஆவிக்குரிய தேவைகளையும் கவனிப்பதை அம்மா ஒருபோதும் நிறுத்திவிடவில்லை.
நாள் முழுவதும் கடினமாய் உழைத்த பின்பு, பைபிளிலிருந்து ஒரு பாகத்தை எங்களுக்கு வாசிக்க அல்லது ஆவிக்குரிய அரும்பொருட்கள் சிலவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ள, ஒவ்வொரு இரவும் அம்மா கீழ்த்தளத்துக்கு இறங்கிவந்ததை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். அப்பாவும் கடினமாக உழைப்பவராக இருந்தார், நான் பெரியவனாக வளர்ந்தபோது, வண்ணம் பூசும் தொழிலை அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார். ஆம், உழைப்பதற்கு அப்பா எனக்குக் கற்றுக்கொடுத்தார், ஆனால் எதற்காக உழைக்க வேண்டும், இயேசு கட்டளையிட்டபடி, ‘நிலைக்கிற போஜனத்திற்காகவே உழைக்க’ வேண்டும் என்பதை அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.—யோவான் 6:27, தி.மொ.
முடிவில் எங்கள் குடும்பம், சீயெட்டிலுக்கு ஏறக்குறைய 180 கிலோமீட்டர் கிழக்கே, வாஷிங்டன் பிரதேசத்திலுள்ள சிறிய பட்டணமாகிய எல்லென்ஸ்பர்க்கில் குடியேறினது. பிள்ளைகளாகிய நாங்கள், அம்மாவுடன் பைபிள் மாணாக்கர் கூட்டங்களுக்குச் செல்ல தொடங்கினபோது, தனிப்பட்ட வீடுகளில் கூடினோம். வீடுவீடாக ஊழியம் செய்வதில் பங்குகொள்வதற்கான அவசியம் அறிவுறுத்தப்பட்டபோது ஆண்கள் எல்லாரும் எங்கள் படிப்பு தொகுதியை விட்டு விலகிவிட்டனர். ஆனால் அம்மா ஒருபோதும் தடுமாறவில்லை. இது, யெகோவாவின் அமைப்பினுடைய வழிநடத்துதலில் எப்போதும் நம்பிக்கை வைக்கும்படி, நிலையான எண்ணத்தை என்னில் பதியவைத்தது.
முடிவில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒன்பது பிள்ளைகள் இருந்தார்கள். நான் அவர்களுடைய மூன்றாவது பிள்ளையாக, அக்டோபர் 1, 1909-ல் பிறந்தேன். மொத்தம் எங்களில் ஆறு பேர் அம்மாவின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றி, யெகோவாவின் ஆர்வமுள்ள சாட்சிகளானோம்.
ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டப்படுதலும்
இருபதை நெருங்கும் வயதில் நான் இருந்தபோது, என்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, 1927-ல் தண்ணீரில் முழுக்காட்டப்படுவதால் இதை அடையாளப்படுத்தினேன். இந்த முழுக்காட்டுதல், சீயெட்டிலில், ஒரு பாப்டிஸ்ட் சர்ச்சாக முன்பிருந்த, பழைய கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டது. அந்தப் பழைய கோபுரக்கூம்பை அவர்கள் எடுத்துவிட்டிருந்ததால் நான் சந்தோஷப்படுகிறேன். கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்த சிறு குளத்துக்கு நாங்கள் வழிநடத்தப்பட்டு, உடுத்திக் கொள்வதற்கு நீண்ட கருப்பு அங்கிகள் அங்கே கொடுக்கப்பட்டோம். சவ அடக்கம் ஒன்றுக்கு நாங்கள் செல்வதுபோல் காணப்பட்டது.
சில மாதங்களுக்குப் பின் நான் சீயெட்டிலில் இருந்தேன். இந்தத் தடவை வீடு வீடாக சாட்சிகொடுக்கும் என் முதல் அனுபவத்தைப் பெற்றேன். முன்னின்று நடத்துபவர் என்னிடம், “நீ இந்தக் கட்டிட தொகுதியை இந்தப் பக்கமாகச் சுற்றி செல், நான் அந்தப் பக்கமாகச் செல்கிறேன்,” என்று சொன்னார். நான் நடுங்கிக்கொண்டிருந்தபோதிலும், நல்ல சுபாவமுள்ள ஓர் அம்மாளிடம் இரண்டு அடுக்கு சிறு புத்தகங்களை அளித்தேன். எல்லென்ஸ்பர்க்குக்கு நான் திரும்பி சென்றபோது வீடு வீடாகச் செய்யும் ஊழியத்தில் தொடர்ந்து பங்குகொண்டிருந்தேன். இப்போது 70 ஆண்டுகளுக்குப் பின்பும், அத்தகைய ஊழியம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.
உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை
அதற்குச் சிறிது காலத்துக்குப் பின், உவாட்ச் டவர் சொஸைட்டியின் உலகத் தலைமை அலுவலகமான புருக்லின் பெத்தேலில் சேவை செய்திருந்த ஒருவர், அங்கே சேவிப்பதற்கு முன்வந்து அளிக்கும்படி என்னை ஊக்கப்படுத்தினார். எங்கள் உரையாடலுக்குச் சிறிது காலத்துக்குப் பின், பெத்தேலில் உதவி தேவையாக இருப்பதைப் பற்றி தெரிவித்து உவாட்ச்டவர் பத்திரிகையில் ஓர் அறிவிப்பு வெளிப்பட்டது. ஆகவே நான் மனு செய்தேன். 1930, மார்ச் 10-ம் தேதியில், நியூ யார்க், புருக்லினில் பெத்தேல் சேவைக்காக வந்து அறிக்கை செய்யும்படி கூறிய கடிதத்தைப் பெற்றதில் எனக்குண்டான மகிழ்ச்சியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இவ்வாறு, ‘நிலைக்கிற போஜனத்திற்காக’ உழைக்கும் என் முழுநேர வாழ்க்கை சேவை தொடங்கிற்று.
வண்ணம் பூசுபவனாக எனக்கு இருந்த அனுபவத்தினால், எதற்காவது வண்ணம் பூசும்படியான வேலை எனக்கு நியமிக்கப்பட்டிருக்குமென ஒருவர் நினைக்கலாம். மாறாக, எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலையானது, தொழிலகத்தில் கம்பித் தையல் பொறியில் வேலைசெய்வதாக இருந்தது. இது மிக சலிப்பூட்டும் வேலையாக இருந்தபோதிலும், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த வேலையை அனுபவித்து மகிழ்ந்தேன். பழங்கால போர்க்கப்பல் என்று நாங்கள் ஆசையோடு அழைத்த அந்தப் பெரிய சுழல்முறை அச்சுப்பொறி, சிறிய புத்தகங்களை அச்சடித்து, சுமந்து செல்லும் பெல்ட் மூலமாகக் கீழே எங்கள் தளத்துக்கு அனுப்பியது. அந்தப் போர்க்கப்பலிலிருந்து நாங்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டிருந்த அவ்வளவு விரைவாக அந்தச் சிறிய புத்தகங்களுக்கு நாங்கள் கம்பி தைக்க பிரயாசப்படுவது எங்களுக்கு விளையாட்டாக இருந்தது.
அதன்பின், நாங்கள் ஒலிப்பதிவுக் கருவிகள் செய்த ஒரு துறை உட்பட, பல துறைகளில் நான் வேலை செய்தேன். பதிவுசெய்த பைபிள் செய்திகளை, வீட்டுக்காரர்களின் வாசல்களில் வாசிப்பதற்கு இந்தப் பொறிகளை நாங்கள் பயன்படுத்தினோம். நிமிர்நிலை ஒலிப்பதிவுக் கருவி ஒன்றை, எங்கள் துறையிலிருந்தவர்கள் தாங்களாக முன்வந்து, திட்டமிட்டு உண்டாக்கினர். முன்னதாகப் பதிவுசெய்த செய்திகளை இந்த ஒலிப்பதிவுக் கருவி வாசித்ததுமட்டுமல்லாமல், சிறிய புத்தகங்களையும், ஒருவேளை இறைச்சி இடைச்செருகிய ரொட்டி ஒன்றையும்கூட சுமந்துசெல்வதற்குத் தனிப்பட்ட இடங்களையும் கொண்டிருந்தது. 1940-ல், டெட்ராய்ட், மிச்சிகனில் நடந்த மாநாடு ஒன்றில், இந்தப் புதிய சாதனத்தைப் பயன்படுத்தும் முறையை செய்துகாட்டும் சிலாக்கியம் எனக்கு இருந்தது.
