உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 12/8 பக். 16-17
  • இனிய டூயட் பாடகர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இனிய டூயட் பாடகர்கள்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மணிப்பறவை
  • காலமெல்லாம் ஜோடி
  • பின்னணி இசையில் வேலை
  • பறவையின் பாடல் வெறுமனே இன்னொரு இனிய ராகந்தானா?
    விழித்தெழு!—1993
  • காற்றினிலே வரும் இனிய கீதம்
    விழித்தெழு!—1999
  • பாடும் பறவைகள் புரிந்துகொள்ளுதலுக்குச் சவால்விடும் இசைக் கலைஞர்கள்
    விழித்தெழு!—1992
  • பறவைகள் கட்டிடங்களில் மோதுகையில்
    விழித்தெழு!—2009
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 12/8 பக். 16-17

இனிய டூயட் பாடகர்கள்

கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

அந்த இரு மெல்லிசை மன்னர்களின் கவிபாடும் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தன. இருவரின் முகமும் சந்திரனைக் கண்ட அல்லியாக மலர, இன்னிசை கச்சேரி இனிதே ஆரம்பமானது. பாட்டுத் தலைவன் சற்று குனிந்துவாறு மெல்லிய குரலில் ஸ்வரம் பிடித்து பாடுகிறார். குரலில் தட்டுத்தடங்கலோ பிசிரோ ஏதுமில்லாத அந்த இனிய கானம், உலா வந்துகொண்டிருந்த காலை தென்றலுடன் கைகோர்த்து இன்ப பயணம் செல்கிறது வெகுதூரம்! பாடகியோ நளினமாக தலைகுனிந்து அதேபோல் கச்சிதமான இடைவெளியில் சரளமான ஸ்வரத்தில் சுருதியைக் கூட்டி தெளிவாக பாடுகிறாள். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த அந்த இசைவிருந்தில் இருபாடகரின் குரலும் ஒன்றோடொன்று சங்கமமானது. இந்த அற்புத திறமையும், குரல் வளமும் என்னை ஏதோ ஒரு புது இசை உலகத்திற்கு கொண்டு சென்றதுடன் ஸ்தம்பிக்கச் செய்தன.

செவியில் தேனாக பாய்ந்த அந்த இசை, மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டிருந்த ஏதோ ஓர் இசை அரங்கிலிருந்து வரவில்லை. அது கென்யாவில், என் வீட்டுப் பக்கத்திலிருந்த மரக்கிளையில் ஜாலியாக அமர்ந்திருந்த ஜோடிப் பறவைகள் அரங்கேற்றியது! களைகட்டிக் கொண்டிருந்த அந்தக் கச்சேரி நிறைவுக்கு வந்தது போல டக்கென நிற்க, அந்த இரு பாடகர்களும் நேராக நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தனர், பின்பு சிறகை விரித்து ஆனந்தமாய் அங்கிருந்து விடைபெற்றனர்.

“இனம் இனத்தோடு சேரும்” என்பதற்கிசைய, ஒரே இனப் பறவைகள் ஒன்றாக சேர்ந்து பறப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சில பறவைகள் கானங்களை இசைப்பதிலும் இசைந்தே இன்புறுவதாக தெரிகிறது​—⁠அதிலும் துல்லியமாய் பாடுவதில்! அந்த டூயட் பாடல்களில் இரு குரல்களும் ஐக்கியமாகிவிடுவதால், கேட்பவருடைய கண்கள் இரு பறவைகளையும் ‘படம்பிடித்தால்’ தவிர, பாடுவது இருவர் என சொல்வது கடினம். ஆராய்ச்சியாளர்களும்கூட இதில் கோட்டைவிட்டிருக்கின்றனர். சமீபத்தில்தான் பறவைகள் இப்படி டூயட் பாடுவது அவற்றின் இயல்புணர்ச்சி என அறியப்பட்டுள்ளது.

