உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 7/22 பக். 21-23
  • அம்மாவுக்கு ஏன் இந்த தீராத வியாதி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அம்மாவுக்கு ஏன் இந்த தீராத வியாதி?
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • என் பெற்றோருக்கு மட்டும் ஏன் வியாதி வருகிறது?
  • வேதனையூட்டும் உணர்வுகள்
  • நீங்கள் என்ன செய்யலாம்
  • ஆவிக்குரிய சமநிலையை காத்துக்கொள்ளுங்கள்
  • என் பெற்றோர் குறைவுபடுகையில்?
    விழித்தெழு!—1995
  • அம்மாவின்/அப்பாவின் மரணத்தை எப்படிச் சமாளிப்பேன்?
    விழித்தெழு!—2010
  • என் திருமணத்தை பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வது?
    விழித்தெழு!—1998
  • அப்பா ஏன் சாக வேண்டும்?
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 7/22 பக். 21-23

இளைஞர் கேட்கின்றனர் . . .

அம்மாவுக்கு ஏன் இந்த தீராத வியாதி?

அல் என்ற வாலிபரின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்தார். a உயிர்த்தெழுதல் என்ற பைபிளின் வாக்குறுதியை அல் அறிந்திருந்ததால் இந்த பேரிழப்பை எப்படியோ சமாளித்துக்கொண்டார். ஆனால், தன் தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று பரிசோதனையில் தெரிய வந்தபோது, மீண்டும் கவலையும் வேதனையும் அவரை ஆட்டிப்படைத்தன. தன் தாயையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அல்-லை மேலும் கலக்கமடைய செய்தது. “என் அம்மாவுக்கு மட்டும் ஏன் வியாதி வர வேண்டும்?” என்று அவர் தன்னையே கவலையுடன் நொந்துகொண்டார்.

டாக்டர் லெனார்ட் ஃபெல்டர் கருத்தின்படி “அமெரிக்கர்களில் ஆறு கோடிக்கும் அதிகமானோர் வியாதிப்பட்டோரையும், குறைபாடுள்ளோரையும் கவனித்து வருகின்றனர்.” அவர் தொடர்ந்து கூறுகிறார்: “எந்த நாளை எடுத்துக்கொண்டாலும், நான்கில் ஒரு அமெரிக்கன் தன்னுடைய வியாதிப்பட்ட பெற்றோரின் தேவைகளை பூர்த்திசெய்ய கூடுதலாக வேலைசெய்கிறான்.” அன்பானவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் மாத்திரம் அல்ல அநேகர் இருக்கின்றனர் என்பதை நினைவில் வையுங்கள். எனினும் உங்கள் அன்பானவர் வியாதிப்பட்டிருப்பதை பார்க்கும் போது பயவுணர்ச்சியும் கவலையும் உங்களை உடனே கவ்விக் கொள்ளும். இப்படிப்பட்ட சூழ்நிலைமையை எவ்வாறு சமாளிப்பது?

என் பெற்றோருக்கு மட்டும் ஏன் வியாதி வருகிறது?

“மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம்” என்று நீதிமொழிகள் 15:13 சொல்கிறது. உங்கள் பெற்றோர் வியாதியாயிருக்கையில் கட்டுக்கடங்கா வேதனைகளில் தவிப்பது இயல்பே. உதாரணமாக, உங்களுடைய பெற்றோரின் நிலைக்கு நீங்கள்தான் காரணம் என்பதாக நினைக்கக்கூடும். ஒருவேளை முன்பு உங்கள் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் அல்லது ஒருசில சூடான வாக்குவாதங்கள் இருந்திருக்கலாம். இப்போது உங்கள் பெற்றோர் வியாதிபட்டவுடன், ஏதோவோரு விதத்தில் அதற்கு நீங்கள்தான் காரணம் என்ற குற்ற உணர்வு எழலாம். குடும்ப சண்டைகளால் அழுத்தங்கள் வரலாம் ஆனால், பெரும்பாலும் வியாதி வருவதில்லை. அன்பான கிறிஸ்தவ குடும்பங்களில்கூட பிரச்சினைகளும், சிறிய கருத்து வேறுபாடுகளும் வரக்கூடும். ஆகவே நீங்கள்தான் பெற்றோரின் வியாதிக்கு காரணம் என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். குற்றவுணர்வு என்ற பாரமான கல்லை உங்கள் தலையில் நீங்களே தூக்கி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நம் முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் செய்த பாவமே, உங்கள் அம்மா அல்லது அப்பா வியாதியாயிருப்பதற்கான அடிப்படை காரணம். (ரோமர் 5:12) அந்த முதல் பாவத்தின் காரணமாகவே எல்லா சிருஷ்டியும் “இதுவரைக்கும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.”​—⁠ரோமர் 8:⁠22.

