ஜப்பானின் வெந்நீர் ஊற்றுகளுக்கு ஒரு விஜயம்
ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஜப்பான் என்றதுமே எது உங்கள் பொறியில் தட்டுப்படுகிறது? கம்பீரமாக நிற்கும் ஃப்யூஜி மலையா? மின்னல் வேகத்தில் செல்லும் புல்லட் டிரெய்னா? டோக்கியோ மாநகரமா? சூரியன் உதிக்கும் இந்நாட்டில், சுற்றுலா பயணிகளை சுண்டியிழுக்கும் இடங்கள் ஏராளம் உள்ளன. வைத்தியம் பார்ப்பதற்காகவோ ரிலாக்ஸ் செய்வதற்காகவோ ஓன்ஸென்களைத் தேடி, அதாவது ஜப்பானின் வெந்நீர் ஊற்றுகளைத் தேடி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் செல்கிறார்கள். சமீபத்தில் ஓர் ஆண்டில், 14 கோடி மக்கள் ஜப்பானிலுள்ள வெந்நீர் ஊற்று விடுதிகளில் அல்லது ஓட்டல்களில் தங்கினார்கள். இந்த இடங்கள் இந்தளவு பிரசித்தி பெறுவதற்கு காரணம் என்ன?
ஓன்ஸென் சரித்திரம்
பல நூற்றாண்டுகளாகவே, ஜப்பானியர்கள் சூடான நிலத்தடி நீரில் நீராடி மகிழ்ந்திருக்கிறார்கள். வெந்நீர் ஊற்றுகள் பயன்படுத்தப்பட்டதைப் பற்றி பொ.ச. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கிய படைப்புகள் குறிப்பிடுகின்றன. 16-ம் நூற்றாண்டு நிலப் பிரபுவான டாக்கெடா ஷின்ஜென், தாதுப் பொருட்கள் நிறைந்த ஊற்றுகளின் மருத்துவ குணத்தை பிரபலப்படுத்தினார். போர்களுக்கு சென்று வந்த பிறகு, அவரும் அவருடைய சாமுராய் வீரர்களும் வெந்நீர் ஊற்றுகளில் குளித்தனர்; பட்டயக் குத்துக் காயங்கள், எலும்பு முறிவுகள், வெட்டுகள், கன்றிப்போன காயங்கள் ஆகியவற்றை சுகப்படுத்த அவற்றில் குளித்தனர். போருக்குச் சென்ற ஆண்கள், டென்ஷனிலிருந்து விடுபட்டு அடுத்த போருக்கு தங்களை ஆயத்தப்படுத்துவதற்கும் இந்த ஊற்று நீர் பயனுள்ளதாக இருந்தது.
ஆனால், அந்த வீரர்கள் அவ்வாறு குளிப்பது ஆபத்தாக இருந்தது, ஏனெனில் திடீர் தாக்குதலின்போது அவர்களிடம் எந்த ஆயுதமும் கையில் இருக்காது. இப்பிரச்சினையை சமாளிக்க, தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்த ஊற்றுகளையே டாக்கெடா ஷின்ஜென் பயன்படுத்தினார்; பிற்பாடு அவை ஷின்ஜெனின் மறைவான குளியலிடங்கள் என அழைக்கப்பட்டன. அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், சுமோ மல்யுத்த வீரர்கள், பேஸ்பால் ஆட்டக்காரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் இந்த ஊற்றுகளைத்தான் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள்; விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு தேவையான புதுத்தெம்பை அளிக்கும் சக்தி அந்தத் தண்ணீருக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையில் அவ்வாறு குளிக்கிறார்கள்.
ஒப்பற்ற பூகோள அம்சங்கள்
ஜப்பானின் பூகோள அம்சங்களே முக்கியமாக இந்த வெந்நீர் ஊற்றுகளுக்கு காரணமாக அமைகின்றன. அங்கு பரந்து கிடக்கும் தீவுக்கூட்டத்தின் மீது குமிழ்கள் பதித்தாற் போன்று சுமார் 245 எரிமலைகள் உள்ளன; அவற்றில் 86 எரிமலைகள் பூமிக்கடியில் குமுறிக்கொண்டிருக்கும் எரிமலைகளே. பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த எரிமலைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. அங்கே என்னதான் நடக்கிறது?