எனினும், அறிவுநுட்பத்துடன் பொறிகளைச் செய்வதைப் பார்க்கிலும் அதிகத்தை நாங்கள் செய்துகொண்டிருந்தோம். ஆவிக்குரியப்பிரகாரமாய் முக்கியமான சரிப்படுத்தல்களையும் செய்துகொண்டிருந்தோம். உதாரணமாக, சிலுவையையும் கிரீடத்தையும் கொண்ட ஒரு புரோச்சை யெகோவாவின் சாட்சிகள் அணிவது வழக்கமாயிருந்தது. ஆனால், இயேசு, சிலுவையில் அல்ல, செங்குத்தான கழுமரம் ஒன்றிலேயே கொல்லப்பட்டார் என்று பின்னால் நாங்கள் புரிந்துகொள்ளலானோம். (அப்போஸ்தலர் 5:30) ஆகையால் இந்தப் புரோச்சுகளை அணிவது நிறுத்தப்பட்டது. அந்தப் புரோச்சுகளிலிருந்து அந்தப் பட்டைகளை நீக்குவது என் சிலாக்கியமாக இருந்தது. பின்னால், அதிலிருந்த பொன் உருக்கியெடுத்து விற்கப்பட்டது.
வாரந்தோறும் ஐந்தரை நாட்கள் சுறுசுறுப்பாய் உழைக்கும் வேலைக்குரிய கால அட்டவணை எங்களுக்கு இருந்தபோதிலும், வார முடிவுகளில் கிறிஸ்தவ ஊழியத்தில் நாங்கள் ஈடுபட்டோம். ஒரு நாள், எங்களில் 16 பேர் கைதுசெய்யப்பட்டு புருக்லினிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டோம். ஏன்? அந்நாட்களில் மதம் என்பதை, பொய் மதம் என்ற அதே பொருள்படுவதாக நாங்கள் கருதினோம். ஆகையால், “மதம் ஒரு கண்ணியும் ஏய்ப்புமாக உள்ளது,” என்று ஒருபுறத்திலும், “கடவுளையும் அரசராகிய கிறிஸ்துவையும் சேவியுங்கள்” என்று மறுபுறத்திலும் வாசித்த அறிவிப்பு அட்டைகளை நாங்கள் சுமந்து சென்றோம். இந்த அறிவிப்பு அட்டைகளைச் சுமந்து சென்றதற்காக, நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம். ஆனால் உவாட்ச் டவர் சொஸைட்டியின் வழக்கறிஞரான ஹேடென் கவிங்டன் பிணையமளித்து எங்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். அந்தச் சமயத்தில் வணக்க சுயாதீனம் உட்பட்ட பல வழக்குகள் ஐக்கிய மாகாணத்தின் தலைமை உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக வழக்காடப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது பெத்தேலில் இருப்பதும், நம் வெற்றிகளைப் பற்றிய விவரங்களை நேரடியாகக் கேட்பதும் உள்ளக்கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.
கடைசியாக, வண்ணம் பூசும் என் அனுபவத்தைப் பயன்படுத்தின வேலைகள் எனக்கு நியமிக்கப்பட்டன. நியூ யார்க் நகரத்தின் ஐந்து அரசியல் பகுதிகளில் ஒன்றாகிய ஸ்டேட்டன் தீவில், நம்முடைய WBBR வானொலி நிலையத்தை நாம் கொண்டிருந்தோம். இந்த நிலையத்தின் வானொலி தூபிகள் 60 மீட்டருக்கு மேலான உயரமுள்ளவையாக இருந்தன, அவை மூன்று தொகுதி பிணைப்பு மின்கம்பிகளைக் கொண்டிருந்தன. 0.9 மீட்டர், 20 சென்டிமீட்டர் அகலமுமான ஒரு பலகையின்மீது நான் உட்கார்ந்தேன், துணை வேலையாளர் ஒருவர் என்னை மேலிழுத்துவிட்டார். தரையிலிருந்து அவ்வளவு உயரத்தில் அந்தச் சிறிய இருக்கையில் உட்கார்ந்து, அந்தப் பிணைப்பு மின்கம்பிகளுக்கும் தூபிகளுக்கும் நான் வண்ணம் பூசினேன். அந்த வேலையைச் செய்கையில் மிகுதியாக நாங்கள் ஜெபம் செய்தோமாவென சிலர் என்னைக் கேட்டிருக்கின்றனர்!
