பன்டனல்—சாந்தம் தவழும் சரணாலயம்
பிரேஸிலில் இருந்து விழித்தெழு! நிருபர்
சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஏன்? பியர் கேனை ஆற்றில் போட வேண்டாமென ஸெரோனீமூ சொல்லியதாலேயே. “இதென்ன உங்க ஆறா?” என அவர் கேட்டார். “இல்லை,” “இது நம்முடையது. ஆனால், இதில் நீங்கள் குப்பைகளை போட்டுக்கொண்டே இருந்தால், சீக்கிரத்தில் நாங்கள் யாருமே இங்கு மீன்பிடிக்க முடியாது” என்று ஸெரோனீமூ பதிலளித்தார்.
பன்டனல் சரணாலயம் இன்று எப்படி அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இது ஓர் அத்தாட்சி. பிரேஸில், பொலிவியா, பராகுவே ஆகிய நாடுகளின் சில பகுதிகளையும் உள்ளடக்கும் பெரும் பரப்புடையது பன்டனல். பன்டானூ என்ற போர்ச்சுகீசிய வார்த்தையின் அர்த்தம் “சேறு அல்லது சதுப்புநிலம்” என்பதாகும். ஆனால், பன்டனல் சமதரையல்ல. சரிவாக இருக்கிறது. எனவே, நீர் தேங்கி நிற்பதில்லை. மாறாக, நீர் மெதுவாகவும், சீராகவும் வழிந்தோடுகிறது. இதனால், செழிப்பான பலவிதமான புற்கள் கம்பளம் விரித்ததுபோல் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இந்த விசாலமான பகுதியைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசையா? என்னோடு வரும் சுற்றுலாப் பயணிகளின் குழுவோடு நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். இயற்கையான சுற்றுச்சூழலில் உயிரினங்கள் உல்லாசமாய் வாழும், மனதைக் கொள்ளைகொள்ளும் மிகச் சிறந்த சரணாலயங்களுள் ஒன்றைக் காண வாரீர்!
அலிகேட்டர்களும் அனகோன்டாக்களும்!
சாவோ போலோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 1,200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரூம்பா பட்டணத்திற்கு பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டோம். பன்டனல் பகுதியை அடைந்துவிட்டோம் என்பதற்கு அடையாளமாக பெரிய பெரிய பறவைகள் வானில் பறப்பது தெரிந்தன. எங்கள் தலைக்கு மேலே வட்டமிட்டு எங்களை வரவேற்றன என்றே சொல்லலாம். ட்யூய்யூ என்ற நாரையினப் பறவை நிலத்திலிருந்து உயர எழும்ப வேண்டும் என்றால், அப்பறவைக்கு தேவை ரன்வே! ஏன்? 2.6 மீட்டர் நீளமுள்ள அதன் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்க வேண்டுமல்லவா! “இந்தப் பெரிய இறக்கைகளை விரித்துப் பறக்கும்போது அவை காற்றில் படபடக்கும் ஓசை காதைத் துளைக்கிறது” என ஆரோல்டூ பாலூ ஜூனியர் எழுதுகிறார். பன்டனல் சரணாலயத்தில் இரண்டு ஆண்டுகளை செலவிட்டவர் இவர். “இவை ஜோடி சேரும்போதும், இனச்சேர்க்கையின் காதல் விளையாட்டின்போதும், இரண்டு அல்லது மூன்று ஆண் பறவைகள் சேர்ந்து ஒன்றாக உயர பறக்கும். . . . அவை ஜோராக டைவ் அடிப்பதை தூரத்திலிருந்தும் காணலாம்.”
வறட்சிக்காலம் வந்து, தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும்போது பறவைகளுக்கு ஒரே கும்மாளம்தான். மீன் வேட்டை மிக சுலபம். அலிகேட்டர்களுக்கு நடுவே ஜபிரு எனும் நாரையினமும் கொக்கும் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடிப்பதைப் பாருங்கள்! அலிகேட்டர்களுக்கு பிடித்தமான உணவு பிரன்ஹா மீன்களே. இந்த பிரன்ஹா மீன்கள் கொடியவை, மிகக் கூரிய பற்கள் உடையவை. காயமடைந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பவற்றிடமே அவை கவர்ந்திழுக்கப்படுகின்றன. இவற்றின் அருகே செல்லவும் நாம் தயங்குகிறோம். ஆனால், அலிகேட்டர்களுக்கு துளியும் பயமில்லை. எந்த ஆபத்தைப் பற்றியும் சற்றும் கவலையில்லை இந்த அலிகேட்டர்களுக்கு.