புவியோட்டின் பாறைப் பாளங்கள் அல்லது தட்டுகள் இணையும் பகுதியில் ஜப்பான் தீவுகள் அமைந்துள்ளன. இந்த இராட்சத தட்டுகள் இணையும் பகுதிகளில்தான் மாக்மா, அதாவது பாறைக் குழம்பு உருவாகுமென நம்பப்படுகிறது. அதற்கு நேர் மேலாக அமைந்திருப்பது எரிமலைகள்; இவையே பாறைக் குழம்புகள் வெளியே வரும் திறப்புகளாகும். பூமிக்கு அடியில் உள்ள இந்த உஷ்ணப்பகுதியே நிலத்தடி ஊற்றுகள் சூடாவதற்கு காரணமாகவும் அமைகின்றன. பாறைக் குழம்புகளோடு சேர்ந்து இந்த நிலத்தடிநீர் வினைபுரிவதால் வெப்பமடைகிறது, தாதுப் பொருட்களையும் உறிஞ்சிக்கொள்கிறது; இவ்வாறு ஓன்ஸென்கள் தோன்றுவதற்கு ஏற்ற நிலை உருவாகிறது. ஜப்பானின் வெந்நீர் ஊற்றுகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுவது சரியே: “ஜப்பானைப் போல வேறெந்த நாட்டிற்கும் இயற்கையான வெந்நீர் ஊற்றுகள் கிடைக்க கொடுத்து வைக்கவில்லை.” சொல்லப்போனால், அங்கு 2,839 வெந்நீர் ஊற்றுகள் இருப்பதாக 1998-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு பட்டியலிடுகிறது.
ஜப்பானிலுள்ள வெந்நீர் ஊற்றுகள், பல வித்தியாசமான விதங்களிலும், அளவுகளிலும், அமைப்புகளிலும், நிறங்களிலும் உள்ளன. இந்த ஊற்றுகளை அவற்றின் மருத்துவ குணத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்காக ஜப்பானிய சூழியல் நிறுவனம் அவற்றை ஒன்பது வேதியியல் வகைகளாக பிரித்திருக்கிறது. வெந்நீர் ஊற்றுகள் ஒவ்வொன்றுக்கும் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் அவற்றின் தன்மையைக் குறிக்கின்றன. உதாரணமாக, இரும்புச் சத்து நிறைந்த ஊற்றுகள் உங்களுடைய டவலை மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாக மாற்றலாம். ஆகவே “சிவப்பு” என்ற வார்த்தை அவற்றின் பெயர்களோடு சேர்க்கப்பட்டுள்ளது. உப்பு அதிகமாக சேர்ந்துள்ள ஊற்றுகள் உப்புநீர்க் குளியல்கள் என அழைக்கப்படுகின்றன. விலாங்கு மீன் குளியலில் மூழ்கி எழுந்தால் எப்படியிருக்கும்? உண்மைதான், இதைக் கேட்டாலே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பயப்படாதீர்கள். இந்த ஊற்றுகளில் நிஜமாகவே விலாங்கு மீன்கள் காணப்படுவதில்லை. இந்த ஊற்றுகளில் குளித்துவிட்டு வெளியே வருபவர்களுடைய சருமம் விலாங்கு மீனைப் போல வழவழப்பாக ஆகிவிடுவதால்தான் அந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது; அந்த நீரிலுள்ள காரத்தன்மையே இதற்கு காரணம்.
அழகான சுற்றுச்சூழலின் நடுவே
மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், கடற்கரை, சமவெளிகள் என அழகான சுற்றுச்சூழலின் நடுவே அமைந்திருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பதே ஒரு தனி சுகம், அதை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ஜப்பானிலுள்ள வெந்நீர் ஊற்றுகளில் பலவும் திறந்தவெளிகளில் அமைந்திருப்பதால், அவற்றில் குளிப்போர் இயற்கையின் அழகை நன்றாக கண்டுகளிக்க முடிகிறது. இந்தத் “திறந்தவெளி அறை”க்கு கூரையாக அமைந்திருப்பது நீல வானம், சுற்றிலும் சுவர்களாக நிற்பது மலைகள். காலையில் பறவைப் பாடகர் குழு பாடும் இன்னிசையை அல்லது நளினமாய் தவழ்ந்து செல்லும் ஓடையின் இனிய கீதத்தை இந்த அறையில் கேட்க முடிகிறது. உள்ளபடி சொன்னால், வெந்நீர் ஊற்றுகளை சுற்றிலும் அமைந்துள்ள கண்கவர் காட்சிகளை வர்ணிக்க வர்ணிக்க அதற்கு முடிவே இருக்காது.
அருவியில் குளிக்க உங்களுக்கு விருப்பமா? அப்படியானால் குளித்துத்தான் பாருங்களேன். அருவியிலிருந்து தடதடவென்று கொட்டும் தண்ணீர் உடலை மசாஜ் செய்து விடுகிறது, ஜப்பானிய பாணியில் குளிக்கும் அனுபவத்தையும் தருகிறது. குகைகளில் காணப்படும் வெந்நீர் ஊற்றுகளிலும் குளிக்கலாம்; அங்குள்ள ஆழமான பாறை இடுக்குகளிலிருந்து தாதுப் பொருட்கள் கலந்த நீர் ஊற்றெடுக்கிறது. சில ஊற்றுகள் சூரிய அஸ்தமனத்தின் கச்சிதமான காட்சியை கண்டுகளிக்கும் வண்ணம் கடற்கரையில் அமைந்துள்ளன, மற்ற ஊற்றுகளோ ஆற்றங்கரைகளில் அமைந்துள்ளன.