கோடைக்கால வேலை ஒன்றை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன், அது, தொழிலகக் கட்டிடத்தின் பலகணிகளைக் கழுவுதலும் பலகணி அடிக்கட்டைகளுக்கு வண்ணம் பூசுதலுமாகும். அதை எங்கள் கோடை விடுமுறை என்று அழைத்தோம். எங்கள் மர பரண்கட்டுவைச் சேர்த்துக் கட்டிக்கொண்டு, ஒரு கப்பியையும் கயிற்றையும் கொண்டு, எட்டு மாடி கட்டிடத்துக்கு மேலும் கீழும் எங்களை இழுத்துக்கொண்டோம்.
ஆதரவளித்த ஒரு குடும்பம்
1932-ல் என் தகப்பன் இறந்துவிட்டார், நான் பெத்தேலை விட்டு வீட்டுக்குச் சென்று அம்மாவை கவனிக்க உதவிசெய்ய வேண்டுமா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஆகையால் ஒரு நாள் மத்தியான சாப்பாட்டுக்கு முன்பாக, சகோதரர் ரதர்ஃபர்ட் உட்கார்ந்த முதன்மை மேசையில் ஒரு சுருக்கக் குறிப்புரை சீட்டை எழுதி வைத்தேன். அதில் அவரிடம் பேசுவதற்காக அனுமதி கேட்டேன். என் கவலையைப் பற்றி அறிந்து, வீட்டில் இன்னும் இருந்துகொண்டிருக்கும் சகோதரரும் சகோதரிகளும் எனக்கு இருந்தார்களென்று தெரிந்துகொண்டு, அவர், “பெத்தேலில் தொடர்ந்திருந்து கர்த்தரின் வேலையைச் செய்ய நீ விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
“நிச்சயமாகவே விரும்புகிறேன்,” என்று நான் பதிலளித்தேன்.
ஆகவே, பெத்தேலில் தொடர்ந்திருப்பதற்கான என் தீர்மானத்தை அம்மா ஒப்புக்கொள்கிறார்களா என்பதைக் காண, அவர்களுக்கு எழுதும்படி அவர் ஆலோசனை சொன்னார். அதையே நான் செய்தேன். அம்மா அதற்குப் பதிலெழுதி, என் தீர்மானத்தை முழுமையாகச் சம்மதிப்பதாய்க் கூறினார்கள். சகோதரர் ரதர்ஃபர்டின் தயவையும் அறிவுரையையும் நான் உண்மையில் நன்றியோடு மதித்துணர்ந்தேன்.
பெத்தேலில் நான் இருந்த பல ஆண்டுகளின்போது, என் குடும்பத்தாருக்கு நான் தவறாமல் ஒழுங்காய் எழுதி, அம்மா என்னை ஊக்குவித்திருந்ததுபோல், யெகோவாவைச் சேவிக்கும்படி அவர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தேன். 1937-ன் ஜூலையில் அம்மா இறந்தார்கள். எங்கள் குடும்பத்துக்கு அவர்கள் எத்தகைய உயிர்ப்பூட்டுதலாக இருந்துவந்தார்கள்! என் மூத்த சகோதரனும் சகோதரியுமான, பாலும் எஸ்தரும், என் இளைய சகோதரி லூயிஸும் மாத்திரமே சாட்சிகளாகவில்லை. எனினும் பால், எங்களுடைய ஊழியத்துக்கு ஆதரவாக இருந்து நிலப்பகுதிகளை அளித்தார், அவற்றில் எங்கள் முதல் ராஜ்ய மன்றத்தை நாங்கள் கட்டினோம்.
