“விருந்திற்கு அனைவரும் அழைக்கப்படவில்லை”
ஐக்கிய நாட்டு வளர்ச்சித் திட்டத்தின் வருடாந்தர அறிக்கை, தி ஹுயூமன் டெவலப்மன்ட் ரிப்போர்ட் 1998, (UNDP) பொருளாதார வளங்களை நுகர்வதில் இதுவரை இல்லாத திடீர் அதிகரிப்பை, வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. உலகமுழுவதையும் எடுத்துக்கொண்டால், 1950-ல் நாம் பொருட்களுக்காக செலவிட்டதைவிட ஆறு மடங்கு அதிகமாகவும், 1975-ல் செலவிட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமாகவும் இப்பொழுது செலவிடுகிறோம் என்பதை வெளிப்படுத்தியது. இவ்விதம் பொருட்களை நுகர்வதில் அதிகரிப்பு இருந்த போதிலும், இந்த ஏழை பணக்காரருக்கிடையில் உள்ள பாரபட்சத்தை பற்றி UNDP-ன் செயற்குழு டைரக்டர், ஜேம்ஸ் ஃகுஸ்டாவ் ஸ்பெத் சொல்கிறார்: “விருந்திற்கு அனைவரும் அழைக்கப்படவில்லை.”
இதை விளக்க: இந்த உலகத்தில் வாழும் 20 சதவீத ஏழைகள் சாப்பிடும் மீன்களைவிட, 20 சதவீதத்தினராகிய பணக்காரர்கள் ஏழு மடங்கு அதிகம் சாப்பிடுகிறார்கள். இப்படிப்பட்ட ஏழைகளைவிட செல்வந்தர்கள், 11 மடங்கு அதிகமாக இறைச்சி சாப்பிடுகிறார்கள். மேலும் ஏழைகளைவிட 17 மடங்கு மின்சார வசதிகளையும், 49 மடங்கு தொலைபேசி இணைப்புகளையும், 77 மடங்கு பேப்பர் வசதிகளையும் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இவர்கள் 149 மடங்கு கார்களையும் கொண்டுள்ளனர்.
இந்த உலகத்தின் இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருவதை தடுக்க, இந்த தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள், நுகர்வதில் தாங்கள் கடைபிடிக்கும் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்த அறிக்கையை குறித்து UN ரேடியோ சொன்னது. அதே சமயத்தில், இந்த செல்வ செழிப்பான நாடுகள் தங்கள் செல்வத்தை ஏழை நாடுகளுக்கும் கொடுத்து அதன் மூலம் அவர்களும் பூமியின் வளங்களிலிருந்து பலனடைய உதவிசெய்ய வேண்டும். இதற்கு எவ்வளவு செல்வத்தை பகிர்ந்தளிக்க வேண்டும்?
மிஸ்டர். ஸ்பெத் கணக்கின்படி, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் ஏழை நாடுகளின் முன்னேற்றத்துக்கு இப்பொழுது அளித்து வரும் உதவியை இருமடங்காக்கினால் அதாவது, ஒரு வருடத்துக்கு 5,000 கோடி டாலரிலிருந்து 10,000 கோடி டாலராக உயர்த்த வேண்டும். அப்படி செய்தால் உலகமுழுவதிலும் உள்ள ஏழை மக்கள் தங்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம், கல்வி, உறைவிடம் போன்றவைகளை கொண்டு சந்தோஷமாய் இருப்பர். இங்கே கூடுதலான 5,000 கோடி டாலர் என்று சொல்லும் போது ஏதோ பெரிய தொகையாக தோன்றலாம். அதைக் குறித்து மிஸ்டர். ஸ்பெத் சொல்கிறார்: “ஒரு வருடத்தில் ஐரோப்பா நாடு இந்தத் தொகையை சிகரெட்டிலேயே கரித்துவிடுகிறது, மேலும் இதில் பாதி தொகையை, ஐக்கிய மாகாணம் மதுபானத்திலேயே கரைத்துவிடுகிறது.”
தெளிவாகவே, இந்த பூகோளத்தின் வளங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க ஒன்றிணைந்து முயற்சி செய்தால், ஏழ்மையெனும் கொடுமையை ஒழித்துவிடலாம். இதை சாத்தியமாக்க என்ன தேவைப்படுகிறது? ஒரு UN அதிகாரி சொல்கிற பிரகாரம்: “ஆக மொத்தத்தில், இருதயத்திலும், மனதிலும், சிந்தனையிலும் மாற்றம் தேவைப்படுகிறது.” இன்றுள்ள அநேக கொள்கைகளை வரையறுக்கும் அமைப்புகள், நல்ல உள்நோக்கத்துடன் செயல்படுகிற போதிலும் இந்த மாற்றத்தை அவர்களால் கொண்டுவர முடியவில்லை, அல்லது பேராசை போன்ற பண்புகளை முற்றிலும் அழிக்க முடியவில்லை என்பதை அநேகர் ஒத்துக் கொள்கின்றனர்.
எப்படி இருந்தாலும், மனித குடும்பத்தின் எதிர்காலத்தை பற்றியும், இந்த பூமியைப் பற்றியும் அக்கறையுள்ள மனிதர்களுக்கு இதோ ஒரு ஆறுதலான நம்பிக்கை! மனித பிரச்சினைகளுக்கு சரியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக இந்த உலகத்தின் சிருஷ்டிகர் கொடுத்திருக்கும் நம்பிக்கை, எரியும் நெருப்பில் தண்ணீர் ஊற்றுவது போல் இருக்கிறது. பொருத்தமாகவே சங்கீதக்காரன் இவ்வாறு முன்னுரைத்தார்: “பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். பூமியிலே ஏராளமான தானியமிருக்கும்; மலைகளின் உச்சியிலே அபரிமிதமாக இருக்கும்.” (சங்கீதம் 67:6; 72:16, NW) ஆம், அப்பொழுது பூமியில் குடியிருக்கும் அனைவரும் “விருந்திற்கு அழைக்கப்படுவர்”!