காற்றினிலே வரும் இனிய கீதம்
அது என்ன இனிய கீதம்? அந்தக் காலத்து பிரபல கீதமா? ஆம், மி . க . வு . ம் பழைய கீதம். இந்த உலகில் இதுவரை உங்கள் செவிகள் ரசித்த கீதங்களிலேயே மிக மிகப் பழமையானது. அது என்ன கீதம்? பறவைகளின் இன்னிசை கீதமே.
நிறம், தோற்றம், பறக்கும் பாவனை, கூடு கட்டும் பாணி—இவற்றை வைத்தே என்ன பறவை என்பதை மனதில் படம்போட்டு விடுகின்றனர் பலர். ஆனால் பறவைகளின் பாட்டை வைத்தே அடையாளம் கண்டுகொள்ள நீங்கள் எப்போதாவது அவற்றின் குரலை கூர்ந்து கேட்டிருக்கிறீர்களா?
சில பறவைகளின் பாடலை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது, ஏனென்றால் அவற்றின் குரல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். உதாரணத்திற்கு, தொல்லைதரும் காகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். புத்திசாலி பறவைகளில் இதுவும் ஒன்று. ஆனால் “கா, கா, கா” என்ற கரகரப்பான குரலை கேட்டாலே போதும் சட்டென புரிந்துவிடும்: இது காகத்தின் “கானம்.” ரூக்ஸ்! இதுவும் ஒருவகை காகம். “கா, கா” என்ற கட்டைக் குரலில் அதுவும் தனது வரவுக்கு கட்டியம் கூறுகிறது. மற்றொரு பறவை விப்பூர்வில். இது இரவில் கூவும் பறவை வகையைச் சேர்ந்தது. சகிக்க முடியாத இதன் குரலை நீங்கள் இரவில் கேட்டால் உண்மையில் உங்களுக்கு எரிச்சலே பொங்கிவரும். அது குரலிலேயே அதன் பெயரை எதிரொலிக்கிறது. அது சதா கூவிக்கொண்டே இருக்கும், முக்கியமாக நீங்கள் கண்ணயர நினைக்கையில்.
இதற்கு நேர் மாறாக, “மார்ஷ் ரென் என்ற பறவை 100-க்கும் மேற்பட்ட வாத்தியங்களை கொண்டுள்ள ஒரு பறக்கும் இசைக்குழு. மாக்கிங் பறவைகளோ 100-லிருந்து 200 கீதங்களை பாடும் பெருமையுடையது. ஒரு பிரௌன் த்ராஷர் 2,000-க்கும் மேலான பாடல்களை சலிக்காமல் பாடியது”!—ஆடுபான், மார்ச்-ஏப்ரல் 1999.
ஏரியா குறிப்பதற்காகவும் பெண் பறவைகளை சுண்டி இழுப்பதற்காகவும், பொதுவாக ஆண் பறவைகளே ஆரோகணம் செய்கின்றன. ஆனால் சில பெண் பறவைகளும்கூட இந்தப் பறவைகள் கோரஸில் சேர்ந்துகொள்கின்றன. உதாரணத்திற்கு வட அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் அல்லது நார்த்தன், ஆரியோலஸ், கார்டினல்ஸ் என்றழைக்கப்படும் பறவைகளும், சிவப்பு மார்புடைய கிராஸ்பீக்ஸ் பறவையும் கோரஸாக பாடும் பறவை இனங்கள்.
உங்களுடைய பகுதியிலுள்ள பறவைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அநேக நாடுகளில் பறவைகளின் கீதங்கள் கேஸட்டுகளில் கிடைக்கின்றன. குரல்களால் பறவைகளின் இனம் கண்டுகொள்ள இது உங்களுக்கு உதவும். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வித்தியாசமான பறவைகளின் கீதங்களை ஒலிக்கும் கடிகாரங்களையும்கூட நீங்கள் வாங்கலாம். 12 பாடல்களையாவது மிக விரைவில் நீங்கள் கற்றுக்கொள்ளலாமே.
[பக்கம் 31-ன் படம்]
மார்ஷ் ரென்
[பக்கம் 31-ன் படம்]
சிவப்பு மார்புடைய கிராஸ்பீக்
[பக்கம் 31-ன் படம்]
கார்டினல்