இளைஞர் கேட்கின்றனர் . . .
என் திருமணத்தை பெற்றோர் எதிர்த்தால் என்ன செய்வது?
லாகிஷாவும் அவள் காதலனும் திருமணம் செய்துகொள்ள விரும்புகின்றனர், ஆனால் அவள் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. “இந்த வருடம் எனக்கு 19 வயதாகும், ஆனால் 21 வயதாகும்வரை காத்திருக்க வேண்டுமென அம்மா வற்புறுத்துகிறார்” என்று லாகிஷா கூறுகிறாள்.
திருமணம் செய்துகொள்ள நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களோடு சேர்ந்து உங்கள் பெற்றோரும் சந்தோஷப்பட வேண்டுமென நீங்கள் எதிர்பார்ப்பது இயல்பானதே. நீங்கள் தெரிவு செய்திருக்கும் ஒரு துணையை உங்கள் பெற்றோர் அங்கீகரிக்கவில்லை என்றால், உண்மையில் அதிக கஷ்டமாக இருக்கும். அச்சமயத்தில் நீங்கள் என்ன செய்யவேண்டும்? அவர்களுடைய விருப்பங்களை எல்லாம் அசட்டை செய்துவிட்டு உங்கள் திருமண ஏற்பாடுகளை தொடருவீர்களா? a
நீங்கள் வயது வந்தவராகவும் உங்கள் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமலேயே சட்டப்படி திருமணம் செய்துகொள்ள முடிந்தவராகவும் இருந்தால், இது ஒரு சோதனையாக இருக்கலாம். என்றபோதிலும், ஒருவருடைய பெற்றோருக்கு மதிப்பும் மரியாதையும் காட்டுவதற்கு எந்த வயது வரம்பையும் பைபிள் வைக்கிறதில்லை. (நீதிமொழிகள் 1:8) அவர்களுடைய உணர்ச்சிகளை நீங்கள் அசட்டை செய்தால், அவர்களோடு உள்ள உங்கள் உறவு நிரந்தரமாக பாதிக்கப்படலாம். அதுமட்டுமல்ல, திருமணத்தை உங்கள் பெற்றோர் எதிர்க்கிறார்கள் என்றால், அதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதற்கு சாத்தியம் இருக்கலாம். அநேக சமயங்களில் இதுவே உண்மையாக இருக்கிறது.
எந்த வயது மிக இளம் வயது?
உதாரணமாக, திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு உங்களுக்கு இன்னும் வயசாகவில்லை என்று உங்கள் பெற்றோர் கூறுகிறார்களா? உண்மையில், திருமணத்திற்கு எந்தக் குறைந்தபட்ச வயதையும் பைபிள் குறிப்பிடுவதில்லை. ஆனாலும் திருமணத்திற்குமுன் ஒருவர் ‘கன்னிகைப்பருவம் கடந்தவராக,’ அதாவது பருவமடைந்த வயதைத் தொடர்ந்து வரும் பாலின ஆசைகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் வருடங்களைக் கடந்தவராக இருக்கவேண்டும் என சிபாரிசு செய்கிறது. (1 கொரிந்தியர் 7:36) ஏன்? ஏனென்றால், திருமண வாழ்க்கையை நல்லவிதமாக நடத்த தேவைப்படும் உணர்ச்சிப்பூர்வ முதிர்ச்சி, தன்னடக்கம், ஆவிக்குரிய குணங்கள் ஆகியவை அப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கும் காலத்தில் அப்படிப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 13:11-ஐ ஒப்பிடுக; கலாத்தியர் 5:22, 23.
இருபது வயதான டேல் திருமணம் செய்ய நினைத்தபோது, அவன் பெற்றோர் எதிர்த்ததனால் மிகவும் கலக்கமடைந்தான். அவன் கூறுகிறான்: “நான் ரொம்ப சின்ன பையன் என்றும் அனுபவம் போதாது என்றும் அவர்கள் கூறினார்கள். நாங்கள் திருமணத்திற்கு தயார் எனவும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளலாம் எனவும் நான் நினைத்தேன்; ஆனால், நான் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு செயல்படவில்லை என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள என் பெற்றோர் விரும்பினர். அநேக கேள்விகளை என்னிடம் கேட்டனர். அன்றாட தீர்மானங்கள், பண விஷயங்கள், ஒரு குடும்பத்தின் பொருளாதார, உணர்ச்சிப்பூர்வ மற்றும் ஆவிக்குரிய தேவைகளை பூர்த்திசெய்வதன் மெய்ம்மையை கையாள தயாராக இருந்தேனா? ஒரு பெற்றோராக ஆவதற்கு தயாராக இருந்தேனா? பேச்சுத்தொடர்புகொள்ள உண்மையிலேயே கற்றுக்கொண்டிருந்தேனா? ஒரு துணையின் தேவைகளை உண்மையிலேயே புரிந்துகொண்டேனா? மற்றொரு வயது வந்தவரை நான் கவனித்துக்கொள்ள ஆரம்பிப்பதற்குமுன், வயது வந்தவனாக என்னையே நான் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள்.