படகில் ஆற்றைக் கடந்து, அங்கிருந்து கால்நடைப் பண்ணைக்கு காரில் சென்றோம். டிரைவர் திடீரென ப்ரேக் அடித்தார். ஏன் என்று பார்த்தால் அடேங்கப். . .பா! புழுதி நிறைந்த அந்த ரோட்டிற்கு குறுக்கே ஒரு பெரிய பாம்பு ஆடி அசைந்து சென்றது. “ஆ! அது அனகோன்டா. சீக்கிரம் ஒரு ஃபோட்டோ எடுங்கள். இவ்வளவு பக்கத்தில் நீங்கள் இதைப் பார்க்கவே முடியாது!” என்று அவர் கத்துகிறார். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே கைகால் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால், அது அவ்வளவு பெரிய ராட்சச பாம்பு. பாம்புகளிலேயே மிக நீளமானது, 9 மீட்டர் நீளமுடையது, விரைவாகவும் செல்லக்கூடியது. ஒருசில நொடிகளுக்குள் புதருக்குள் சென்றுவிட்டது. அது சென்றுவிட்டதே என எனக்குக் கொஞ்சமும் வருத்தமில்லை. சொல்லப்போனால், பிறகு தான் எனக்கு மூச்சே வந்தது. அனகோன்டா புதருக்குள் மறையவில்லை என்றாலும்கூட, பயத்தில் வெடவெடவென நடுங்கிய என் கைகளால் தெளிவான ஃபோட்டோ நிச்சயம் எடுத்திருக்கவே முடியாது!
பான்டானேரூவின் வாழ்க்கை
ஆயிரக்கணக்கான மாடுகளின் கொட்டில்தான் பன்டனல். இவற்றை பராமரிக்கிறவர்களை பான்டானேரூ என்றழைக்கின்றனர். மாடுகளை மேய்ப்பவராகவும் உழவராகவும் பான்டானேரூ வேலை செய்கிறார். செவ்விந்தியர், ஆப்பிரிக்கர், ஸ்பானியர்களின் மரபில் வந்தவர்கள் பான்டானேரூக்கள். பண்ணையின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை மாடுகளை மேய்க்கின்றனர். ஆவேசமாக திமிறித்திரியும் முரட்டுக்குதிரைகளையும் அடக்கி, அழகாக அடிபணிய வைக்கின்றனர். மாடுகள் கூட்டம் கூட்டமாக நிறைய மேய்வதைப் பார்த்தோம். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் ஆயிரம் மாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்தையும் ஆறு பேரால் கண்காணிக்கப்படுகிறது. முதலில் ஒருவர் குதிரையில் செல்கிறார். இன்னொருவர் காளை மாட்டின் கொம்பாலான எக்காளத்தை கையில் வைத்துக்கொண்டு அவர் பின் செல்கிறார். அவருக்குப் பின்னால், இன்னும் நிறைய பேர் செல்கின்றனர். இவர்களில் ஒருவர் அந்த மந்தையின் சொந்தக்காரர். மற்றவர்கள் மந்தையைச் சுற்றி செல்கின்றனர். மந்தையிலிருந்து பின்வாங்கும், விலகிச் செல்லும் மாடுகளை இவர்கள் சுற்றி வளைத்து திரும்ப மந்தையில் சேர்க்கின்றனர்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஸெரோனீமூவும் ஒரு பான்டானேரூதான். துடுப்புகளை வலிப்பது அதிக சோர்வை தருவதாக இருந்தாலும், அவர் அப்படித்தான் ஆபோப்ரால் ஆறு நெடுக எங்களை அழைத்து செல்கிறார். மோட்டார் படகின் சத்தம் பறவைகளை அச்சுறுத்தும் என்பதால், அவர் அதை உபயோகிக்க விரும்புவதில்லை. அவருடைய கனிவான குரல், அவரது அருமையான வீட்டின்மேல்—பன்டனல் மேல் அவருக்கு இருக்கும் அன்பையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. “அதோ, அங்கே பாருங்கள்! ஆற்றங்கரையில் ஒரு அலிகேட்டர் சன்பாத் எடுத்துக்கொண்டிருக்கிறது” என முதலையினத்தை சேர்ந்த ஒன்றை ஸெரோனீமூ காட்டினார். அதற்கு கொஞ்ச தூரத்தில், நீர்நாய் ஜோடி ஒன்றின் இருப்பிடத்தை சுட்டிக்காட்டினார். “இதுதான் அவைகளின் வீடு. எப்போதும் அவைகளை நான் இங்கு பார்க்கிறேன்” என்று சொன்னார். அவ்வப்பொழுது, ஸெரோனீமூ தன்னுடைய கப்பால் ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து தன் தாகத்தை தீர்த்துக்கொண்டார். “இந்த தண்ணீரைப்போய் குடிக்கிறீர்களே, இது சுத்தமானதா?” என நாங்கள் கேட்க, “இன்னும் அசுத்தமாகவில்லை” என பதிலளித்தார். “உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களும் குடித்து பாருங்கள்” என்றார். ஆனால், எங்களுக்கோ மனது வரவில்லை.