வேதனையூட்டும் உணர்வுகள்

ஒருவேளை கவலையும் வருத்தமும் மாறி மாறி உங்களை அலைக்கழிக்கலாம். டெரியின் அம்மா, லியூபஸ் என்ற பயங்கரமான தோல் அழிநோயால் பாதிக்கப்பட்டார், அதனால் ஏற்படும் விளைவுகள் கொடுமையானவை. டெரி சொல்கிறார்: “நான் எப்போதெல்லாம் வெளியில் செல்கிறேனோ அப்போதெல்லாம் வீட்டில் அம்மா எப்படி இருக்கிறார்களோ என்று ரொம்ப கவலைப்படுவேன். இதனால் என்னால் எதிலும் கவனம் செலுத்தவே முடியவில்லை. ஆனாலும், எங்கே என் கவலை அம்மாவை தாக்கிவிடுமோ என பயந்து பயந்து எல்லா கவலையையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறேன்.”

“மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்” என்று நீதிமொழிகள் 12:25 சொல்கிறது. இந்த நிலையில் இளைஞர்கள் மனச்சோர்வு அடைவது இயற்கை. தன் தாயால் சின்ன சின்ன வேலைகள்கூட செய்ய முடியாததை பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது என்று டெரி சொல்கிறாள். இப்படிப்பட்ட அழுத்தத்தோடேகூட இளைஞர்கள் முக்கியமாக பெண்கள், கூடுதலான பொறுப்புகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பதே உண்மை. “சிறுபெண்கள் மேல் குடும்ப பாரங்கள் சுமத்தப்படுகின்றன; வீட்டு வேலை, தம்பி தங்கைகளை பராமரித்தல் போன்ற அவர்களது சக்திக்கும் மீறிய பாரங்கள் சுமத்தப்படுவதால் சமுதாயத்தில் அவர்களது முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படுகிறது” என்கிறார் பேராசிரியர் புரூஸ் காம்பஸ். இதன் விளைவு தனிமையில், சோகத்தில் மூழ்கி சோக இசையை சில இளைஞர்கள் கேட்க ஆரம்பித்துவிடுகின்றனர்.​—⁠நீதிமொழிகள் 18:1.

பெற்றோரின் மரணத்தை பற்றிய பயமும் ஒருவருக்கு ஏற்படலாம். டெரி அவளுடைய அம்மாவுக்கு ஒரே பிள்ளை, அவளது அம்மா, தனிமரமாக்கப்பட்டவர். தன் அம்மா மருத்துவமனை சென்ற போதெல்லாம் அவர் திரும்பி வருவாரோ வரமாட்டாரோ என்ற பயத்தில் எப்பொழுதும் அழுதாள். “இருந்தது நாங்கள் இருவர் மட்டுமே, நான் என்னுடைய சிறந்த நண்பரை இழக்க விரும்பவில்லை” என்று டெரி சொல்கிறாள். இதே போன்று மார்த்தா என்ற ஒரு இளம் பெண்ணும் இவ்வாறு ஒத்துக்கொள்கிறாள்: “எனக்கு வயது 18. ஆனாலும், என் பெற்றோரை இழந்துவிடுவேனோ என்று நினைத்து பயப்படுகிறேன். அப்படிப்பட்ட தனிமையின் கொடுமையை நினைக்கும் போதே குலைநடுங்குகிறது.” பெற்றோரின் வியாதியால் பிள்ளைகள் பொதுவாக தூக்கமின்மை, பயங்கர கனவுகள், சாப்பிடுவதில் பிரச்சனை போன்ற பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

நீங்கள் என்ன செய்யலாம்

பிரச்சினைகள் ஒருவேளை இப்போது கடினமாக தோன்றினாலும், உங்களால் நிச்சயம் சமாளிக்க முடியும்! உங்கள் பயத்தையும், கவலையையும் பற்றி உங்கள் பெற்றோருடன் பேசுவதன் மூலம் அதை துவங்குங்கள். உங்கள் பெற்றோரின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது? அவர் குணப்படுவதற்கு என்ன சாத்தியங்கள் இருக்கின்றன? ஒருவேளை அவர் குணமாகவில்லை என்றால் உங்களுக்காக என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன? பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையிலும் இதே போன்ற நிலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? போன்ற விஷயங்களை அவர்களுடன் பேசுங்கள். ஒருவேளை உங்கள் பெற்றோர் இவற்றைப் பற்றி உங்களுடன் பேச சங்கடப்பட்டால், நீங்கள் பொறுமையாயும், மரியாதையாயும் அவர்களிடம் கேளுங்கள். அப்பொழுது தங்களுடைய ஆதரவையும், உதவியையும் கொடுக்க அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்கள்.