1936-ல் என் சகோதரி ஈவா பயனியராக, அல்லது முழுநேரம் பிரசங்கிப்பவளாக ஆனாள். அதே ஆண்டில் ரால்ஃப் தாமஸை மணம் செய்துகொண்டாள். 1939-ல் அவர்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்குச் சேவை செய்யும்படி பயண ஊழியத்துக்கு நியமிக்கப்பட்டனர். பின்னால் அவர்கள் மெக்ஸிகோவுக்கு இடம் மாறி சென்றனர், அங்கே ராஜ்ய ஊழியத்துக்கு உதவிசெய்வோராக 25 ஆண்டுகள் செலவிட்டனர்.
1939-ல் என் இளைய சகோதரிகள் ஆலிஸும் ஃப்ரான்ஸெஸும்கூட பயனியர் சேவையை ஏற்றனர். 1941-ல் செ. லூயிஸ் மாநாட்டில் ஆலிஸ், ஒரு துறையில், பொருளக முகப்பிடம் ஒன்றுக்குப் பின்னால் இருந்து, நான் அதை உண்டாக்குவதற்கு உதவிசெய்திருந்த ஒலிப்பதிவுசெய்யும் கருவியின் உபயோகத்தை செய்து காட்டி விளக்கமளித்துக் கொண்டிருந்ததைக் கண்டது எத்தகைய மகிழ்ச்சியாக இருந்தது! குடும்பப் பொறுப்புகளின் காரணமாக ஆலிஸ் சில சமயங்களில் தன் பயனியர் ஊழியத்தை நிறுத்த வேண்டியதாக இருந்தபோதிலும், முழுநேர ஊழியத்தில் மொத்தம் 40-க்கு மேற்பட்ட ஆண்டுகள் அவள் செலவிட்டிருக்கிறாள். ஃப்ரான்ஸெஸ், 1944-ல் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளிக்குச் சென்று படித்து, ப்யூர்ட்டோ ரிக்கோவில் சிறிது காலம் ஒரு மிஷனரியாக சேவித்தாள்.
குடும்பத்தில் எல்லாரிலும் இளைஞரான ஜோயலும் எல்வுட்டும் ஆகிய இவ்விருவரும், 1940-ன் தொடக்கத்தில் மான்டானாவில் பயனியர்கள் ஆனார்கள். ஜோயல் உண்மையுள்ள சாட்சியாக நிலைத்திருந்து இப்போது உதவி ஊழியனாகச் சேவிக்கிறான். 1944-ல் எல்வுட் என் இருதயத்துக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருபவனாய், பெத்தேலில் என்னோடு சேர்ந்துகொண்டான். நான் வீட்டை விட்டபோது அவன் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடையவனாக இருந்தான். தொடக்கத்தில் குறிப்பிட்டபடி, தொழிற்சாலை கட்டிடத்தின்மேல் “கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினந்தோறும் வாசியுங்கள்” என்ற அந்த அறிவிப்புக்குறியை வண்ணமிடுவதில் நாங்கள் ஒன்றாக உழைத்தோம். பல ஆண்டுகளினூடே அந்த அறிவிப்புக்குறியைக் கண்டிருக்கிற எத்தனை ஆட்கள், தங்கள் பைபிளை வாசிக்கும்படி ஊக்குவிக்கப்பட்டிருப்பரென நான் அடிக்கடி சிந்தித்திருக்கிறேன்.
எல்வுட் 1956-ல் எம்மா ஃப்ளைட்டை மணம் செய்யும் வரையில் பெத்தேலில் சேவித்தான். எல்வுட்டும் எம்மாவும், சிறிது காலம் ஆப்பிரிக்காவிலுள்ள கென்யாவிலும், அதோடு ஸ்பெய்னிலும் சேவித்து, பல ஆண்டுகள் முழுநேர ஊழியத்தில் ஒன்றாக உழைத்தனர். எல்வுட் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு 1978-ல் ஸ்பெய்னில் இறந்தான். எம்மா இந்நாள்வரையில் ஸ்பெய்னில் பயனியர் ஊழியத்தில் நிலைத்திருக்கிறாள்.
திருமணமும் குடும்பமும்
நான் சென்றுகொண்டிருந்த புருக்லின் சென்டர் சபையில் ஒரு பயனியரான ஆலிஸ் ரிவேராவை மணம் செய்யும்படி, 1953-ன் செப்டம்பரில், நான் பெத்தேலை விட்டேன். எனக்கு பரலோக நம்பிக்கை இருந்ததென்று ஆலிஸுக்கு அறிவித்தேன், எனினும் என்னை மணம் செய்வதில் அவள் இன்னும் அக்கறை கொண்டிருந்தாள்.—பிலிப்பியர் 3:14.