வாழ்க்கையைப் பற்றி நம்பிக்கையான மனநிலையை உடையவர் பான்டானேரூ. அவருடைய ஆசைகள் குறைவு. அவரது பொழுதுபோக்கே அவருடைய வேலை. கதிரவன் கண்விழிப்பதற்கு முன் வீட்டிலிருந்து கிளம்புகிறார். கதிரவன் கண்ணயர்ந்த பின்புதான் வீடு திரும்புகிறார். மிகக் குறைந்த சம்பளமே (மாதத்திற்கு சுமார் 4,000 ரூபாய்) பெறுகிறார். வீடும், சாப்பாடும் இலவசம். மூக்குமுட்ட இறைச்சி சாப்பிடலாம். “என்னுடைய பண்ணையில், பான்டானேரூ அவர் இஷ்டப்பட்டதை சாப்பிடுகிறார். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு திருப்தியாக சாப்பிடுகிறார். அவர் அடிமையல்ல. திருப்தி இல்லையென்றால், ‘பாஸ், என் சம்பளத்தைக் கொடுங்கள். நான் போகிறேன்’ என எந்த சமயத்திலும் சொல்லலாம்” என ஒரு விவசாயி கூறுகிறார்.
கூண்டுகளில்லா மிருகக் காட்சிசாலை
நாங்கள் தங்கியிருந்த பண்ணைவீடு, பலவகை மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வீடாக இருக்கிறது. பஞ்சவர்ணக்கிளிகள், பலவகை கிளிகள், நாரைகள், பலவகை சிறுத்தைகள், காபிபேராக்கள் எனும் கொறிக்கும் உயிரினங்கள், மான்கள் போன்ற பலவகை மிருகங்களுக்கும் பறவையினங்களுக்கும் அது சரணாலயம். பன்டனலில் 100 வருடங்களாக வாழ்ந்த, கானா இந்தியப் பழங்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் தலைவர் பின்வருமாறு எங்களிடம் சொன்னார்: “நிறைய பறவைகளுக்கு நாங்கள் தீனி போட்டு வளர்க்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை சட்டத்திற்கு புறம்பாக பிடிக்கிறவர்களிடம் இருந்து போலீஸ் பறிமுதல் செய்தவை.” முதலில் எங்களிடம் 18 கிளிகள்தான் இருந்தன. ஆனால், இப்போதோ சுமார் 100 கிளிகள் இருக்கின்றன என்று அவருடைய மனைவி சொன்னார். “அவைகளுடைய சொந்த இருப்பிடத்திற்கு அவற்றை திருப்பி அனுப்புவதே எங்கள் குறிக்கோள்” என அவர் சொல்கிறார்.
கூண்டுகளில்லா இந்த மிருகக் காட்சிசாலையில், பன்றிகளும் கோழிகளும் மேய, அவற்றிற்கிடையே பஞ்சவர்ணக்கிளிகள் எந்தவித பயமும் இல்லாமல் அமைதியாக உணவை கொத்தித் தின்கின்றன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியை ஃபோட்டோ எடுத்தோம். உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், பன்டனல் சரணாலயத்தின் இயற்கை வனப்பையும் பலவகை பறவைகளும் மிருகங்களும் ஒன்றிணைந்து வாழும் ரம்மியமான சூழலையும் பார்த்து ரசித்து அகமகிழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் நிகழும் சூரிய அஸ்தமனம், ஆ எவ்வளவு மனோகரமானது! இந்த சரணாலயத்திற்கு வந்த ஓர் இளம் ஜப்பானிய சுற்றுலாப் பயணி, சூரிய அஸ்தமனத்தின்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக தங்கள் கூட்டிற்கு திரும்பும் அழகைக் கண்டு சொக்கி நின்றார். அப்போது, அப்பண்ணைத் தொழிலாளியிடம் இருந்து ஓர் எச்சரிக்கை வந்தது. “ஜாக்கிரதைம்மா. இங்கே சிறுத்தைகள் நிறைய இருக்கின்றன.” இந்த எச்சரிக்கை அங்கிருந்து அவருடைய ரூமுக்கு அவரை ஓட வைத்தது. அடுத்த நாள், அவர் ஓரளவு பயம் நீங்கி, பஞ்சவர்ணக்கிளிகளுக்கு பிஸ்கட் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் தன் வாயில் பிஸ்கட்டை வைத்து, கிளி தன் அலகால் அதை எடுப்பதை நாங்கள் ஃபோட்டோ எடுத்தோம். அவருடைய பயம் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட்டது!