உங்களுக்கு அவர்களிடம் அக்கறையிருக்கிறது என்பதையும் வார்த்தைகளில் காட்டுங்கள். அல் தன்னுடைய அம்மாவின் இறுதி மூச்சு வரை அவ்வாறு செய்யாததை நினைவுகூருகிறார். அல் சொல்கிறார்: “நா எங்க அம்மாமேல உயிரே வெச்சிருந்தேன். ஆனா எந்தளவு நேசிச்சேன்னு கடைசி வரைக்கும் அவங்ககிட்ட சொல்லவே இல்ல. நா இத சொல்லுவேன்னு அவங்க எதிர்பாத்ததும் எனக்கு தெரியும், ஆனா நானொரு வயசுபையனா இருந்ததால இப்படிப்பட்ட உணர்வுகள அவங்ககிட்ட சொல்ல ரொம்ப சங்கடமா இருந்தது. அவங்க இறந்த பிறகு, சொல்ல வாய்ப்பு கெடச்சும், அத பயன்படுத்தலங்கர குற்றவுணர்வு என்ன ஒவ்வொரு நிமிஷமும் கொல்லுது. எனக்கு அவங்கதா எல்லாமேன்னு இருந்தத நெனைக்க நெனைக்க என்னோட துக்கம் இன்னும் ஜாஸ்தியாகுது.” ஆகவே நீங்கள் உங்கள் பெற்றோரை எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை உங்களுக்குள்ளேயே பூட்டி வைக்காதீர்கள்.

முடிந்தால் உங்கள் பெற்றோருக்கு இருக்கும் வியாதியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். (நீதிமொழிகள் 18:15) ஒருவேளை இதற்கு உங்கள் குடும்ப டாக்டர் உதவக்கூடும். அதைப் பற்றி நன்கு தெரிந்திருப்பது அவர்களிடம் நீங்கள் இரக்கமாயும், பொறுமையாயும், புரிந்துகொள்ளுதலுடனும் நடந்துகொள்ள உதவும். அப்பொழுது ஒருவேளை எதிர்காலத்தில் உங்கள் பெற்றோருக்கு உடல் ரீதியாக தழும்புகள், முடி கொட்டுதல் அல்லது சோர்வு போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால் அதை நீங்கள் கிரகித்துக்கொள்ள உதவிசெய்யும்.

உங்கள் பெற்றோர் மருத்துவமனையில் இருக்கிறாரா? அப்படியானால் உங்களுடைய சந்திப்பு உற்சாகமூட்டுவதாகவும், இன்பமானதாகவும் இருக்கட்டும். உங்கள் உரையாடல் எந்தளவுக்கு சுவாரஸ்யமாயிருக்க முடியுமோ அந்தளவுக்கு இருக்கட்டும். உங்கள் பள்ளிப்பாடத்தைப் பற்றியும், தேவராஜ்ய நடவடிக்கைகளைப் பற்றியும் பேசுங்கள். (நீதிமொழிகள் 25:25-ஐ ஒப்பிடுக.) உங்கள் பெற்றோருக்கு தேவையான உணவையும் மற்றவைகளையும் நீங்கள் கொடுக்கும்படி எதிர்பார்க்கப்பட்டால், அதை முனங்கிக்கொண்டே செய்யாமல் அவற்றை முழுமனதுடன் செய்யுங்கள். உங்கள் தோற்றம் சுத்தமாகவும் கண்ணியமாகவும் இருந்தால், அது உங்கள் பெற்றோரை மகிழ்விப்பது மட்டுமின்றி அங்கிருக்கும் மருத்துவர்களுக்கும் அங்கு வேலை பார்பவர்களுக்கும் நல்ல அபிப்பிராயத்தை கொடுக்கும். இது உங்கள் பெற்றோருக்கு கொடுக்கப்படும் கவனிப்பின் தரத்தை உயர்த்தும். b

வீட்டில் உங்கள் பெற்றோர் குணமடைந்து வருகிறாரா? அவருடைய நலனுக்காக உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். வீட்டுவேலைகளை மனமுவந்து செய்யுங்கள். ‘சம்பூரணமாய், கடிந்து கொல்லாமல்’ உங்களையே நீங்கள் கொடுப்பதன் மூலம் யெகோவாவை பின்பற்ற முயலுங்கள். (யாக்கோபு 1:5) குறைகூறாத, நம்பிக்கையான, சந்தோஷமான மனநிலையை காட்ட முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கு பள்ளிப்பாடங்கள் இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்களுக்கு கல்வியும் முக்கியம் என்பதால் அதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். முடிந்தால் ஓய்வெடுப்பதற்கும், பொழுதுபோக்கிற்கும் நேரத்தை செலவிடுங்கள். (பிரசங்கி 4:6) இது உங்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதோடு உங்கள் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருக்கவும் உதவும். கடைசியில், நீங்கள் தனிமையை தவிர்த்து, உடன் கிறிஸ்தவர்களுடைய ஆதரவை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். (கலாத்தியர் 6:2) டெரி சொல்கிறாள்: “சபையே என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டது. அதனால் மூப்பர்கள் என்னுடன் பேசவும் என்னை உற்சாகப்படுத்தவும் எப்பொழுதும் தயாராயிருந்தார்கள். இதை என்னால் மறக்கவே முடியாது.”