மணிப்பறவை

உதாரணத்திற்கு, வெப்பமண்டல பூபூ (boubou) பறவையார் குறிப்பாக இந்த பாடல்களை பாடுவதில் வல்லவர். ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படும் இந்தப் பறவைகள் பாடும்போது, யாரோ புல்லாங்குழல் இசைப்பது போல இருக்கும். அதேசமயம் மணியோசை ஒலிப்பது போலவும் இருக்கும். இதுவே இதன் ஸ்பெஷாலிட்டி. அதனால் இவை பொதுவாக மணிப்பறவைகள் என அழைக்கப்படுகின்றன. உச்சியிலும், பிடரியிலும், இறக்கைகளிலும் பளபளக்கும் கார்வண்ணம்; மார்புப் பகுதியிலுள்ள இறகுகளும் இறக்கையிலுள்ள ஓரிரு இறகுகளின் மேற்பகுதியுமோ வெண்பட்டு நிறம்; என்னே ஓர் அழகிய “கான்ட்ராஸ்ட்”! இது, இப்பறவைகளைக் காண்போரின் கண்களுக்கும் விருந்தளிக்கின்றன. இந்த பூபூ பறவைகள் எப்பொழுதும் ஜோடிகளாகவே காட்சியளிக்கின்றன, அதோடு பெண் பறவை இரண்டுமே சீருடை அணிந்தது போல ஒரேமாதிரியாக இருக்கும்.

புதர்கள் மண்டிக்கிடக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்து செல்லும் ஒருவருக்கு பூபூ பறவை கண்ணுக்குத் தெரிவதற்கு முன்பே, காதுக்கு “தெரிந்துவிடும்.” ஆண் பறவை பெரும்பாலும் மூன்று தொடர்ச்சியான மணியோசை போன்ற ஒலியை எழுப்பும். அதற்கு உடனடியாக பெண் பூபூ, க்வீ. . .வீ என்று அடித்தொண்டையிலிருந்து பதிலளிக்கும். சில சமயம் ஒரு பறவை தொடர் வரிசையான ஸ்வரங்களை ஒலிக்கும்போது அதன் துணை ஒற்றைத் தொனியில் குரல் கொடுக்கிறது. அந்தப் பாடலினூடே மெல்லிய ஸ்வரத்தோடு எந்தவித தடங்கலுமின்றி இணைந்துவிடுகிறது.

எவ்வாறு இந்தப் பறவைகள் இவ்வளவு துல்லியமாகவும் ஒத்திசைவாகவும் பாடுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கும் முழுமையாக விளங்கவில்லை. ஒரு பழமொழி சொல்வதுபோல சில விஷயங்களில் “செந்தமிழும் நாப்பழக்கம்,” அதாவது தொடர்ந்து செய்துவருவதே இதற்கு காரணம் என்று சிலர் நினைக்கின்றனர். தம்பதிகள் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு நாளும் ஆரோகணம் செய்கின்றனர். இதனாலேயே இப்படிப்பட்ட அற்புதமான, துல்லியமான இசை விருந்து படைக்கின்றன.

இன்னொன்றையும் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், பெரும்பாலும் இந்த பூபூக்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து அவற்றின் ‘ராகமும்’ வேறுபடுகிறது. இதற்கு காரணம் அந்த இடத்திலுள்ள சப்தங்கள் அல்லது அங்குள்ள பறவைகளின் பாடலை பிரதிபலிப்பதால் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது மிமிக்ரி என அழைக்கப்படுகிறது. இதனால், புதர்க்காடுகள் கொண்ட தென் ஆப்பிரிக்கப் புல்வெளியில் ஒலிக்கும் பூபூவின் பாடலுக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவின் மகா பிளவு பள்ளத்தாக்கில் ஒலிக்கும் பூபூவின் பாடலுக்கும் அநேக வித்தியாசங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