ஒரு நாள், சூரியோதயத்திற்கு முன், நட்சத்திரங்களைப் பார்த்து ரசிப்பதற்காக வெளியே சென்றோம். எங்கள் கைகளால் அவற்றை எட்டிப்பிடித்துவிடலாம் போல காட்சியளித்தது. ஆ! வார்த்தைகளால் விவரிக்க முடியாத காட்சி! இங்கே, பன்டனலில் ரம்மியமான சூழ்நிலையின் அமைதியை மெய்மறந்து ரசித்ததோடு எங்களால் அதை “கேட்கவும்” முடிந்தது. இனிமையான காட்சிகளும் ஓசையும் நிறைந்த எழில்கொஞ்சும் இந்த பரதீஸைப் படைத்ததற்காக படைப்பாளருக்கு எங்கள் நன்றியை மனதார செலுத்தினோம். “பரதீஸ் என்ற ஒன்று இருக்கிறதா என என்றாவது ஒரு நாள், யாராவது உங்களைக் கேட்டால், ‘ஆம், இருக்கிறது. அதில் சந்தேகமே வேண்டாம். பன்டனல் பரதீஸின் ஒரு பாகமே’ என நீங்கள் தைரியமாக சொல்லலாம்” என ஒரு விளம்பர பத்திரிகை குறிப்பிடுகிறது.
இயற்கைச் சூழல்மிக்க சரணாலயம் கெடுக்கப்பட்டுள்ளது
கடந்த 20 வருடங்களில், பன்டனலின் தூய்மைக்கு பங்கம் விளைவிக்கும் அச்சுறுத்தல்களைப் பற்றி பத்திரிகைகள் அதிகம் விவாதித்து வருகின்றன. பன்டனலின் இயற்கைச் சூழல் பல விதங்களில் கெடுக்கப்பட்டிருப்பதைப் பற்றி ஆரோல்டூ பாலூ, ஜூனியர், பன்டனல் என்ற தம்முடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதோ! அவற்றை சுருக்கமாக தொகுத்திருக்கிறோம்.
◼ ஆறுகளில் வண்டல் படிதல். “சமீப ஆண்டுகளில், தகுவாரி ஆற்றில் அந்தளவு வண்டல் படிந்துள்ளதால், அதன் முகத்துவாரத்தில் படகில் செல்வதென்பதே பெரும்பாடாய் இருக்கிறது. இதனால், . . . கரைகளில் வாழ்வோர் தனித்து விடப்படுகின்றனர். பன்டனலுக்குள் பாய்ந்தோடும் மற்ற ஆறுகளிலும் இதே நிலைதான் ஏற்படுகிறது.”
◼ வறட்சி சுழற்சி. “முன்பு ஏற்பட்டதுபோல், 15 அல்லது 20 வருட வறட்சி சுழற்சி மறுபடியும் ஏற்பட்டால், இந்தப் பகுதிக்கே பெருமை சேர்க்கும் தாவரங்களும் மிருகங்களும் ஒட்டுமொத்தமாய் அழிக்கப்பட்டுவிடும்.”
◼ களைக்கொல்லிகளும் மெர்குரியும். “பன்டனலுக்கு வெளியே, விவசாயத்திற்கு இயந்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன. களைக்கொல்லிகளை இவை அதிகம் பயன்படுத்துகின்றன. அதனால், இவை நிலத்தடி நீரில் ஊடுருவிச் செல்கிறது. முடிவில், பன்டனலுக்கு அருகில் ஓடும் ஆறுகளை நச்சுப்படுத்துகிறது. அல்லது நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர் மண்ணோடு சேர்ந்து களைகளை அடித்துக்கொண்டு செல்லும்போது, இவை ஆற்றில் வண்டல் படிவதை அதிகரிக்கின்றன. போகோனி பன்டனலில் இருக்கும் மற்றோர் அச்சுறுத்தல் தங்கம் தோண்டி எடுக்கப்படுவதே. இது தண்ணீரை மெர்குரியால் கெடுக்கிறது.”