“நாங்கள் காத்திருக்க விரும்பாதபோதிலும், முதிர்ச்சியடைவதற்கு அவகாசம் கிடைக்கும்படி எங்கள் திருமணத்தை சிறிதுகாலம் ஒத்திப்போட்டோம். கடைசியில் திருமணம் செய்துகொண்டபோது, நாங்கள் இருவருமே ஒரு மேம்பட்ட ஆதாரத்துடனும் இல்லறத்தை நல்லறமாக்க தேவைப்படும் குணங்களும் திறமைகளும் உள்ளவர்களாகவும் எங்கள் இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தோம்.”
மத வேறுபாடுகள் காரணமாக இருந்தால்
டெரி, தான் தெரிவு செய்திருந்த மதத்தை ஏற்காத ஒரு ஆளிடம் காதலுணர்ச்சியை வளர்த்துக்கொண்டபோது, திருட்டுத்தனமாக அவனை காதலித்தாள். திருமணம் செய்துகொள்ள அவர்கள் திட்டமிட்டதை அறிவித்தபோது, தன் அம்மா திருமணத்தை எதிர்த்ததைக் கண்டு டெரி வெகுவாக கலக்கமுற்றாள். “அம்மா என்னைப் பற்றி தவறாக நினைக்க எனக்கு விருப்பமில்லை. அம்மா, மகள் என்ற அந்த உறவு என்றும் நீடிக்கணும் என்றே நான் விரும்புகிறேன்” என டெரி புலம்பினாள்.
ஆனால் அந்த உறவுக்கு உண்மையில் இடையூறாக இருந்தது யார்? பிரச்சினை ஏற்படுத்துகிறவராக அல்லது நியாயமற்றவராக டெரியின் தாய் இருந்தாரா? இல்லவே இல்லை. மாறாக, “கர்த்தருக்குட்பட்ட” ஒருவரையே மணந்துகொள்ள வேண்டும் என்ற கிறிஸ்தவர்களுக்கான பைபிளின் அறிவுரையை அவர் வெறுமனே வலியுறுத்தினார். (1 கொரிந்தியர் 7:39) உண்மையில், “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று பைபிள் கட்டளையிடுகிறது. (2 கொரிந்தியர் 6:14, 15) அது ஏன்?
ஒரு காரணம் என்னவென்றால், சந்தோஷமான வெற்றிகரமான திருமணத்திற்கு மத பொருத்தம் மிகவும் முக்கியமான ஒரு காரணக்கூறு. கலப்புமத திருமணங்களில் பொதுவாக இருக்கும் பிரச்சினைகளும் மன அழுத்தங்களும், அடிக்கடி மணவிலக்கில்தான் போய் முடிவடைகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். என்றாலும் அதைவிட முக்கியமான காரியம் என்னவென்றால், ஒருவர் தன்னுடைய மதத்தை விட்டுக்கொடுக்கும்படி—அல்லது அதை முழுமையாகவே விட்டுவிடும்படி—நிர்ப்பந்தம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது என்பதே. விசுவாசத்தில் இல்லாத துணை உங்கள் வணக்கத்தில் தலையிடாவிட்டாலும்கூட, உங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கைகளை அவரோடு அல்லது அவளோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்துடனேயே காலம் முழுவதும் வாழவேண்டியிருக்கும். திருமணப் பேரின்பத்திற்கு வழிநடத்துவதாகவா இது தோன்றுகிறது?
ஆகவே, டெரி ஒரு சிக்கலான தீர்மானம் செய்ய வேண்டியிருந்தது. “நான் யெகோவா தேவனை நேசிக்கிறேன், ஆனால் அதேசமயத்தில் என் காதலனையும் இழக்க விரும்பவில்லை” என டெரி கூறினாள். நிச்சயமாகவே, இரண்டையும் நீங்கள் செய்யமுடியாது. கடவுளுடைய தராதரங்களை விட்டுக் கொடுத்துவிட்ட பிறகும் அவருடைய ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் நீங்கள் அனுபவிக்க முடியாது.
என்றபோதிலும், குறிப்பிட்ட ஒரு உடன் கிறிஸ்தவரை மணந்துகொள்வதை ஒருவேளை உங்கள் பெற்றோர் எதிர்க்கலாம். ஒரு விசுவாசியுடன் சரிசமமற்ற விதத்தில் பிணைக்கப்பட முடியுமா? முடியும். உங்களுக்கு இருப்பது போன்ற ஆவிக்குரிய இலக்குகள் அல்லது கடவுளுக்கான பக்தி அந்த நபருக்கு இல்லை என்றால் அது சரிசமமற்ற பிணைப்பே. இதுவே உண்மையாக இருந்தால் அல்லது அவருடைய சபையிலுள்ள சகோதரர்களால் அவன் அல்லது அவள் “நற்பெயர்” பெற்றிருக்கவில்லை என்றால், நீங்கள் அந்த நபரை மணந்துகொள்வதைப் பற்றி உங்கள் பெற்றோர் நியாயமாகவே கவலைப்படலாம்.—அப்போஸ்தலர் 16:2, NW.