பெத்தேலில் 23 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு, ஆலிஸையும் என்னையும் பயனியர் ஊழியத்தில் பராமரித்துக்கொள்ள, வண்ணம் பூசுபவனாக, உலகப்பிரகாரமான வேலையைத் தொடங்குவது சற்று கடினமான இசைவிப்பாக இருந்தது. உடல்நல காரணங்களுக்காக ஆலிஸ் பயனியர் ஊழியத்தை நிறுத்த வேண்டியதாக இருந்தபோதிலும், அவள் எப்போதும் ஆதரவளிப்பவளாக இருந்தாள். 1954-ல் எங்கள் முதல் பிள்ளையை எதிர்பார்த்தோம். எங்கள் மகன், ஜாண் நன்றாக இருந்தபோதிலும், பிள்ளைப்பேறு நல்ல முறையில் இருக்கவில்லை. கீறி குழந்தையை எடுத்தபோது, ஆலிஸ் மிகுதியான இரத்தத்தை இழந்ததால் அவள் பிழைத்திருப்பாளென்று மருத்துவர்கள் நினைக்கவில்லை. ஒரு சமயத்தில் நாடித் துடிப்பையும் அவர்கள் உணரமுடியவில்லை. எனினும் அந்த இரவில் அவள் உயிர்பிழைத்து காலப்போக்கில் முழுமையாக சுகமடைந்தாள்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஆலிஸின் தகப்பன் மரித்தபோது, அவளுடைய தாயுடன் இருப்பதற்கு, லாங் தீவில் இன்னும் தூரமாகச் சென்றோம். எங்களுக்கு ஒரு கார் இல்லாததனால், போக்குவரத்துக்கு நான் நடந்து சென்றேன் அல்லது பஸ்ஸிலாவது ரயிலிலாவது சென்றேன். அவ்வாறு நான் பயனியர் ஊழியத்தில் தொடர்ந்திருக்கவும், என் குடும்பத்தை ஆதரிக்கவும் முடிந்தது. முழுநேர ஊழியத்தின் மகிழ்ச்சிகள் எந்த தியாகங்களுக்கும் மேலாக மிக மேம்பட்டவையாக இருந்தன. தான் ஒரு சாட்சியாவதற்காக, பெரும் முன்னேற்ற வாய்ப்புடைய தளக்கட்டுப் பந்தாட்ட வாழ்க்கைத் தொழிலை விட்டுவிட்ட ஜோ நட்டாலே போன்ற ஆட்களுக்கு உதவிசெய்வது என் பல ஆசீர்வாதங்களில் ஒன்றாகத்தானே இருந்திருக்கிறது.
1967-ல், நியூ யார்க் பகுதியில் நிலைமைகள் மோசமாகியதால், ஆலிஸையும் ஜாணையும் என் தாயக பட்டணமாகிய எல்லென்ஸ்பர்க்கில் வசிப்பதற்கு திரும்ப அழைத்துச் செல்லும்படி தீர்மானித்தேன். இப்போது, என் தாயாரின் பல பேரப்பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளும் முழுநேர ஊழியத்தில் பங்குகொள்வதைக் காண்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. சிலர் பெத்தேலிலும்கூட சேவிக்கின்றனர். ஜாணும், அவனோடு அவன் மனைவியும் பிள்ளைகளும்கூட யெகோவாவை உண்மையுடன் சேவிக்கிறார்கள்.
விசனமுண்டாக, 1989-ல் என் அருமையான மனைவியை நான் மரணத்தில் இழந்தேன். முழுநேர ஊழியத்தில் சுறுசுறுப்பாய் வைத்துக்கொள்வது இந்த இழப்பைச் சகிக்க எனக்கு உதவிசெய்திருக்கிறது. என் சகோதரி ஆலிஸும் நானும் இப்போது ஒன்றுசேர்ந்து பயனியர் ஊழியம் செய்வதை அனுபவித்து மகிழ்கிறோம். மறுபடியுமாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதும், இந்த மிக முக்கியமான ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருப்போராக எங்களைக் காண்பதும் எவ்வளவு சிறந்ததாக உள்ளது!