ஆவிக்குரிய சமநிலையை காத்துக்கொள்ளுங்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக மிக முக்கியமானது உங்கள் ஆவிக்குரிய சமநிலையை காத்துக்கொள்வது. பைபிள் படிப்பது, கூட்டங்களுக்கு போவது, பிரசங்கிப்பது போன்ற ஆவிக்குரிய காரியங்களில் உங்களை எப்பொழுதும் பிஸியாக வைத்துக்கொள்ளுங்கள். (1 கொரிந்தியர் 15:58) கோடைகாலத்தின்போது துணை பயனியர் செய்வதன் மூலமாக பிரசங்க வேலையில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்தாள் டெரி. அவள் சொல்கிறாள்: “அம்மா கூட்டங்களுக்கு தயாரிக்கவும், அதில் ஆஜராயிருக்கவும் என்னை எப்பொழுதும் உற்சாகப்படுத்தினார். அது எங்கள் இருவருக்கும் பிரயோஜனமாயிருந்தது. அவர் விரும்பியது போல் அவரால் எல்லா கூட்டங்களுக்கும் போகமுடியாததால் கற்றுக்கொண்ட காரியங்களை பிறகு அவருக்கு சொல்வதற்காக கூட்டங்களில் எப்போதையும்விட அதிக கவனமாயிருந்தேன். கூட்டங்களுக்கு அவரால் வரமுடியாத போதெல்லாம் ஆவிக்குரிய உணவிற்காக என்மீது சார்ந்திருந்தார்.”

“பெற்றோர் வியாதிப்பட்டிருப்பதால் வரும் வேதனையின் மத்தியிலும் பிள்ளைகள் எவ்வாறு சமாளித்து முன்னேருகிறார்கள்” என்பதை கவனித்த ஒரு சமூகசேவகரைப் பற்றி தி நியூ யார்க் டைம்ஸ்-⁠ன் ஒரு கட்டுரை தொகுத்தளித்தது. அவர் சொல்கிறார்: “பிள்ளைகள் சில திறமைகளை வளர்த்துக்கொள்கிறார்கள், அப்படிப்பட்ட திறமைகள் அவர்களுக்கு இருந்தன என்பது அவர்களுக்கே தெரியாது. அவர்கள் இந்த மிகப் பெரிய சவாலை சமாளித்துவிட்டார்களேயானால் பிறகு வாழ்க்கையில் எதையும் சமாளித்துவிட முடியும்.”

இப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைமையை உங்களாலும் சமாளிக்க முடியும். உதாரணமாக டெரியின் தாய் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் அளவுக்கு குணமடைந்துவிட்டார். ஒருவேளை உங்கள் பெற்றோரும் விரைவில் நலம் பெறுவார். அதேசமயத்தில், உங்கள் சிறந்த நண்பராகிய யெகோவாவின் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு இருப்பதை மறந்துவிடாதீர்கள். அவர் ‘ஜெபத்தை கேட்கிறவர்’ ஆகையால் உங்களுடைய உதவிக்கான வேண்டுதல்களுக்கு நிச்சயம் செவிசாய்ப்பார். (சங்கீதம் 65:2) இந்த சவாலை சமாளிக்க யெகோவா உங்களுக்கும், உங்கள் தேவபக்தியுள்ள பெற்றோருக்கும் மகத்துவமுள்ள வல்லமையை கொடுப்பார்.​—⁠2 கொரிந்தியர் 4:7; சங்கீதம் 41:⁠3.

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b மார்ச் 8, 1991, விழித்தெழு! (ஆங்கிலம்) “நோயாளியை சந்திப்பது​—⁠எப்படி உதவுவது” என்ற கட்டுரையில் அநேக நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

[பக்கம் 22-ன் படம்]

“நான் எப்போதெல்லாம் வெளியில் செல்கிறேனோ அப்போதெல்லாம் வீட்டில் அம்மா எப்படி இருக்கிறார்களோ என்று ரொம்ப கவலைப்படுவேன்”

[பக்கம் 23-ன் படம்]

உங்கள் பெற்றோருக்கு இருக்கும் வியாதியை பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டால் அவர்களை நல்லபடியாக கவனித்துக்கொள்ள முடியும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்