இன அல்லது கலாச்சார வேறுபாடுகளைப் பற்றியென்ன?
வேறொரு காரணத்திற்காக லின்னுடைய பெற்றோர் எதிர்த்தனர்: மற்றொரு இனத்தைச் சேர்ந்த ஓர் ஆளை அவள் மணந்துகொள்ள விரும்பினாள். இதன் சம்பந்தமாக பைபிள் என்ன கற்பிக்கிறது? “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்றும் “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி[னார்]” என்றும் அது நமக்கு சொல்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35; 17:26) மனிதர்களுக்கு பொதுவான ஒரே ஆரம்பமும் கடவுளுடைய பார்வையில் அவர்களுக்கு சமமான மதிப்பும்தான் இருக்கிறது.
அப்படியிருந்தாலும், எல்லா தம்பதிகளும் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்றாலும் கலப்பு இன தம்பதிகள் கூடுதலான சவால்களை எதிர்ப்படலாம். (1 கொரிந்தியர் 7:28) ஏன்? ஏனென்றால், வெறுப்பு நிறைந்த இன்றைய உலகிலுள்ள அநேகர் இனத்தைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொள்வதில்லை. சில மேற்கத்திய நாடுகளில் கலப்பு இன திருமணங்கள் அதிகளவில் சர்வசாதாரணமாக இருந்தபோதிலும், கலப்பு இன தம்பதிகள் மோசமான விதத்தில் தப்பெண்ணத்தை எதிர்ப்படும் இடங்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட அழுத்தங்களை சமாளிக்க நீங்கள் இன்னும் தயாராக இல்லை என்று ஒருவேளை உங்கள் பெற்றோர் பயப்படலாம்.
“எங்களால் சமாளிக்க முடியாதென்று என் பெற்றோர் நினைத்தனர்” என லின் ஒப்புக்கொள்கிறாள். ஞானமாக, அவர்கள் உணர்ச்சிகளுக்கு மரியாதை காட்டுபவளாய் லின் அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ளவில்லை. லின்னுடைய முதிர்ச்சியை அவள் பெற்றோர் கவனித்த பிறகும் அவள் காதலித்த ஆளுடன் நன்றாக அறிமுகமான பிறகும், இந்தத் திருமணத்தின் அழுத்தங்களை அவளால் கையாளமுடியும் என்ற ஓரளவு நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றனர். “ஒன்றாக சேர்ந்து நாங்கள் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அறிந்தபிறகு அவர்களும்கூட எங்களோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள்” என லின் கூறுகிறாள்.
என்றாலும், சில சமயங்களில், இனம் அல்ல கலாச்சாரமே பிரச்சினையாக இருக்கலாம். வாழ்க்கைமுறை மற்றும் எதிர்பார்ப்புகள், உணவு, இசை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் விருப்பம் போன்ற எல்லாமே உங்களுடைய விருப்பங்களிலிருந்து மிகவும் வித்தியாசப்படும் ஒருவருடன் சந்தோஷமாக வாழ முடியாமல் நீங்கள் கடைசியில் கஷ்டப்படுவீர்கள் என உங்கள் பெற்றோர் கவலைப்படலாம். எப்படியிருந்தாலும், வேறொரு இனத்தை அல்லது கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒருவரை மணந்துகொள்வது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இவற்றை எதிர்ப்பட நீங்கள் தயாரா?
பெற்றோரின் எதிர்ப்பு நியாயமற்றதாக தோன்றினால்
ஆனால் உங்கள் பெற்றோரின் எதிர்ப்பு முற்றிலும் நியாயமற்றது என நீங்கள் உணர்ந்தால் அப்போது என்ன? ஃபேத் என்ற ஓர் இளம் பெண் தன்னுடைய அம்மாவைப் பற்றி இவ்வாறு கூறுகிறாள்: “அம்மா அநேகமுறை மணவிலக்கு ஆனவர். ஒருவரை மணந்துகொள்ளும்வரை அவரை முழுமையாக அறிந்துகொள்ளவே முடியாது என்று அவர் சொல்கிறார். திருமணத்தில் நான் சந்தோஷமாகவே இருக்கமுடியாது என உறுதியாக நம்புகிறார்.” அநேக சமயங்களில், பெற்றோருடைய திருமணங்கள் தோல்வி அடைந்திருந்தால் தங்கள் பிள்ளைகளுடைய திருமணத்தைப் பற்றி அவர்களால் சரியாக நிதானிக்க முடியாது. சில சந்தர்ப்பங்களில், தவறான உள்நோக்கங்களுக்காக, அதாவது பிள்ளையின் வாழ்க்கையை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவதனால், தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை பெற்றோர் எதிர்க்கின்றனர்.