காலமெல்லாம் ஜோடி

வாழ்க்கையின் சோதனைகள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் டேவிட் அடென்பரோ இவ்வாறு சொல்கிறார்: “டூயட் ஜோடிகள், ஏதோ சட்டம் வகுத்தது போல, எல்லா காலங்களிலும், ஏன் வாழ்நாள் பூராவுமே ஒன்றாக சேர்ந்து வாழ்வது நம் நெஞ்சை நெகிழவைக்கிறது.” இந்த நெருக்கமான உறவிற்கு காரணம் என்ன? அடென்பரோ தொடர்கிறார்: “அருமையான இந்தத் திறமையை அவை வளர்த்திருப்பதால் ஒன்றுக்கொன்று உறவை அதிகரிப்பதற்கும் உதவுகிறது. ஒரு கிளையில் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற சமயத்திலும் டூயட் பாடல்களை பாடுகின்றன. சில சமயங்களில், அந்த ஜோடியில் ஒன்று அங்கு இல்லையென்றால், ஏகாந்தமான அந்தப் பறவையே அங்கில்லாத பறவையின் விடப்பட்ட பாடலையும் பாடி தனித்தே கச்சேரியை தூள்கிளப்பிவிடும்.”

கானகத்தில் ஒருவரையொருவர் எளிதில் சந்திப்பதற்கு கானமே கைகொடுக்கிறது. ஆண் பறவை தன்னுடைய துணையைத் தேடி இனிய ஸ்வரங்களை தொடுக்கிறது; உடனே பெண் பறவை எங்கிருந்தாலும் அந்தப் பாமாலையுடன் சேர்ந்துகொள்கிறது. அவற்றின் டைமிங் அவ்வளவு துல்லியமாக இருப்பதால், இசை நிகழ்ச்சியை முன்னதாகவே நன்கு ஒத்திகை பார்த்து அரங்கேற்றுவது போல் இருக்கும்.

பின்னணி இசையில் வேலை

இனிய பாடலின் பின்னணியில் வேலை செய்ய உங்களுக்கு விருப்பமா? பறவைகளுக்கும் இதுதான் இஷ்டம். பறவைகளின் பாடல் அதைக் கேட்கும் மற்ற பறவைகளின் தேகத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறது என்று மைக்கேல் பிரைட் எழுதிய பறவைகளின் தனிப்பட்ட வாழ்க்கை (ஆங்கிலம்) நூல் குறிப்பிடுகிறது. அவர் சொல்கிறார், பறவையின் பாடலைக் கேட்ட வேறு இரு “ஆண் பெண் பறவைகளின் இதயத் துடிப்புகளும் அதிகமாயின.” ஆண் பறவையின் பாடலைக் கேட்ட சில பெண் பறவைகள் “சூட்டிப்பாக கூட்டைக் கட்டின.” மேலும் “சில முட்டைகளை போனஸாகவும் போட்டன.”

வெப்ப மண்டலத்து பூபூ பறவைகளைப் போன்ற டூயட் பாடகர்களைப் பற்றி பல மர்மங்களை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிப்பர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆர்வத்தைத் தூண்டும் அவற்றின் பாடல்கள் இவ்வளவு மெச்சத்தக்க செயல்களை செய்தாலும் அவை மற்றொரு மகத்தான நோக்கத்தை நிறைவேற்றுகின்றன என்பதை மறந்துவிடாதிருப்போமாக. அது படைப்பை ஆராதிக்கும் ஆண்கள் பெண்களின் செவிகளில் தேன்வார்க்கின்றன! நிச்சயமாகவே, நம்மை மெய்மறக்கச் செய்யும் இப்படிப்பட்ட இசை எல்லா “ஆகாயத்துப் பறவைகளையும்” படைத்தவரையே மகிமைப்படுத்த நம்மை வழிநடத்துகிறது.​—⁠சங்கீதம் 8:⁠8.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்