நீங்கள் எந்த இடத்து வெந்நீர் ஊற்றை தேர்ந்தெடுத்தாலும் சரி அல்லது எந்த வகை வெந்நீர் ஊற்றை தேர்ந்தெடுத்தாலும் சரி, ஒரு விஷயம் உறுதி: எரிமலையால் சூடாக்கப்பட்ட வெந்நீர் ஊற்றுகளில் குளித்தால் உங்களுடைய அன்றாட டென்ஷனிலிருந்து கொஞ்ச நேரமாவது விடுபட்டிருக்க முடியும். அதில் குளித்து வெளியே வந்ததும் உண்மையிலேயே புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஒருவேளை ஜப்பானிய வாழ்க்கை பாணியோடு கொஞ்சம் ஒன்றிவிட்டதாகவும் உணருவீர்கள். ஆகவே, ஜப்பானுக்கு ஒரு ‘ட்ரிப் அடிக்க’ சந்தர்ப்பம் கிடைத்தால் தயவுசெய்து ஓன்ஸென்களில்—வெந்நீர் ஊற்றுகளில்—நீராடி மகிழத் தவறாதீர்கள்! (g04 01/08)
[பக்கம் 16-ன் பெட்டி/படம்]
ஓன்ஸென்களும் ஷோகன்களும்
எடோ காலத்தின்போது (1603-1867) தாதுப் பொருட்கள் நிறைந்த நீருக்கு அதிக மவுசு இருந்தது. ஷோகன்கள் என அழைக்கப்பட்ட ஜப்பானிய இராணுவ சர்வாதிகாரிகள், 110 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து இந்த நீரை கொண்டு வர ஏற்பாடு செய்தார்கள். அதாவது, மர பீப்பாய்களில் இந்த நீரை நிரப்பி, அவற்றை சுமப்பதற்கு வசதியாக நீண்ட தடிகளைக் கட்டி ஆடாமியிலிருந்து எடோ (டோக்கியோ) வரை ஆட்கள் அவற்றை தூக்கி சென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு அணியாக சுமந்து சென்றார்கள். செல்லும் வழியில் குறிப்பிட்ட தூரம் வந்ததும் ஒரு அணி அடுத்த அணியிடம் அந்தப் பீப்பாயை ஒப்படைத்தது. இவ்வாறு மாறி மாறி ஒவ்வொரு அணியாக பெருமதிப்புள்ள அந்த நீரை கொண்டு சேர்த்தார்கள். இந்த விதத்தில், தாதுப் பொருட்கள் நிறைந்த நீர் துரிதமாக கொண்டு செல்லப்பட்டது. ஊற்றிலிருந்து நேரடியாகவே சேகரிக்கப்படுகையில் அந்த நீர் கிட்டத்தட்ட கொதிநிலையில் இருந்தது. உடல் களைக்க கஷ்டப்பட்டு 15 மணிநேரம் பயணம் செய்வதற்குள் இந்த நீரின் சூடு தணிந்து விட்டது; ஆக, ஷோகன் குளிப்பதற்கு ஏற்றளவு நீர் வெதுவெதுப்பாக இருந்ததால் அவர் தன்னுடைய எடோ மாளிகையில் குளித்து இளமைத் துடிப்பை பெற்றார்!
[படத்திற்கான நன்றி]
A Chronological Table of the History of Atami
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
ஓன்ஸென் குளியல் முறைகள்
முதலில் வெந்நீர் ஊற்றுகளுக்கு வெளியே குளிப்பது பொதுவான பழக்கம்; உடம்புக்கு சோப்பு போட்டு தேய்த்து நிறைய தண்ணீர் ஊற்றி குளிப்பார்கள்; அதற்கு பின்னரே தாதுப் பொருட்கள் நிறைந்த தெளிந்த நீருக்குள் மூழ்கி குளிப்பார்கள்.a ஆனால் நீருக்குள் மெதுமெதுவாக மூழ்குவதே சிறந்தது, ஏனென்றால் சில ஊற்றுகளின் நீர் உடல் பொறுக்காத அளவுக்கு அதிக சூடாக இருக்கலாம். குளித்து முடித்த பின், உடனடியாக வேறு தண்ணீரில் உடம்பை கழுவாதீர்கள். அப்படி செய்தால் தாதுப் பொருட்கள் எல்லாம் போய்விடும். அதனால், உலர்ந்த டவலை வைத்து வெறுமனே துடைத்துவிடுங்கள். உடலுக்குள் செல்லும் இந்தத் தாதுப் பொருட்கள் தோலை மிருதுவாக்கும் என நம்பப்படுகிறது.
[அடிக்குறிப்பு]
a ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் குளிப்பதற்கு தனித்தனி இடங்கள் இருப்பது ஓன்ஸெனின் மற்றொரு சிறப்பம்சம்.
[பக்கம் 19-ன் படங்கள்]
வெந்நீர் ஊற்றுகளில் வருடம் முழுக்க குளித்து மகிழலாம்
[படங்களுக்கான நன்றி]
இலையுதிர்காலம்: Yubara, Okayama Prefecture; குளிர்காலம்: The Mainichi Newspapers
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
Hakkoda Onsen Yusen