1994-ன் இளவேனிற்காலத்தில், ஏறக்குறைய 25 ஆண்டுகளில் முதல் தடவையாக, நான் பெத்தேலைக் காணச் சென்றேன். 40-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக நான் உடன்சேர்ந்து வேலைசெய்த அநேகரைக் காண்பது எத்தகைய மகிழ்ச்சியாக இருந்தது! 1930-ல் நான் பெத்தேலுக்குச் சென்றபோது, குடும்பத்தில் 250 பேர் மாத்திரமே இருந்தனர், ஆனால் இன்று புருக்லினிலுள்ள பெத்தேல் குடும்பம் 3,500-க்கு மேற்பட்ட எண்ணிக்கையானோரைக் கொண்டுள்ளது!
ஆவிக்குரிய உணவால் ஆதரிக்கப்பட்டது
பெரும்பான்மையான விடியற்காலைகளில் நான், எங்கள் வீட்டுக்கருகிலுள்ள யாக்கிமா நதியோரமாக உலாவி வருகிறேன். 4,300 மீட்டருக்கு மேலாக ஆகாயத்தில் உயர்ந்திருந்து, உறைபனியால் மூடப்பட்டதாய், கம்பீரத் தோற்றமளிக்கும் ரேனியர் மலையை அங்கிருந்து நான் காண முடிகிறது. காட்டு விலங்குகள் ஏராளமாக உள்ளன. சிலசமயங்களில் மான்களை நான் காண்கிறேன், ஒரு தடவை கடம்பை மான் ஒன்றையும்கூட நான் கண்டேன்.
தனிமையாக இருக்கும் இந்த அமைதியான சமயங்கள், யெகோவாவின் அதிசயமான ஏற்பாடுகளின்பேரில் தியானிப்பதற்கு என்னை அனுமதிக்கின்றன. நம்முடைய கடவுளாகிய யெகோவாவை உண்மையுடன் தொடர்ந்து சேவிப்பதற்கு வேண்டிய பலத்திற்காக நான் ஜெபிக்கிறேன். நான் நடந்துகொண்டிருக்கையில் பாடுவதற்கும் விரும்புகிறேன். முக்கியமாய், “யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தல்” என்ற பாட்டைப் பாட விரும்புகிறேன். அதன் வார்த்தைகள் இவ்வாறு சொல்கின்றன: “தேவனே, உம் சித்தம் செய்வோம், உம் வேலை நிறைவேற்றுவோம். எங்கள் பங்கையும் அறிவோம்; உம் இதயம் மகிழ்விப்போம்.”
யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கிற ஒரு வேலையைச் செய்ய நான் தெரிந்துகொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். வாக்களிக்கப்பட்டிருக்கிற பரலோக பலனைப் பெறும் வரையில் இந்த வேலையை நான் தொடர்ந்து செய்ய இயலும்படி ஜெபிக்கிறேன். ‘நிலைக்கிற போஜனத்திற்காகவே உழைப்பதில்’ தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தும்படி இந்த விவரம் மற்றவர்களையும் தூண்டியியக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது.—யோவான் 6:27, தி.மொ.
[பக்கம் 23-ன் படங்கள்]
“கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினந்தோறும் வாசியுங்கள்” என்ற அறிவிப்புக்குறியை எல்வுட் வண்ணம் பூசுகிறார்
[பக்கம் 24-ன் படம்]
கிரான்ட் சூட்டருடனும் ஜாண் கர்ஸனுடனும், 1940-ல் நடந்த மாநாட்டில் ஒலிப்பதிவுசெய்யும் கருவியை இயக்கிக் காட்டுதல்
[பக்கம் 25-ன் படம்]
1944-ல் சத்தியத்தில் இருந்த நாங்கள் முழுநேர ஊழியத்தில் இருந்தோம்: டேவிட், ஆலிஸ், ஜோயல், ஈவா, எல்வுட், ஃப்ரான்ஸெஸ்
[பக்கம் 25-ன் படம்]
உயிருடனிருக்கும் உடன்பிறந்தோர் இடப்புறத்திலிருந்து: ஆலிஸ், ஈவா, ஜோயல், டேவிட், ஃப்ரான்ஸெஸ்