◼ வேட்டையாடுதல். “வேட்டையாடுதல் சட்டத்தால் தடைசெய்யப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும், பன்டனலின் பல பகுதிகளில் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருசில விவசாயிகளே தங்கள் இயற்கை வளங்களை அரிதாக எண்ணி பாதுகாக்கின்றனர். மற்றும் சிலர், சுற்றுலாத் துறையை முன்னேற்றுவித்து தங்கள் பொருள்வளத்தை பெருக்கும் நோக்கோடு இந்த வளங்களை பாதுகாக்கின்றனர். இவர்களைத் தவிர, மிருகங்களும் இயற்கை வளங்களும் அழிக்கப்படாமல் இருப்பது சந்தர்ப்பவாதிகளின் தயவில்தான் இருக்கிறது.”
மறுபடியும் கட்டிட காட்டிற்குள்
சாவோ போலாவுக்கு நாங்கள் திரும்பினோம். பன்டனலுக்கும் சாவோ போலோ நகரத்திற்கும் என்னே மாபெரும் வித்தியாசம்! மஞ்சள் நிற ஈபஸ், ஊதா நிற ஈபஸ், செந்நிற பூண்டு வகைச் செடிக்கு பதிலாக விண்ணைத்தொடும் கட்டிடங்களையே பார்த்து பார்த்து கண்கள் பூத்துப்போயின. மீன்கள் துள்ளி விளையாடும் கண்ணாடி போன்ற தெளிவான ஆற்று நீர் எங்கே? குப்பைகளே கப்பல்களாக வலம்வரும் சாக்கடைகள் எங்கே? காதில் தேனாய் பாயும் இனிமையான பறவைகளின் கீதங்களுக்கு பதிலாக காதை செவிடாக்கும் ஆயிரக்கணக்கான டிரக்குகளின், கார்களின் ஹாரன்களுடைய நாராசமான அலறல்களைத்தான் கேட்டோம். தெளிவான, நிர்மலமான நீலநிற ஆகாய விரிவுக்கு பதிலாக “அசுத்தமான காற்று” என அறிவிக்கும் எச்சரிப்பு பலகைகளையே கண்டோம். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையே நிலவும் சமாதானத்திற்கு பதில் ஒருவரையொருவர் அடித்துக்கொல்லும் மனித மிருகங்களின் முகத்தில்தான் விழித்தோம்.
பன்டனலில் இரண்டே வாரங்கள்தான் தங்கினோம். அதன் வித்தியாசமான பல பகுதிகளை ஆராய அந்த நாட்கள் போதவில்லை. போகோனி, நெகேலண்டியா, ஆபோப்ரால், நாபீலகா, பையாக்வாஸ் போன்ற பிரத்தியேகமான ஒவ்வொரு பெயருக்கும் ஏற்ப, ஒவ்வொரு பகுதியும் குறிப்பிடத்தக்க அம்சங்களை உடையனவாய் இருக்கின்றன. அங்கு பார்த்த காட்சிகள் ஆஹா, நம்பமுடியாத, நினைவிலிருந்து நீங்கா அனுபவம் அது. அங்கு பார்த்த தாவரங்களும் மிருகங்களும் கண்களுக்கு விருந்தாகவும், கேட்ட ஓசைகள் காதிற்கு இனிய கீதமாகவும், மனதிற்கு அமைதி தரும் அருமருந்தாகவும் இருந்தன.
[பக்கம் 15-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
பராகுவே
பொலிவியா
பிரேஸில்
பன்டனல்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 16-ன் படம்]
மஞ்சள் நிற பட்டாம்பூச்சி
[பக்கம் 16, 17-ன் படம்]
சிறுத்தை
[பக்கம் 17-ன் படம்]
பெரிய வெள்ளை கொக்குகள்
[படத்திற்கான நன்றி]
Georges El Sayegh
[பக்கம் 17-ன் படம்]
அனகோன்டாவும் அலிகேட்டரும்
[படத்திற்கான நன்றி]
Georges El Sayegh
[பக்கம் 18-ன் படம்]
பஞ்சவர்ணக்கிளி
[படத்திற்கான நன்றி]
Georges El Sayegh
[பக்கம் 18-ன் படம்]
இந்த ஆறு அங்குல பிரன்ஹா மீன் மிகக்கூரிய பற்கள் உடையவை
[படத்திற்கான நன்றி]
© Kjell B. Sandved/Visuals Unlimited
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
Georges El Sayegh