நியாயமான காரணங்களுக்கு உங்கள் பெற்றோர் செவிகொடுக்க தயாராக இல்லையென்றால் நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், குடும்பப் பிரச்சினைகளை சமாளிக்க உதவிக்காக சபை மூப்பர்களை அணுகலாம். அவர்கள் பட்சபாதம் காட்டாமல், அமைதியாகவும் சமாதானமாகவும் பலன்தரும் விதமாகவும் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ள குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவுவார்கள்.—யாக்கோபு 3:18.
சமாதானத்தை நாடுதல்
பொருளாதார அக்கறைகள் அல்லது எதிர்கால துணையின் ஆள்தன்மை போன்ற மற்ற அநேக காரணங்களும்கூட, நீங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு எதிராக உங்கள் பெற்றோரின் எதிர்ப்பை தூண்டிவிடலாம். எய்ட்ஸ், மற்ற பால்வினை நோய்கள் போன்றவை நிறைந்திருக்கும் இந்தச் சகாப்தத்தில், உங்கள் எதிர்கால துணை கிறிஸ்தவராக ஆவதற்குமுன் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை நடத்தி வந்திருந்தால், உங்கள் பெற்றோர் உங்களுடைய ஆரோக்கியத்தைப் பற்றி உண்மையிலேயே கவலைப்படலாம். b
உங்கள் பெற்றோருடைய வீட்டில் வாழும்வரை உங்கள் மேல் அவர்களுக்கிருக்கும் அதிகாரத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டிய கடமை இருக்கிறது. (கொலோசெயர் 3:20) ஆனால் நீங்கள் சொந்தக் காலில் நின்று, சுயமாக தீர்மானங்களை செய்யுமளவு வயது வந்தவராக இருக்கிறீர்கள் என்றாலும்கூட, உங்கள் பெற்றோர் உங்கள்மீது வைத்துள்ள அக்கறையை உடனே அசட்டை செய்துவிடாதீர்கள். செவிகொடுக்க விருப்பமுள்ளவராக இருங்கள். (நீதிமொழிகள் 23:22) திருமணம் செய்துகொள்வதன் சாத்தியமான விளைவுகளை கவனமாக சீர்தூக்கிப்பாருங்கள்.—லூக்கா 14:28-30-ஐ ஒப்பிடுக.
அவ்வாறு செய்தபிறகும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் முடிவுசெய்யலாம். பொருத்தமாகவே, அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்திற்கான முழு பொறுப்பும் உங்களையே சாரும். (கலாத்தியர் 6:5) உங்கள் பெற்றோரின் நோக்குநிலையை ஆராய முழு முயற்சி எடுத்திருந்தீர்களானால், முழு மனதுடன் இல்லாவிட்டாலும்கூட, உங்கள் தீர்மானத்தை ஆதரிக்க அவர்கள் ஒருவேளை தூண்டப்படலாம். ஆனால் அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், வெறுப்பு அல்லது கோபம் அடையாதிருக்க முயலுங்கள். இதை மனதில் வையுங்கள்: உங்கள் பெற்றோர் உங்களை நேசிக்கிறார்கள் மேலும் உங்கள் எதிர்கால சந்தோஷத்தில் பெரும் அக்கறை உடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்களோடு சமாதானமாக இருக்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தும்போது, அவர்களுடைய மனப்பான்மை ஒருவேளை மாறலாம்.
மறுபட்சத்தில், உங்கள் பெற்றோர் கூறும் எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்து, உங்களைப் பற்றியும் நீங்கள் மணந்துகொள்ள அவ்வளவு அதிகமாக விரும்பும் நபரைப் பற்றியும் நேர்மையான முறையில் கூர்ந்து ஆராய்கையில், உங்கள் பெற்றோர் சொன்னது ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என்ற திடுக்கிடவைக்கும் முடிவுக்கு நீங்கள் வந்தால் ஆச்சரியம் அடையாதீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a தன்னுடைய திருமணத் துணையை ஒருவர் தானாகவே தெரிவு செய்யும் பழக்கமுள்ள நாடுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்தக் கட்டுரையிலுள்ள தகவல் பொருந்தும்.
b மார்ச் 22, 1994 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! பிரதியில் “எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு உதவுதல்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 21-ன் படம்]
திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு உங்களுக்கு இன்னும் வயசாகவில்லை என்று உங்கள் பெற்றோர் நினைக்கலாம்